- 4 -
வெண்ணெயும் மோரும்!
பரமபதத்தில் பரவாஸுதேவனாக வீற்றிருக்கும் இருப்பையும் வெறுத்து வசுதேவர் மகனாக வந்து அவதரித்த கண்ணன், அதையும் விட்டு இடைக் குலத்திலே நந்தகோபர் மகனாக வளர்ந்தான். இடைத்தனத்துக்குச் சேர, பசுக்கள் கொடுக்கும் பால், தயிர், வெண்ணெய், நெய் இவற்றிலெல்லாம் ஆசை கொண்டான். கவ்யங்கள் என்று சொல்லப்படுகிற இவையெல்லாவற்றிலுமே இவனுக்கு ஆசை உண்டு. “தோய்த்தயிரும் நறுநெய்யும் பாலும் ஒரோகுடம் துற்றிடும் என்று'” (பெரியதிருமொழி 10-7-8) என்றவிடத்தில் “நின்றநின்ற அவஸ்தைகள் தோறும் சேஷியாதபடி பண்ணினா னாயிற்று” என்று பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் அருளியுள்ளார். அதாவது கண்ணபிரான் பாலைக் கண்டால், அதைத் தயிராக்குவதற்கு மிச்சம் வையாமல் முழுவதும் பருகிவிடுவானாம். அப்படியே ஏதேனும் பால் அவன் கண்களில் படாமல் இருந்து, அதைத் தயிராக்கி வைத்தால் அதையும் வெண்ணெயாக்க வொட்டாமல் தயிர் முழுவதையும் குடித்து விடுவனாம். அப்படியும், மிகவும் சிரமப்பட்டு வெண்ணெய் திரட்டி வைத்தால் கேட்கவே வேண்டாம். வெண்ணெயை நெய்யாக்குவது என்பது திருவாய்ப்பாடியில் நடவாத காரியம். காய்ச்சுவதற்கு வெண்ணெய் மீதமிருந்தால்தானே நெய்யாக்குவது! இதற்குக் காரணம் பால், தயிர் இவற்றையெல்லாம் விடக் கண்ணபிரான் மிக விரும்பியமுது செய்வது வெண்ணெயையே. கண்ணபிரான் திருவவதார தினமான ஸ்ரீஜயந்தியன்று பக்தர்கள் அவனுக்கு விசேஷமாக அமுது செய்யப்பண்ணுவது வெண்ணெயைத்தானே! இப்படிக் கண்ணனுக்கு வெண்ணெயில் ஈடுபாடு இருப்பதற்குக் காரணத்தை மணவாளமாமுனிகள் அருளிச் செய்கிறார்.
பெரியாழ்வார் திருமொழியிலே ஒரு பதிகம். அதிலே பெரியாழ்வார், தம்மை யசோதையாக பாவித்துக் கொண்டு கண்ணபிரானை அவனிஷ்டப்படி விளையாட வொட்டாமல் மாடு மேய்ப்பதற்கு அனுப்பிவிட்டதற்காக வருந்துகிறார்.
அதிலே ஒரு பாசுரம்.
மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய் விழுங்கிப்போய்
படிறு பல செய்து இப்பாடியெங்கும் திரியாமே
கடிறு பலதிரி கானதரிடைக் கன்றின்பின்
இடறவென்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே
(பெரியாழ்வார் திருமொழி 3-2-6)
இப்பாசுரத்தில் யசோதையானவள் ‘வெண்ணெயை வாரி விழுங்கி விட்டு, அசலகங்களிலும் போய்த் தீம்புகள் செய்ய வொட்டாமல் என் பிள்ளையைப் பசு மேய்க்கக் காட்டிற்கு அனுப்பி விட்டனே’ என்று வருந்துகிறாள். இங்கே மாமுனிகள் அருளியுள்ள வ்யாக்யானத்தை அனுபவிப்போம்.
