ஒவ்வொரு முறை ஓரு பெண் சீண்டப்படும் போது, வீறு கொண்டு அவள் எழும் போது வரலாறு புதிதாக எழுதப்படுகிறது.
அது சங்ககால கண்ணகி முதல் இந்தக் கால பூலன் தேவி வரை தொடரும் விஷயம்.
ஒரு சின்ன ஃபிளாஷ் பேக் போகலாம்.
ஜெயலலிதா...
எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம். இராணுவ வண்டியில் மூலையில் தேமேனென்று அமர்ந்திருந்த ஒல்லியாக இருந்த ஒரு பெண்மணியை, இவள் யார் இங்கே தலைவர் உடலருகே அமர்ந்திருக்க என்று அவரை கையைப் பிடித்து இழுத்து கீழே வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட, அந்த பெண்மணி வீறு கொண்டு எழுந்து, தமிழகத்தையே தன் கட்டுக்குள் வைத்திருந்தார் இறக்கும் வரை.
ஒரு வேளை அன்று அவரை சீண்டாமல் விட்டிருந்தால், ஒரு பெரிய சக்தியாக கூட அவர் அடையாளப்படுத்தப்பட்டிருப்பாரா என்பது சந்தேகம் தான்.
இது ஒரு சின்ன உதாரணம்...
மும்பையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் காட்சிகள் இந்த இராணுவ வண்டியை ஏனோ நினைவுப் படுத்துகின்றன.
இன்றைய செய்திகளில் ஒரு வாக்கியத்துக்கு ஒருமுறை அடிபடும் பெயர் கங்கணா ரணாவத்.
யார் இந்த கங்கணா என்ன செய்து விட்டார் கங்கணா..?
இதற்கு முன் ஆதாரமாக பாலிவுட் மும்பை சினிமா உலகை கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும்.
“கான்”கள் நிறைந்திருக்கும் பாலிவுட்டில், இன்று ஹிரித்திக் ரோஷன் தேவைப்பட்டது என்று எழுதியிருப்பார் சுஜாதா.
பாலிவுட்டை பொறுத்தவரை வாரிசு ஆதிக்கம் அதிகம் என்று அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்லாமல் அங்கிருக்கும் மாஃபியா கும்பலை எதிர்த்துக் கொண்டோ அல்லது அவர்கள் கண்ணசைவில்லாமலோ யாரேனும் முன்னுக்கு வருவது படு சிரமம். ஏராள அதிர்ஷ்டமும் திறமையும் வேண்டும்.
விகடகவியிலேயே சில வாரங்களுக்கு முன் மும்பையில் ஒரு பிரபல நிறுவனத்தில் பணிபுரியும் தோழியிடம் பேசி, சுஷாந்தின் மரணத்தையொட்டி பல செய்திகள் வெளியிட்டிருந்தோம்.
அதில் அவர் சாராம்சமாக சொன்னது சுஷாந்தின் மரணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் காரணமாக இருக்க முடியாது என்பது தான் அது.
ஆனால் தோண்டத் தோண்ட ரகசியம் போல பல விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக சுஷாந்தின் மரணத்தையொட்டி அவரது தோழி ரியா சக்ரபர்த்தியை விசாரித்ததில், போதை மருந்து புழங்கிய கேசிலும் மாட்டியிருக்கிறார்.
இங்கு தான் கங்கணா கருத்து தெரிவித்து சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.
கங்கணா ரணாவத் இந்தி சினிமாவில் மிகப் பிரபலமான நடிகை.
2006ல் கேங்ஸ்டர் என்ற படத்தில் அறிமுகமாகி, மணிகர்ணிகா என்ற படத்தின் போது மிகப் பெரிய நட்சத்திரமானவர். ராணி லக்ஷ்மிபாயாக வேடமேற்றிப்பார் அதில். ஒரு கதாநாயகியாக முக்கிய வேடமேற்று பல கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததில் கங்கணா வரலாறு படைத்தவர்.
முப்பத்தி மூன்று வயது என்று யாரேனும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்தால் கூட ஒப்புக்கொள்ள முடியாத அழகு தேவதை. (அது இந்த கட்டுரைக்கு தேவையில்லாத விஷயம். உண்மைதான்)
நம்மைப் பொறுத்தவரை இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கங்கணா தலைவியாக நடிப்பது கங்கணாவை கூடுதலாக கவனிக்க வைத்திருக்கிறது.
