தொடர்கள்
அனுபவம்
காலமே போதி மரம் - 10 - என்.குமார்

20200809224005129.jpg

“பவழமல்லி

பவழமல்லி

பவழமல்லி…ன்னு உன்னோட Rough Note-ல நூறு தடவை எழுதிட்டுவா. அப்போ தான் உனக்கு அந்தப் பெயர் ஞாபகத்துல இருக்கும்.”

இப்படி எழுதச் சொன்னது நர்மதா அக்கா.

நான் இம்போசிஷன் செய்யப் பிடிக்காத, ட்யூஷன் போக விரும்பாத ஐந்தாம் வகுப்பு மாணவன். ஆனாலும், என் கேள்விக்கெல்லாம் காது கொடுத்த நர்மதா அக்கா சொன்னால் செய்யவேண்டியது தான்.

அதே தெருவில் தனி காம்பவுண்டு, தனி வீடு. அப்பா இல்லாத குடும்பம். அம்மா, உடன் பிறந்த மூன்று தங்கைகள். காலையில் எல்லோருக்கும் முன்பாக எழுந்து, தரையில் விழுந்த பூக்களை ஏதோ முணுமுணுத்துக்கொண்டே எடுத்துக் கொண்டிருப்பார் நர்மதா அக்கா. நான் முதல் முறை பார்க்கும்போதும், எல்லாக் காலையிலும் இதே காட்சி.

அந்தப் பூக்களின் பெயர் தெரியாமல், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெயர் சொல்லிக் கேட்பேன். அக்கா எத்தனைமுறை சொல்லிக் கொடுத்தும் மனதில் நிற்கவில்லை.

பவழமல்லி… இப்போது சொல்ல வருகிறது. அப்போது நூறு முறை எழுதும்படியானது.

நர்மதா அக்காவின் கூந்தல், வகிடிலிருந்து அலை அலையாய்ப் பிரிந்து தோள் பட்டையில் வழிந்து இடுப்பு வரை சேரும். பின்னல் போட்டால் எல்லாம் இரட்டைப் பாம்பாய் அடங்கும்.

ஆச்சரியப்பட்டுச் சொன்னேன், “அதான்… உங்க பேரு நர்மதான்னு நதி பேர்வெச்சதால தான் உங்க முடி இப்படி அலை மாதிரி சுருள் சுருளா இருக்கு. பொறக்கும்போது வைக்கற பேர், அதுக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒண்ணு நம்மகிட்ட இருக்கும்.”

என் கண்டுபிடிப்பைச் சிரித்து ரசித்துவிட்டு மறுத்தார்.

“ஏய்… என் தங்கை பேர் என்ன கங்கா தானே… அவ முடி இப்படியா இருக்கு? இதெல்லாம் ஜீன்ஸ், அவங்கவங்க நேச்சர்னு நிறைய விஷயம் சம்பந்தப்பட்டது. அது பெரிய Subject. உனக்கு ட்யூஷன் தான்எடுக்கணும்.”

நர்மதா அக்கா சொன்னால் சரி தான். இருக்கலாம். இருக்கலாமென்ன… அப்படித்தான் இருக்கும்.

வயது வித்தியாசம் இருபது. ஆனால், என்ன கேட்டாலும் ஒரு விளக்கம் கிடைக்கும். கேட்பது பத்து வயதுப் பையன்தானே என்ற அலட்சியம் இருக்காது.

ஒரு நாள் காலையில், தெருவில் ஆர்ப்பாட்ட கோஷம். வாசல் வந்து பார்த்தேன். துணியில் ஒரு மனித உருவம். காலர் இல்லாத முழுக்கை சட்டை. வெள்ளை வேட்டி. உள்ளே வைக்கோல் திணித்திருந்தது. லுங்கி, பெல் பாட்டம் பேண்ட் அணிந்த இளைஞர்கள் முகமெல்லாம் கோபத்தோடு அதைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு நடக்க, போலீஸ்உடைகள் தெருமுனையில் வந்ததும், சரேலென்று ஒரு தீக்குச்சி உரசி, அந்தத் துணி உருவம் பக்கென்று பற்றி எரிந்தது. களேபரம். கோஷம் இன்னும் சத்தமாகி இளைஞர்கள் ஒருவர் பெயரைச் சொல்லி ‘ஒழிக!’ என்று கத்திக்கொண்டே ஓடினார்கள். வந்த போலீஸ் குழாயடித் தண்ணீரில் அதை இழுத்துக் கிடத்தி, தீயை அணைக்க, கருப்புச் சாம்பல் நீர் தேங்கியது. அந்தப் பரபரப்பு அடங்க சாயங்காலம் ஆனது.