(மிடறுமெழு மெழுத்தோட வெண்ணெய் விழுங்கிப் போய்) அதாவது, தொண்டையானது மெழுமெழுக்கும்படியாக வெண்ணெயை விழுங்கி என்று பொருள். இதனால் கண்ணன் மிகச்சுலபமாக வெண்ணெயை விழுங்கி விடுவான் என்று சொல்லப்படுகிறது. பக்ஷணங்கள், சோறு முதலியவற்றை உண்ண வேண்டுமென்றால் முதலில் அவற்றை வாயிலிட்டு மென்று பிறகு மெல்ல மெல்லத் தொண்டைக்குக் கீழே இறங்கச் செய்ய வேண்டும். ஆனால் வெண்ணெய்க்கு அந்தக் கஷ்டமெல்லாம் ஒன்றுமில்லை அல்லவா?
‘தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய பேழை வயிற்றெம்பிரான்’ (பெரியாழ்வார் திருமொழி 1-4-9) என்கிற படியே தாழி நிறைய வெண்ணெயை இவன் கண்டு விட்டானானால், வெண்ணெயின் மீதுள்ள ஆசையினால் இவனுடைய கை நன்றாக விரியும்; ‘இவனுடைய பருவத்துக்குத் தக்க கையன்று’ என்று இவனைக் கண்டவர்கள் சொல்லும்படி மிகவும் பெரிதாகி விட்ட கையை நன்றாக விரித்து அதிகமாக வெண்ணெயை எடுத்து வாயிலே (தேன்குழல் என்கிற பணியாரம் செய்பவர்கள் உழக்கில் மாவைத் திணிப்பதுபோல) திணித்துக் கொள்வனாம் கண்ணன். அதுவும் ஒரு கையாலன்று! ‘வைகலும் வெண்ணெய் கைகலந்து உண்டான்’ (திருவாய்மொழி 1-8-5) என்கிறபடியே வெண்ணெய் மீதுள்ள ஆசையினால் இடைக்கையாலும் வலக் கையாலும் வாரி வாரி அமுது செய்வான். அப்படி தொண்டையில் அடங்காதபடி வாய் நிறைய வாரி விழுங்கும் போதும் பருக்கை முதலியன ஒன்றும் உறுத்தாமல் தொண்டைக்குள் மெழுமெழுத்து வெண்ணெயானது சுலபமாக இறங்கி விடும். இப்படி இவனுடைய மென்மைக்கு மிகவும் ஏற்றது வெண்ணெயே. எனவே தான் கண்ணன் கவ்யங்களில் மற்றவைகளைக் காட்டிலும் வெண்ணெயையே மிகவும் விரும்பி அமுது செய்வான் என்றருளிச் செய்கிறார் மணவாளமாமுனிகள்.
இவன் இங்கே வந்தவதரித்ததும் ‘ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்து’ *(திருவிருத்தம் 21) என்று நம்மாழ்வார் அருளிச் செய்தபடியே அடியார் கைபட்ட பொருளை அவர்களே இவனுக்குக் கொடுத்தாலும் வேண்டாமென்று கூறிவிட்டு, பிறகு அதையே களவு கண்டு உண்ணவேண்டும் என்பதற்காகவே ஆகும். களவு கண்ட பொருளை, அதற்குச் சொந்தக்காரர்கள் வருவதற்குமுன் உண்ண வேண்டுமென்றால் நிதானமாக உண்ண முடியாது அல்லவா! எனவே அவசர அவசரமாக உண்பதற்கு ஏற்ற பொருள் வெண்ணெயே என்று முடிவு செய்து அதில் ஆசை கொண்டான் போலும்!
‘மிடறு மெழுமெழுத் தோட’ என்ற இந்தப் பாசுரத்திற்கு அருளிச் செய்யப் பட்டுள்ள மற்றொரு வ்யாக்யானத்தில் மேலும் ஒரு விஷயம் ரஸமாக அருளிச் செய்யப்பட்டுள்ளது:
“வாயில் வெண்ணெய் கொப்பளித்தால் போம்; கையில் வெண்ணெய் கழுவுதல் தலையிலே துடைத்தல் செய்யலாம்; மிடற்றில் மெழுமெழுப்பு (வெளியில்) தெரியாது. ஆகையாலே க்ருத்ரிமம் (களவு) நித்யமாய்ச் செல்லுமிறே.”
