தொடர்கள்
பொது
"செந்நாய்களின் மர்ம இறப்பு..” - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் ! - ஸ்வேதா அப்புதாஸ்..

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி, வெளிமண்டலத்திற்குட்பட்ட சிங்கார வனச்சரகத்தில் உள்ள பொக்காபுரம் விபூதி மலை வனப்பகுதியில், 9 ஆம் தேதி காலை வனத்துறை ஊழியர்கள் மார்னிங் ரௌண்ட்ஸ் போனபோது, நான்கு வைல்ட் டாக்ஸ் அதாவது செந்நாய்கள் மர்மமான முறையில் செத்து கிடந்ததை பார்த்து அதிர்ந்துள்ளனர்.. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் பறக்க, அனைவரும் ஸ்பார்ட்டில் ஆஜர்!..

20200811092122938.jpg


வழக்கமாக செந்நாய்கள் மிகவும் ஆபத்தானது. புலி, சிறுத்தை போன்ற மிருகங்கள் கூட இந்த செந்நாயை கண்டு ஓடிவிடுமாம்.. அப்படிப்பட்ட வைல்ட் டாக்ஸ் எப்படி இறந்தது என்ற அதிர்வலைகள் நீலகிரி வனத்துறையினர் மத்தியில் உலாவி வருகிறது...

20200811092017259.jpg


இந்தத் தகவலை கேட்டவுடன், வனத்துறை முக்கிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தியுள்ளனர்... அதே சமயம் இந்த செந்நாய்களின் இறப்பு, சாதாரண விஷயமாக எடுத்து கொள்ள முடியாது என்று பேசப்பட்டு வருகின்றது..

இறந்த செந்நாய்களில் இரண்டு ஆண்... இரண்டு பெண் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்டையாடுவதில் அதிபுத்திசாலிகளாம் இந்த செந்நாய்கள். முதுமலை, மசினகுடி, பொக்காபுரம் மற்றும் சிங்காரா வனத்தை சுற்றி சமீப காலமாக அதிகமாக காணப்படுகிறது இந்த செந்நாய்களின் கூட்டம்...

முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது...

“முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது அதிக அளவில் செந்நாய்களின் கூட்டத்தை பார்க்க முடிகிறது.. இது ஒரு ஆபத்தான மிருகம் தான். இதைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயந்து ஓடுவது சகஜம். காரணம், இவர்கள் கேங்ஸ்டர் கூட்டம். வழக்கமாகவே கூட்டமாக தான் இவைகள் திரிவது வழக்கம். சாதாரண நாய்கள் போல தான் இருக்கும். சிகப்பு கலர், வால் கருப்பாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்...

இந்த வைல்ட் டாக்ஸ் என்று அழைக்கப்படும் செந்நாய்கள் ஒரு டெக்கினிக்கல் ஹன்டர்ஸ் என்று சொல்லலாம். எப்பொழுதும் கூட்டமாக தான் இருக்கும். புலி, சிறுத்தை தங்களின் உணவை பிடிக்க மறைந்து, பதுங்கி தாக்கி பிடிக்குமாம். ஆனால் செந்நாய் ஒன்று எதாவது மிருகத்தை பார்த்துவிட்டால் தனியாக தாக்காதாம்... விசில் அடித்து, தன் கூட்டத்தை அழைத்து, ரவுண்டு கட்டி தான் தாக்கி உட்கொள்ளுமாம்... அதே சமயம் ஏற்கெனவே செத்துப் போன எந்த உடலையும் மோந்து கூட பார்க்காத ஒரு கௌரவமான மிருக இனம்... இந்த நான்கு செந்நாய்கள் மர்மமான முறையில் செத்துக் கிடந்ததை பார்க்கும் போது இவை விஷம் தின்று தான் செத்து இருக்கவேண்டும். அதே வேளையில் யாரோ விஷம் கொடுத்திருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்தால், அதுவும் இல்லை. செந்நாய்களுக்கு விஷம் கொடுக்க எவருக்கும் தைரியம் வராது.... இந்தச் சம்பவம் நடந்தவுடன் கால்நடை மருத்துவர் குழுவை அழைத்து, பிரேத பரிசோதனை நான்கு நாய்களுக்கும் நடத்தப்பட்டது. அதன் வயிற்றில் புள்ளி மானின் இறைச்சி தான் இருந்தது... அதன் வாயிலாக தான் விஷம் இவைகளுக்கு ஏறியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்... இந்தப் பகுதியில் சிலர் விவசாயம் செய்து வருகின்றனர்.. அவர்கள் பூச்சி கொல்லி மருந்தை வளரும் செடிகளுக்கு அடித்திருப்பார்கள்... அந்தச் செடி அல்லது காய்கறிகளை மான்கள் உண்டிருக்க வேண்டும்.... அதில் ஒரு மான் இந்த இரவு கேங்ஸ்டரிடம் சிக்கி இரையாகியுள்ளது. அந்த விஷம் தான் ஒரே நேரத்தில் இந்த நான்கு செந்நாய்களின் உயிரை பறித்துவிட்டது... இப்படி ஒரே நேரத்தில் நான்கு செந்நாய்கள் செத்து கிடப்பது இது தான் முதல் முறை. மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தால் தான் முழு விவரம் தெரியும்” என்று கூறினார்.

