தொடர்கள்
Daily Articles
உள்ளதைச் சொல்வேன்! - அண்ணாதுரை கண்ணதாசன்

- 5 -

20200819205526407.jpeg

பழைய நினைவுகளை மனதிற்குள் அசைபோடுவதே ஒரு சுகானுபவம். அதிலும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் அப்பாவின் பணத்தை செலவழித்துக் கொண்டு திரிந்த, அந்தக் கடந்துபோன பொற்காலம், மூளையின் மரத்துப் போன பகுதியை தட்டி எழுப்பும்போது கிடைக்கின்ற அந்த சுகத்திற்கு முன் பொன்னும் பொருளும் ஒரு பொருட்டே இல்லை என்பேன் நான்.


நான் ஒன்பதாம் வகுப்பில் இருந்த போது படித்த ஒரு கவிதையின் சில வரிகள்..


The smiles, the tears,
Of boyhood’s years,
The words of love then spoken;
The eyes that shone,
Now dimmed and gone,
The cheerful hearts now broken!

பன்னிரண்டு வயதில் தேர்விற்காக மனதிற்குள் பதித்தது இன்று அறுபதைக் கடந்த பின்தான் அர்த்தம் விளங்குகிறது.


நான் கல்லூரியில் படித்தபோது என்னுடைய மிக நெருங்கிய முஸ்லிம் நண்பன் ஒருவன். படிக்கும்போது அவன் ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்தான். அந்தப் பெண் அவ்வுளவு அழகாக இருப்பார். நல்ல ஜோடி என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது, ஒரு நாள் அந்த நண்பன் “மச்சி எங்கம்மா உங்களை வீட்டுக்கு வர சொன்னாங்க” என்றான்.


நாங்கள் மொத்தம் ஆறு பேர் ஒன்றாக சுற்றிக்கொண்டிருப்போம். வேடிக்கை என்னவென்றால் எல்லோருமே வேறு வேறு பட்டப்படிப்பு படித்துக் கொண்டு இருந்தோம். நான் மட்டும் தான் ஆங்கில இலக்கியம். வருடத்திற்கு பாடப் புத்தகங்கள் மட்டுமே ‘இருபதிற்கும் அதிகமாக இருக்கும்’. போதாதற்கு ஆங்கிலம் என்றாலே சிரமம் என்பதால், வேறு எந்த பிரிவிலும் இடம் கிடைக்காதவர்களின் கடைசி புகலிடமாக ஆங்கில இலக்கியம் இருந்தது. முதல் வருடத்தின் முதல் வகுப்பில் எங்கள் பேராசிரியர் கேட்ட முதல் கேள்வி... “இதில் யார் ஆங்கில இலக்கிய படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள்?” என்பது தான். நானும் இன்னும் இரண்டு பேர் மட்டும் தான் கையை தூக்கினோம். சரி விஷயத்திற்கு வருகிறேன்..


ஒரு நாள் நாங்கள் ஆறு பேரும் அந்த நண்பனின் வீட்டிற்கு சென்றோம். அம்மா எங்களுக்காக பிரியாணி, சிக்கன் மட்டன் என்று ஒரு விருந்தே செய்து வைத்திருந்தார். சாப்பிட்டு முடித்த பிறகு அம்மா எங்களிடம் பேசினார்கள்.


“ அவன் ஒரு பொண்ணை காதலிக்கிறானா?”


நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தோம். பிறகு அவர் விளக்கமாக சில விஷயங்களை சொன்னார். அவர்கள் சமூகத்தில் சுவீகாரம் எடுக்கப்பட்ட வளர்ப்பு மகனுக்கு உள்ள நடைமுறை சிக்கல்களை சொன்னார். அப்போது தான் அந்த நண்பன் அவர்களது வளர்ப்பு மகன் என்று எங்களுக்கு தெரிய வந்தது.
“நீங்க எல்லாருமே என் பிள்ளைகள் தான். நீங்க தான் அவன்கிட்ட பேசணும். ஒண்ணு அவன் என் சொந்தத்தில இருந்து ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சிக்கணும் இல்லே அவன் அப்பா வழியில ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கணும்.. இல்லேன்னா அவனுக்கு இந்த சொத்துல ஒண்ணுமே கிடைக்காது. அவன் எதிர்காலத்தை நினைச்சுதான் கவலையா இருக்கு.. அவனுக்கு புத்திமதி சொல்லுங்க பிள்ளைகளா” என்றார் அம்மா.

