தொடர்கள்
பொது
நேபாளத்தின் கோமாளி Vs நம்ம ஊரு கோமாளிகள்... - தில்லைக்கரசி சம்பத்

20200617191431952.jpg

தீடிரென இந்த வாரம் நம்ம பக்கத்து நாடான நேபாளத்தின் பிரதமர் ஷர்மா ஒலிக்கு ஞானோதயம் பிறந்து தடாலென ஒரு குட்டிக்கரணம் போட்டு.... “இந்தியாவின் ராமர் எங்கூர்க்காரர் டோய்” என்று திருவாய் மலர்ந்தார்...

இவ்வளவு காலமும் “ராமர் கடவுள் இல்லை கற்பனை கதாபாத்திரம்”னு கம்பு சுத்திக்கொண்டிருந்தார்கள் இங்குள்ள மதசார்பற்ற தலைவர்கள்! அதாவது இந்து மதசார்பு மாத்திரம் அற்றவர்கள். “ஹையா.. அப்படீன்னா ராமரு இங்கன‌ பொறக்கலனு நேபாள பிரதமரே சொல்ட்டாரு.. இப்ப என்னா செய்வீங்க..?” என சந்தோஷத்தில் மிதந்தார்கள். எப்படியோ, ராமர் இருந்தார் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டார்கள். காரணம் சொன்னவர் நேபாள இடதுசாரித் தலைவர்.

நேபாளம் முழுவதும் கொண்டாடப்படும் கவிஞர் “பனுபக்தா” 1814ஆம் ஆண்டு பிறந்தவர். வால்மீகியின் ராமாயணத்தை நேபாள மொழியில் மொழிபெயர்த்தவர். இவரது விழாவில் ஷர்மா பேசும் போதுதான் “ராமர் பிறந்த உண்மையான அயோத்தி எங்கள் நாட்டில்தான் உள்ளது. இந்தியாவில் உள்ள அயோத்தியாவில் வேண்டுமானால் சர்ச்சை இருக்கலாம். நம் அயோத்தியாவில் இல்லை” என்றார்..

இது அந்த நாட்டிலேயே சர்ச்சையை கிளப்பியது!

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு முன்னாள் துணை பிரதமர் கமல் தபா, “யோவ் ஏதாவது உளறிக்கிட்டு இல்லாம கம்முனு இருய்யா.. ஏற்கனவே இந்தியா நேபாள உறவு சிதைஞ்சு சின்னாபின்னாகிக் கெடக்கு.. இதுல நீ வேற வாய வச்சிகிட்டு சும்மா இருக்க மாட்டியா?சீனாக்காரனே லடாக் பகுதியில இந்தியா கிட்ட பம்முறான்.. அப்புறம் இந்தியா போற போக்குல நம்மள ஒரு காட்டு காட்டிட்ட போவுது”னு சொல்லி இருக்காரு.

நேபாள எழுத்தாளரான கனக் மணி தீக்‌ஷித் போன்ற பலரும் ஷர்மா ஒலியின் பேச்சு தேவையில்லாததுனு சொல்லி இருக்காங்க..

இந்திய அரசும் எதிர்ப்பு தெரிவிக்க... அதன் கூடவே அதிசயமாக காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வியும் “ஐயோ பாவம்..! ஷர்மா ஒலி மனநலம் சரியில்லாதவரா ஆயிட்டாரே” என்று தன் பங்குக்கு ஓங்கி நேபாளத்தை ஒரு குத்து விட.... உடனே சுதாரிச்சிக்கிட்ட நேபாள அரசு... அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலமாக விளக்கம் தெரிவித்தது.

