தொடர்கள்
பொது
சிக்கினார் ஸ்வப்னா சுரேஷ்! - ஆர். ராஜேஷ் கன்னா.

20200616193039771.jpg

கேரள அரசை உலுக்கும் தங்கக் கடத்தல் பற்றி சென்ற வாரம் விகடகவியில் பிரசுரித்து இருந்தோம். இந்தியாவில் முதல் முறையாக ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்திற்கு வரும் பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டு, கஸ்டம்ஸ் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தங்க கடத்தலின் மிக முக்கிய புள்ளியாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷ் பிடிப்பட்டால் மர்ம முடிச்சுக்கள் அவிழும் என்றிருக்க அவர் தலைமறைவானார். ஸ்வப்னா சுரேஷ் தனது கூட்டாளி மற்றும் குடும்பத்துடன் தமிழகத்திற்கு தப்பிச் சென்று பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் கேரள போலீசார் வியூகம் அமைத்து வலை வீசி தேடிவந்தனர்.

திருவனந்தப்புரம் ஏர்போர்டிற்கு ஐக்கிய அரபு நாடுகள் பெயரில் வந்த 30 கிலோ தங்கக் கடத்தல் பார்சலை கஸ்டம்ஸ் அதிகாரிகள் வைத்திருந்தனர். ஐக்கிய அரபு நாடுகள் தூதரகம், இந்திய புலனாய்வு துறையினர் தங்க கடத்தல் புலனாய்வு செய்ய அனுமதி அளித்திருந்தது. தங்கக் கட்டிகள் பார்சலை சிபிஐ-யின் முக்கிய அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றனர்.

கேரளாவில் நடைபெறும் தங்கக் கடத்தல் கிட்டதட்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரால் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மாநிலம் விட்டு மாநிலம் மற்றும் தென்னிந்திய கடற்கரை ஒரங்களில் தங்கக் கடத்தல் சமீபகாலங்களில் அதிகரித்திருப்பதால், தங்கக் கட்டிகள் கடத்தப்பட்ட விதம், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால், தேசிய புலனாய்வு முகமை (NIA) களத்தில் இறங்கி விசாரிக்க வேண்டும் என கேரளா வந்த மத்திய புலனாய்வு துறையினர் ஸ்பெஷல் மெசேஸ் ஒன்றினை மத்திய அரசிற்கு அனுப்பி வைத்தனர்.

டெல்லியிலிருந்து தேசிய புலனாய்வு முகமை திருவனந்தப்புரம் ஏர்போர்ட்டிற்கு வந்து விசாரணையைத் துவக்கியது.

முக்கியக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாக இருக்கும் ஸ்வப்னா சுரேஷை தாங்களே தேடி கண்டுபிடித்து கைது செய்து கொள்வதாக தெரிவித்து, கேரள மாநில போலீசாரை வழக்கில் இருந்து விடுவித்து விசாரணையை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்துக் கொண்டது.

கேரள அரசின் முதன்மை செயலாளர் சிவசங்கரன் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியுடன் தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரம் இருந்ததால், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவரை புலன் விசாரணைக்காக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அழைத்து செல்லக்கூடும் என்ற பதட்டம் கேரள தலைமை செயலகத்தை தொற்றிக்கொண்டது.

20200616191525565.jpg

தங்கக் கடத்தலில் தனக்கு சம்பந்தமில்லை, தன்னை கைது செய்யக் கூடாது என முன்ஜாமீன் மனுவினை ஸ்வப்னா சுரேஷ், கேரள நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தாலும்... நீதிபதி வழக்கினை வேறு தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன் ஜாமீன் கிடைக்காததால் ஸ்வப்னா சுரேஷ் தனது கணவர், மகள் மற்றும் கூட்டாளி சந்தீப்புடன் கேரளாவில் இருந்து தப்பி, அண்டை மாநிலத்தில் தலைமறைவாகி உள்ளார் என்ற புலனாய்வு அமைப்பினர் ஊர்ஜிதம் செய்து கொண்டனர்.