“சரிம்மா” என்று சொல்லிவிட்டு வந்து விட்டோம்.


அம்மா அப்பா சொன்னபடி கேளு என்று ஆளுக்காள் அவனுக்கு அட்வைஸ்.. ஒரு வழியாக வீட்டில் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டான். திருமணமும் நடந்து முடிந்தது. ஆனால் அவன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவனுக்கு அந்த சொத்தில் ஒன்றுமே கிடைக்கவில்லை என்பது சோகம். மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி, படிப்படியாக முன்னேறி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டான். வாரம் இரண்டுமுறை என்னிடம் பேசுவான். ஒவ்வொரு முறையும் இரண்டுமணி நேரத்திற்கு குறையாது. சில வருடங்களுக்கு முன், ஹஜ் பயணம் போய் இருந்தபோது, மாரடைப்பு வந்து மெக்காவில் காலமாகிவிட்டான். எனக்கு அது மிகப் பெரிய இழப்பு என்றாலும் மெக்காவில் மரணமடைவது புண்ணியம் என்று சொல்வார்கள். அது அவனுக்கு வாய்த்ததில் ஒரு திருப்தி.


அடுத்த நண்பன். இவனுக்கு தாய் மொழி தெலுங்கு. தமிழ், தெலுங்கு தவிர வேறு மொழி தெரியாது. ஆனால் இவன் வீட்டு எதிரில் இருந்த ஒரு வடநாட்டு பெண்ணுடன் காதல். அந்தப் பெண் டெல்லியில் இருந்து சென்னை வந்து சில மாதங்களே ஆகி இருந்தது. அவளுக்கு ஹிந்தி, ஆங்கிலம் மட்டும் தான் தெரியும். சைகையிலே பேசிக்கொள்வார்கள். அந்த வரையில் மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அக்னி ஏவுகணை போல பயங்கரமான ஒரு செய்தியை அனுப்பினாள் அவள். “உனக்காக சபையர் தியேட்டர் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கிறேன்” என்பதுதான் அது. இவர்கள் இரண்டு பேருக்கும் பொதுவான மொழி என்ற ஒன்று கிடையாது என்பதால் இவனுக்கு நடுக்கம் ஏற்பட்டது. என்னைத் தேடி வந்தான்.


புதுக்கல்லூரியில் ஆங்கில இலக்கிய வகுப்பறை என்பது ஒரு பழைய கட்டிடத்தின் போர்டிகோவின் மேலே அமைந்து இருந்தது. வகுப்பறையின் மூன்று பக்கங்களிலும் எட்டடி நீளத்திற்கு ஜன்னல்கள் இருக்கும். மற்ற ஒரு பக்கத்தில் நுழைவாயில். இந்த ஜன்னல்களுக்கு அப்பால் கல்லூரியின் விளையாட்டு மைதானம் இருந்ததால், மூன்று பக்கங்களில் இருந்தும் எப்போதும் பலமாக காற்று வீசிக்கொண்டு இருக்கும். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வகுப்பறையில் தூங்காதவர்கள் குறைவு. நான் வகுப்பில் இருக்கும் போது அந்த நண்பன் வந்து என்னை அழைத்தான். புதுக்கல்லூரியில் நான் படித்த ஐந்து வருடங்களும் நான் கிளாஸ் கட் பண்ணியது இல்லை. எல்லோரும் மொத்தமாக கட் செய்தால் மட்டும் தான் உண்டு. நான் கிளாஸ் முடிந்ததும் வருகிறேன் என்று அவனை அனுப்பி விட்டேன். கீழே சென்ற அவன், மற்ற நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மூன்று பக்க ஜன்னல்களுக்கு கீழே இரண்டு இரண்டு பேராக நின்று கொண்டு மிகவும் சத்தமாக “அண்ணாதுரை… அண்ணா.. அண்ணாதுரை” என்று கத்திக் கொண்டிருந்தார்கள். சத்தம் பொறுக்கமாட்டாமல் பேராசிரியர் என்னை வெளியே அனுப்பிவிட்டார். முதலாம் ஆண்டில் நான் முதல் மாணவனாக வந்த காரணத்தால் “Mr.Annadurai, will you please go out of the class and please your howling friends? “ என்று மரியாதையாக சொல்லி வெளியேற்றினார்.