புரியாமல் நின்ற என்னிடம், எரிக்கப்பட்டது இலங்கையின் (அப்போதைய) அதிபர் ஜெயவர்தனாவின் உருவ பொம்மைஎன்று சொல்லி, இருபது நிமிடம் வாசல் கல் பெஞ்சில் உட்கார வைத்து, நர்மதா அக்கா தான் அவ்வளவு பெரிய இனப்பிரச்சனையைப் புரிய வைத்தார்கள்.

இப்படி எல்லாமும் தெரிந்தும் பதட்டமேயில்லாமல், அதிகாலையில் எழுந்து ஒவ்வொரு பவழமல்லியையும் வருடி வருடி எடுத்துச் சேர்க்க முடியுமா? நிதான மன நிலையா? அதைத் தாண்டிய தியான நிலையா?

நேற்று இரவு இங்கு வந்தபோது கூட இல்லையே… திடீரென்று அதிகாலையில்… எப்படி? பவழமல்லி தரையெல்லாம் சிதறிக் கிடக்கும். அருகிலிருக்கும் சைக்கிள் சீட், கல் பெஞ்ச், அடி குழாய் பக்கமெல்லாமும் சென்று எடுக்கவேண்டியிருக்கும்.

சகதில பட்டிருச்சே… கட்டெறும்பு தொட்டிருச்சே...ன்னு எந்தப் பவழமல்லியையும் புறக்கணிக்காமல் அக்கா எடுக்கும்போது, அந்தச் சந்தேகம் வந்தது.

“பூவை ரொம்ப சுத்தமாத்தானே, பறிச்சுத்தானே எடுத்து சாமிக்குப் போடணும். தரைல விழுந்திருச்சே. இது காலைல பால்காரி கால்ல கூடப் பட்டிருக்கும் போலயே?”

சின்னக் கேள்வி தான் கேட்டேன். கைக் கூடையை ஓரமாக வைத்தார் நர்மதா . எனக்கு ஒரு கதையே கிடைத்தது.

2020080922444312.jpg

“பவழ மல்லிகான்னு ஒரு தேவதை. சூரியனை அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, சூரியன் அதைப் புரிஞ்சுக்காம, ‘எனக்கு உன்மேல ஆசையில்ல’ன்னு மறுத்திட்டாரு. இந்த வலியைத் தாங்கிக்க முடியாத பவழ மல்லிகா ரொம்ப வருத்தப்பட்டு, சூரியனையே பார்க்காம இருக்க ஆரம்பிச்சா. மறக்க ஆசைப்பட்டா. சூரியனுக்கே சம்பந்தமில்லாம இருக்க ஆசைப்பட்டு பவழ மல்லிப் பூவா மாறிட்டா. அதனால தான் பவழ மல்லி நிலா வெளிச்சத்துல வரும். சூரியன் வர்றதுக்குள்ளயே பூத்து, காத்துக்கு வாசனையைக் கொடுத்துட்டு, தானா தரைல உதிர்ந்திடும். பவழமல்லி பூ மட்டுமில்ல; கிட்டத்தட்ட கண்ணீர்த்துளி மாதிரி, குமார்.

யார் தலைக்கும் ஏறாத பூ. பவழமல்லி அழுக்கு, புனிதம்லாம் தாண்டின பூ!”

அன்று நர்மதா அக்காவோடு குனிந்து பூ எடுத்தபோது, நிஜமாகவே ஒரு தேவதையின் கண்ணீரைச் சேகரிப்பது போலத்தான் இருந்தது.