தங்கக் கடத்தல் வழக்கில் தனது பெயரை சித்தரித்து இட்டு கட்டி மீடியா செய்தி வெளியிடுவதாகவும் தங்கக் கடத்தலில் கேரள முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த முதன்மை செயலாளர், கேரள சட்டசபை சபாநாயகர் என யாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, கேரளாவில் வரும் தேர்தலுக்கு, தன் பெயரை வைத்து எதிர்கட்சிகள் நாடகம் தொடங்கியுள்ளது. தனக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்தில் தான் பயந்து பதுங்கியிருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் பல்வேறு செல்போன் எண்களிலிருந்து ஆடியோக்களை செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியதையும், அந்த செல்போன்கள் லொக்கஷனையும், ஸ்வப்னா சுரேஷ் எங்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார் என்ற தகவலை தேசிய புலனாய்வு மையம் ட்ராக் செய்து கொண்டிருந்தது.

எவ்வளவு தான் குற்றவாளி ஒரு குற்றத்தினை திட்டமிட்டு செய்து இருந்தாலும் ஏதாவது ஒரு தடயத்தில் மாட்டிக்கொள்வான் என்பது போலீசார், புலன் விசாரனையில் கடைபிடிக்கும் நடைமுறை ஆகும். ஸ்வப்னா சுரேஷ் மகள் தனது மொபைல் போனை ஆன் செய்து பேசியதை வைத்து, தேசிய புலனாய்வு லொகேஷனை கண்டறிந்தனர்.

பெங்களூரில் தங்கக் கடத்தல் குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கணவர் ஜெய்சங்கர், மகள் மற்றும் கூட்டாளி சந்தீப் பதுங்கி இருக்கும் கட்டிடத்தற்கு மத்திய உளவுதுறை விரைந்து சென்று ஊர்ஜிதப்படுத்தி கொண்டு, ஐதரபாத்தில் இருக்கும் தேசிய புலனாய்வு முகமைக்கு குற்றவாளிகளின் இருப்பிடத்தை தெரிவித்தது.

20200616183629433.jpg

.

ஸ்வப்னா சுரேஷ் பெங்களூர், கோரமங்களா பகுதியில் இருக்கும் அப்பார்ட்மெண்டில் தனது குடும்பத்தாருடன் பதுங்கியிருந்த போது, ஹைதராபாத்தில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷ், அவரது கூட்டாளி சந்தீப் நாயரையும் சனிக்கிழமை மாலை 7 மணிக்கு கைது செய்தனர்.

ஜுலை 5 தேதி முதல் தலைமறைவாகி இருந்த ஸ்வப்னா சுரேஷ் ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்டார் என்பதை விட, தேசிய புலனாய்வு முகமை வழக்கை புலனாய்வுக்கு எடுத்த ஒரே நாளில் குற்றவாளிகளை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரிலிருந்து ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கணவர் இருவரையும் கேரளாவில் இருக்கும் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, அதன் பின் கரோனா டெஸ்டு எடுத்து முடித்த பின் இருவரையும் கொச்சிக்கு அழைத்துச் சென்றனர். ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்ட விவகாரம் பிரேகிங் நியூஸாக அலறத் தொடங்கியது. ஸ்வப்னா சுரேஷ் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் மூடில் இருப்பதாக புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்ததால், இவரை இரவு முழவதும் பாதுகாக்க தனியாக ஒரு பெண் காவலர் நியமிக்கப்பட்டார்.

