
பெண் என்பவள் புரியாத புதிர் என்று சொல்பவர் உண்டு, புரிந்து கொள்ள யாரவது முயற்சி எடுத்ததுண்டா? அந்த கேள்விக்கு என்றுமே ஒரே பதில் தான். “இல்லை”. யாரவது ‘நான் முயற்சி செய்திருக்கிறேன்’ என்று சொன்னால், அவர் பெண்ணெனும் கடலின் கரையில் நிற்கிறார் என்று அர்த்தம். மேலும் இந்த ஒரு வார்த்தையே பெண்ணை முழுதாக புரிந்து கொள்ள யாரும் எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை சொல்கிறது.
பெண் மனது, பல படிமங்களைக் கொண்டது, பல செய்திகள், பல ரகசியங்கள், காயங்கள், வலிகள், வேதனைகள், என பலவற்றையும் தன்னுள் கொண்டது. அவை அனைத்தையும் முழுமையாய் அறிந்தவர்கள் அவளைத் தவிர யாருமே இல்லை.
ஒரு பெண், அன்பு காட்டும்போது தன்னில் மலருகிறாள். அதற்கு ஈடாய் எதனையும் தரத் தயாராய் இருக்கிறாள், ஏன் தன்னையுமே... ஆனால் அதையே வன்முறையாய், அவள் சம்மதமே இல்லாமல் அவளை அணுகும்போது... அது அவளை மனம் குன்றிப்போகச் செய்கிறது. அதன் பின்பு, அவள் மலர முயற்சிப்பதே இல்லை. குறிப்பாக சிறுவயதில் அவர்கள் மேல் ஏவப்படும் பாலியல் துன்புறுத்தல்கள், அவர்கள் தங்களின் பதின்பருவத்தை கடப்பதற்கும், பேரிளம்பெண் பருவத்தை நம்பிக்கையோடு அணுகுவதற்கும் மிகவும் கஷ்டப்படுகிறது. வாழ்க்கை அவர்களுக்கு சிரமங்களின்றி வேறில்லை என்றாகிவிடும்.
சமீபத்தில் அதிகம் பேசப்படும் செய்தியாய் இருக்கும் பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டவர்கள், அதனை அணுகுவது எப்படி..? வெளிப்படுத்துவது எப்படி..? அதையும் கடந்து வாழ்க்கையை தொடர்ந்து வாழ்வது, ஆகியவை குறித்த தகவல்கள், உண்மை செய்திகள், தப்பி உயிர் வாழ்வோருடைய கருத்துக்கள்... அவர்களின் குரலை பதிவு செய்யும் முயற்சியே இது...

“வீசியெறியுங்கள் உங்கள் முகமூடிகளை”....
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அதிலிருந்து தப்பியவர்கள் சொல்லும் சம்பவங்களைக் கேட்டால், நாமெல்லாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம் என்று புரிய வரும். சென்னையின் மத்திய பகுதியான அண்ணா நகரில் வசிக்கும் இவர், தனது வளர் இளம் பருவத்தை பற்றிச் சொல்வது நிச்சயம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அவருடைய உண்மைக்கதையினை அவ்ர் வார்த்தைகளிலேயே கேட்போம்!
“என்னோட அம்மா ஒரு எக்ஸ்ட்ரோவர்ட். எப்பவும் பார்ட்டி, டின்னர், பிரண்ட்ஸ் அப்படின்னு வெளியில சுத்திக்கிட்டு... இருப்பாங்க. எங்கப்பா அதுக்கு நேர் எதிர். ரொம்ப கோவமான மனுஷன். என்னுடைய குழந்தைப் பருவ நினைவுகளில் அவரைப் பத்தின முரட்டுத்தனம் மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கு. சாப்பாட்டு மேஜையில் தட்டை தூக்கி அடிக்கிறது, என்னோட ஸ்கூல் மார்க் குறைவா இருந்தா, கன்னத்தில் அறையறது இப்படித்தான் அவரோட ஞாபகங்கள் இருக்கு.
என் கூடப் பிறந்தவங்க ரெண்டு பேர். நாங்க மூன்று பெண்களும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்காமலே வளர்ந்தோம். இன்னிவரைக்கும் எனக்கு ஆச்சரியமான விஷயம், நாங்க பெரிய அளவுல அன்னிக்கு பேசிக் கிட்டதே இல்லை என்பது. கூடப் பிறந்தவங்களோட பாசம்னா என்னன்னு தெரியாது, ஒரே வீட்ல தனித்தனியா வளந்தோம்.
எனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் ஒரு தேசலா, நிழல் உருவமாய் இருக்கு. எனக்கு 12, 13 வயசு இருக்கும். எங்க எல்லாரையும் பாத்துக்கறதுக்கு தனித்தனி வேலைக்காரர்கள் உண்டு. அது எப்படி பெண் குழந்தைகள் இருந்த வீட்டில் ஆண் வேலைக்காரர்கள் வைத்தார்கள் என்று தெரியாது. அவர்களின் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை. அதிகம் நான் பாதிக்கப்பட்டது அவர்களின் செயல்களால் தான். அன்று அவை எனக்குப் புரியவில்லை. அம்மாவிடம் சொல்லியும் எந்தவித மாற்றமும் இல்லை. அதிகம் தனியாகவே இருந்தேன். ஆனால், வெளியிலோ நான் வேறு ஒரு முகமூடி அணிந்து இருப்பேன். க்ளாஸ் ஃபர்ஸ்ட், கல்லூரியின் அனைத்து போட்டிகளிலும் நான்தான் முதல். எம்பிஏ கோல்டு மெடலிஸ்ட். ஆனால், அந்த முகமூடிக்கு பின்னால்... இன்னும் பயம் தெளியாத சின்னப் பெண் இருப்பது யாருக்கும் தெரியாது.
திருமணமான பின் என் கணவர் என்னிடம் நெருங்கும்போதெல்லாம், அவரை தவிர்க்கத் துவங்கினேன். எங்கள் உறவில் பொறாமை இருந்தது. நான் ரொம்ப பொஸசிவ். எப்போதும் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது போலவே உணர்ந்தேன். என் மனது, என் கணவர் அவருடைய பெண் நண்பர்கள் என்று பல்வேறு கற்பனையான படங்களை என் மனதிற்குள் உருவாக்கும். அவருடைய பெண் நண்பர்களை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதே சமயம் இது போல் இருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நானும் பைத்தியமாகி, என் கணவரையும் பைத்தியமாக்கிக் கொண்டிருந்தேன். ஒருநாள் நான் உடைந்து அழுதுகொண்டே எல்லாவற்றையும் அவரிடம் சொன்னேன். கடவுள் புண்ணியத்தில் அவர் என்னை சரியாக புரிந்து கொண்டார். என்னிடம் பேசினார்... நான் முகமூடி விலக்கி, என்னைப் பற்றி முழுவதுமாக சிறிது நாட்களுக்குள் அவரிடம் சொல்லி முடித்தேன்.
அவர் என்னை தெரபி மையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு மனநல மருத்துவரால் சோதிக்கப்பட்டு, என்னை நானே புரிந்துகொள்ள வழிவகுத்துக் கொடுத்தார்கள். முதலில் தெரபிக்கு வந்தபோது, இந்த பாலியல் துன்புறுத்தல், என்னுள் என்னவெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. தெரப்பி இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு படமாக உருவாக்க உதவியது. ஒவ்வொரு நாளும் ஒரு விதமான குணம் தலை தூக்கியது. இதெல்லாம் என்னுள் இருந்ததா, இவையெல்லாம் அந்த துன்புறுத்தல்களின் வெளிப்பாடா? என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
இதிலிருந்து வெளிவரும் பாதை சற்று கடினமாகத்தான் இருக்கும். நீங்கள் கேள்வி கேட்பீர்கள் எல்லாவற்றையும்... ஏன்? எதற்கு? ஏன் எனக்கு மட்டும் இப்படி ஏற்பட்டது? கடவுளே நான் இப்போது என்ன செய்வது? என்னை நானே மன்னித்துக் கொள்ள வேண்டியதுதானா? இப்படியெல்லாம் கேட்கத் தோன்றும். ஆனால், நீங்கள் உங்கள் மனதின் தடைப்பட்ட பகுதிகளை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வீர்கள். அவை ஒவ்வொன்றாக உங்கள் முன் வரும்போது, அதை உடைத்து வெளியேறுவீர்கள். பெரிய சாதனையான காரியம் ஒன்றை நிகழ்த்திய சந்தோஷம் இறுதியில் உங்கள் மனதில் நிலைபெறும்.