“ராமர் பத்தி நேபாள பிரதமர் சொன்ன கருத்து அரசியல் கருத்து இல்லீங்கோ.. அது யார் மனசையும் உணர்வையும் புண்படுத்த சொல்லலைங்கோ.. ராமரு எங்க‌ நாட்டுலயும் கும்பிட்டு வர தெய்வம் தானுங்க.. ராமர் மற்றும் அவரின் பிறப்பிடம் தொடர்பாக பல்வேறு ராமர் பத்தின கதைங்க நாங்களும் காலகாலமா நிறைய சொல்லி வழிவழியா வச்சிருக்கோமுங்க..

ஜனக மகாராசா எங்க ஊர் தானுங்க.. ராமரு எங்க மருமக பிள்ளைங்க.. அதனால்தான் ராமர் சீதா கல்யாணத்தை கொண்டாடும் “விவாஹா பஞ்சமி”ன்ற ஒரு திருவிழாவை பல காலமா நாங்க கொண்டாடுறோமுங்க.. அந்த சமயத்துல உங்க ராமர் பொறந்த இந்தியாவின் அயோத்தியிலிருந்து எங்க நேபாளத்தின் ஜனக்பூர் வரை திருமண ஊர்வலம் நடைபெறுங்க.. அதனால ராமர் பொறந்தது உங்க அயோத்திதான் என்கிற உண்மை எங்களுக்கு ஏற்கனவே தெரியுமுங்க. இந்த பாழாப்போன சீனாக்காரன் அவன் தலையில இடி விழ.. அவன் சும்மா இல்லாம தூண்டி விட்டு இப்ப மத்தளம் மாதிரி ரெண்டு பக்கமும் அடி வாங்குறோமுங்க..

இந்த “விவாஹ பஞ்சமி” விழாவுக்காக 2018ஆம் வருசத்திலிருந்து எங்க ஜனக்பூரிலிருந்து அயோத்திக்கு பஸ் எல்லாம் உட்டோமுங்க... இதுவே நம்ம ரெண்டு நாடுகளுக்கும் நடுவுல உள்ள கலாசார பந்தத்தை குறிக்குதுங்க.. நம்புங்க சாமி. நாங்க வம்பெல்லாம் பண்ணலீங்க...” என

தாங்களும் ஸ்ரீராம பக்தர்கள் தான் என்பதை பதட்டத்துடன் அறிக்கை விட்டு நிரூபித்தனர்.

இதுக்கு நடுவுல நேத்து நம்ம அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சில புத்த துறவிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டாங்க..

“ராமர் கோயில் கட்டப்போற இடத்துல, சிவலிங்கம், பல்வேறு கடவுளர்களின் பழங்கால சிலைகள், உடைந்த விக்ரகங்கள், சிற்பங்கள், செதுக்கப்பட்ட தூண்கள் எல்லாம் போன வாரம் தோண்டுனப்ப கிடைச்சிருக்கு. இவை எல்லாம் புத்த மதத்துடன் தொடர்புள்ளது.. அதனால் கோயில் கட்டுமானப் பணியை உடனே நிறுத்தனும்னு “ஆசாத் புத்த தர்ம சேனா” என்ற அமைப்பு கோஷம் போட்டிருக்காங்க...”

“ புத்தர் என்னைக்கு சிவலிங்கத்தை எல்லாம் வச்சு பூசை போட சொன்னாரு? இந்த சிலை வழிபாடு பூஜை புனஸ்கார சடங்கெல்லாம் வேணாமுன்னுதானே தனியா புத்த மதத்தை உண்டாக்குனாரு.. அடேய் சிவலிங்கம் உங்களோடுதுனா அப்ப புத்தரு சிலை எங்களோடதா? ..ஏன்யா.? எப்படி பார்த்தாலும் செட்டாவ மாட்டேங்குது..? டார்ச்சர் பண்றாங்க!” என்று மக்கள் வெறுத்துப்போனார்கள்.

ஆனாலும் இப்போது நேபாளத்தில் உள்ள அரசியல் சூழலில் இனி இந்த சர்ச்சை அங்கே அதிகம் எடுபடாது என்பதுதான் உண்மை!