எரிச்சலுடன் கிழே வந்து நண்பனைப் பார்த்து திட்ட வாயெடுத்தேன். ஆனால் அவன் முந்திக் கொண்டு “மச்சான் பிரியா சபையர் பஸ் ஸ்டாண்டில நிக்கிறாடா.. பிலீஸ் டா ஹெல்ப் பண்ணு” என்று கெஞ்சினான். ஆறு பேரில் சரளமாக ஆங்கிலம் பேசுபவன் நான் என்பதால் தான் இந்தக் கெஞ்சல். சரி என்று நான் சபையர் பஸ் ஸ்டாண்டிற்கு போனேன். நிழற்குடையின் தூண் ஒன்றின் ஒரு பக்கத்தில் நான் நிற்கிறேன். தூணின் அந்தப் பக்கம் நண்பன் நிற்கிறான். அவனுக்கு அந்தப் பக்கமாக அந்தப் பெண் நிற்கிறாள். அங்கிருந்து பார்த்தால் அவளுக்கு நான் நிற்பது தெரியாது. தூண் மறைக்கும் என்பதால் இந்த செட்டப். அவன் முகத்தை கர்ச்சீப்பால் துடைப்பது போல் என்பக்கம் திரும்பி,


“ மச்சான்..நாளைக்கு சினிமாவுக்கு போகலாம்னு இங்கிலீஷ்ல எப்படி சொல்லணும்?”


நான் “How about going to a movie tomorrow ?”


உடனே அவன் அவளிடம் கிளிப்பிள்ளை போல் அப்படியே சொன்னான்.

அதற்கு அந்தப் பெண்...
“No yar.. I can’t bunk” என்றாள்.


“மச்சான் bunk னா என்ன?”

“ Bunk “ னா கிளாஸ் கட் பண்றது.”


“no Priya you must bunk” என்று அவனே சுயமாக சொல்லிவிட்டான்.


“Ok.. go get me a double decker” (double decker என்பது அப்போது பிரபலமாக இருந்த காட்பரீஸ் சாக்லேட்)


இவன் என்னிடம் திரும்பி “ மச்சான் என்னடா பஸ் வாங்கித் தர சொல்றா?” என்றவன் என் பதிலை எதிர்பார்க்காமல், அவளிடம்...


“ what you want bus?”


“ Nut.. go ask the shop keeper...”


நேரம் செல்லச் செல்ல இவனுக்கு confidence வந்துவிட்டது.. அவனே ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துவிட்டான்.. முழுவதையும் சொல்ல நேரமில்லை.. ஒரு துளி இதோ..


நல்ல சிகப்பு நிறத்தில் அவள் லிப்ஸ்டிக் அணிந்திருந்தாள். ரொமாண்டிக்காக அதை சொல்ல வந்த நண்பன்...


“Priya your lips are very very” என்று சொல்லிவிட்டு RED என்ற வார்த்தை நினைவிற்கு வராமல் “சிவப்பு” என்றான்.


“Priya your lips are very very சிவப்பு..”


The rest is history என்று சொல்வார்கள்.


அவன் தன் தந்தை பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டான்.