
இயற்கையின் பேரெழிலை முழுமையாய் அனுபவிக்க நினைப்பவருக்கு நான் இரவு நேர வானத்தை பரிந்துரைப்பேன். முழு நிலவு ஆட்சி செய்யும் அந்திப்பொழுதோ, விண்மீன்கள் கொட்டிக் கிடைக்கும் கரிய வண்ண இரவோ, கண்ணிமைக்காமல் பார்த்து ,விண்மீன்களை எண்ணிக் களித்த அனுபவம் அனைவருக்கும் உண்டு. பொழுதுபோக்குகள் நம் பொழுதுகளை விழுங்கி கொண்டிருக்கும் இந்த காலத்தில் ‘வானம் பார்த்து’ வாழும் வாழ்க்கை மறந்தே போனது .
மீண்டும் நாம் அந்தப் பழக்கத்தை மீட்டெடுக்க உதயமாகி இருக்கிறது ‘நியோவைஸ்’ என்னும் வால் நட்சத்திரம். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாசாவின் நியோவைஸ் என்னும் விண்கலம் இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டு பிடித்து இதற்கு C/2020/F3 என்ற பெயர் இட்டது. ஆயினும் இந்த வால்நட்சத்திரம் அதை கண்டுபிடித்த விண்கலத்தின் பெயரிலேயே இப்போது அழைக்கப்படுகிறது.
460 கோடி வயது கொண்ட சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள், துணைக்கோள்கள், விண்மீன் கூட்டங்கள், விண்கற்கள், எரிநட்சத்திரங்கள் இவற்றுடன், சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் இந்த வால் நட்சத்திரங்கள், உண்மையில் கோள்கள், துணைக்கோள்கள் உண்டாகும் போது எஞ்சிய பொருட்களே. தூசுப் பனிப்பந்துகள் (dirty snowballs) என்று அழைக்கப்படும் இந்தப் பாறைகள் சூரியனைச் சுற்றி வரும். சூரியனுக்கு அருகில் செல்கையில் சூடாகி, வாயுக்களை வெளிவிட ஆரம்பிக்கும். இதனால் உட்கரு அல்லது கோமா (coma) எனப்படும் தலைப்பகுதியும் சூரியக் கதிர்வீச்சும் சூரியக் காற்றும் வால்வெள்ளியின் உட்கரு மீது செலுத்தும் விளைவுகளால் கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு, மீத்தேன், அம்மோனியா, நீராவி போன்ற வாயுக்கள் கரைந்து ஒளிவிடும் வால் பகுதியும் தோன்ற ‘வால் நட்சத்திரம்’ (comet) உருவாகிறது. பிரும்மாண்டமான இந்த வால் பகுதி தூசு, வாயு இவற்றின் கலவையாகும்.
வால்நட்சத்திரங்கள் பூமிக்கு அருகில் வரும் போது நம் கண்ணில் தென்படுகின்றன. வெற்றுக் கண்ணால் அல்லது தொலைநோக்கியால் இவற்றைக் காண முடியும். சூரியனை சுற்றி வரும் வால்நட்சத்திரம் அதன் நீள்வட்டப் பாதையின் நீளத்தைப் பொறுத்தே, அது மீண்டும் நம் கண்ணுக்குத் தெரியும் காலம் அமைகிறது. அந்தப் பயணக் காலம் சில ஆண்டுகள் முதல் பல மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கக் கூடும். எனவே நாம் ஒருமுறை பார்த்த வால் நட்சத்திரத்தை மீண்டும் பார்க்க சில ஆண்டுகள், சில நூறு ஆண்டுகள், சில ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம். அவ்வகையில் இப்போது நமக்குத் தென்படும், நியோவைஸ் மீண்டும் 6000 ஆண்டுகள் கழித்தே பூமிக்கு அருகில் வரும்.
வால்நட்சத்திரத்தைக் குறிக்கும் comet என்னும் சொல் cometa என்னும் லத்தின் சொல்லில் இருந்து பிறந்தது. இச்சொல்லுக்கு ‘நீண்ட முடி’ என்ற பொருள். வால்நட்சத்திரத்தின் ஒளிமிக்க வால் பெண்ணின் நீண்ட கூந்தலைப் போல இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
சென்ற ஆண்டில் கணக்கெடுத்த போது, இதுவரை நாம் அறிந்த வால் நட்சத்திரங்களின் எண்ணிக்கை 6619. ஆனால் இன்னும் கண்டு பிடிக்கப்படாதவை ட்ரில்லியன் கணக்கில் அண்டவெளியில் பயணிக்கின்றன. வால் நட்சத்திரத்தின் தலைப்பகுதி 60 கி.மீ நீளத்திலிருந்து பல கோடி ஆயிரம் கி.மீ நீளம் வரை இருக்கும். அவற்றுள் சில சூரியனை விட பெரிய அளவில் இருக்கும் என்பது அறிவியல் கணிப்பு.
தொன்று தொட்ட காலம் முதல் வானியல் ஆராய்ச்சியில் உலகம் ஈடுபட்டு வந்துள்ளது. குறிப்பாக சீனர்கள் பழங்காலம் முதல் வானியல் ஆராய்ச்சியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு வந்துள்ளனர். கிரேக்கத்தில் அரிஸ்டாட்டில், இந்தியாவின் வராகமிகிரர், பத்ரபாகு போன்றோர் வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டும், வால் நட்சத்திரங்களைப் பற்றிய குறிப்புகளை எழுதியும் வைத்து உள்ளனர்.
