
‘சமயக்குரவர்கள் நால்வர்’ என்னும் சொல் நாயன்மார்களில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும், மற்றும் நாயன்மார்கள் வரிசையில் இல்லாத மாணிக்கவாசகரையும் சேர்த்து நால்வராக குறிக்கும்.
இவர்கள் தமது தமிழ்ப்பாசுரங்களால் மக்களுக்கு சைவ மதம் உயர்வு பெறும் வழியினைத் தம் பாடல்கள் மூலம் அருளி, பல அற்புதங்களைக் செய்து சைவ சமயமே சிறந்த சமயம் என்று நிலைநாட்டியமையால் சைவ சமயக் குரவர்கள் (குருமார்கள்) எனப் பெயர் பெற்றார்கள்.
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூன்று பேரும் எழுதிய தேவாரத்தையும் மற்றும் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தையும் சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளினுள் தொகுக்கப்பட்டுள்ளது.
தேவாரம் என்பது பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். திருமுறைகளில் முதல் மூன்றை திருஞானசம்பந்தரும், அடுத்த மூன்று திருமுறைகளை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியுள்ளனர்.
திருவாசகம் பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்’ என்பார்கள். படிப்போர் உள்ளத்தைப் பக்திப் பெருக்கால் நெகிழச் செய்யும் திருவாசகத்தை உலகுக்கு அளித்தவர் மாணிக்கவாசகப் பெருமான்.
திருஞானசம்பந்தர்:
திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில் சிவபாதவிருதர், பகவதி அம்மையார் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஞானசம்பந்தர் மூன்றாம் வயதில் ஒரு நாள் காலை, தந்தையாருடன் சீர்காழி கோயில் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாதவிருதர் மகனை கரையில் அமரச் செய்து நீருள் முழ்கி ஜெபம் செய்தார். தந்தையைக் காணாத குழந்தை, அப்பா என்று அழைத்து அழுதது, அப்பொழுது பார்வதிதேவி சமேத சிவபெருமான் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டினார்கள். இவர் திருநாவுக்கரசு நாயனாரின் சமகாலத்தவர். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளில் தொகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்து, பதினாறு ஆண்டுகளே வாழ்ந்து பல அற்புதங்களைச் செய்த திருஞானசம்பந்தர் ஆச்சாள்புரம் எனும் திருநல்லூர் பெருமணம் என்ற ஊரில் வைகாசி மூல நன்னாளன்று முக்தி அடைந்தார்.
இவர் நிகழ்த்திய அற்புதங்கள்:
சிவபெருமானிடத்திலே பொற்றாளமும், முத்துப் பல்லக்கும், முத்துச் சின்னமும், முத்துக் குடையும், முத்துப் பந்தரும், உலவாக்கிழியும், படிக்காசும் பெற்றார்.
பாண்டியனுக்குக் கூனையும், சுரத்தையும் போக்கினார்.
சமணர்கள் எதிரே தேவாரத் திரு ஏட்டை தீயிலே போட்டும் அது எரியாமல் எடுத்தார்.
ஆண் பனைகளைப் பெண் பனைகளாக மாற்றினார். விஷத்தினால் இறந்த பெண்ணுடைய எலும்புகளிலிருந்து பெண்ணை உயிர் பெறச் செய்தார்.
அப்பர் என்ற திருநாவுக்கரசர்:
கி.பி. ஏழாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் திருநாவுக்கரசர் சோழநாட்டின் திருமுனைப்பாடி பகுதியிலிருந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினி தம்பதியினருக்குப் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் மருள்நீக்கியார்.
இளமையில் பெற்றோரை இழந்த இவரை, தமக்கை திலகவதியார் வளர்த்து வந்தார். சைவ சமயத்தில் பிறந்தும் மருள்நீக்கியார் சமண சமயத்தால் ஈர்க்கப்பட்டார். பாடலிபுரம் சென்று சமண நூல்களைக் கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.
ஒருமுறை தருமசேனருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் “கூற்றாயினவாறு விலக்ககலீர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார்.
இவரை, திருஞானசம்பந்தர், ‘அப்பர்' என்று அழைத்தமையால், அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும், தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால், இவரை தாண்டகவேந்தர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் தொகுக்கபட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் முக்தியடைந்தார்.
இவர் நிகழ்த்திய அற்புதங்கள்:
சமணர்களாலே ஏழு நாள் சுண்ணாம்பு அறையிலே பூட்டப்பட்டு இருந்தும் வேகாது பிழைத்து எழுந்தார்.
சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பால் சோற்றை உண்டும் சாகாது பிழைத்தார்.
சமணர்கள் இவர் மேல் ஏவிய யானை இவரை வலம் வந்து வணங்கி நின்றது.
சமணர்கள் கடைசியாக இவரை கல்லிலே சேர்த்துக் கட்டி கடலிலே போடவும், அக்கல்லே இவருக்கு தோணியாகி கரை ஏறினார்.
விஷத்தினால் இறந்த ஒரு பிள்ளையை அவனது தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்கி உயிர் பெறச் செய்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார்:
எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள திருநாவலூர் (திருமுனைப்பாடி) என்ற கிராமத்தில் ஆதி சைவர் எனும் குலத்தில் சடையனார், இசைஞானி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அழைக்கப்படுகிறார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் ஏழாம் திருமுறையில் தொகுக்கபட்டுள்ளன. சுந்தரர் தனது 18 வது வயதில் ஆடி சுவாதி நட்சத்திர நாளில், கேரளத்திலுள்ள திருஅஞ்சைக்களம் என்ற இடத்தில் முக்தி அடைந்தார்.
இவர் நிகழ்த்திய அற்புதங்கள்:
ஒருவர் கொடுத்த செங்கற்களைப் பொன்னாக மாற்றிப் பெற்றுக் கொண்டார்.
தான் இழந்த இரு கண்களின் பார்வையை சிவபெருமான் திருவருளால் மீண்டும் பெற்றார்.
காவேரி ஆற்றைக் கடக்க அது பிரிந்து வழிவிடச் செய்தார்.
முதலை விழுங்கிய ஒரு பிள்ளையை அம்முதலை வாயினின்று உயிருடன் பிழைக்கச் செய்தார்.
மாணிக்கவாசகர்:
எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் சம்புபாதாசிருதர், சிவஞானவதி என்ற தம்பதியருக்கு மகனாக அவதரித்தார். இவரது இயற்பெயர் திருவாதவூரர். சிறுவயதிலேயே கல்வி, ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய திருவாதவூராரின் புகழைக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கிக் கௌரவித்தான்.
இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.
பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும் திருக்கோவையும் எட்டாம் திருமுறையாக கூறப்படுகிறது. முப்பத்திரண்டு ஆண்டு காலமே வாழ்ந்த மாணிக்கவாசகர், ஆனி மாத மகம் நட்சத்திரத்தில் சிதம்பரத்தில் முக்கியடைந்தார்.
இவர் நிகழ்த்திய அற்புதங்கள்:
சிவபெருமானே மாணிக்கவாசகருக்காக நரிகளை குதிரைகளாக்கி ஆக்கியும், பிட்டுக்கு மண் சுமந்து அடிபட்டார்.
பிறவியிலிருந்தே ஊமையாயிருந்த ஒரு பெண்ணை இவர் பேசவைத்தார்.
இந்த சமயக்குரவர்கள் நால்வரையும் போற்றி வணங்கி நற்பலன்களை பெறுவோம்...

Leave a comment
Upload