20200616192238111.jpg

கேரள உயர்கல்வி அமைச்சர் ஜலீல் 8 தடவை தனது செல்போனில் இருந்து ஸ்வப்னா சுரேஷுடன் பேசியுள்ளார். ஸ்வப்னா சுரேஷ் ஒரு செல்போன் காலும், ஒரு எஸ்.எம்.எஸ் மெசேஜும் கேரள உயர்கல்வி அமைச்சர் ஜலிலுக்கு அனுப்பி உள்ளார். கேரள உயர்கல்வி அமைச்சருக்கும் தங்கக் கடத்தல் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் உடன் தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குரல் எழுப்பியதும், பள்ளிச் சிறுவர்களுக்கு ஐக்கிய நாடுகள் தூதரகம் உணவு வழங்குவதாக சொன்னதால், அது சம்மந்தமாக தான் ஸ்வப்னா சுரேஷ் பேசியதாக தனது மீதான குற்றச்சாட்டிற்கு உயர்கல்வி அமைச்சர் ஜலீல் நிருபர்களிடம் மறுப்பு தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 20 முதல் ஜுன் 1 வரை கேரள முதன்மை செயலாளர் சிவசங்கரன் தங்க கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு இருக்கும் தூதரக முன்னாள் ஊழியர் சரித் குமார் உடன் 5 தடவை செல்போனில் பேசி உள்ளார். சரித்குமார் கேரள முதன்மை செயலாளர் சிவசங்கரன் உடன் 9 தடவை செல்போனில் பேசியுள்ளார். தங்கக் கடத்தலில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் தன்னை பிடித்து விட்டார்கள் என்று கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்வதற்கு முன்பு கேரள முதன்மை செயலாளர் சிவசங்கருடன் முக்கியக் குற்றவாளி சரித் குமார் பேசிய செல்போன் ஆதாரத்தையும் தேசிய புலனாய்வு முகமை சேகரித்துக் கொண்டது.

20200616183824106.jpg

கேரள அரசின் முக்கிய அமைச்சர்கள், முதன்மை செயலாளரை தொடர்ந்து தங்கக் கடத்தல் மோசடியில் அடுத்ததாக கேரள சட்டசபை சபாநாயகர் ஸ்ரீராம கிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார் என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.

அண்மையில் திருவனந்தபுரத்தில் நடைப்பெற்ற ஒரு தனியார் உணவு பொருள் விநியோக விழாவில் கேரளா சட்டசபை சபாநாயகர் உடன் ஸ்வப்னா சுரேஷ் நெருக்கமாக இருக்கும் வீடியோவை எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டி தங்கக் கடத்தலில் கேரள சபாநாயகருக்கும் தொடர்பு இருக்கிறது என குற்றம் சாட்டியது.

ஆனால் ஸ்வப்னா சுரேஷின் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று சட்டசபை சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் பிரஸ்மீட்டை நடத்தி தன்னிலை விளக்கம் அளித்தார்.

ஸ்வப்னா சுரேஷ் பெற்ற இளநிலை பட்டம் போலியானது என்றும் அவர் 12 வகுப்பையே பூர்த்தி செய்யவில்லை என்று ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. அப்படிபட்டவர் கேரள அரசின் தகவல் தொடர்பு துறை சந்தைப்படுத்துதல் தொடர்பு அதிகாரியாக உயர்ந்த பதவிக்கு எப்படி நியமிக்கப்பட்டார், கேரள முதல்வர் மற்றும் சபாநாயகர் தொடர்பால் பதவி வழங்கப்பட்டதா என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி கேள்வி எழப்பி வருகின்றன.

அபுதாபியில் இருந்த போது ஸ்வப்னா சுரேஷ் தனது பெயரை மும்தாஜ் இஸ்மாயில் என மாற்றிக் கொண்டதாகவும் தனது முதல் கணவருடன் ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக விவகாரத்து பெற்று தனது மகளுடன் இந்தியா வந்தார் என்றும் , அபுதாபியில் இருக்கும் இவரது முன்னாள் கணவர் வேறு ஒரு வழக்கில் சிறையில் இருப்பதாகவும் புலனாய்வு விசாரணையில் தெரியவந்ததாம்.

கேரள காவல்துறையிலுள்ள சில ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, ஹோலி பண்டிகையின் போது கோவளத்தில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியில் விருந்து வைத்தாராம். அப்போது ஒரு ஐபிஎஸ் அதிகாரி நீச்சல் குளத்தில் இடறி விழந்து காலில் காயம் பட்டது. காயம்பட்ட காவல்துறை அதிகாரி, துபாயில் நடந்த போலீஸ் சீர்திருத்தம் பற்றி அறிந்து கொள்ள சென்ற போது, அவருக்கு தூதரக விருந்தாளி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டு, செமத்தியாக கவனித்து அனுப்பி வைத்தாராம்.