கங்கணா சொன்ன சர்ச்சை கருத்து, பாலிவுட்டில் போதை மருந்து அதிலும் கோகெயின் என்ற வஸ்து மிக சர்வ சாதாரணம். இதில் சின்ன ஆள் பெரிய ஆள் இல்லை 90 சதவிகித நடிக நடிகையரிடம் போதை மருந்து பழக்கம் இருக்கிறது என்றது தான் பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோபத்திற்குள்ளாக்கியது.
அது மட்டுமல்ல... பாலிவுட்டில் ஒரு மாஃபியா ஒப்புதல் இருந்தால் தான் மேலே வர முடியும் என்றும் குற்றம் சாட்டுகிறார் கங்கணா.
பாலிவுட்டில் ஒப்புதல் இருந்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று கங்கணா போன்ற ஒரு அழகான பெண் குற்றம் சாட்டினால், அதை புரிந்து கொள்ள கோனார் தமிழ் உரை தேவையில்லை. அந்த மாஃபியா கூட்டத்திடம் அனைத்திற்கும் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் தான் வளர விடுவார்கள் என்பது தான் பொருள்.
பாலிவுட் குற்றச்சாட்டு இதோடு முடிந்து விடவில்லை. தொடர்ந்து வாரிசு ஆதிக்கம் பற்றியும் குற்றம் சொன்னார் கங்கணா.
இதைத் தொடர்ந்து அவர் வைத்த இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள் தான் மஹாராஷ்டிர அரசை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
“மும்பை போலீஸ் சுஷாந்தின் மரண கேசை அணுகும் விதம் கொஞ்சமும் சரியில்லை. ஒரு வேளை ஆட்சியாளர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தான் இந்த மெத்தனமோ” என்றது தான் உத்தவ் தாக்கரேயை ஏகத்திற்கும் சீண்டி விட்டது.
கங்கணா ஹிமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர்.
இந்த களேபரங்கள் நடக்கும் போது ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்தார் கங்கணா.
ஹிமாச்சலில் நடப்பது பா.ஜ.க. அரசு. ஜெய் ராம் தாக்கூர் அங்கே முதலமைச்சர்.
மஹாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனா காங் கூட்டணியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சர். சிவ சேனாவிற்கும் பா.ஜ.காவிற்கும் இப்போது லடாய் என்பது ஊரறிந்த ரகசியம்.
இந்த சூழ்நிலையில் சிவசேனாவில் ஒரு மூத்த தலைவர் “அவ்வளவு போலீஸ் மீது நம்பிக்கையில்லாமல் இருந்தால் மும்பைக்கு கங்கணா வருவானேன். அங்கேயே இருக்க வேண்டியது தானே” என்று மறைமுகமாக ஒரு எச்சரிக்கை விடுக்க... கங்கணாவிற்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண் சிங்கம் எழுந்து விட்டது.
“நான் மும்பைக்கு குறிப்பிட்ட தேதியில் வருவேன். உங்களால் என்ன செய்ய முடியும், ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள். இது என்ன ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரா, உங்கள் இஷ்டத்திற்கு மிரட்ட?” என்று கொதித்தார் கங்கணா.
சொன்ன தேதியில் மும்பைக்கு வந்து இறங்குவது என்று கங்கணம் கட்டிக் கொண்டார்.
ஹிமாச்சல் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தன் பங்கிற்கு “கங்கணா எங்கள் மாநிலத்தின் மகள். ஒரு பெண்ணுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையா” என்று மத்திய அரசை நாட, மோட்டா பாய் என்று அழைக்கப்படும். அமித் ஷா உடனடியாக ஒய் கிரேடு பாதுகாப்பை கங்கணாவுக்கு வழங்க உத்தரவிட்டார்.
பாலிவுட் நடிகர்களில் ஒய் பாதுகாப்பு வழங்குவது இது தான் முதல் முறை.
சொன்ன தேதிக்கு பாஹுபலி போல, மனோகரா சிவாஜி போல தெம்பாக திமிராக தைரியமாக மும்பையில் கால் பதித்து பதினொரு சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் சூழ விமான நிலயத்தில் கங்கணா இறங்கி வந்ததை நாடே உன்னிப்பாக பார்த்தது.
இந்த நாடகத்தில் தகுதியை மீறி கீழறிங்கி விளையாடியது தான் சிவ சேனா செய்த மிகப் பெரிய தவறு.
