தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

பிரணவ் தாத்தா...

சார் என்று அழைக்கப்பட்ட நான், மாமா என்று அழைக்கப்பட்ட நான், அங்கிள் என்று அழைக்கப்பட்ட நான், தற்போது எல்லோராலும் பிரணவ் தாத்தா என்று அழைக்கப்படுகிறேன். ட்ரூ காலரில் கூட, என் பெயர் பிரணவ் தாத்தா என்றுதான் காட்டுகிறது. இதற்கெல்லாம் காரணம் என் பேரன் தான்.

ஓய்வு பெற்று வீட்டில் ஜாலியாக பஜ்ஜி, போண்டா சாப்பிடலாம், ஆங்கில நாளிதழை முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை பொறுமையாக வாசிக்கலாம், வாக்கிங் போகலாம், செய்தி சேனல் பார்க்கலாம்... இப்படி நிறைய கனவுகளுடன் தான் நான் ஓய்வு பெற்ற அன்று வீட்டுக்கு வந்தேன்.

ஆனால் அதெல்லாம் பகல் கனவு ஆனது.

மறுநாளே, ஏங்க வீட்டில் சும்மாதானே இருக்கீங்க... ஒட்டடை எல்லாம் பார்த்தா எனக்கு கழுத்து வலிக்கிறது என்று ஒட்டடைக் கம்பை என்னிடம் ஒப்படைத்தாள் என் மனைவி. ஒட்டடை அடித்து விட்டு கம்பை வைத்து விட்டு, சேரில் அமர்ந்து பேப்பரை பார்க்க பிரித்தபோது, ஏங்க வாஷிங் மெஷின் ட்ரையரில் இருக்கும் துணிகளை எடுத்துப் போய் மொட்டை மாடியில் உலர்த்தி, துணி பறக்காமல் இருக்க கிளிப்பை போட்டு விடுங்கள் என்று சொல்லி அடுத்த வேலையை வாங்கினாள் என் மனைவி.

ஒருவழியாக துணி உலர்த்தி கிளிப்போட்டு, இறங்கி வந்ததும்... இந்தாங்க காப்பி சாப்பிடுங்க என்று காப்பி டம்ளரை நீட்ட... இப்ப எதுக்கு காப்பி, குளிச்சிட்டு சாப்பிட போறேன் என்று சொல்ல... நீங்க என்ன ஆபீஸ்க்கா போறீங்க பரபரன்னு சமையல் செய்ய, பொறுமையா சமைக்கிறேன் என்று சொல்லி விட்டு போய்விட்டாள். நானும் காப்பியை சாப்பிட்டபடியே பேப்பரை பார்த்து முதல் பக்கம் முடிந்து அடுத்த பக்கம் திருப்பும் போது, இன்னுமா காபியை சாப்பிடல என்று கேட்டவள்... ஒரு பிளாஸ்டிக் மூடி போட்ட பக்கெட் 2 பைகளை என் முன் வைத்தாள். பிளாஸ்டிக் பக்கெட்டில் இருப்பது மிளகாய் பொடி அரைக்க இந்தப் பை, இட்லி கப்பி இது கோதுமை அரைத்துக் கொண்டு வந்துவிடுங்க. இப்பவே போய் வந்துடுங்க திடீர் திடீர்னு கரண்ட் கட்டாகிவிடும் என்று என்னை விரட்டினாள்.

ஆபீஸில் இருந்தால் இந்நேரம் சூடாக கேன்டீனில் மசால் வடை சாப்பிட்டுவிட்டு அரட்டை அடித்து விட்டு வருவேன் என்பது தேவையில்லாமல் இப்போது எனக்கு நினைவுக்கு வர... பை, பக்கெட்டை தூக்கிக்கொண்டு மாவுமிஷினுக்கு கிளம்பினேன். அங்கு இரண்டு மாமிகள். சிலர் என்னைப் போன்ற பென்ஷன் தாரர்கள் காத்திருந்தார்கள். ஒரு மணி நேரம் காத்திருந்து மாவு மிஷின் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். ஏன் இவ்வளவு லேட்? வழியில் யார் கூடயாவது வம்பு பேசிக் கொண்டு இருந்தீர்களா என்று கேட்டாள். நான் எதற்கு வம்பு என்று எதுவும் பேசாமல் குளிக்க போனேன். குளித்து முடித்து சாப்பிட உட்கார்ந்த போது, சுட்ட அப்பளம் வத்த குழம்பு என்று சமையல் சிம்பிளாக இருந்தது. உங்களுக்கு வயதாகிவிட்டது இனிமேல் பத்திய சமையல் தான். எண்ணெய், நெய் ஸ்வீட் என்று அலையாதீங்க என்று நான் கேட்பதற்கு முன்பே அவளே பேசி, இனிமே இதுதான் என்று பைலை மூடிவிட்டாள்.