ஸ்வப்னா சுரேஷ் தனது பலத்தினை தூதரகம் மூலம் பலப்படுத்தி, தங்கக் கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்ததை புலனாய்வு துறையினர் தற்போது துப்பு துலக்கியுள்ளனர்.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 11 தடவை 150 கிலோ தங்கம் கடத்தியதாகவும், ஒவ்வொரு முறைக்கும் தனக்கு ருபாய் 3.5 லட்சம் சன்மானம் கிடைத்ததாகவும் விசாரணையில் புலனாய்வு அமைப்பிடம் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் கைதானது முதல், சிறைக்கு செல்லும் வரை தனது கருப்பு நிற அங்கியை தவிர வேறு உடைகளை அவர் அணியவில்லை.

20200616185738812.png

ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது முக்கியக் கூட்டாளி சந்தீப் நாயர் இருவரும் கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வந்து சில நாட்கள் தங்கிவிட்டு, பின் நாகலாந்து சென்று அங்கிருந்து இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாம் என்ற கணக்கு போட்டு ப்ளான் செய்து, செயல்படுத்துவதற்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை குற்றவாளிகளை கைது செய்துவிட்டது.

கேரளா மற்றும் கர்நாடகாவில் கொரோனா நோய் பரவலுக்காக தற்போது மூன்று அடுக்கு காவல்துறை பாதுகாப்பு இருக்கும் போது, எப்படி மாநிலம் விட்டு மாநிலம் ஸ்வப்னா சுரேஷ் குடும்பத்தாருடன் தப்பி செல்ல முடிந்தது. கேரள அரசாங்கத்தில், யார் இவர்களை காப்பாற்றி தப்ப உதவியது என எதிர்கட்சிகள் கேள்வி எழப்பி வருகிறது.

கேரள முதல்வரின் முதன்மை செயலாளர் தங்கக் கடத்தல் குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் உடன் தொடர்பு வெளியான பின்பு, ஏன் அவரை பணியிலிருந்து சஸ்பெண்ட செய்யவில்லை எனவும் எதிர்கட்சிகள் கேள்வி எழப்பியது.

கடந்த மாதம் பிலிப்பைன்ஸிலிருந்து வந்த கப்பலில் கொரோனா முககவசங்கள் கொச்சி துறைமுகத்திற்கு வந்தது என்றும் அப்போது பெரிய அளவில் ஹவாலா பணம் கைமாறியது என்றும், இதில் தொடர்புடைய குற்றவாளிகளுடன் ஸ்வப்னா சுரேஷ் தொலைபேசி எண்ணும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புக்கள் தெரிவிக்கிறது. ஸ்வப்னா சுரேஷ் உடன் கைதான சந்தீப் நாயரின் தம்பி ஸ்வருப் மற்றும் ஸ்வப்னா சுரேஷ் கணவர் ஜெய்சங்கருக்கும் தங்கக் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்பதால் அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரும் முயற்சியில் புலனாய்வு அமைப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. ஸ்வப்னா சுரேஷ் மற்றும் கூட்டாளிகளை பத்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

20200616185443916.jpg

ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாகி பெங்களூரில் பதுங்கியிருந்த போது, புதியதாக ஒரு செல்போன் வாங்கிகொடுத்த நபரினை புலனாய்வு துறையினர் தேடி வருகின்றனர்.

20200616190144795.jpg

‘கேரளா அரசியலில் புயலை கிளப்பி வரும் தங்கக் கடத்தல் மோசடி விவகாரம் தற்போது கேரள முதல்வர் அலுவலகம், அமைச்சர், சபாநாயகர் என பட்டியல் நீள்வதால் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவியை பிரனாய் விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. கேரளா அரசு, சபாநாயகர் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, கேரள காங்கிரஸ் தீர்மானித்து இருப்பதாக கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா நிருபர்களிடம் தெரிவித்தார். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை போல் தங்கக் கடத்தல் மோசடி விவகாரம் கேரள அரசையே ஆட்டிப் படைத்து வருகிறது!!