இப்படிப்பட்ட ஸௌகர்யம் பால் தயிர் போன்றவற்றில் கிடையாதல்லவா! எனவே தான் கண்ணன் வெண்ணெயைத் தேர்ந்தெடுத்தான் போலும்! ஆனால் இதற்காகக் கண்ணன், பால், தயிர், நெய் இவற்றை விட்டு வைத்தான் என்று கொள்ள வேண்டாம். அவற்றையும் ஒன்றும் மிச்சம் வைக்கமாட்டான் கண்ணன்.
வேடிக்கையாக ஒன்று சொல்வது உண்டு; திருவாய்ப்பாடியிலுள்ளவர்களுக்கு வெண்ணெய், பால், நெய் என்பன எப்படியிருக்குமென்றே தெரியாதாம். இது உண்மையா என்றால் திருப்பாவை இரண்டாம்பாட்டைப் பாருங்கள். அங்கே ஆய்ச்சிகள் என்ன சொல்லுகிறார்கள்? ‘நெய்யுண்ணோம் பாலுண்ணோம்’ என்றுதானே சொல்லுகிறார்கள்! ‘நெய்குடியோம், பால்பருகோம்’ என்று தானே சொல்ல வேண்டும்? பின் ஏன் ‘உண்ணோம்’ என்று சொல்லுகிறார்கள்? கண்ணபிரான் பிறந்த பின்பு ஆய்ப்பாடியில் உள்ளவர்களுக்கு நெய், பால் முதலியவை குடிக்கும் பொருளா உண்ணும் பொருளா என்பது கூடத் தெரியாதாம்! அவற்றை அவர்கள் கண்ணால் கண்டிருந்தால் தானே அவை திடப்பொருளா அல்லது திரவப் பொருளா என்பது அவர்களுக்குத் தெரியும்? அவர்கள் அவற்றைப் பார்ப்பதற்குக்கூட சிறிதும் மிச்சம் வையாமல் உண்டு விடுவானாம் கண்ணன். இப்படியும்கூட நடந்திருக்குமா எனில், தாயான யசோதைப் பிராட்டியே கூறுகிறாள்:
வைத்தநெய்யும் காய்ந்தபாலும் வடிதயிரும் நறுவெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான் நீபிறந்தபின்னை
(பெரியாழ்வார் திருமொழி 2-2-2)
“நீ பிறந்த பின்பு நெய், பால், தயிர் வெண்ணெய் இவற்றை நான் சிறிதும் பெற்றதில்லை” என்றும்
கறந்தநற்பாலும் தயிருங் கடைந்துறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே
(பெரியாழ்வார் திருமொழி 2-4-7)
“கறந்தபால், அந்தப்பாலிலே தோய்த்த தயிர், அந்தத் தயிரைக் கடைந்தெடுத்த வெண்ணெய் இவற்றை நீ பிறந்த நாள் முதலாக நான் ஒன்றும் பெற்றறியேன்” என்றும் கூறுகிறாள் யசோதை.
இப்படிக் கண்ணபிரானுக்குப் பால், தயிர், வெண்ணெய், நெய் எல்லாவற்றிலுமே ஈடுபாடு உண்டு என்றும் அதிலும் வெண்ணெயில் ஈடுபாடு மிகமிக அதிகம் என்றும் அறிந்தோம். அப்படியானால் கவ்யங்களில் கண்ணபிரானுக்குப் பிடிக்காதது ஒன்றுமே கிடையாதோ என்றால் பிடிக்காததும் ஒன்று உண்டு என்கிறார்கள் ஆழ்வார்களும் ஆசார்யர்களும். கண்ணபிரானுக்கு கவ்யங்களில் மோர் மட்டும் பிடிக்காதாம்! திருவாய்ப்பாடியில் யாரேனும் தயிர் கடைந்து கொண்டிருந்தால் அங்கே கண்ணன் சென்று “தயிரை மோராக்கவிட மாட்டேன்” என்று அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டு தொங்குவான் என்கிறார் (திருப்பாவை 7ம் பாசுர வ்யாக்யானத்தில்) பெரியவாச்சான் பிள்ளை.