வெளிவருவது என்பது சாதாரண நிகழ்வுகள், ஒன்றாக தொகுக்கப்பட்ட ஒரு கோர்வையாகும். உதாரணமாக நான் சில விஷயங்களை உடனே மனதுக்கு எடுத்துச் செல்வேன். ஒரு கடைக்காரர் இதை செய்து தர முடியாது என்று சொன்னால், அங்கேயே அழத்துவங்கி விடுவேன். இந்த கன்ணாடி மனதினை எனக்கு தரப்பட்ட சிகிச்சை சரி செய்தது. அதன் பிறகு நான் எதையும் மனதிற்கு கொண்டு செல்வதில்லை. அதேபோல என் கணவரின் பெண் நண்பர்கள் குறித்த பொறாமையும் அப்படித்தான். என்னுடைய குறைவான சுய மதிப்பீடு மற்றும் சுய பாதுகாப்பின்மை தான் அவற்றுக்கு காரணம் என என் சிகிச்சையே உணர்த்தியது. என் மனதில் இருந்த வெற்றிடத்தை தெரிந்துகொண்டு, அதை அவர்கள் சொல்லித் தந்த விதமாக... சில விஷயங்களில் அதாவது எனக்கு பிடித்த தோட்ட வேலை, நல்ல கதைகள் படிப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது ஆகியவற்றில் மற்றும் சில பயிற்சிகளில் மனதை நன்முறையில் திருப்பும் விதமாக செய்த விஷயங்கள் இந்த வெற்றிடத்தை போக்க உதவின.
நான் என் கணவருடனான என் உறவை சார்ந்து வாழ்வதில் இருந்து சேர்ந்து வாழ்வது என மாற்றினேன். என்னை நானே பார்த்துக்கொள்ள கற்றுக்கொண்டேன். எனக்கு வேண்டியவற்றை முதலில் செய்து கொள்ள தயாரானேன்.
இதுபோன்ற ஒரு சிகிச்சை எனக்கு தெரிந்தவரையில் 95 சதவிகிதம் பெண்களுக்கு இன்றைய நிலையில் அவசியம். இப்போது நான் திடமான தைரியமான முடிவுகள் எடுக்கும் பெண்ணாக மாறிவிட்டேன். அதேநேரம் என்னுடைய தோழமைகள் என்னை மதித்து ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மாறி இருக்கிறேன். எனக்கு ஆண், பெண் இரண்டு பேருமே நண்பர்கள் இப்போது. இந்த பிரபஞ்சத்தோடு தொடர்பு உள்ளவளாக நான் உணர்கிறேன். “இல்லை” என்பதை எனக்கான நேரடி பதிலாக எடுத்துக் கொள்ளாமல், அந்த சூழ்நிலையின் வெளிப்பாடாக ஏற்றுக் கொள்கிறேன். முடிவாக என் கணவர், என் நண்பர்களுடன் பேசுவதையும் பழகுவதையும் நான் பொறாமையோடு பார்ப்பதில்லை”.
நண்பர்களே இது ஒரு உண்மைக்கதை. அவர்கள் முதல் பாதிக் கதையை என்னிடம் சொன்னபோது கண் கலங்கினார்கள். எப்போது என்றால் சகோதரிகள் பாசம் என்னவென்பதே தெரியாது என்று சொன்னபோது. ‘இப்போது எப்படி உறவு?’ என்று கேட்டேன். “ஒருத்தி இறந்துவிட்டாள். இன்னொருத்தியும் நானும் இப்போது பயங்கர க்ளோஸ். சின்ன வயதில் விட்டதை இப்போது பிடிக்கிறோம்” என்றார் சிரித்துக்கொண்டே. அவருடைய இந்த மாற்றத்தை வாழ்த்தி விடை பெற்றேன். அவர் சொன்னது... “நீங்கள் இதை தயவு செய்து எழுதுங்கள், என்னைப்போல் நிறைய பேர் இந்த சமூகத்தில் முகமூடி அணிந்து வாழ்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக அதை வீசி எறிந்து வெளிவர வேண்டும், இதுதான் என் வேண்டுகோள்” என்றார். இதோ அதை நிறைவேற்றி விட்டேன் தோழி....
