எல்லோரும் பிரியாணி சாப்பிட்டு முடித்திருந்தனர். வட்டம் போட்டு சரிவாய் அமர்ந்து தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தனர்.
மூத்தஅண்ணன் முஜீபுர் ரஹ்மான் தனது மனைவியுடன்.
இளைய அண்ணன் தனது மனைவியுடன்.
மூத்த அக்காள் ரவூதா கானம் தனது கணவனுடன்,
இளைய அக்காள் தனது கணவனுடன்.
மூத்தவர்கள் அமைத்திருக்கும் வட்டத்தை சுற்றி ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர் நண்டான் சிண்டான்கள், உற்சாகக் கூச்சல்கள் கிரீச்சிடல்கள் சிரிப்புகள். கடைக்குட்டி குலாம் ஹுஸைனுக்கு வயது 23 சுற்றுலாத்துறையில் மேலாண்மை நிர்வாகம் முடித்துவிட்டு வேலைக்குக் காத்திருப்பவன். ஐவரில் திருமணமாகாதவன் இவன் ஒருவனே. முஜீபுர் கூவினான். “குலாம்! அரங்கிலிருந்து புதுவாசனை சுண்ணாம்பு டப்பா எடுத்திட்டு வா!”
குலாம் தேடி எடுத்து வந்தான். “இந்தா பாய்!”
“சுண்ணாம்பு இருக்கட்டும்.கொஞ்சம் பக்கத்ல உக்காரு. உன்கிட்ட பேசனும்!”
முஜீபுரின் குணம் குலாமுக்கு நன்கு தெரியும். வயிற்றில் சிறப்பான சாப்பாடு இறங்கிவிட்டால் அடுத்தவரை கிண்டல் செய்து குரூர திருப்தி காணும் பொழுது போக்கில் இறங்கி விடுவான் என்று.
“நான் உக்காரல. எனக்கு வேலை இருக்கு!”
“எல சாவஞ்சசெத்த மூதி உக்காருலே...” என்றாள் ரவூதா.
வேண்டாவெறுப்பாக அமர்ந்தான் குலாம். “என்ன சொல்லுங்க!”
“இந்த வீட்லயே அட்டக் கறுப்பு யாருடா?”
“ஆரம்பிச்சிட்டீங்களா? ஏன் நான்தான்!”
“நடிகர் விஷால் கறுப்பு இருப்பியாடே!”
“இருப்பேன்... அதுக்கென்ன?”
“நீ வெளிய தெருவுல போனா உன்னை முஸ்லிம்னு பிறமக்கள் நம்புறாங்களாடே?”
“நம்பல…” கண்கலங்கினான் குலாம்.
“நீ கறுப்பா இருக்றதுக்கு ரெண்டு மூணு காரணங்கள் எனக்குத் தெரியுது. சரியான்னு பாருடே!”
“வேணாம் பாய்... உங்க கிண்டலை இத்தோட விட்ருங்க... விட்டா அழுதிடுவேன்!”
“பெரிய கவரிமான் இவரு... ஒரு அரைமணி நேரம் பொறுமையா இருடே... உன்னை அம்மா ஆஸ்பத்திரிலதான் பெத்துச்சு. அங்க நீ மாறி போய்ட்ட. எங்க தம்பி வேற தாய்கிட்ட போய்ட்டான். வேற தாயோட குழந்தை நம்ம அம்மாகிட்ட தங்கிருச்சு. என் தியரி சரியாடே!”
“உன் நாக்குல ஷைத்தான் டான்ஸ் ஆடுது பாய். வெள்ளைநிறம் உசத்தி கறுப்புநிறம் தாழ்த்தின்ற உங்க கீழான குணம்தான் ஆங்கிலேயனை 160 வருடம் நம்மை அடக்கியாள வச்சுச்சு. கறுப்பும் பழுப்பும்தான் இந்தியாவின் தேசீய நிறம்!”