20200811095306155.jpg

இந்த செந்நாய்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர். கோச்சலன் நம்மிடம் கூறும் போது, “ அவை எப்படி இறந்தது என்று இப்பொழுது கூற முடியாது. நான்

20200811101438749.jpg

போஸ்ட்மார்ட்டம் செய்து உடல்கூறுகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்துளோம். அதன் முடிவு வந்தால் தான், இவைகளின் இறப்பிற்கான காரணத்தை கூற முடியும். உடலின் வெளியில் எந்தக் காயமும் ஏற்படவில்லை. மானை தான் அவை உண்டுள்ளன. அது விஷமா இல்லை வேறு என்ன என்று இப்பொழுது கூற முடியாது. ஆய்வு முடிவில் தான் இதற்கான காரணம் தெரியும்” என்று முடித்துக் கொண்டார்.

வன ஆர்வலர் சிவதாஸ் கூறும்போது, “முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரே இடத்தில் நான்கு செந்நாய்கள் இறந்து கிடப்பது என்பது அதிர்ச்சியான தகவல். அதிலும் முதுமலை புலிகள் காப்பகத்தின் இயற்கை வளர்ச்சிக்கு இந்த செந்நாய்களின் பங்கு அதிகம் என்று கூறலாம். நம் நாட்டில் செந்நாய்கள் அழிந்து கொண்டிருக்கும் ஒரு மிருக வகை... அவை கட்டாயம் காப்பாற்ற பட வேண்டிய ஒரு மிருக வம்சம். ஒரே இடத்தில் அதுவும் யானை வழித்தடத்தில்... புலிகள் காப்பகத்தில் இறந்துள்ளது ஜீரணிக்க முடியாத ஒன்று... இப்படிப்பட்ட வன பகுதியின் அருகிலே வாழும் மக்கள் இயற்கை விவசாயத்தை தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. அதுவும் நீலகிரி மாவட்டத்தில், அதிக வனம் இருப்பதால் இயற்கை விவசாயத்தை தான் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அப்படி இருக்க இந்த நான்கு செந்நாய்களின் மரணம், விஷம் என்றால் அதை கூராய்வுக்கு பின் வனத்துறையினர், இயற்கை வன ஆர்வலர்களுக்கு ஒரு வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்... இனியும் இப்படிப்பட்ட வன உயிரினங்களை இழக்க கூடாது... செந்நாய்கள் தங்களின் இனத்தை அளவாக பெருக்கி காத்துவரும் ஒரு வனவிலங்கு என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்” என்று வருத்தமுடன் முடித்தார்.

மைசூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் சங்கர் கே. முத்துவிடம் பேசினோம்...