அக்காவிற்கு எல்லாமே அழகு, அர்த்தம், இரம்மியம். என்னைப் படுத்திய இளையராஜா, இவ்வளவு ரசனையான நர்மதா அக்காவை விட்டு வைப்பாரா?

எப்போதுமே இளையராஜா பாட்டு தான் அவர்கள் வீட்டு வாசல், ஜன்னல் வழியாக வழியும்.

அக்கா தேர்ந்தெடுத்த பேச்சுத்துணை நான்தான். கடைக்கு, கோவிலுக்குச் சென்றாலும், தோழிகள் வீடு என்றாலும் நானும் இருப்பேன்.

அக்கா வீட்டில் இல்லாவிட்டால், இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பிரதான சாலையில் இருந்த டைப்பிங் இன்ஸ்டிடியூட்டில் இருப்பார்கள். டைப்பிங், ஷார்ட்-ஹேண்ட் க்ளாஸ் போகும்போது, வீட்டு வாசலுக்கே வந்து கூட்டிச் செல்வார். கையில் சுருட்டிய வெள்ளைத் தாள். இன்னொரு கையில் என் கை.

டைப்பிங் இன்ஸ்டிடியூட் வாசலில் இருந்த மர ஸ்டூலில் நான் உட்கார்ந்து உள்ளேயும் வெளியேயும் வேடிக்கை பார்க்கலாம்.

ஒரு நாள், அக்கா வீட்டில் ஒரு பாடல் ஒலித்தது. இனித்தது. திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.

‘பாலைவனச்சோலை’ படத்துப் பாட்டு. பாடியது வாணி ஜெயராம் – நடித்தது சுகாசினி எல்லாம் சரி.

“அக்கா! இது, இளையராஜா போட்ட பாட்டில்லையே. சங்கர் கணேஷ்-னு சொல்றாங்க!”

“அதுக்கென்னடா… பாட்டு, மியூசிக்-லாம் எவ்ளோ க்ளாஸா இருக்கு பாரு!”

எனக்குத் தெரிந்து டைப் இன்ஸ்டிடியூட்டிற்கு எதிரில் இருந்த சிமெண்ட் கடை டேப் ரெக்கார்டர் ஸ்பீக்கரில் தான் அந்தப் பாட்டை முதலில் கேட்டேன். அதன் பிறகு அதிகம் கேட்டது, அக்கா வீட்டில் தான்.

கலர் கண்ணாடி வைத்த அந்த சிமெண்ட் கடையில் ஆட்கள் வரத்து குறைவாக இருக்கும். ஆனால், நல்ல வியாபாரம் என்றும், ஓனர் நல்ல மாதிரியென்றும் சொல்வார்கள்.

“சிமெண்ட் பிஸினஸ்னா சும்மாவா? கார்மேகம், தன் பையன் நவநீதன அந்தச் சேர்ல உட்கார வெச்சிட்டான். நவநீதனும் கற்பூரம் தான். பொறுப்பு தெரிஞ்சவன்.”

அந்த நவநீதன் சாரை ரொம்ப நாட்கள் நான் பார்த்ததில்லை. போகும்போது வரும்போது எப்போதாவது கண்ணில் படுவார். சுருள் முடியில்லை. எப்போதும், பேண்ட் சட்டையில் நீட்டாக இருப்பார். அவருக்கு அந்த ஏரியாவில் ஒரு மதிப்பு இருந்தது.

அவர் கடைக்கு வந்து கொஞ்ச நேரத்தில் பாட்டு ஆரம்பித்துவிடும். அது டைப்பிங் இன்ஸ்டிடியூட் வரை கேட்கும். மர ஸ்டூலில் அமர்ந்து நான் அப்படிக் கேட்டது ஏராளம்.

ஒரு தியேட்டரில் ‘பாலைவனச்சோலை’ படம் போட்டபோது, அக்கா தன் தோழிகளோடு என்னையும் அழைத்துக்கொண்டு போனார். படத்தில் அந்தப் பாட்டு திரையெல்லாம் விரிந்தபோது பிரமித்துப் பார்த்தேன்.