“அரசியல்வாதி மாதிரி பேசுதடே... ரெண்டாவது காரணத்தையும் சொல்லிப்புடுறேன்... சின்ன வயசிலிருந்து நீ சரிவர குளிக்காம அழுக்கு உன் மேற்தோல்ல தங்கிப்போச்சு. அழுக்கு மேல அழுக்கு அழுக்கு மேல அழுக்கு ஓவர்லாப் ஆகி அட்டக்கறுப்பாய்ட்ட. ஒரு லைப்பாய் சோப் வச்சு நாலுமாசம் குளிப்ப. ஒரு படத்ல மனோரமா கோழியை பார்த்து பார்த்து சோறு தின்னுவாங்க. அதுமாதிரி நீ சோப்பை பாத்து பாத்து குளிப்ப போல...” இப்போது இரு அண்ணன்களும் இரு அக்காள்களும் வெடிச்சிரிப்பு சிரித்தனர்.
குலாமின் கண்கள் கலங்கின. “இத்தோட விடுதியா பாய்?”
“பாத்திரம் கழுவுற சோப்போட ஸ்கிரப்பர் ஒண்ணு தருவான். அதை வச்சு நல்லா தேய்ச்சு குளிச்சா கொஞ்சம் நிறமாய்டுவ தம்பி!”
“யோசனைக்கு நன்றி!”
“நீ கறுப்பா இருக்கிறதுல ஒரு சில அனுகூலங்களும் உள்ளன. குலாம் என்னன்னு கேளேன்...”
மௌனித்தான் குலாம். “கேக்கமாட்டியா? சரி நானே சொல்றேன்.
ஜிம்பாவே அணில வெஸ்ட் இண்டீஸ் அணில கிரிக்கெட்டரா போய் நீ சேரலாம். ஸைபர் அடிச்சு ஒண்ணு அடிச்சு ரெண்டு அடிச்சு ரெண்டு மூணுவருஷம் ஓட்டிட்டீன்னா போதும் எக்ஸ் கிரிக்கெட்டரா மாறி டிவி காமென்டரி சொல்லலாம். ‘குலாம் கும்பலக்கோ’ ன்னு பேரு மாத்திக்கிட்டு ஆப்பிரிக்கன் சிட்டிஸன் ஆய்டு!”
‘ஆமாமா நான் ஆப்பிரிக்கா நீங்கல்லாம் அமெரிக்கா பிரான்ஸ் இங்கிலாந்து இட்டாலி!”
“கிரிக்கெட்ல உனக்கு கோல்போடத் தெரியலைன்னா நோ ப்ராப்ளம்... பேன்ட் சட்டையை கழட்டிப் போடு... பட்டேஸ்ல ஒரு வால் ஒட்டிக்க... ஏதாவது ஒரு ஜுவுல சிம்பன்ஸியா செட்டிலாய்டு... வேளாவேளைக்கு வயிறுநிறைய சாப்பாடு கிடைக்கும்... எம்பிஏ படிச்ச முதல்குரங்குன்ற மரியாதையும் ஜுவுல கிடைக்கும்...”
பக்கத்து அறையிலிருந்து நாணி ஓடிவந்தாள் “முஜுபுர்! உன் திருவாயை முடிக்கிட்டு இருக்கியா? சுப். தனியா ஓருத்தன் மாட்டிக்கிட்டான்னா இவ்வளவு கேவலமாவா கிண்டல் பண்றது? உங்க மூஞ்சி முகரைகளை போய் நல்லா கண்ணாடில பாருங்கடா... குலாம் குரங்குன்னா நீ மூத்த குரங்கு உன் மூத்ததம்பி ரெண்டாவது குரங்கு மூத்த தங்கச்சி மூணாவது குரங்கு ரெண்டாவது தங்கச்சி நாலாவது குரங்கு. நாவடக்கம் அவையடக்கம் நல்லது முஜுபுர்!”