வால்நட்சத்திரங்கள் பூமியின் மேல் மோதிய போது பூமியில் தண்ணீர் உற்பத்தி ஆனது என்று ஒரு கருத்து நிலவியது. ஆனால் அது பின்னர் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது.
வால்நட்சத்திரம் விண்ணில் தோன்றும் போது அது பூமிக்குத் தீங்கினைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை பல நூற்றாண்டுகளாக மண்ணில் இருந்தது.. அரசர்கள் இதைக் கண்டு அஞ்சியதாக, இதிலிருந்து காத்துக்கொள்ள சோதிடர்களின் உதவியை நாடியதாகவும் அறிகிறோம். ஆனால் அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சமீப காலங்களில் ஆளில்லா விண்கலங்கள் மூலம் ஆராய்ச்சி தொடர்கிறது. ஐரோப்பாவின் ரோஸெட்டா (Rosetta) கலமும், நாசாவின் “டீப் இம்பாக்ட்” (Deep Impact) கலமும் வால்நட்சத்திரங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தன.
சூரியனை நீள் சுற்றுப்பாதையில் (eliptical orbit) வலம் வரும் வால் மீன்கள், 200 வருடங்களுக்கும் குறைவான இடைவெளியில் நம் கண்களுக்கு தோன்றும். ஹாலேஸ் வால்நட்சத்திரம் இந்தக் குழுவைச் சேர்ந்தது . 1986 ஆம் ஆண்டு தோன்றிய இந்த வால்நட்சத்திரத்தை மீண்டும் 75 ஆண்டுகளுக்குப் பின் 2061 ஆம் ஆண்டில்தான் நாம் பார்க்க முடியும். இப்போது நாம் காணும் நியோ வைஸை மீண்டும் 8786 ஆம் ஆண்டில் தான் பார்க்க முடியும்.
பரவளையப் பாதை கொண்ட (parabolic orbit) வால்நட்சத்திரங்கள் ஒரு முறை மட்டுமே விண்ணில் தோன்றி மறையும். மீண்டும் அவை நமக்குத் தென்படாமல், பாறைகளாக உடைந்து சிதறி விண்ணில் மிதக்கும். நாம் அறிந்த சில வால்நட்சத்திரங்கள், ஹாலே பாப் ( Hale-Bopp,) ஹாலேஸ் ( Halley’s) க்ரீன் காமெட் (Green Comet- Lovejoy) ஆகியவை.
இன்று நம் வானில் உதித்துள்ள நியோவைஸ் வால் நட்சத்திரத்தை நம் வெற்றுக் கண்களாலேயே இம்மாதம் 30ஆம் தேதி வரை வடமேற்கு வானத்தில், 20 டிகிரி கோணத்தில் ஹர்ஷாமேஜர் விண்மீன் கூட்டத்துக்கு அருகில் மாலை 7 மணிக்கு 20 நிமிடம் வரையிலும் பார்க்க முடியும்.
ஜூலை 16 முதல் 21-ம் தேதி வரை வெறும் கண்களுக்கு மங்கலாகக் காட்சி தரும். ஜூலை 19-ம் தேதி சற்றே கூடுதல் பிரகாசத்துடன் தென்படும். பைனாகுலர் இருந்தால் ஜூலை மாதம் முடியும் வரை பார்க்கலாம். அருகே பிரகாசமான விளக்கு ஏதுமில்லாத இருட்டில் தெளிவாக தென்படும். நியோவைஸ் ஜூலை 22 ஆம் தேதியில் பூமிக்கு வெகு அருகில், 64 மில்லியன் மைல் தூரத்தில் வரும். பின்னர் தன் பாதையில் பூமியை விட்டு விலகி வெகு தூரத்துக்குச் சென்று விடும்.
வானியலில் ஒரு அரிய நிகழ்வு நியோவைஸின் தோற்றம். மனித கற்பனைகளுக்கு எட்டாத அற்புதங்களை, அதிசயங்களை இயற்கை தன்னில் கொண்டுள்ளது. இவற்றை அறிந்து, உணர்ந்து ரசிப்பதில் வாழ்வின் இனிமை அடங்கி உள்ளது.
பாரதி வாழ்ந்த காலத்தில் ஹாலேஸ் வால் நட்சத்திரம் தோன்றிய போது அவர் எழுதிய பாடல் இப்போது நினைவுக்கு வருகிறது...
தினையின் மீது பனைநின் றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்
கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகும்
தூம கேதுச் சுடரே, வாராய்!
.......
ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒரு முறை
மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையு மென்கின்றார்;மெய்யோ,பொய்யோ?
சித்திகள் பலவும், சிறந்திடு ஞானமும
மீட்டும் எம்மிடைநின் வரவினால் விளைவதாப்
புகலு கின்றனர்; அது பொய்யோ, மெய்யோ?
- பாரதியார்
‘நியோவைஸை’ இம்மாத இறுதிக்குள் பார்த்து விடுவோம். இல்லையேல் 8786 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்!!

Leave a comment
Upload