சேனல் டாக்
-மெகா மாலினி
``சென்ற வாரம் ஒவ்வொரு சானலின் படைப்புத்திறன் பத்தியும் சொல்றேன்னு சொன்னீங்களே?... அங்கேயே ஆரம்பியுங்க!`` என்றார் என்னிடம் நண்பர் விடாப்பிடியாக.
``சுருக்கமா சொல்லணும்னா சன் டி.வி.யைப் பொறுத்தவரையில் நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல தூரன் கந்தசாமி அவர்களுக்குத்தான் சகல அதிகாரமும். `இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக`ன்னு இவருடைய குரலை கேட்காத தமிழரே இருக்க முடியாது. ஆனாலும் இவரை தயாரிப்புத் தரப்பு தவிர வேற யாராலயும் பார்க்க முடியாது.. ஆளு அந்த அளவுக்கு அமைதியான டைப். கவிஞர் பெ.தூரனுடைய பேரன்கிறதால தமிழ் இலக்கியத்துல தீவிர ஈடுபாடு. ஆரம்பத்துல ஒரு சாதாரண ஊழியரா சேர்ந்து.. படிப்படியா உயர்ந்து இந்த பெரிய நிலைமைக்கு வந்திருப்பதால தன் பாஸ் கலாநிதி மாரன் கிட்ட எக்கச்சக்க பணிவும் பக்தியும் கொண்டவர். பாஸிட்டிவ் ரீதியிலதான் சீரியல் கதைகள் சொல்லப்படணும்னு நினைக்கறவர். சேனலில் இவர் வெச்சதுதான் சட்டம்னாலும், இப்போ கார்ப்பரேட் அமைப்புல ஏற்பட்டிருக்கிற `நிகழ்ச்சிக் கமிட்டி`யும் நிறைய அபிப்ராயங்களை, கருத்துக் கணிப்புக்களை இவர்கிட்ட பகிர்ந்துக்க ஆரம்பிச்சிருக்கு. தூரன் கந்தசாமி அதையும் தன் பக்கபலமா வெச்சுகிட்டு தன் பயணத்தை தெம்பாவே தொடர்றாரு!``
``விஜய் டி.வி.யில எப்படியோ?!`` என அடுத்துக் கேட்டார் நண்பர்.
``அங்கே பாலா, பிரதீப் மில்ராய் பீட்டர்னு ரெண்டு பேர் இருக்காங்க. நிகழ்ச்சிகளை, தயாரிப்பாளர்களை தீர்மானம் பண்றது எல்லாம் இவங்க ரெண்டு பேரும்தான். இதுல பிரதீப்புக்கு எப்பவுமே கதையல்லாத நிகழ்ச்சிகள் மேலதான் தீவிர ஆர்வம். முன்னே கதை ஏரியாவுக்கென ரமணகிரிவாசன்னு ஒரு படைப்பாளி இருந்தார். அவர் `தெறி` பட வசனகர்த்தாவா மாறி அட்லி பக்கம் போயி சினிமாவுலயே செட்டிலாகிட்டார். அவர் போனதிலேருந்து சேனல் தொடர்கள்ல ஒரு தற்காலிக வீழ்ச்சி இருந்தது உண்மை. இப்ப பிக்பாஸுக்குப் பிறகு மீண்டும் விஜய் டி.வி. சீரியல்கள்ல ஒரு முன்னேற்றம். டி.ஆர்.பி. ரேட்டிங் நல்லா ஏறிகிட்டிருக்கு. புதுசா ஆரம்பிச்ச `தமிழ்க்கடவுள் முருகன்` கொஞ்சம் கை குடுக்கலேன்னாலும் மத்த சீரியல்கள் விறுவிறுப்பாகி இவங்களை கைதூக்கி விட்டிருக்கு!``
``அடுத்து ரேங்க்ல இருக்கற சேனல் ஜீ தமிழ்தானே?.. அங்கே யாரு கிரியேட்டிவ்ஸ்?``