படத்தில் ஒரு காட்சி. நாயகி கோலம் போடும்போது, ஒரு ஹம்மிங் செய்வாள். நாயகன் இரசித்து நின்று பார்ப்பதைப் பார்த்து சட்டென்று நிறுத்திவிடுவாள்.

நண்பர்கள் ஒரு நாள் நாயகனைப் பாடச் சொல்லி வற்புறுத்த, நாயகி தெரியும் ஜன்னலைப் பார்த்து அந்த ஹம்மிங் வரை பாடுவார். “நல்லா இருக்குடா!” என்று நண்பர்கள் தொடர்ந்து பாடச் சொல்லிக் கேட்கும்போது, “இப்போதைக்கு இவ்ளோ தான் தெரியும். கூடிய சீக்கிரம் எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவேன்” என்பார்.

என்னமோ… இந்தக் காட்சி மீது நர்மதா அக்காவுக்கு அவ்வளவு ஈர்ப்பு.

‘ரேடியோலயும் போடறதில்ல… கேசட்லயும் இல்ல… அந்த ஆண்குரல் ஹம்மிங் கேட்கணும்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதைக் கேட்பதற்காக எத்தனை முறை தியேட்டருக்குப் போக முடியும்? இந்தக் குறை அக்காவிற்கு இருந்தது.

அக்கா எப்போதும் படபடப்பாய் இருந்து பார்த்ததில்லை. ஆனால், தெருவுக்குத் திரும்பும் முனையில் ஒரு குட்டி இளைஞர்கள் கூட்டம் நிற்கும். கடந்து போகும் பெண்களைப் பெரிதாய் கிண்டல் செய்யாதவர்கள். ஆனால், கண்ணில் படும்படி நிற்பார்கள். அந்த முனை வரும்போது அக்கா என் கையைப் பிடித்துக்கொள்வார். நானும் கொஞ்சம் புரிந்து, பெரிய மனுஷ தோரணையில் கூடுதலாய் நிமிர்ந்து நடப்பேன். அந்த இடம் கடந்ததும் அக்கா தன் கையை விடுவித்துக்கொள்வார்.

அந்தத் தெருமுனை என்றில்லை. பொதுவாகவே, பேசிக்கொண்டு போகும்போது கை பிடித்துக் கூட்டிச் செல்வார். அப்போது சில சமயங்களில், நர்மதா அக்கா என் கையை மிக இறுக்கமாக ஒரு விதப் பதற்றத்தோடு இறுக்கிவிடுவார். கை வலிக்கும்.

அக்கா கல்லூரிப் படிப்பை முடித்து விட்டார் என்று நினைத்தபோது, மேலும் மேலும் படித்ததும், கூடுதல் தகுதிகளை வளர்த்துக்கொண்டதும், சீக்கிரமே நல்ல சம்பள வேலைக்குப் போனதும் மூன்று தங்கைகளுக்காகவும் தான்.

சில வருடங்களில் நான் ஊர் மாறி விட்டாலும், நர்மதா அக்கா பற்றி யாராவது வந்து சொல்ல மாட்டார்களா என்று அடித்துக்கொள்ளும். ஞாபக வாசத்திலிருந்து மட்டும் பவழமல்லியும் நர்மதா அக்காவும் கடந்து போகாமல் இருந்தார்கள்.

இரண்டு பத்து வருடங்கள் உலகத்தில் எல்லோருக்கும் கடந்து போனது. நான் மும்பையிலிருந்த பதினெட்டு மாதங்களில் ஒரு மாதத்தில், ஒரு நாள், ஒரு சாயங்காலம் மின்சார ரயில் பயணம். தாதர் ஸ்டேஷனில் நின்றது. அந்த நடைமேடையில்…. கண்கள் பார்த்த இடத்தில்….. அடுத்து வரப் போகும் ரயிலுக்கு நிற்கும் பல பெண்களில்… அக்கா…. நர்மதா அக்காவே தான்.

