தொடர்கள்
Daily Articles
அழ வைக்கறீங்களே சுதாங்கன் சார்!.... - சுபா வெங்கட்

20200812231841337.jpg

சுதாங்கன் சார்...தமிழ் பத்திரிகையுலகின் மூத்த பத்திரிகையாளர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திசைகள், குமுதம், விகடன், ஜூனியர் விகடன், ஜுனியர் போஸ்ட், தினமணி, தமிழன் எக்ஸ்பிரஸ், தின மலர், ஜெயா டிவி, விகடகவி (துணையாசிரியர்) என பல்வேறு பத்திரிகை குழுமங்களின் ஆசிரியர் இலாகாவில் பொறுப்பு மிக்க பதவிகள் ஏற்று தன் கீழ் பணி புரியும் இளைய படைப்பாளிகளை பிரமாதமாக வழி நடத்தியவர்.

பத்திரிகையாளர் என்பது தவிர அவரணிந்த மற்ற மகுடங்கள்…நாவல் மற்றும் சிறுகதை எழுத்தாளர், சினிமா நடிகர், தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம், திரைப்படங்கள் மற்றும் திரை இசைப் பாடல்களின் ஆய்வாளர், மொழி பெயர்ப்பாளர்,தொலைகாட்சி நெறியாளர் என பற்பல!

சுதாங்கன் என்றாலே அவரை அறிந்த அனைவர்க்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரது கலகலப்பான பேச்சும், ராட்சஸ எனர்ஜியும்தான்! ஒரு மனிதரிடம் சோர்வே இருக்காதா எனும் அளவுக்கு 24 மணி நேரம் கூட அவரால் பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும்…பாடிக் கொண்டும் இருக்க முடியும்! இத்தனையும் மீறி மனிதருக்கு அசாத்திய சென்ஸ் ஆஃப் ஹ்யூமரும் உண்டு. அவர் இருக்கும் இடங்களில் அவரது உரத்த குரலும், ஓங்கிய வெடிச் சிரிப்பும் பிரசித்தம்! எப்பேர்ப்பட்ட கும்பலாக இருந்தாலும் அவரது குரல் அதில் தனித்து ஒலிக்கும். அறிவின் வெளிச்சம் தனிப்பட்டு பிரகாசிக்கும். இத்தனை புகழுக்கும் சொந்தக்காரராக இருந்தாலும் தான் மட்டுமே எழுத்தில் சிறந்தவராக இருக்க வேண்டுமென நினைக்காமல் தனக்குக் கீழே பணிபுரியும் இளைய படைப்பாளிகளை நிறையவே ஊக்கப்படுத்துவார்.

“நீந்தத் தெரியாது என கரையில் நின்று யோசித்தால் நீ கடைசி வரை நீந்தப் போவதில்லை. சட்டென குளத்தில் குதித்து விடு..தானாக நீச்சல் பழகும்” என பல சந்தர்ப்பங்களில் தயங்கி நின்ற படைப்பாளிக்ளைப் பிடித்து தண்ணீரில் தள்ளி விட்டிருக்கிறார். “உன்னால் முடியும்..நீதான் இதை எழுதுகிறாய். சும்மா பேசிக்கொண்டே இராமல் போய் எழுதத் தொடங்கு” என அவர் பத்திரிகையில் தடால் என அறிவிப்பு தந்து எழுத வைத்த எத்தனையோ படைப்பாளிகளை நான் அறிவேன்! நண்பர் செளபா ‘சீவலபேரி பாண்டி’ நிஜத்தொடர் எழுதியது அப்படியொரு சுதாங்க முயற்சியில்தான்!

மனச்சோர்வுடனோ, உடல் களைப்புடனோ அவர் முன் போய் நின்றால் உதை மட்டுமே கிடைக்கும். ஒரு கட்டுரை எழுதி முடிக்க இத்தனை கால அவகாசம்தான். அதற்குள்ளாக முடிக்க வேண்டுமென கட்டளையிடுவார். “கட்டுரையோ, பேட்டியோ, அதற்கான களத்தில் நிற்கும் போதே கட்டுரைக்கு நம் மனசில் முழு வடிவமைப்பு நிகழ்ந்து விட வேண்டும். உன் மனசில் ஏறாத மேட்டர் எல்லாம் உப்புச் சப்பு இல்லாதவைதான். அதில் வாசகனுக்கும் எந்த சுவையும் இருக்கப் போவதில்லை. அப்புறமென்ன? மடமடவென எழுத வேண்டியதுதானே?” என உரிமையோடு கோபப் படுவார். இப்படி ஜூனியர்களை உசுப்பேற்றியே வேலை வாங்குவது அவர் கடைபிடித்த ஸ்பெஷல் உத்தி!