“நான்கு செந்நாய்கள் ஒரே இடத்தில் பரிதாபமாக இறந்தது ஒரு விபத்து என்று கூறமுடியாது. மனித மிருகம் செய்த வேலை தான் இது என்று கூறுவேன். காரணம் அந்த பொக்காபுரம் பகுதியில் நிறைய கால்நடைகளை வளக்கிறார்கள், அதனை இந்த செந்நாய்கள் வேட்டையாடி சாப்பிடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனிடம் இருந்து தங்களின் மாடு, ஆடுகளை காப்பாற்றிக்கொள்ள யாரோ தான் விஷத்தை எதாவது மாமிசத்தில் கலந்து கொடுத்திருப்பார்கள்.

20200811102750473.jpg

இந்த நாய்களை Dhole dogs என்றும் அழைப்பார்கள். அதன் வால் கருப்பாக அடர்த்தியாக இருக்கும்... உடல் சிகப்பு கலர்... ஒரு முறை நான் பி.ஆர். ஹில்லசிஸில் இருந்து பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது, ஒரு பதினைந்து செந்நாய்கள் என்னை துரத்தியது... நான் பைக்கை ஹார்ன் அடித்துக் கொண்டு முன்னேற... அதுகளும் ஓடத் துவங்கியது... நான் பின்னோக்கி வந்திருந்தால், நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்...

20200811102912307.jpg

மிகவும் ஆபத்தான மிருகம். யானையை கூட கொல்லும் சக்தி கொண்டது இந்த செந்நாய்கள். முக்கியமாக புள்ளி மான்களை தான் வேட்டையாடும் இந்த நாய்கள். செந்நாய்கள் ஒரு நாடோடி கும்பல். முதுமலை, பண்டிபூர், வயநாடு காடுகளில் கூட்டம் கூட்டமாக பார்க்கலாம்...

20200811102951114.jpg

காட்டெருமையைக் கூட சுலபமாக வீழ்த்தும் தன்மை உடைய ஆகரோஷமான மிருகம்... இந்த நாய்களை சென்செக்ஸ் எடுக்க முடியாது. காரணம் கூட்டமாக திரியும். மேலும் ஒரே இடத்தில் தாங்காது. காட்டின் பொக்கிஷ மிருகம்.. காட்டின் ஒரு சுழற்சிக்கு ஏற்ற மிருகம். புலி, சிறுத்தை கூட இந்தக் கூட்டத்தை பார்த்தால் கண்டும் காணாமல் சென்று விடும்.. புலி கூட மனிதனை பார்த்தால் அமைதியாக போய்விடும். இந்த செந்நாய்களிடம் இருந்து யாரும் தப்ப முடியாது... அப்படிப்பட்ட வலிமை வாய்ந்த மிருகங்களை, விஷம் வைத்து கொல்வது எந்த விதத்தில் நியாயம்? அந்த நாய்களின் உடல் கூற்றாய்வின் ரிசல்ட் வந்தவுடன், தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இப்படிப்பட்ட பரிதாப இறப்புகளை தடுக்க வேண்டும். காட்டு விலங்குகள், அவைகளின் இருப்பிடத்தில் இருப்பதற்கு பாதுகாப்பு தேவை. அவைகளின் இடத்தை மனிதன் ஆக்கரமிக்க விடக் கூடாது....” என்று முடித்தார் ..

20200811103036755.jpg

வீரப்பன் வாழ்ந்த காலத்தில் பண்டிபூர் வனத்தில் செந்நாய்களின் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது... ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானி செந்நாய்களை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு இருந்த போது, வீரப்பன் அவரை கடத்திய நாடகம் அரங்கேறியது.... அப்பொழுது செந்நாய்களை பற்றி அதிகம் பேச்சு இருந்தது...

தற்போது முதுமலை புலிகள் காப்பக வனத்தில், மர்மமான முறையில் இறந்து கிடந்த நான்கு செந்நாய்கள் விரைவில் தேசிய செய்தியாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.... காரணம் செந்நாய்கள் ஒரு காட்டின் முக்கிய பொக்கிஷம்!