வெற்றிக்கு சில புத்தகங்கள் - 4
வாருங்கள் வாசிப்போம்; வாசிப்பை நேசிப்போம்
குடும்ப வெற்றி சூத்திரங்கள்
உலகப் புகழ் பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளர், பேச்சாளர், பயிற்சியாளர் ராபின் ஷர்மாவின் புத்தகம் இது. “Family Wisdom” - Jaico Publishing வெளியீடு.
தன்னுடைய முதல் புத்தக கதாநாயகனான ஜூலியனை இந்த புத்தகத்திலும் அழைத்து வருகிறார். ஜூலியனின் தங்கை கேத்தரின் இருவருக்குமான சந்திப்பும் உரையாடலுமான நிகழ்வுகளே இந்த புத்தகம்.
வாழ்வில் வெற்றி என்பது என்ன? செல்வம், வீடு, வாசல், மனைவி குழந்தைகள்... கைநிறைய சம்பளம், கார்... அப்புறம்... அப்புறம்... வெற்றி என்பது அவ்வளவு தானா? அல்லது இதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கின்றதா? கேத்தரீனுக்கு இந்த கேள்வி தோன்றியது நாடு வானில் அவர் பயணம் செய்து கொண்டிருக்கும் விமானம் சுழக்காற்றில் சிக்கி திணறிக்கொண்டிருக்கும்பாது, எப்போது வேண்டுமானாலும் தரையில் மோதி வெடித்து சிதறலாம் என்ற சமயத்தில்... “நான் நிஜமாகவே வாழ்க்கையில் ஜெயித்து விட்டேனா? என் பிசினஸில் நான் ராணி. ஆனால், என் குடும்பத்தோடு நேரம் செலவிட்டேனா? பிள்ளைகளை நல்லவர்களாக வளர்த்தேனா? அவர்களுக்குண்டான தாயன்பை தந்தேனா? இதெல்லாம் சரியாக நடக்காமல் இருந்தால், நான் ஜெயித்தேன் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது...” இதை அவர் யோசிக்கும்போதே, அவரின் விமானம் தரையில் மோதி சிதறுகிறது. ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிகிறார் கேத்தரின். அதிசயமாய் அவர் மட்டுமே உயிர் பிழைக்கிறார். உடல் நலமில்லாத போதும், பிறகும்... அந்த கேள்விகள் அவரை சுழற்றி அடிக்கின்றன.... விடை தெரியாமல் கலங்கி நிற்கையில் அவரின் அண்ணன் ஜூலியன் அவரை தேடிக்கொண்டு வருகிறார். பாச மலர்களாய் நெகிழ்கிறார்கள் இருவரும்...
வாழ்க்கையில் எல்லாவற்றிலும் உச்சம் தொட்டு, பிரபல வழக்கறிஞராக தூள் கிளப்பியவர். அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகங்களால் தெருவுக்கு வருகிறார். நெடுநாள்களுக்கு தலைமறைவு வாழ்க்கைபோல் யார் கண்ணிலும் படாதவர், இப்போது தங்கையைப் பார்க்க....
முன்னை விட இளமையாய், கம்பீரமாய், துறவி ஆடையில் நிற்கும் ஜூலியனைப் பார்த்து, கேத்தரின் படபடவென கேள்விகளை வீசுகிறாள்..
“எங்கே இருந்தே ஜூலியன் இவ்ளோ நாளா? என்ன பண்ண?...
ஜூலியன் தன்னுடைய இந்தியப் பயணத்தை விவரிக்கிறார்.....
“இப்போ நான் வந்ததே உனக்கு பாடம் சொல்லி கொடுக்கத்தான்..”
“பாடமா, என்ன? என்ன பாடம்?” - கேத்தரின்.
“வாழ்க்கைப்பாடம்” - ஜூலியன்.
இந்த இருவர் மூலமாக ராபின் சர்மா நம் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள ஐந்து வெற்றி சூத்திரங்களை நமக்கு சொல்கிறார்:
1 . குடும்பத்தில் எல்லாருமே தலைவர்கள் தான்!
குழந்தைகளை ஒன்றை செய்யாதே என்று சொல்லுமுன் நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி அதுவே. நானே அதை செய்யாவிட்டால் அவர்கள் எப்படி அதனைக் கற்றுக்கொள்வார்கள்.? எல்லாவற்றிற்கும் அடுத்தவர் மீதே பழி போட்டு பழகியவர்கள் நாம், நாம் தான் வீட்டில் எல்லாவற்றிற்கும் பொறுப்பாளி, அவரவர் நிலையில் இருந்து தலைவர்களாக இருந்து வழிகாட்டினால் குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்வார்கள்.
2 . நமக்கான நல்ல உறவுகள் நம்பிக்கையிலிருந்து பிறக்கின்றன.
ஒருவருக்கு நம் மீது நம்பிக்கையில்லாவிட்டால், நாம் என்ன சொன்னாலும், அதன் மீது அடுத்தவருக்கு நம்பிக்கை வரப்போவதில்லை. குடும்பத்தில் எல்லா உறவுகளும் நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் கோவில்களே. அதற்கு நாம் அவர்களுடைய இதயத்தை தொட வேண்டும்.