விகடன் குழுமத்தில் நாங்களெல்லாம் பணி புரிந்த காலகட்டத்தில் மிக நன்றாகப் பழகக்கூடிய சீனியர்களில் முக்கியமானவர் சுதாங்கன். அவரிடம் பர்சனல் பிரச்னைகளுக்கு கூட ஜூனியர்கள் ஆலோசனை கேட்பார்கள். எல்லாவற்றுக்கும் அவரிடம் பதிலும் வழிகாட்டலும் கிடைக்கும்.

அன்று விகடனில் பணி புரிந்த ஆசிரியர் இலாகாவினருக்கு கூகுளோ, இணையதளமோ கிடையாது. ஆனால் சுதாங்கன் சாரிடம் கேட்டால் எது பற்றியும் ஒரு சின்ன தகவலாவது கிடைத்து விடும். மேற்கொண்டு தகவல் வேண்டுமாயின் “மதன் சாரின் நூலக அலமாரியில் உங்களுக்கு முழு தகவல் கிடைக்கும். இந்த புத்தகம் அங்கே இருக்கிறது..எடுத்துப் படியுங்கள்” என்று சொல்வார். அப்படியே கிடைக்கும்! விகடனில் அன்று மதன் சாருக்குப் பிறகு பலதரப்பட்ட புத்தக வாசிப்பு கொண்டவர் சுதாங்கன் சார் மட்டுமே!

விகடன் தூண்களில் ஒருவரான ராவ் சார் அன்றைய எண்பதுகளின் காலகட்டத்தில் எவர் ஒருவர் நல்ல கட்டுரை எழுதினாலும் தன் சட்டைப் பையிலிருந்து 100 ரூபாய் எடுத்து அன்பளிப்பாய் தருவார். அப்படி அவரிடமிருந்து பல 100 ரூபாய்களை வெற்றிகரமாக வாங்கியவர் சுதாங்கன் தான்! ஜூனியர் விகடனை ஒரு புலனாய்வுப் பத்திரிகையாக வடிவமைத்ததில் சுதாங்கனுக்கு மிக முக்கிய பங்குண்டு. ஜூனியர் போஸ்ட் எனும் தமிழின் முதல் டேப்லாய்ட் பத்திரிகைக்கும் இவரே முதல் ஆசிரியர்.

அநேகமாக இவர் பேட்டி எடுக்காத அரசியல், சினிமா மற்றும் இதர துறைப் பிரமுகர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களா என்பது எனக்கு சந்தேகம்தான். எல்லோரிடத்திலும் நட்பு பாராட்டுவது சாத்தியமா என்று கேட்டால் சுதாங்கன் சார்தான் அதற்கு ஒரே பதில்! தொடர்புகள் அவருக்கு தொப்புள் கொடி உறவு மாதிரி. ஊர் முழுக்க ஆள் தெரிந்து வைத்திருப்பதும், அவர்களை சரியான சமயத்தில் பத்திரிகைக்கு பயன்படுத்துவதும் அவரது ஸ்பெஷாலிட்டி!

தன் அன்பு மனைவி சாந்தியின் மறைவுக்குப் பிறகு தன் வீட்டு கிச்சனிலும் நுழைந்து தூள் கிளப்பத் தொடங்கியதால் சமையல் குறிப்புகள் கூட இவர் நிறையவே எழுதி வைத்திருக்கிறார். ராமாயணமும், மகாபாரதமும் இந்த பி.ஸ்ரீயின் வம்சாவளிப் பேரனுக்கு அத்துப்படியான இலக்கியங்கள். இந்த இரண்டு காப்பியங்களையும் கலெக்டிவாக திறனாய்வு செய்து விடியோ பதிவு செய்ய வேண்டுமென்பது அவரது 2020 குறிக்கோளாக இருந்தது.

கொரோனா காலகட்டத்தில் கூட தொடர்ந்து பிஸியான எழுத்துப் பணிகளில் தன்னை திணித்துக் கொண்ட மூத்த பத்திரிகையாளர் இவராகத்தான் இருப்பார். இவருக்கு போன் செய்தால் ஒன்று புதிய புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருப்பார்… இல்லையெனில் ஏதாவது ஒரு பத்திரிகைக்கோ அல்லது பதிப்பகத்துக்கோ எழுதிக் கொண்டிருப்பார்.