பென்சன் வாங்க நான் வங்கிக்கு புறப்பட்டபோது, அவளும் தலை வாரிக்கொண்டு புறப்பட தயாராக இருந்தாள். நீ எதுக்கு வர நான் போய் எடுத்து வருகிறேன் என்று சொன்ன போது, நீங்க பஸ்ல தூங்கிடுவிங்க, பிக்பாக்கெட் தொந்தரவு வேற நான் வரேன் என்று எனக்கு முன்னே கிளம்பி வாசலில் நின்றாள். வங்கியில் கவுண்டரில் பணத்தை வாங்கியதும், கொண்டாங்க நீங்க தொலைச்சிடுவிங்க, நான் பத்திரமா எடுத்து வருவேன் என்று பிடிங்காத குறையாக என்னிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.

கிரைண்டரில் மாவு அரைப்பது, வாஷிங் மெஷின் துணி துவைப்பது, துணி காய வைப்பது பிறகு எடுத்து மடித்து வைப்பது என்று ஆபீஸ் வேலையை விட நான் வீட்டில் பிஸியாக இருந்தேன்.

நீங்க வீட்ல சும்மாதானே இருக்கீங்க என்பது என் வீட்டு ரிங்டோன் ஆக மாறியது. இந்தச் சமயத்தில்தான் என் பெண், அவளால் ஆன ஒத்தாசை செய்தாள். அப்பா நீ சும்மாதான் இருக்க... என் பையன ஸ்கூலுக்கு அழைத்துப்போய், திரும்ப சாயந்திரம் கூட்டிட்டு வந்துடு. வேன் டிரைவரை எல்லாம் இப்போது நம்ப முடியவில்லை, கஞ்சா அடித்துவிட்டு ஸ்கூல் வேன் ஓட்றத பாலிமர் டிவில காண்பிச்சாங்க. எப்பவும் சீரியல் பார்க்கிற இவ, எப்ப நியூஸ் சேனல் பார்த்தா என்று தெரியவில்லை. நீங்க சும்மா தானே இருக்கீங்க என்று மீண்டும் அழுத்தமாக சொல்ல... உடனே என் மனைவி, பேரனை அழைத்துக் கொண்டு போக மாட்டேன்னு அவர் சொல்வாரா... அவருடைய செல்லப் பேரன் ஆச்சே என்று நான் இருக்க பயமேன் என்று என் மனைவி அவளுக்கு உத்தரவாதம் தந்தாள்.

யாரும் என் சம்மதம் கேட்கவே இல்லை. மறுநாள் என் பேரனை ஸ்கூலுக்கு அழைத்துப் போகும் வேலையும் என்னுடைய நிகழ்ச்சிநிரலில் சேர்ந்தது. அன்று முதல் தான், எனக்கு தாத்தா என்ற நாமகரணம் பொதுவாழ்வில் சூட்டப்பட்டது.

ஸ்கூல் வாசலில் அபசகுனமாக... பத்தாவது பெயிலா, கவலை வேண்டாம் எங்களிடம் வாருங்கள்... ஆல்பாஸ் என்று எடப்பாடி அளவுக்கு உத்தரவாதமாக நோட்டீஸ் வழங்கி கொண்டிருந்தவன், உங்க பெரிய பேரன் யாராவது இருந்தா எங்கிட்ட அனுப்புங்க தாத்தா என்று நோட்டீசை என்னிடம் திணித்தான்.

அப்போது வாலிப வயசு பெண் ஒருவள், என்னிடம் வந்து தாத்தா பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேக்ஸ், 10th, பிளஸ் டூ டியூசன் சொல்லித் தர டீச்சர் இருக்காங்க. பேக்கேஜ் தான் சப்ஜெக்ட் 10,000 என்று அவள் பங்குக்கு ஒரு விசிட்டிங் கார்டை என்னிடம் தந்தாள். அந்தப் பள்ளியின் கல்வித்தரம் மீது இவர்கள் இருவருக்கும் என்ன அபார நம்பிக்கை என்பதை அவர்களின் வியாபார யுக்தி எனக்கு விளங்கியது.

என் பேரனை பள்ளிக்கு கொண்டு போய் விட்டு அழைத்துச் சொல்ல துவங்கிய இனிய அந்த நன்னாள் முதல் நான் எல்லோருக்கும் பிரணவ் தாத்தா ஆகிவிட்டேன்.