இந்த நிஜக்கதை குறித்தும், இதுபோன்ற ஒரு நிகழ்விற்குப் பிறகான வாழ்க்கையை எதிர்கொள்ள உங்களை தயார்செய்து கொள்ளவும், சரியான வழிகாட்டுதல் செய்யவும் நீங்கள் அணுக வேண்டியது ஒரு மன நல மருத்துவரையோ அல்லது தெரபிஸ்ட் என்று அழைக்கப்படும் ஆற்றுப்படுத்தல் நிபுணரையோதான். இது இரண்டும் ஒன்றாய் அமைவது அபூர்வம். அது போல் இணைந்த ஒரு மருத்துவரே டாக்டர். ஸ்மிதா ராஜன். மும்பையில் பணி செய்யும் இவர், தனது கல்லூரி படிப்பு முடித்ததெல்லாம் சென்னையில் தான். பரதநாட்டியத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், அதன் மூலமும் ஆறுதல் தர முடியும் என்று ஆராய்ச்சி செய்து, முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் உள்ளவர்.
மேலும் கதை சொல்லி மனக்காயம் ஆற்றும் கலையில் பட்டம் பெற்றவர். 15 வருடங்களாக இந்தத் துறையில் அசராமல் பலரையும் ஆற்றுப்படுத்தியவர். அவர் இந்த கதைகளின் வழியே நாம் தெரிந்து கொள்ளவேண்டியதையும், தனது கருத்துக்களையும் கூறி உங்களுடன் உரையாட மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். அவருக்கு “விகடகவி”யின் சார்பாய் நன்றிகளை தெரிவிக்கிறோம். இனி... இந்த வார நிஜக்கதை பற்றி அவரின் கருத்து........

டாக்டர். ஸ்மிதா ராஜன்
“ஒரு மருத்துவரா, தெரபிஸ்ட்டா, கவுன்சலரா என்னோட கருத்துக்களை நான் உங்க கிட்ட பகிர்ந்துக்கப் போறேன்..
முதல் விஷயம் “ஏற்றுக்கொள்ளுதல்”. எனக்கு ஒரு பிரச்சனை இருக்கு என்று ஏற்றுக்கொள்ளுதல் மிக மிக முக்கியம். நான் சரியாவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கு அப்டீன்னு ஏத்துக்கறது ரொம்ப முக்கியம். ஒருவர் உடலளவிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இருந்தால், அவர்கள் Bad Body Image என்னும் ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தங்களுடைய உடலை பார்த்துக்கொள்ள, கண்ணாடியில் பார்க்க பிடிக்காது. ஆனால் இது சரியாகலாம், நாம் நல்ல நிலைக்கு போகமுடியும் அப்படீன்னு நம்பணும். தெரபி மூலமா அதிகாரம் பெறணும். என்னென்ன தெரபி இருக்கு.. கவுன்சிலிங், பேச்சு வழி ஆறுதல், நாட்டிய அசைவு வழி ஆறுதல் (DMT) என்று பல வழிகளில் இந்த பாலியல் துன்புறுத்தலால் ஏற்பட்ட கடும் அதிர்ச்சியை, மனதிலிருந்து நீக்க முயலலாம் அல்லது அதை முழுவதும் ஏற்றுக்கொண்டு, சாதாரண மனிதர்கள் போல வாழத்துவங்கலாம்.
இரண்டாவது: இதை ஆற்ற இயலும், அதை தாண்டி வரமுடியும். ஆனால் அதை முழுவதுமாக மறப்பதோ, குணமடைவதற்கோ எந்த ஒரு மாய மருந்தும் இல்லை. வாழ்க்கையின் அனுபவங்கள், மன்னிக்கவோ, மறக்கவோ ஓரளவிற்கு செய்ய இயலும். ஆனால், இது நடக்கவே இல்லை என்று மனதை மாற்றிட இயலாது. ஆனால், இதை சரி செய்திட முடியும். தெரபிஸ்டுகளிடம் சென்று திறந்த மனதோடு அவர்களை அணுகினால், அவர்களால் உங்களை சரி செய்ய முடியும். எவ்வளவு நாள் நீங்கள் இந்த தெரபியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களே சொல்லுவார்கள்.