என் வாழ்வில் அவருக்கு எனது சீனியர் என்பதைத் தாண்டியும் ஒரு முக்கிய இடம் உண்டு. அவரது உற்ற நண்பர் வெங்கட்டை எனக்கு அறிமுகப்படுத்தி “உங்கள் இருவருக்கும் ஒத்துப் போகும். பேசிப் பாருங்களேன்” என சொன்னதே சுதாங்கன் சார்தான். இன்றும் நாங்கள் 33 வருட காலம் தாண்டி திருப்தியான இணையராக வாழ்கிறோம் என்றால் அது அவருக்கு நாங்கள் செலுத்த வேண்டிய முதல் நன்றிக்கடனே! இது போல பலரையும் ஜோடி சேர்க்கும் மேட்ச் மேக்கிங் வேலைகளைக் கூட அவர் நிறையவே செய்திருக்கிறார். அவர் மீடியாவில் கண்டெடுத்த முத்துக்களும் வாழ்வில் இணைத்து வைத்த கனெக்‌ஷன்ஸும் எங்கும் எதிலும் சோடை போனதில்லை.

எங்கள் எனர்ஜி கிங் இரண்டு வாரங்களுக்கு முன்பு வீட்டில் கீழே விழுந்து தோள்பட்டையில் அடி என ஆஸ்பத்திரியில் சேர்ந்த போது கூட “ஒரே வாரத்தில் வீடு திரும்புவேன். விகடகவி ஸூம் மீட்டிங்கை விரைவில் வைத்துக் கொள்ளலாம்” என்று சொல்லி விட்டுத்தான் சென்றார். கொரோனாவுக்கு பரிசோதித்த பிறகே ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். ரிசல்ட் நெகடிவ் என வந்த போது சற்று நிம்மதியாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்து சுவாசக்கோளாறு ஏற்பட்டு வேறு ஒரு அப்பல்லோவுக்கு இடம் மாறி செயற்கையாக சுவாசிக்கும் நிலைக்கு செல்வார் என யாருமே நினைக்கவில்லை.

அவரது ஒரே மகன் ஆகாஷ் துபாயிலிருந்து சென்னைக்கு ஓடி வந்து அவரருகிலேயே இருந்து ‘அப்பா சரியாகி விடுவார்’ என மிகத் தீவிரமாக நம்பினார். அதற்கு ஏற்றாற் போல பத்து நாட்கள் ஐ.சி.யூ வாசத்திலும் மயக்கமாகவே இருந்தவர், இரண்டு நாட்களுக்கு முன்பு மகனை நன்கு அடையாளம் கண்டு தலையாட்டினார். மீண்டு வருவேன் என கையசைத்தார்.

திடீரென இன்று (12-9-20) காலையில் இருந்து அவரது உடல்நிலை மோசமடைந்து அடுத்து என்ன விதமான அதிரடி சிகிச்சைகளை தரலாம் என மருத்துவக் குழு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போதே நம் எல்லோரையும் ஏமாற்றி விட்டு மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார் 63 வயதே ஆன நம் சுதாங்கன் சார்.

எப்போதும் எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் மட்டுமே வைத்த சுதாங்கன் சாரே..!எங்களை இப்படி அநியாயமாக மீளாத்துயரில் ஆழ்த்தி அழ வைத்து விட்டீர்களே?!..

தமிழ் எழுத்துலகிற்கு பேரிழப்பை ஏற்படுத்தி விட்டு நீங்கள் சென்றிருந்தாலும், உங்களது பேரன்பும் பெரும் படைப்புக்களும் எங்கள் நினைவிலிருந்து என்றும் மறவாது!

போய் வாரும் எனர்ஜி ராட்சஸனே!..உமக்குப் பிடித்த சிவாஜியும், எம்.ஜி.ஆரும், கலைஞரும், ஜெயலலிதாவும் அங்கே ஒரு வேளை நீங்கள் பேட்டியெடுக்க காத்திருக்கலாம்! முடிந்தால் சொர்க்கத்திலிருந்து அந்த பேட்டிக் கட்டுரைகள் நம் விகடகவிக்கு ஒரு பார்சல் பிளீஸ்!