இருக்கையிலிருந்து எழுந்து கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு குதித்து இறங்கினேன். அக்காவின் அருகே சென்று நின்று, “ஹாய் க்கா….” என்று மென்மையாகச் சொன்னேன். முழித்தார். எனக்கு அவ்வளவு தான் அறிவு. என்னை அவர்களுக்கு இப்போது எப்படி அடையாளம் தெரியும்? மறு அறிமுகம் செய்துகொண்டதும், குதித்தே விட்டார். “என்னடா… ஹேய்… இங்க எப்படி? எவ்ளோ வருஷம்ல…. ஆளே மாறிட்ட?”

மூன்று நான்கு மின்சார ரயில்கள் வந்து, எல்லோரையும் ஏற்றி இறக்கிச் சென்று கொண்டிருந்தன. பல விஷயங்களை இழுத்து வைத்துப் பேசிக்கொண்டிருந்தோம்.

அக்கா எல்லோரைப் பற்றியும் சொன்னார். மற்ற மூன்று அக்காக்களின் குடும்பம். அம்மா மறைவு. சொந்த வீட்டை விற்றது. ஊர் மாற்றம். இடையில் சில வருடம் சிங்கப்பூர் வேலை. எல்லாவற்றையும் சொன்னார்.

உருவம் மாறவில்லை. அதே அலை முடி. உள்ளும் வெளியும் ஒளிந்து விளையாடும் நரை முடி. ரசனை… சுவாரசியம் தெறிக்கும் சிரிப்பு. அதே பேச்சு சுருதி. ஏதோ ஒன்றை மட்டும் சொல்லவில்லை…

அக்கா உங்க Family மட்டும் இங்கேயே செட்டிலா?”

“அத விடு.”

அதை எப்படி விடுவது? எதைக் கேட்டாலும் பதில் சொல்கிற நர்மதா அக்கா என் சிறுவயதுக் கேள்விகளின் தொடர்ச்சி போல் இதையும் ஏற்றுக்கொண்டு ஒரு பதில் சொன்னார்.

“எனக்கு எப்பவுமே கல்யாணம், அது இது, ரிலேஷன்ஷிப்- லலாம் பெரிய நாட்டம் கிடையாது. அப்படியே விட்டாச்சு. வேலை, ஸ்டடீஸ்-னு இருக்கேன். எனக்குன்னு யாரும் தேவையில்லை.”

முன்பு போல அக்கா சொன்னதையெல்லாம் உம் கொட்டிக் கேட்க முடியாமல் கொஞ்சம் கத்திவிட்டேன்.

“பொய்…. சுத்தப் பொய்!”

அக்கா அதிர்ந்து பார்த்தார். அதுவரை இருந்த சிநேகிதப் பேச்சு கொஞ்சம் உஷ்ணம் பிடித்திருந்தது. புரியாத மொழியில் ஏதோ விவாதம் போல் தெரிந்தது, நடை மேடையில் தள்ளி நின்றவர்களுக்கு.

“சத்தியமா சொல்லுங்க…. காதல்… கல்யாணம்-னு அப்பல்லாம் உங்க மனசுல ஒண்ணும் இருந்ததில்லையா?”

“சத்தியமா இருந்ததில்ல!”

“பொய்… “

தரையில் சிதறிக் கிடந்த பவழமல்லிகளையெல்லாம் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டே எடுத்து ஒரே கூடையில் போட்ட நானும் நர்மதா அக்காவும் பருவங்கள் தாண்டி, புது இடத்தில் வந்து நின்று சண்டை போட்டுக்கொண்டிருந்தோம்.

“அப்படி யாரையும் நெனைச்சதில்ல… லவ் பண்ணதில்ல..”

“பொய்…”

“பொய்யா… உனக்கென்ன தெரியும்?”

வயதுக்குப் பயந்து அக்கா மீண்டும் மீண்டும் அந்தப் பொய்யைச் சொன்னதும், பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டேன்.