இந்த கதையில் முக்கியமாய் எனக்கு தோன்றுவது, நல்ல வளர்ப்பு என்பது மிகவும் முக்கியம். உங்கள் குழந்தைகள் பேச, அவர்கள் உங்களை சுலபமாய் அணுகும் படி நீங்கள் இருக்க வேண்டும், அது உங்கள் குழந்தைகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும். வீடு ஒரு பாதுகாப்பில்லாத இடமாக ஆகும்போது அவர்கள் ஒரு தொல்லைப்படுத்தப்பட்ட பிள்ளைகளாய் வளர்கிறார்கள், மனநலமில்லா வன்முறையாளர்களாகவும் மாற வாய்ப்பு இருக்கிறது. போதைக்கு அடிமையாகவும் வாய்ப்பு உள்ளது.
இந்தக் கதையில் வரும் அந்தப் பெண்ணின் கணவர், “நீ ஒரு தெரபிஸ்ட்ட பாக்கணும்” அப்படின்னு நம்பிக்கை கொடுத்தாரில்லையா? அதை மாதிரி பாசிட்டிவ் ஹோப் எல்லாருக்கும் கிடைக்கணும். ஒருவேளை இதுமாதிரி எடுத்து சொல்லி, நம்பிக்கை கொடுக்க ஒருத்தர் உங்க கூட இல்லாத பட்சத்தில், இது போன்ற கதைகளிலிருந்து எனக்கு ஒரு நல்ல இடம் இருக்கு, என்னால இதை சரி பண்ணிக்க முடியும், அப்படீன்னு எடுத்துக்கிட்டு நீங்களே ஒரு தெரபிஸ்டுகிட்ட போகணும். இது பரவாயில்லை.. பத்தோடு பதினொன்னு அப்படின்னு எடுத்துக்கக்கூடாது. நீங்கள் தனித்தன்மையானவர். உங்கள் உடம்பே உங்கள் கோவில். அதனால் நீங்கள் முன்வந்து, எனக்கு இது நடந்திருக்கிறது, இது சரின்னு எனக்கு தோணல. இதுனால எனக்கு இப்போ இருக்கற வாழ்க்கைல பிரச்சனை. இதிலிருந்து எப்படி நான் மீண்டு வருவதுன்னு யோசிக்கணும். செயல் படணும்.
சரி, இப்போ நீங்க இந்த காயத்தை மாற்றிக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லையெனில் என்ன ஆகும் என்பதை பற்றிச் சொல்கிறேன். முதலில் நீங்களே உங்களை வெறுத்துக்கொள்ள துவங்குவீர்கள், தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இந்த கதையில் அது அழகாக அது சொல்லபற்றிருக்கிறது. தாழ்வு மனப்பான்மையால் உங்கள் உறவுகள் பாதிக்கப்படும், உங்கள் குழந்தைகள் உங்களை புரிந்து கொள்ள சிரமப்படுவார்கள். எப்போதோ, எங்கேயோ உங்களின் ஒரு பகுதி சிதைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் மாற்றிக்கொள்ள வில்லை. அதனால் எதிர்வரும் எல்லா உறவுகளும் பாதிக்கப்படும். நீங்கள் மட்டுமல்லாமல், உங்களின் அடுத்த தலைமுறையும் இதனால் பாதிக்கப்படுவார்கள். ஆகவே நீங்கள் ஒரு முடிவெடுங்கள்... “ஆமாம் எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. நான் இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும், எடுத்துக்கொள்ளப்போகிறேன்.” என்பதாக அது இருக்க வேண்டும். உங்களுக்கு காய்ச்சல் வந்தால் எப்படி மருத்துவரை அணுகி மருந்தெடுத்துக் கொள்கிறீர்களோ, அதேபோல தான் உங்கள் மனநலம் பாதிக்கப்படும் போது, நீங்கள் ஒரு தெரபிஸ்டையோ, கவுன்சலரையோ அணுகி அதற்கான தெரபியை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் உங்கள் அதிர்ச்சியை சரியான விதமாய் அணுகி, அதை உங்கள் முன்னால் கொண்டு வந்து, அதனை அணுகும் முறையினை உங்களுக்கு கற்றுத் தருவார்கள். அது உங்களை முடக்கிப் போடுவதிலிருந்து வெளிவர உதவும். இந்தக் கதை அதனை உங்களுக்கு அழகாக புரிய வைத்திருக்கும் என்று நம்புகிறேன்.”

Leave a comment
Upload