சட்டமன்ற கூட்டத்தொடர் 14-ல் துவக்கம்...
சென்னை கலைவாணர் அரங்கில் 3 நாள் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் எம்எல்ஏக்கள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா டெஸ்ட் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கின் 3-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், வரும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு சட்டமன்றக் கூட்டத்தொடர் துவங்குகிறது. இக்கூட்டம் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என கடந்த 8-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முதல் நாள் (14-ம் தேதி) கூட்டத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், காங்கிரஸ் எம்பி வசந்த்குமார் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. மறுநாள் (15-ம் தேதி) அரசு அலுவல்கள் எடுத்து கொள்ளப்படும். 16-ம் தேதி முதல் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, விவாதமின்றி நிறைவேற்றப்படும். பின்னர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படுகிறது. அத்துடன் 3 நாள் கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏக்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவில், ‘நெகடிவ்’ வந்தால் மட்டுமே எம்எல்ஏக்கள் பங்கேற்க முடியும் என சபாநாயகர் தனபால் அறிவித்திருக்கிறார். அதே சமயம், கூட்டத்தொடரில் பங்கேற்கபவர்களுக்கு அரசு சார்பில் கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்படும். கூட்டம் நடைபெறும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக, கொரோனா பரிசோதனை கட்டாயமாக செய்யப்பட வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதன்படி, கடந்த 11-ம் தேதி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலமாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (11-ம் தேதி) பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று (12-ம் தேதி) அல்லது 13-ம் தேதி வெளியாகும். இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொரோனா இல்லை என்றால் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், கொரோனா பரிசோதனையை நினைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எனப் பலரும் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், கடந்த 9-ம் தேதி தமிழக முதல்வர் திருவண்ணாமலையில் கொரோனா ஆய்வு பணிக்கு சென்றார். முதல்வர் விழா நடைபெறும்போது, அதில் பங்கேற்கும் அனைத்து விவிஐபி, விஐபி, அரசு அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறும். அப்படி பரிசோதனை செய்தபோது, இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு நோய்தொற்று இருப்பது உறுதியானது. பின்னர் அவரை சென்னைக்கு அனுப்பி, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நேற்று (11-ம் தேதி) காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்றார். முன்னதாக, அங்குள்ள விஐபிக்களுக்கு பரிசோதனை செய்ததில், மாவட்ட செயலாளர் சோமசுந்தரத்துக்கு நோய்தொற்று உறுதியானது. இதனால் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் எம்எல்ஏக்கள், அதிகாரிகளின் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்யும்போது, இன்னும் பலருக்கு கொரோனா நோய்தொற்று உறுதியாகலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இதனால் பலர் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இதுவே வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முக்கிய விவாதப் பொருளாக மாறவும் வாய்ப்பு உள்ளது என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Leave a comment
Upload