பொதுவாக அனைவரும் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆவார்கள். ஆனால், ட்விட்டரே ட்ரெண்டானது சமீபத்தில் நடந்தது. ஆம். கடந்த வாரம் சில கயவாணிகள், ட்விட்டரில் புகுந்து சும்மா சகலரையும் அலற வைத்து விட்டார்கள். இதுவும் அயல்நாட்டு சதியாகத்தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றினாலும் இன்னும் காரணகர்தாக்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி என்ன செய்தார்கள்? என்ன நடந்தது? சற்று விரிவாக பார்ப்போம்...
2006 ஆண்டு தொடங்கப்பட்ட ட்விட்டர் சமூகவலைதளம், தற்போது இனைய வெளியில் மிகப் பெரிய ஆளுமையாக இருக்கிறது . வெறும் 140 எழுத்துக்களை கொடுத்து உலகையே தன் கைக்குள் வைத்திருக்கிறது இந்த தளம்.
தனக்கான ரசிகர்களையும், அனுதாபிகளையும் கூட்டத்தையும் ஒரு சேர சேர்த்து, அங்கே அவர்களோடு அளவளாவ இந்த தளம் மிகவும் பயனுள்ளதகவே அனைவரும் கருதுகின்றனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை காட்டிலும், இங்கே அணைத்து ஜாம்பவான்களும் விரும்பி தனக்கென ஒரு கணக்கை வைத்துள்ளனர். ஒபாமா இதனை பயன்படுத்தி தான், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து நமது பாரத பிரதமரும், நம் நாட்டு மக்களோடு ட்விட்டர் மூலம் உரையாற்றுகிறார். சமீபத்தில் திருக்குறள் குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு மிகவும் பிரபலமானது. மற்ற சமூக கணக்குகளை பயன்படுத்தாத ரஜினிகாந்த் கூட, அவ்வப்போது தன கருத்துகளை ட்விட்டரில் தான் பதிவு செய்கிறார்.

இணையத்தில் எது ஹாட் டாபிக் என அறிந்து கொள்ள ட்விட்டர் ஒரு மிகச் சிறந்த செயலி.
தற்போது என்ன ட்ரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது, இன்று என்ன ட்ரெண்டிங் ஆனது, உலகளவில் எந்த விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது, இந்திய அளவில் எது பேசப்படுகிறது என அறிந்து கொள்வதே வாழ்க்கையாகிவிட்டது. hashtag பயன்படுத்தி எந்த விஷயத்தை யார் பதிவிடுகிறார்கள், அதுவும் அதிகம் எதை பதிவிடுகிறார்களோ, அதுவே ட்ரெண்டிங் ஆகும் . வழக்கம் போல் இதிலும் போட்டி உள்ளது. அஜித் hashtag அதிகம் ட்ரெண்ட் ஆகிறதா இல்லை விஜய் hashtag அதிகம் ட்ரெண்டாகிறதா என்ற அல்ப போட்டியும் உண்டு.
ட்விட்டர் கணக்குகள் அதிகம் போலியாக மற்றவர் பெயர்களில் உருவாக்கி, மக்கள் பொய் பிரச்சாரங்கள் செய்வதால் அதில் verified என்று டிக் மார்க் இருந்தால் அது உண்மையான கணக்கு என்று அர்த்தம். அதாவது நம் கணக்கை சரி பார்த்து, இது உண்மையான அந்த நபரின் கணக்கு என்று உத்திரவாதம் தரப்படும். இவ்வளவு இருந்தும் சில இணைய சமூக விரோதிகள், பலருடைய கணக்குகளை அவ்வப்போது முடக்கி அந்த கணக்குகளுக்குள் முறையற்ற வகையில் நுழைந்து, ஏதாவது ஒரு வம்படியான பதிவை போடும் நிலையும் உண்டு. இந்த வாரம் அதுவே நடந்தது. ஆனால் இவர்கள் தங்கள் கைவரிசையை காட்டியது உலக பிரபலங்களின் கணக்குகளில்.
ஆம். நாம் அறிந்த பெரும்பாலான உலக தலைவர்களின் கணக்குகளை கள்ளச்சாவி வைத்து திறந்து, ஒரு பதிவை போட்டுவிட்டனர். இணையத்தின் இன்னொரு பிரபலமான கிரிப்டோ கரன்சி எனப்படும் ஒருவகை டிஜிட்டல் பணம் சம்பத்தப்பட்ட பதிவு தான் அது. நீ எனக்கு ஆயிரம் டாலர் கொடு, நான் உனக்கு ரெண்டாயிரம் டாலர் தருகிறேன் என்பதே அந்த வாசகம்.



பாராக் ஒபாமா, பில் கேட்ஸ் போன்ற சுமார் 130 பிரபலங்களின் கணக்குகளில் இதே போன்ற வாசகத்தை வெளியிட்டனர் அந்த இ-திருடர்கள். பதறிய ட்விட்டர் நிறுவனம், அவசரம் அவசரமாக அனைவரது கணக்குகளையும் முடக்கியது. இன்னும் யாருடைய கணக்குகளெல்லாம் முடக்கப்பட்டது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். வழக்கம் போல் இதனை யார் செய்தார்கள், எங்கேர்ந்து செய்தார்கள் எப்படி செய்தார்கள் என்று தோண்டித் துருவிக் கொண்டிருக்கிறார்கள்.


இணையத்தில் இந்த மாதிரி சர்ச்சைகள் அவ்வப்போது வருவது சாத்தியம் தான். விஞ்ஞான உலகில் இந்த மாதிரி பிரச்சனைகள் செய்யும் புத்திசாலிகள் தங்கள் திறமையை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் எப்போதும் உண்டு. இவர்களை ஹேக்கர்கள் என்று அழைப்பார்கள். இவர்களை நல்ல விதமாகவும் பயன்படுத்தலாம், இந்த மாதிரி தீயவழிகளிலும் பயன்படுத்தலாம். சுமார் 330 மில்லியன் சந்தாதார்களை கொண்ட ட்விட்டர் நிறுவனம் இது போன்ற ஒரு சம்பவம் இனி நடக்காமல் இருக்க வழி செய்யும் என்று நம்புவோம்.

Leave a comment
Upload