மளிகைக் கடை, பால்காரர் என எல்லாரிடமும், பிரணவ் தாத்தா என்று பெயர் மாறிப்போனது.

பேரன் திரும்பி வரும்போது சாக்லேட், சிப்ஸ், பொம்மை கார் என்று அவன் ஆசைப்பட்டதை வாங்கிக் கொள்வான். வீட்டில் உள்ளே நுழைந்ததும் என் மனைவி, மகள் இருவரும் செல்லப் பேரனை செல்லம் கொடுத்து கெடுக்கிறீங்க என்று சொல்லி... இதே பொம்மை கார், இதுவரைக்கும் பத்து வாங்கி இருக்கும் என்று டோஸ் விட்டார்கள். பேரன் தன் பங்குக்கு, நான் கேட்கவில்லை தாத்தாதான் வாங்கித் தந்தார் என்று கூலாக சொல்லிவிட்டு, விளையாடப் போய்விட்டான். உடனே என் மனைவி இருக்கும்டி, குழந்தை பொய் சொல்லாது என்று சொல்லி என்னை முறைத்தாள்.

கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு உள்ளே வருபவன் என் செல்பேசியை கபளீகரம் செய்வான். அதில் கேம் விளையாடி, என் பேட்டரி தீரும்வரை விளையாடிவிட்டு, ஏன் தாத்தா டெய்லி பேட்டரி சார்ஜ் போட மாட்டியா உனக்கு பொறுப்பே கிடையாது, பாட்டி சொல்வது சரிதான் என்று மீண்டும் விளையாட போய்விடுவான். நான் எதுவும் பேசாமல், போனை சார்ஜரில் போடுவேன். நான் தப்பி தவறி போன் பார்த்துக் கொண்டிருந்தால், எப்ப பார்த்தாலும் ஃபோனை நோண்டிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பார்கள். இதை சொல்லும் போது அவர்களும் அதைத்தான் செய்து கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டம் என்ன செய்வது...

சரி டிவி பார்க்கலாம் என்று டிவிக்கு உயிர் கொடுத்து விட்டு உட்கார்ந்ததும், என் பேரன் ரிமோட்டை என்னிடமிருந்து தட்டிப்பறித்து போகோ சேனல் பார்க்கத் துவங்கி விடுவான். பெட்ரூமில் இன்னொரு டிவி இருக்கிறது. அதில் அங்கே பார்க்கப்போனால், டி லீலாவதி உன் கல்யாணத்தை நிறுத்தி, உனக்கு கருமாதி பண்ணலேன்னா என் பெயர் ராஜி இல்லையடி என்று நடிகை நளினி கர்ஜித்து கொண்டிருப்பார். என் பெண், டிவியும் வாட்ஸ்அப்புமாக இருப்பாள். எனவே டிவியும் பார்க்க முடியாது. மொட்டை மாடி போய் உட்கார்ந்து பேப்பர் படிக்கலாம் என்று பேப்பரை எடுத்துக் கொண்டு கிளம்ப... தாத்தா மாடிக்கா, நானும் வருகிறேன் என்று அவனும் புறப்படுவான். வேண்டாம் நீ டி வி பாரு என்று சொல்லி நான் நகர, நானும் மாடிக்கு வருகிறேன் விளையாட என்று சொல்வான். வேணாம் நீ தண்ணி டேங்க் ஏணி மேல ஏறி விளையாடுவ என்று நான் மறுத்தால், அப்பா குழந்தை என்றால் அப்படித்தான் இருக்கும், தாத்தாதான் பொறுப்பாக பார்த்துக்கொள்ளணும். பேப்பரை வைத்து விட்டு, குழந்தையை மாடிக்கு கூட்டிட்டு போ என்று அங்கிருந்து என் மகள் உத்தரவு போட... நீ தாத்தா கூட போடா என்று என் மனைவி சொல்லி விட்டு, அவளும் சீரியலை பார்க்க உட்கார்ந்து விடுவாள். நான் ஓய்வு பெற்ற நாளிலிருந்து, பேப்பரும் சரியாக படிக்க முடிவதில்லை, செய்தி சேனல்களும் பார்க்க முடியவில்லை. ஓய்வுபெற்ற பிறகு நான் என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை என் மனைவி, என் மகள், என் பேரன் தான் தீர்மானம் செய்கிறார்கள். நான் இப்போதே அதை ரசிக்க பழகிவிட்டேன். இருந்தாலும் வரும் தேர்தலில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது கிடையாது என்று எந்தக் கட்சி சொல்கிறதோ, அந்தக் கட்சிக்கு என் ஓட்டு என்பதை மட்டும் தீர்மானமாக முடிவு செய்துவிட்டேன்.