ஆசியா
சிங்கப்பூர்
உலகத்திலேயே சொகுசான தரமான விமான சர்வீஸ் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தான்.
ஆனால் கரோனா காலத்தில் உலகமே பொருளாதார வீழ்ச்சியில் இருக்க சிங்கப்பூர் விமான நிறுவனம் என்ன விதிவிலக்கா என்ன ???
சிங்கப்பூர் விமான நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து காப்பாற்ற “இல்லாத இடத்திற்கு பறக்கலாம்” “fly to nowhere “ திட்டத்தை துவக்கலாமா என்று யோசிக்கிறார்களாம்.
எங்கும் தரையிறங்க அனுமதியில்லாத நிலையில் சிங்கப்பூரிலிருந்து விமானம் புறப்பட்டு அப்படியே ஒரு சுற்று வந்து சில மணி நேரங்களில் திரும்பவும் சிங்கப்பூரில் இறங்கலாமா என்று யோசித்து வருகிறார்கள். இது நமக்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றும். ஆனால் பறக்கும் போது விமான சர்வீசின் சுகத்தை அனுபவித்தவர்களும் உள்ளூர் விமான நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து காப்பாற்றவும் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்று நம்புகின்றனர்.
எனக்கு திருவான்மியூரிலிருந்து திருவொற்றியூர் வரை பஸ் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் எந்த வேலையுமில்லாமல் ஏறி உட்கார்ந்து போனது நினைவுக்கு வருகிறது.
இதில் ஏன் பறக்க வைக்க வேண்டும், கட்டணம் வாங்கிக் கொண்டு பிளேனுக்குள் சுத்திப் பார்க்க, அங்கனயே உட்கார்ந்து சாப்பிட இப்படி சில யோசனைகளையும் செய்யலாமே என்றும் பொதுமக்களிடமிருந்து யோசனைகள் வருகிறதாம்.
கரோனா இன்னும் என்னென்ன கிறுக்குத் தனம் செய்யப் போகிறதோ ??
ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவில்,
தேமேயென்று வாக்கிங் போன ஒரு அப்பாவும் இரண்டு வயது மகனும். கூடவே கன்னுக்குட்டி சைசுக்கு ஒரு நாய்.
திடீரென ஒருவன் அங்கே வந்து இரண்டு வயது குழந்தையை அபேஸ் செய்ய பார்க்கிறான். அடி தடி குத்து நடக்கிறது.
நல்ல வேளையாக குழந்தை காப்பாற்றப்படுகிறது.
அபேஸ் பண்ண வந்த ஆள் பாவம் போதை மருந்தின் பாதிப்பில் இருந்ததாகவும், அந்தக் குழந்தை தன்னுடைய குழந்தை போலவே உருவகப்படுத்திக் கொண்டதாலும் கடத்த முயற்சித்தானாம்.
பாவம்.
எனக்கு என்ன கேள்வின்னா அவ்ளோ பெரிய நாய் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டே நிற்கிறதே தவிர தாவிப் பிடிக்க வேண்டாமோ ?? சுரணை கெட்ட நாய்.
ஆப்ரிக்கா
நைஜீரியா.
13 வயது சிறுவன் கடவுளை மறுத்து பேசியதால் பத்து வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறான்.
ஷ்ரியா சட்டம் நடைமுறையில் இருக்கும் நைஜீரியாவில் இஸ்லாத்திற்கு எதிராக பேசியதால் இந்த சிறுவனுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தண்டனையை ஆட்சேபித்து யூனிசெஃப் நிறுவனம் நைஜீரியா அரசை தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விண்ணப்பித்து இருக்கிறது.
குழந்தைகளுக்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக சிறுவனின் வழக்குரைஞர் தெரிவித்து இந்த தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்யப்போவதாக சொல்லியிருக்கிறார்.
ஐரோப்பா
பிரான்ஸ்
மாணவர்களுக்கு ஸ்கர்ட்.
சென்ற திங்கட்கிழமை பிரான்சில் பல பள்ளிகளில் மாணவர்களை ஸ்கர்ட் அணிந்து கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்கள்.
இதற்கு காரணம் “பாலின பேதத்தை” களைந்து மாணவர்கள், மாணவிகள் இரு பாலரும் ஒரே போல நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் தானாம்.
மாணவர்கள் குஷியாக ஸ்கர்ட் அணிந்து வர தயாராக இதற்கு எதிராக ஒரு கோஷ்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
மணிஃப் போர் டுஃப் என்ற அந்த கோஷ்டி ஏற்கனவே சமபாலின திருமணத்தை எதிர்த்த கோஷ்டி. மாணவர்களின் மனதை கலைக்கும் முயற்சி, இது வேறு ஏதோ உள்ளர்த்தத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது , என்று கூச்சல் போட்டிருக்கிறார்கள்.
நம்மூரில் சம பாலின சமத்துவமெல்லாம் டாஸ்மாக் வரை வந்துருச்சு……
வட அமெரிக்கா
இது வட அமெரிக்காவில் நடந்த நிகழ்வல்ல. ஆனால் வட அமெரிக்கா சம்பந்தப்பட்டது.
சுமார் 77 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலை பாங்காக் அருகே நான்கு பேர் கடலுக்குள் மூழ்கும் போது கண்டுபிடித்துள்ளனர்.
யு.எஸ்.எஸ். கிரேனேடியர் என்ற கப்பல் நிற்கும், இந்த கறுப்பு வெள்ளை படத்திற்கு பின் ஒரு வலி நிறைந்த சரித்திர கதை உண்டு.
ஜப்பானிய குண்டு வீசப்படும் போது இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் போக அதிலிருந்த 76 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். ஆனால் ஏண்டா உயிர் பிழைத்தோம் என்று நொந்து போகும் அளவு அவர்களை சித்ரவதைக்குள்ளாக்கியது ஜப்பானிய இராணுவம். இரண்டு வருடங்கள் தொடர்ந்த அந்த சித்ரவதையில் நான்கு பேர் இறந்தே போனார்கள்.
சமீபத்தில் இந்த கப்பலை கடலுக்குள் மூழ்கி கண்டுபிடித்த நான்கு பேரில் ரேமணன்ட்ஸ் என்பவரும் ஒருவர். இவர் யாரென்றால் தாய்லாந்தில் குகைக்குள் மாட்டிக் கொண்ட கால்பந்து சிறுவர்களை மீட்டவர்களுள் ஒருவர்.
அமெரிக்க அரசு இந்த நீர்மூழ்கி கப்பல் தங்களுது தான் என்று இன்னும் உறுதியளிக்கவில்லை.
தென்னமெரிக்கா.
பிரேசில்.
கொத்துக் கொத்தாக செத்து மடிந்த கரோனா கதையெல்லாம் மறந்து போய் தற்போது ரியோ டி ஜெனிரோவில் மக்கள் கடற்கரைகளிலும் பொது இடங்களிலும் ஒன்றுமே நடக்காதது போல வெளியே வந்து விட்டார்கள்.
உள்ளூர் மேயர் பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா ரேஞ்சுக்கு போதும் இனியும் ஊடங்கு என்று சொல்ல இதற்காகவே காத்திருந்தது போல மக்கள் வெள்ளம்.
என்ன நடக்குமோ என்று அச்சத்தில் அருகாமை நாடுகள் தான் பிரேசிலை கவலையோடு பார்க்கின்றன.
(சத்தியமாக இந்த படம் மேலே உள்ள செய்திக்காகத்தான் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது)
ராம்.
Leave a comment
Upload