- 4 -
புத்தகங்களைப் போன்ற சிறந்த நண்பன் கிடையாது என்பார்கள். உண்மை. எனக்கு புத்தகங்கள் என்றால் ஒரு ஈர்ப்பு. அதிலும் பழைய புத்தகங்கள் என்றால் ஒருவித மயக்கம் என்று கூட சொல்லலாம். எங்காவது போகும்போது தெருவோரம் இருக்கும் பழைய புத்தகக் கடையை பார்த்துவிட்டால் போதும், அங்கு இருக்கின்ற பழைய புத்தகங்களுக்குள் தொலைந்துபோய் விடுவேன். நானும் என் மனைவியும் தெருவில் நடந்துவரும் போது, எனக்கு இடப்புரத்தில் ஏதாவது பழைய புத்தகக் கடை தென்பட்டால், வலது பக்கம் நடந்து வரும் அவர் மெதுவாக இடப்புரம் நகர்ந்து, அந்தக் கடையைத் தாண்டும் வரை அது என் கண்ணில் படாதவாறு மறைத்துக் கொண்டு நடப்பார். ஏன் என்று கேட்டால், “தெருவில ரெண்டு மணி நேரம் யாரு சும்மா நின்னுகிட்டு இருக்கிறது? உங்களுக்கு புத்தகத்தைப் பார்த்தா அதுக்குள்ளையே போயிடுவீங்க. கூட ஒருத்தி நிற்கிறதையே மறந்திடுவீங்க” என்பார்.
நான் இணை இயக்குனராக பணி புரிந்த படங்களின் டப்பிங் பணியை என்னிடம் ஒப்படைத்துவிடுவார்கள். நான் ஒருவனாக இருந்து அதனை செய்வேன். அப்படி ஒரு படத்தின் டப்பிங்கிற்கு போகும்போது, தெருவில் விரித்து வைக்கப்பட்டிருந்த பழைய புத்தகங்கள் என் கவனத்தை ஈர்க்க, அப்படியே அங்கே நின்றுவிட்டேன். செல்போன் இல்லாத நேரம். நான் பேஜர் கூட வைத்துக் கொள்ளவில்லை. தயாரிப்பு நிர்வாகி என்னைத் தொடர்புகொள்ள முடியாமல் தவித்துப் போனார். டப்பிங்க் பேச வந்த நடிகர் பொறுமை இழந்து கோபத்துடன் கிளம்பிப் போக வந்தபோது, நான் வேக வேகமாக வந்து அவரிடம் சாரி சொல்லிவிட்டு டப்பிங்கை துவக்கினேன்.
முதன் முதலில் என்னை இயக்குனராக ஒப்பந்தம் செய்து ஒரு ஈழ நண்பர் ஒரு படத்தை துவக்குகிறார். கதாநாயகனாக அன்றைக்கு பிரபலமாக இருந்த நடிகர் ரகுமானிடம் மூன்று கதைகள் சொன்னேன். மூன்றுமே மிகவும் நன்றாக இருப்பதாக சொல்லி, அதில் எந்தக் கதையில் வேண்டுமானாலும் நடிப்பதாக சொல்லிவிட்டார். காஸ்மோபாலிட்டன் கிளப்பில் ரூம் போட்டு கதை விவாதத்தை நானும், வசனகர்த்தா நண்பர் பிரசன்னகுமாரும் துவக்கினோம். அதே சமயம் கேயார் தயாரித்து சிவாஜி கணேசன் நடித்த சின்ன மருமகள் படம் பெங்களுரில் நடந்தது. அதற்கும் பிரசன்னகுமார் தான் வசனம். படத்தின் வசனகர்த்தா எங்கே என்று சிவாஜி கேட்டதால், பிரசன்னகுமாரை பெங்களூர் போக சொல்கிறார் கேயார். “இல்லை அண்ணாதுரையோட படத்தின் ஸ்டோரி டிஸ்கஷன்” என்று பிரசன்னா சொல்ல, “அவரையும் பெங்களூருக்கு கூட்டிக்கிட்டு போயிடு. கம்பெனி செலவுல ரூம் போட்டு தந்திடுவாங்க” என்றார் கேயார்.