“அக்கா… தெருப் பசங்க பார்க்கும்போதெல்லாம் சாதாரணமா இருந்திட்டு, ஒருத்தரைப் பார்த்தா மட்டும் டக்னு பதட்டமா என் கையப் பிடிச்சு அழுத்துவீங்க, தெரியுமா?... “நல்லவருல்ல… நல்லவருல்ல”ன்னு ஒருத்தரைப் பத்தி உங்க ஃப்ரண்ட் கல்யாணி அக்காட்ட ஆசையாக் கேட்டதில்ல?... சத்தியமா சொல்லுங்க… அவர் நினைப்போட தானே அந்த பாலைவனச்சோலை பாட்டை எப்பவும் திரும்பத் திரும்பக் கேப்பீங்க?”

நர்மதா அக்கா என் முகத்தை முறைக்கற மாதிரி பார்த்தாலும், அதில் கலக்கம்தான் இருந்தது.

எதுவும் சொல்லாமல் மெளனித்திருந்த அக்காவிடம் கேட்டே விட்டேன்.

“நவநீதன் சார் கிட்ட நீங்க சொல்லலியா?”

….

இருவரின் பேச்சும் நின்றுவிட்டது.

அக்கா முகத்தில் இனி பதில் சொல்ல மாட்டேன் என்ற பிடிவாதம் பரவ ஆரம்பித்தது. அக்காவின் நிதானம் கலைந்து நான் முன்பு ஆச்சரியமாகப் பார்த்த அந்தப் படபடப்பின் சாயல் தெரிந்தது. தன் தோளில் சரியாக இருந்த லெதர் பையை எடுத்து, வேகமாக அசைத்து, மீண்டும் தோளில் போட்டுக்கொண்டு மின்சார ரயில் வராத திசைப் பக்கம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

சட்டென்று என் பக்கம் திரும்பி,

“ஆமாம்… அவரை அவ்ளோ பிடிக்கும். லவ் பண்ணினேன். ஆனா, சொல்லலை! மீரா இல்லையா, மனசுக்குள்ளயே கிருஷ்ணரை வெச்சுக்கிட்டு… இருந்திட்டுப் போறேன்.”

“மனசுக்குள்ள இருந்தவர் தான் நேர்லயும் இருந்தாரே… ஏன் மீரா மாதிரி இருக்கணும்?”

என் கேள்விக்கு நர்மதா அக்காவிடம் பதில் இல்லை.

2020080922453716.jpg

பெரும் சத்தத்துடன் மின்சார ரயில் ஒன்று வந்து புகுந்தது.

சுமுகமாக இல்லாமல், பிணக்காகவும் இல்லாமல், சம்பிரதாயச் சிரிப்போடு விலகினோம்.

அக்கா, முதல் வகுப்புப் பெட்டியில் ஏற, நான் ஓடிச் சென்று ஆண்கள் பக்கம் நிற்க, ஏறிய திரள் கூட்டம் என்னையும் தூக்கி உள்ளே வைத்துக்கொண்டது.

மின்சார ரயில் புறப்பட்டது. இதோ… ஒரே ரயிலின் வெவ்வேறு பெட்டிகளில் பயணிக்கிறோம். அக்கா எங்கே இறங்கப் போகிறார் என்று தெரியவில்லை. நான் எங்கே இறங்குவேன் என்று சொல்லவில்லை.

அக்காவிடம் வயதுக்கு மீறிய கேள்வியைக் கேட்டுவிட்டேனோ?

இல்லையே… இப்போது நான் ஒன்றும் ஐந்தாம் வகுப்புப் பையன் இல்லையே…. எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லும் நர்மதா அக்காவிடம் தானே கேட்டேன்.

ஆனாலும், அவர் தொலைத்த பொருளை மறுபடியும் ஞாபகப்படுத்திவிட்ட குற்ற உணர்ச்சி எனக்கிருந்தது.

இப்போது என்னிடம் சொன்னதுபோல் அக்கா அவரிடம் சொல்லியிருக்கலாமே!

“ஆமாம்… உங்களக் காதலிக்கறேன் நவநீதன்!”

- இதைச் சொல்ல என்ன தயக்கம் இந்தப் பிரபஞ்சத்தில்?

தரையில் விழாத ஆகாயப் பவழமல்லியை எப்படி எடுப்பது? எப்படித் தொடுப்பது?

இது காலமே விரும்பாத கால தாமதம்!

இங்கே ஒரு இசைப் பவழமல்லி .....