கங்கணா மும்பையில் இறங்கி வீட்டுக்குள் வருவதற்குள் மும்பை நகராட்சியை முடுக்கி விட்டு, கங்கணாவின் வீட்டில் சில பகுதிகள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருக்கிறது, அவரது அலுவலகமும் அனுமதியில்லாமல் கட்டப்பட்டது என்று சொல்லி இடிக்க உத்தரவிட்டது உத்தவ் அரசு.
இது தான் வேலியில் போகும் ஓணானை பைஜாமாக்குள் விட்டுக் கொண்ட உத்தவின் கீழ்தரமான செயல் என்று ஆதரவு கட்சிகளே விமர்சிக்கும் அளவு பெயரைக் கெடுத்துக் கொண்டார் உத்தவ் தாக்கரே.
“இதில் ஒரு கட்டிடம் சரத் பவாருக்கு சொந்தமான நிறுவனம் கட்டியது. இதில் தவறிருந்தால் நான் பொறுப்பல்ல, அவர் தான் பொறுப்பு” என்று கங்கணா சொன்னதும் திருடனுக்கு தேள் கொட்டியது போல இருந்தது சிவசேனாவுக்கு. தேவையில்லாமல் சரத் பவாரை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்குமென அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
சரத் பவார் தம் பங்கிற்கு. “கங்கணா என்னத்தையும் சொல்லி விட்டு போகட்டும் என்று அதை கண்டு கொள்ளாமல் போயிருக்கலாம் இந்த சிவசேனா” என்று அலுத்துக் கொள்கிறார்.
தேமேயென்று ஒரு நடிகையாக வலம் வந்திருப்பார் கங்கணா.
அவருக்கு பா.ஜ.க ஆதரவளிக்க வைத்து, ஒய். செக்யூரிட்டி வாங்கிக் கொடுத்து, அவர் வீட்டையும் ஆஃபீசயையும் இடித்து. (உயர்நீதி மன்றம் யாரை கேட்டு வீட்டு சொந்தக்காரர் இல்லாத நேரத்தில் வீட்டை இடிப்பீர்கள் என்று வேறு அரசை தலையில் கொட்டு வைத்திருக்கிறது உப செய்தி) தேசம் முழுவதும் திரும்பிப் பார்க்க வைத்து, புதிதாக ஒரு தலைவரையே உருவாக்கியிருக்கிறது சிவ சேனா.
இதன் பிறகு நடந்தது நடந்து கொண்டிருப்பது தான் பூம்புகார் பட கண்ணகி போல சபதங்கள்.
“என் வீட்டை இடித்துப் பார்த்தாயல்லவா உத்தவ் தாக்கரே. உன் ஆணவம் இடிந்து விழுவதைப் பார்ப்பாய்” என்று சூளுரைத்திருக்கிறார் கங்கணா ரணாவத். அது மட்டுமல்லாமல், “இந்து மதத்தை சார்ந்த கட்சியாக சிவ சேனாவை உருவாக்கினார் உம் தந்தை பால் தாக்கரே. இன்று இந்து மத விரோத கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சிக்காக சிவ சேனாவை விற்றது தெரிந்தால், உன் தந்தையின் ஆத்மா சாந்தியடையுமா?” என்று கோபத்தில் கொதிக்கிறார் கங்கணா.
கங்கணாவிற்கு இவ்வளவு மக்கள் ஆதரவு பெருகியது எதனால்...?
எதிர்கட்சிகள் சிவ சேனாவின் தனிப்பட்ட தாக்குதல்களை கண்டிக்காததால், தோழமைக் கட்சியான காங்கிரசின் தலைவி சோனியா ஒரு பெண் என்பதையும் மறந்து இன்னொரு பெண்ணுக்கு நேர்ந்த அநீதியை கண்டிக்காததால்…
சிவசேனா செய்தது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம். இன்று தான் அவர்களுக்கு கங்கணா அனுமதி மீறி வீடு கட்டியிருக்கிறார் என்று தெரிகிறதா? ஏன் மும்பையில் இது போல கட்டிடங்களே இல்லையா? என்று மக்கள் கங்கணாவின் பக்கம் சாய்ந்தது சிவ சேனா எதிர்பாராதது. ஆக ஒரு அரசாங்கம் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என்பது தான் நடுநிலையாளர்களின் கோபம்.