அதுமட்டுமோ! கண்ணன் வெண்ணெயைக் களவு கண்டு தின்பதற்குச் செல்லுமிடங்களில் மோர்க்குடத்தைக் கண்டால் கோபம் கொண்டு அதை உருட்டி விடுவனாம்! திருமங்கையாழ்வார், ‘ஆராத வெண்ணெய் விழுங்கி அங்கிருந்த மோரார் குடமுருட்டி’ (சிறிய திருமடல்) என்கிறார். வெண்ணெயைத் திருடி உண்டானாகில் உண்ணட்டும்; மோர்க்குடத்தை ஏன் உருட்ட வேண்டும்? அவனுக்குப் பிடிக்காத மோரைக் குடத்திலே சேமித்து வைக்கலாமா? அதனால் தான் கோபம் கொண்டு உருட்டினான். கண்ணனுக்கு மோர் எதனால் பிடிக்காது என்றால் தயிரில் நீர் சேர்த்துக் கடைந்து தானே மோராக்க வேண்டும்! கண்ணன் வளருகிற ஊரிலே கலப்படம் செய்வதாவது! எனவே தான் கண்ணனுக்கு மோரைக் கண்டால் பிடிக்காது. தயிரைக் கடைந்தால் திரள்கிற வெண்ணெய் மட்டும் வேண்டும். ஆனால் தயிரைக் கடைந்து மோராக்குவது மட்டும் பிடிக்காது! என்னே கண்ணனுடைய திருவுள்ளம்! கண்ணனுக்கு மோர் பிடிக்காமல் போனதற்கு இன்னமொரு காரணமும் உண்டு. தயிரைக் கடைந்து அதன் ஸாரமான வெண்ணெயைத் திரட்டிய பின், மிஞ்சுவது அஸாரம்தானே! எனவேதான் கண்ணன் மோரை விரும்புவதில்லை. எனவே வெண்ணெய்க் குடத்தின் அருகே மோரைக் கண்டால் கோபித்து அதை உருட்டி விடுவான்.
“பாகவதரருகே கழனிமிண்டர் இருந்தால் அஸஹ்யம் ஆமா போலே வெண்ணெய்க் குடத்தருகே மோர்க் குடம் இருந்தது இவனுக்கு அஸஹ்யமாயிருக்கையாலே உருட்டினபடி”
என்பது இங்கே வ்யாக்யான ஸ்ரீஸூக்தி. ‘தாமோருருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டு’ (பெரியதிருமொழி 10-5-3) என்ற பாசுரத்தின் வ்யாக்யானத்திலும் இதே போன்று,
“தயிரையும் நெய்யையும், மோரையும் சேர வைப்பர்கள் பாகவதர்களோடு அபாகவதர்கள் கலந்திருக்குமாபோலே. இங்ஙனே தாவா மோரை உருட்டி”
என்றருளியுள்ளார் பெரியவாச்சான்பிள்ளை. வேடிக்கையான கதையொன்று கூறுவதுண்டு: ஸ்ரீரங்கத்தில் முற்காலத்தில் காவேரியில் நீராடுவதற்காக விடியற் காலையில் பெண்கள் செல்வார்களாம். அப்போது வழியில் சில திருடர்கள் கத்தியைக் காட்டி பயமுறுத்தி அவர்கள் அணிந்துள்ள நகைகளையெல்லாம் பறித்துக் கொள்வார்களாம். சிலசமயம், நகைகள் ஏதுமணியாத மூதாட்டிகள் அவ்வழியாகச் செல்லும்போது, அவர்களிடமும் நகைகள் எதிர்பார்த்து ஏமாந்த திருடர்கள் ஆத்திரம் கொண்டு “நீங்கள் ஏன் நகை அணிந்து கொண்டு வரவில்லை?” என்று அவர்களுடைய காது மூக்குகளை அறுத்து விடுவார்களாம். அது போலக் கண்ணனும் வெண்ணெய் உண்டபிறகு பக்கத்தில் இன்னொரு குடமிருக்கக் கண்டு அதிலும் வெண்ணெய் இருக்கும் என்று ஆசையோடு பார்க்க, அதில் அவனுக்குப் பிடிக்காத மோர் இருந்தது கண்டு ஆத்திரமடைந்து அதை உருட்டிவிட்டான் போலும்!
(தொடரும்)
Leave a comment
Upload