எனக்கு வேலை தான் முக்கியம், குடும்பத்தோடு செலவு செய்ய நேரமே கிடையாது என்று சொல்பவரா நீங்கள்.. “கொஞ்சம் யோசியுங்கள், இந்த பொழுது நீங்கள் இழந்தது திரும்ப கிடைக்குமா?” முக்கியமாய் குழந்தைகளுக்கு என்ன வாக்குறுதி கொடுத்தாலும் அதை மீறாதீர்கள். முடியாத ஒன்றிற்கு வாக்குறுதி தராதீர்கள். குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கை தான் அந்தக் குடும்பத்தை வலுவாய் பிணைக்கிறது.
3 . ரோஜாவைப் பாருங்கள், முட்களை எண்ணாதீர்கள்!
நீளம் தாண்டுதலில் ஜெயித்து கோப்பையுடன் வீட்டிற்குள் வரும் குழந்தையை பாராட்டாமல்... இதுலெல்லாம் நல்லா தான் பண்றே, மேத்ஸ் மார்க்கு தான் ஐம்பதை தாண்ட மாட்டேங்குது என்று வசை பாடி உற்சாகமிழக்க செய்யாதீர்கள்.
படிக்காத மேதைகள் பாரினில் நிறைய உண்டு... படித்து பெரிய ஆளானவர்களும் உண்டு. குடும்பத்தில் இருப்பவர்களின் வெவ்வேறு திறமைகளை சரியாக அடையாளம் கண்டு, அதை வெளியே கொண்டுவருவது குடும்ப உறுப்பினர்களின் கடமை. இதற்காக Visualization என்ற விஷயத்தை சொல்லித்தர சொல்கிறார் ராபின் சர்மா. இது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. நமது அன்பிற்கு உரிய அப்துல் கலாம் ஐயா சொன்ன “கனவு காணுங்கள்” அதை அடைந்திடுங்கள் என்பது தான்.
இன்று கனவு காணும் உங்கள் குழந்தை, குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு நாளை அதனை நனவாக்க உழைக்கும்.
4. நீங்கள் குடும்ப வண்டியின் முக்கிய பாகம், உங்களை கவனித்து கொள்ளுங்கள், மேம்படுத்த உழைத்திடுங்கள்!
உங்களுக்காக நீங்கள் செலவிடும் நேரம், அதாவது உடலை, மனதை உற்சாகமாக ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள செலவு செய்யும் நேரம்.
இந்த உடம்பையே கோவிலின் திருமூலர் சொல்வதை வழி மொழியும் ஜூலியன் அதை நன்கு பராமரிக்க வழி முறைகளை சொல்கிறார். சீக்கிரம் எழுதல், இயற்கையை ரசித்தல், அளவான சாப்பாடு, உடற்பயிற்சி, தினமும் சிறிது நேரம் தனிமை, டைரியில் எண்ணங்களை குறித்தல், இது போல இன்னும் பல. வாரம் சில மணி நேரம் எங்காவது கண்காணாமல் சென்று விடுங்கள், அது உங்களை அடுத்த வாரத்திற்கு “ரீசார்ஜ் செய்ய உதவும்” என்கிறார்.
5. நம் நினைவாக, நமக்கு பிறகு ஏதேனும் இந்த உலகிற்கு விட்டு செல்ல வேண்டும்.!
பிரபலமான பிசினஸ் புள்ளிகள், கலைஞர்கள், என யாரிடம் என் இந்த துறையை தேர்ந்தெடுத்தீர்கள்? என்று கேட்டால் எனக்கு பிறகும் என் பேர் சொல்ல ஏதேனும் ஒன்று இந்த உலகில் இருக்க வேண்டும் என்பார்கள். அப்போது நம்மை போன்ற சாதாரண மக்கள்? நாமும் விட்டு செல்ல முடியும்.. நம்மால் இயன்ற உதவியை அடுத்தவருக்கு செய்ய வேண்டும், யாரை பார்க்க சென்றாலும் அவர்களுக்கு ஒரு நினைவுப் பரிசு எடுத்து செல்ல வேண்டும். நம் குழந்தைகளுக்கும் இதனை சொல்லித்தரவேண்டும். பிறந்த நாள் கொண்டாட்டங்களை அனாதை இல்லங்களில் முதியோர் காப்பகங்களில் அவர்களோடு கொண்டாடலாம், நம் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து செல்லலாம். மற்றவர்களுக்கு தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்னும் கருத்து அழுத்தமாக அவர்கள் மனதில் பதியும்.
ஒரு மனிதனை, சிறந்தவனாக, வெற்றியாளனாக, சராசரியாக, தோல்வியாளனாக, உருவாக்குவது எல்லாமே குடும்ப சூழ்நிலை தான். கேதேரினுக்கு அவர் அண்ணன் ஜூலியன் சொல்லும் இந்த வெற்றி சூத்திரங்கள் எல்லாமே நமக்கும் தான்...
Leave a comment
Upload