```தமிழ்தாசன்`னு ஒரு இளைஞர்தான் அங்கே கிரியேட்டிவ் தலைமை. விஜய் டி.வி.யில பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு இயக்குநரா இருந்த தமிழ்தாசனை தேடிப்பிடிச்சு ஜீ பக்கம் இழுத்ததுதான் ஜீ தமிழ் சேனலின் சாதனை. இவர் தன்னோட பெரிய இளைஞர் படையை கொண்டு வந்து புது முயற்சிகளை செய்ய ஆரம்பிச்சார். அதே சமயம் ஜீ டி.வி.யும் நிறைய செலவு செய்ய முன்வந்ததுதான் தமிழ்தாசனின் அதிர்ஷ்டம். ஆறே மாசத்துல ஜீ தமிழ் ரேட்டிங்கில் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வந்திட்டார். இப்போ சீரியல்களைப் பொறுத்தவரைக்கும் விஜய் டி.வி.க்கு ஈடாக ரேட்டிங்கை அள்ளி வருகிறது ஜீ தமிழ்!``
``ராஜ் டி.வி., கலைஞர், ஜெயா டி.வி.யில் எல்லாம் யார் யார் இருக்காங்க?.. யாராவது இருக்காங்களா?...``

``கரெக்டா சொன்னீங்க.. யாராவது இருக்காங்களா நிலமை தான்! ஒரு காலத்துல ராஜ் டி.வி.யில கே.பாலசந்தர், ஏ.வி.எம்.. உட்பட நல்ல பிரபலமான பேனர்களோட தொடர்கள் வந்திட்டிருந்தது. இப்ப எல்லாமே டப்பிங் தொடர்களா மாறிப்போச்சு. திரும்பவும் நல்ல தொடர்கள் ஆரம்பிக்கணும்னு திட்டம் போடறதா சொல்றாங்க. எப்ப செய்வாங்கன்னு தெரியல!``
``கலைஞர் டி.வி.யைப் பொறுத்தவரை ரமேஷ் பிரபா அதனுடைய எம்.டி.யா இருந்தவரைக்கும் அது நல்லா இருந்தது. இப்ப எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு. சரியான ஈடுபாடுள்ள தலைமை இல்லையா.. இல்லேன்னா 2ஜி தீர்ப்பு வர்ற வரைக்கும் அடக்கி வாசிக்க நினைக்கறாங்களான்னு தெரியல. மீண்டும் ஒரு நல்ல தலைமை வந்தால்தான் நல்ல தொடர்கள் இங்கே வலம் வர முடியும். இங்கே தொடர்ந்து தொடர்கள் தயாரிச்சிட்டிருந்த குட்டி பத்மினி கூட இப்ப சைலண்ட்டாத்தான் இருக்காங்க!``
``ஜெயா டி.வி.யில ஒரு காலத்துல அண்ணி, சஹானா, கல்கின்னு ஏகப்பட்ட நல்ல தொடர்கள் வந்திட்டிருந்தது. அப்ப கிரியேட்டிவ் மற்றும் மார்க்கெட்டிங் டீம் செமை வலுவா இருந்தது. கடந்த நாலு வருஷமா எல்லாமே போச்சு. இப்பவும் அவங்ககிட்ட `ராம்ஜி`ன்னு ஒரு திறமையான நபர்தான் கிரியேட்டிவ் ஹெட்டா இருக்கார். (இவர்தான் விஜய் டி.வி.யில் கனா காணும் காலங்கள் எடுத்த தயாரிப்பாளர்) ஆனாலும் இப்ப இவருக்கு சுத்தமா பவரேயில்ல. மேலிடமும் இப்ப அரசியல் கலாட்டாக்கள்ல பிஸியா இருக்கறதால சேனல் ஏரியாவில கவனம் செலுத்தறதில்ல.. ஆனாலும் இவ்வளவு அமளி துமளிக்கு நடுவிலயும் ஒரு சில தயாரிப்பாளர்கள் அங்கே பலன் அடைஞ்சுகிட்டுத்தான் இருக்காங்க. அதுல டைரக்டர் - தயாரிப்பாளர் திருச்செல்வம் முக்கியமானவர். இவரை நினைவிலிருக்கா? `கோலங்கள்` தொடரோட இயக்குநரேதான்! பழைய பெருங்காய வாசனையோட இவர் அங்கே குத்தாட்டம் போட்டுகிட்டிருக்கார்!``
``பாப்புலர் சேனல்கள் பத்தி சொல்லிட்டீங்க.. மத்த டி.வி.க்களோட நிலைமை எப்படி? செய்தி சேனல்களோட நிலவரம் என்ன?...`` நண்பர் அடுத்தடுத்து விடாமல் கேள்வியெழுப்பினார்.
``அடுத்த வாரம் சொல்கிறேன்!`` என்றபடி விடை பெற்றேன்.
(தொடரும்)

Leave a comment
Upload