பா.ஜ.க இந்த விஷயத்தில் குளிர்காயாமல் இல்லை. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் தான் இதை அணுகுகிறது என்றாலும் இந்த நாட்டின் பிரதமரையே வசை பாடும் தமிழ் போராளீஸ் கூட்டத்தை கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை என்பது தான் உண்மை.
தனிப்பட்ட விமர்சனங்களை கூட தாங்கிக் கொள்ள முடியாதவர்களா சிவ சேனா?!
பாலகுமாரன் எழுதுவார். உண்மை உடனே உரைக்கும்.எதிர்மறைக் கேள்வி எதையோ மறைக்கும் என்று. உண்மையிலேயே ஆதித்ய தாக்கரே சுஷாந்த் மரணத்தில் சம்பந்தப்படவில்லை என்றால் அதை நேர்மையாக விசாரிப்பதில் என்ன பயம்...?
சுஷாந்தின் மரணம் குறித்து கங்கணாவின் பகிரங்க கேள்விகள்?
ரியா சக்ரபர்த்தி எங்கே? சுஷாந்தின் தோழி.
சி.பி.ஐ விசாரணைக்கு பயப்படுதுவது ஏன்?
சுஷாந்த் இறந்த வாரம் யார் யார் அவர் போனுக்கு அழைத்திருக்கிறார்கள்?
போலீஸ் அதிகாரி வினை திவாரி ஏன் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்?
SWOT அனாலிசிஸ் என்ற சமாச்சாரம் இருக்கிறது.
பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல்.
கங்கணாவின் பலம் என்ன? அவரது அறம். தைரியம். ‘ஆமாண்டா பாலிவுட்ல எல்லாரும் போதைல தாண்டா விழுந்து கிடக்கறீங்க. வாரிசு அரசியல், மாஃபியா கலாச்சாரம் இங்க இருக்கு’ என்று தைரியமாக சொல்வது.
இன்னும் சொல்லப்போனால் அவருக்கும் ஹிரித்திக் ரோஷனுக்கும் நடக்க இருந்த கல்யாணத்தையே தடுத்தது இந்த பாலிவுட் மாஃபியா என்பது கங்கணாவின் வாதம். திடீரென ஹ்ரித்திக் தனக்கு எதிரியாக போனது எப்படி, யார் தூண்டினார்கள் என்பது தான் அவரது கேள்வி.
அவரது பலவீனம் பெரிய சினிமா குடும்பத்திலிருந்து வந்தவரல்ல கங்கணா. தனி மனுஷி. அது தான் அவரது பலமும் கூட என்று தோன்றுகிறது.
அடுத்ததாக வாய்ப்பு. வீடு இடிக்கப்பட்டாலும், இந்த வாய்ப்பு சிவ சேனா ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பு. அவரது மனதில் இருக்கும் குமுறல்களை கொட்ட ஒரு வாய்ப்பு. அரசியல் தளத்தில் கால் பதிக்கவும் ஒரு பெரும் வாய்ப்பு.
கடைசியாக அச்சுறுத்தல்..?
அதெல்லாம் கங்கணாவின் விமான நிலைய நடையிலேயே தெரிந்து விட்டது.
குண்டர்கள் என்று உள்ளுர் மக்களால் ‘செல்லமாக’ அழைக்கப்படும் சிவ சேனா தொண்டர்களிடையே பயப்படாமல் வீரர்கள் புடை சூழ மும்பையில் இறங்கி ஒரு பெண் சிங்கம் போல் அவர் நடந்து வந்ததை பார்க்க சினிமா கிளைமாக்ஸில் ஜெயிக்க வேண்டிய ஹீரோ நடந்து வருவதைப் போலத்தான் வந்தார்.
இன்னொரு பக்கம் பா.ஜ.க தொண்டர்களும், ரிபப்ளிகன் பார்ட்டி என்ற கட்சியின் தொண்டர்களும் அவருக்கு ஆதரவாக திரண்டதும் நடந்தது.
மொத்தத்தில் ஆடு புலி ஆட்டத்தை துவக்கி வைத்து விட்டார் உத்தவ் தாக்கரே. தலைவி பட நடிகை நிஜமாலுமே தலைவி ஆவாரா என்பதை கங்கணாவின் அடுத்த காய் நகர்த்தல்தான் தீர்மானிக்கும். பொறுத்திருந்து பார்க்கலாம்.
Leave a comment
Upload