ஆஹா என்ன ஒரு அதிர்ஷ்டமான தயாரிப்பாளர். அவர் படத்தின் கதை விவாதத்திற்கு இன்னொரு தயாரிப்பாளர் ரூம் போட்டு தருகிறார். நானும் சந்தோஷமாக பெங்களூர் கிளம்பிப் போய் விட்டேன். ஆனால் பிரசன்னகுமார் படப்பிடிப்பு நடக்கின்ற வரை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று. அதன் காரணமாக நானும் அந்த இடத்திலேயே இருந்தேன். சாதரணமாக சென்னையில் படப்பிடிப்பு நடந்தால், செட்டில் வைக்கப்பட்டு இருக்கும் புத்தகங்கள் பெரும்பாலும் விஞ்ஞானம், சட்டம் பற்றிய தடிமனான புத்தகங்களாக இருக்கும். ஆனால், அந்த செட்டில் வைக்கப்பட்டு இருந்த புத்தகங்கள் அற்புதமானவை. அதில் இருந்து ஆர்த்தர் மில்லர் எழுதிய ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் துவங்கினேன். பிறகு செட் அசிஸ்ட்டன்டிடம் பத்து ரூபாய் கொடுத்து, அதை வாங்கிக் கொண்டேன்.
சென்னைக்கு திரும்பியதும் எனக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஈழ விடுதலை இயக்கமான EPRLF தலைவர் பத்மநாபா சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் எனது தயாரிப்பாளரின் கார் என்று சொல்லி அவரைக் கைது செய்துவிட்டனர். பாவம் அவருக்கும் அந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் விதி, அவர் சிக்கி சிறைக்கே சென்றுவிட்டார். என் முதல் படம் கதை விவாதத்துடன் முடிந்துவிட்டது. இதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து, அடுத்த பட வாய்ப்பு வருகிறது. இந்த முறை ஆர்த்தர் மில்லர் நாடகத்தில் இருந்து ஒரு கதைக் கருவை உருவிக்கொண்டேன். அந்தப் படம் முடிந்து ஏனோ இன்றுவரை பெட்டிக்குள் இருக்கிறது. அது வராதது குறித்து அதிகம் வருத்தப்பட்டவர்கள் ராம்கியும் விவேக்கும் தான். சுட்ட கதை என்றும் நன்றாக இருக்கும் தானே. வாழ்க பழைய புத்தகங்கள்.
அடுத்து விவேக் அவர்களுடன் நகைச்சுவை காட்சிகளுக்கான கதை விவாதம். ஒரு பழைய ஆர்ச்சி காமிக்கில் நான் படித்த ஒரு விஷயத்தை சொல்கிறேன். இரண்டு பெண்கள், ஒரு குடும்பத்தின் நிலையை பற்றி பேசி கண்ணீர் விடுவார்கள், கடைசியில் அது டிவி தொடர் என்று தெரியும். இதை அப்படியே விவேக்கிற்கு ஒரு காட்சியாக மாற்றினார் பிரசன்னகுமார். பின்னர் வடிவேலுவும் இதே சீனை ஒரு படத்தில் செய்தார். பழைய பேப்பர் கடை வாழ்க.
கேயார் இயக்கிய ஒரு படத்தின் கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. நான் படித்த ஆஸ்கார் ஒயில்டின் THE IMPORTANCE OF BEING EARNEST. (உபயம்: பழைய புத்தகக் கடை) நாடகத்தின் கதையை சொல்கிறேன். அப்போது விவாதக் குழுவில் இருந்த திரு. மா.ரா. அவர்கள். “நான் இந்தக் கதையை ஒரு படத்தில் கிளைக் கதையாக வைத்து இருக்கிறேன். அது பெரிய வெற்றி பெற்ற படம் “ஆச்சரியமாக இருந்தது. என்ன படம்?” என்று கேட்டேன்.. “பலே பாண்டியா” படத்தில் பாலாஜி கதாபாத்திரம் தான் அந்த கதை என்றார்.
இன்றைக்கெல்லாம் யார் புத்தகத்தில் இருந்து சுடுகிறார்கள்? எல்லோருமே படத்தில் இருந்து சுட்டு படம் செய்கிறார்கள்.. சுயமாக சிந்திப்பவர்களை விட்டுத்தள்ளுங்கள்.. ஆயிரம் சொன்னாலும் புத்தகங்களுக்கு இணையாகுமோ? நீங்க தான் சொல்லணும்....
Leave a comment
Upload