“குட்டிக்குரங்கை கிண்டல் பண்ணினா நாணிக்குரங்குக்கு சுர்ருன்னு கோபம் வருதே... ஏ கிழவி உன் வேலைய பாத்துக்கிட்டு போறியா இல்ல நீ நாலு வார்த்தை வாங்கி கட்டிக்கிறியா?”
நாணி முணுமுணுத்தவாறே கிளம்பினாள். “சரி, நம்ம பணியைத் தொடருவோம். மிருக்காட்சி சாலைல நீ குரங்கா சேரனும்னா நல்லா மரமேறக் கத்துக்க... முழு ஈறு தெரிய உறும கத்துக்க. பேன் பார்க்க கத்துக்க. பல்டி அடி சாமர்சால்ட் பண்ணு... தலைல அலுமினியத்தட்டை வச்சிக்கிட்டு அங்கயும் இங்கயும் கேட் வாக் போ...”
“நிறுத்துடா!”
‘டா போட்டு பேசுதியா?”
“பின்ன? உனக்கு அவ்வளவுதான் மரியாதை. நாக்குல நரம்பில்லாத உதகண்டமா பேசிக்கிட்டே போறியே?”
“பேசுவேன்... என்னடா பண்ணுவ?”
மத்த சகோதர சகோதரிகளை பார்த்து முறையிடும் குரலில் குலாம், “அவன் என்னை கிண்டல் பண்ண கிண்டல் பண்ண க்ளுக்களுக்குன்னு சிரிக்றீங்களே... நாளைக்கி உங்களையும் கிண்டல் பண்ணுவான் அப்ப உங்களை பாத்து ஊரே சிரிக்கும் தாங்குவீங்களா?”
“நாங்க குடிச்ச எச்சில்பாலை குடிச்சு வளந்த பய நீ... ரொம்பதான் சலம்புதியே?”
குலாமை மூஜுபுர் தலையில் தட்டினான். “அடிக்காதே... நானும் திருப்பி அடிப்பேன்...”
மீண்டும் தலையில் தட்டி “எங்க அடிடே பாப்பம்!”
அவ்வளவுதான்... குலாம் தனது அண்ணனை ஒரு அடி அடித்தான். இருவரும் அடிகளை பரிமாறிக் கொண்டனர். சரேலென்று பாய்ந்து குலாமின் குரல்வளையை முஜுபுர் பற்றினான். குலாம் பாய்ந்து முஜுபுரின் குரல்வளையை.
கைகலப்பு பத்து நிமிஷம் நடந்தது.
மீதி சகோதர சகோதரிகள் இருவரையும் தனித்தனியே பிரித்தெடுத்தனர். பிரித்தெடுக்கும் போதே “மூத்தவனையா அடிக்ற? வீட்டுக்கு மூத்தவனையா அடிக்ற?”-ன்னு கேட்டு கேட்டு குலாமை அடித்தனர்.
குலாம் அவர்களிடமிருந்து உதறலாய் விடுபட்டான். அவனது கண்கள் தாரைத்தாரையாய் கண்ணீர் வடித்தன. ‘ஏன்தான் இந்த வீட்ல பிறந்தேனோ? கொஞ்சங்கூட சகோதரபாசம் இல்லாத சுயநலவீடு (அண்ணன் அக்காள்களை பார்த்து) என்னையா கிண்டல் பண்ணி அடிக்றீங்க... இனி உங்க மூஞ்சில முழிக்கமாட்டேன்... இனி நீங்க யாரோ நான் யாரோ... என் தீதார் பாக்க நீங்க வர வேண்டாம் உங்க தீதார் பாக்க நான் வரமாட்டேன்!”
அனைவரும் நையாண்டியாய் சிரித்தனர். குலாம் ஆங்காரத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான்.
பள்ளிவாசல். சுருண்டு படுத்திருந்தான் குலாம். ஒரு தொழுகையாளி மெதுவாக தட்டி எழுப்பினார் “எந்திரிப்பா...”
கசங்கிய இரத்தக்கண்கள் திரும்பினான். “என்ன பாய்?”
“ஒன்றரை நாளா இங்கதான் இருக்க. நீ எதுவும் சாப்ட்ட மாதிரி தெரியல. இந்தா இந்த பொட்டலத்ல ஆறு புரோட்டா இருக்கு. சாப்ட்டு தண்ணி குடிச்சிட்டு வா. பேசுவம்.”
தன்மானத்தை பசி வென்றது. சாப்பிட்டு விட்டு திரும்பினான்.
“நீ யார் வீட்டு பையன்?”
“ஹாஜியார் வீட்டு பையன் நான் என் பெயர் குலாம் ஹுஸைன்!”
“என்ன பிரச்சனை?”
நடந்தததை விவரித்தான்.
“வேடிக்கை பேச்சு பேசுறது - பட்டபெயர் சூடுறது - புறம்பேசுதல் - கோள் பேசுதல் - சில படிக்காத முஸ்லிம்கள்கிட்ட சர்வசாதாரணமா இருக்கு. அவங்களும் திருந்தனும் ஆண்டவனும் அவங்களை திருத்தனும். அநாகரிகத்துக்கு பதில் அநாகரிகம் சரியாகாது. மூன்று இரவுகளுக்கு மேல் சகோதர சகோதரிகளிடம் பேசாமல் பகை வளர்ப்பது இஸ்லாத்துக்கு முரணானது என்கிறது நபிமொழி. வீட்டுக்கு போ. உன் அண்ணன் அக்காள்களுடன் பேசிக் கொள். அவர்களிடம் தனியாக சிக்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்களை தவிர். வெகுசீக்கிரம் ஒரு வேலையை தேடிக் கொள்!”
யோசித்தான் குலாம். “அப்படியே செய்கிறேன் பாய் அறிவுரைக்கு நன்றி!”
-குலாம் ஹுஸைன் தயங்கிதயங்கி வீட்டுக்குள் நுழைந்தான். குலாமை காணாமல் பல இடங்களிலும் தேடி சோர்ந்திருந்த அண்ணன்கள் அக்காள்களிடம் போனான். “அஸ்ஸலாமு அலைக்கும் பாய்... அஸ்ஸலாமு அலைக்கும் ஆப்பா!”
“ஒஸ்தாத் சலாம் சொல்றாரு... வஅலைக்கும் ஸலாம்- பசி தாங்காம திரும்பி வந்துட்டியா?”
“மூணு இரவுக்கு மேல் சகோதர சகோதரிகளிடம் பகைமை பாராட்டக் கூடாதுன்னு நபிமொழி வலியுறுத்துது. அதுக்காகதான் திரும்பி வந்தேன்!”
“பார்ரா... ஒரு அரை டிக்கெட் நமக்கு நபிமொழி பாடம் எடுக்றதை!”
“நான் உங்களிடம் தவறாக நடந்திருந்தா பேசியிருந்தா அல்லாவுக்காக என்னை மன்னியுங்க!”
நாணி அறைக்கு நடந்து சென்றான் ஹுஸைன். ஒரு குரங்கு நடந்து போவதை போல நடித்துக் காட்டினான் முஜுபுர் ரஹ்மான். அத்துடன் “நம்ம தம்பி ஒரு குரங்குன்னு மட்டும்தான் நினைச்சிருந்தேன்... அவனுக்கு சூடுசொரணையும் சுத்தமா கிடையாதுன்னு இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்!”
வெடிச்சிரிப்பு விஸ்வருபித்தது. வாலை இடதுகையால் பிடித்தபடி இப்லீஸ் நால்வரை சுட்டினான். “இவர்கள் என்னை பின்பற்றி நரகத்துக்கு போகப் போபவர்கள்!”
நால்வரின் புட்ட நடுவிலும் ஒரு வால் தோன்றி மறைந்தது.
Leave a comment
Upload