
படிப்பை முடித்து நேர்முகத்தேர்வில் வெற்றியும் பெற்று, ஒரு பெரிய ஐடி நிறுவனத்தில் பணியில் அமர்ந்து ஒருமாதம் முடிகிறது. இன்று சம்பள நாள் இளம்பொறியாளர் வனிதாவிற்கு.
முதல் சம்பளம் வாங்கியதும், ஊரில் உள்ள குலதெய்வத்திற்கான நேர்த்திக் கடனைச் செலுத்தவேண்டும் என்பது அம்மாவின் ஆசையும் கட்டளையும். இந்த மகிழ்வான தருணத்தில் அப்பா இல்லையே என்ற கவலையும் வனிதாவிற்கு இருந்தது.
முதல்மாத சம்பளம் வங்கியில் போடப்பட்டு, துண்டு காகிதம் மட்டுமே வனிதாவின் கையில் கொடுக்கப்பட்டது. சம்பளப் பணத்தை கையில் வாங்கும்போது கிடைத்த அந்த சந்தோஷம் கூட, இப்பொதுள்ள நமது பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை.
வனிதாவிற்கு இது புது அனுபவமாக இருந்தது. “தனது பெயரில் வங்கி கணக்கில் ஐம்பதாயிரத்தைத்தாண்டி இருப்பு இருப்பது புது தெம்பையும் தந்தது.”
கஷ்டமான நேரத்திலும், ஆசைப்பட்ட பொறியியல் படிப்பை படிக்க அனுமதித்ததோடு இல்லாமல், கொஞ்சமாக இருந்த நிலத்தை அடகு வைத்து, சென்னையில் தனியாக தங்கி படிக்க அனுப்பி வைத்த தன் தந்தையை மனத்தில் நிறுத்தினாள். அவரின் துணிவும், உழைப்பும், அக்கறையும் நினைவில் கண்ணீர்த் துளிகளோடு வந்து போனது வனிதாவிற்கு.
நாளை மற்றும் மறுநாள் அலுவலகம் விடுமுறை. சொந்த கிராமமான சிறுவாச்சூர் செல்ல கோயம்பேடு வந்து திருச்சி செல்லும் பேரூந்தைத் தேடி அமர்ந்து... விடியும் முன் வீடு வந்து சேர்ந்தாள்.
தென்னங்கீற்றால் வேயப்பட்ட குடிசை, சாணம் போட்டு மொழுகிய மண் தரை வீடு, அரசின் விலையில்லா மின்சாரத்தில் ஒற்றை விளக்கு, பக்கவாட்டில் இரண்டு மாடுகள் உள்ள மாட்டுத் தொழுவம். கோரைப் பாயெடுத்து தரையில் வீசி, அதில் படுத்துறங்கினாள்.
“எழுந்திரு எருமை.. மணி எழாகுது. பத்து மணிக்கு மேலே மாட்டை கால்நடை மருத்தவர் கிட்டே ஓட்டிகிட்டு போயிட்டு வா” என்ற அம்மாவின் வசவுக் குரல் கேட்டு தூக்கம் பாதியில் களைந்து எழுந்தாள். சரிம்மா. நான் போகிறேன் என்றவள், தயாராகி மாட்டைப் பிடித்துக்கொண்டு கிளம்பினாள்.
கால்நடை மருத்துவமனை போகும் வழியில், தான் படித்த பள்ளியில் படித்து, +2 வில் 1168 மதிப்பெண்கள் எடுத்தவள் சாந்தி, இவளை விட ஐந்து வயது இளையவள், தலையில் புல்கட்டை சுமந்து வர, அவள் எழுதிய NEET தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாள்.
‘என்ன ஸ்கோர் எடுத்தாய்?’ என வனிதா கேட்க...
“612 மார்க் எடுத்திருக்கேன்.. அக்கா..”
“அப்புறம் என்ன..? நம்ம கிராமத்திற்கு ஒரு டாக்டர் வந்தாச்சு” என்று தன் மகிழ்வைத் தெரிவித்தாள்.
“இல்லே அக்கா.. நான் டாக்டருக்குப் படிக்கப் போறதில்லை...ஏதோ ஆசையிலே கஷ்டப்பட்டு கோச்சிங் சேர்ந்து NEET தேர்வும் எழுதிட்டேன், மார்க்கும் வந்திட்டு. நாங்க இருக்கிற நிலையிலே ஆகப் போகிற செலவை நினைத்தால், ஏன் அதைப் படித்தோம்? நமக்கு அந்த படிப்பு ஒத்தே வாராதுனு தெரியுது” என்றாள் சாந்தி.
“லூசா புள்ளே நீ? அவனவன் பாஸ் பண்ண முடியாம தவிக்கிறான். நல்ல மார்க் எடுத்து இருக்கே... அரசு மருத்துவக் கல்லூரியிலேயே கண்டிப்பாக உனக்கு இடம் கிடைக்கும்.. அப்புறம் என்ன?”
“அதற்குக் கூட கட்டணம் கட்டணுமில்லே...நாங்க இருக்கிற நிலையிலே அதெல்லாம் முடியாதுக்கா” என வருந்தினாள் சாந்தி.
“கட்டுவோம். அதான் நீ் படிக்கிறே!” என்று உறுதியாக.. சொல்லிவிட்டுச் சென்றாள் வனிதா.
“குலதெய்வத்திற்கு நாளைக்கு அபிஷேகம் செய்திடலாமா?” என்று வனிதாவைக் கேட்டாள் அவள் அம்மா.
“வேண்டாம்மா! நான் இன்னும் முதல்மாத சம்பளமே வாங்கலை என்று நீ நினைத்துக் கொள்.”
“தப்பு வனிதா. ஆத்தா கோவிச்சுக்குவா” என்று பயந்தபடி வனிதாவையும் பயமுறுத்தினாள்.
“இந்த ஒத்த ரூபாயை மஞ்சத் துணியிலே முடிந்து வை. அப்புறமா அபிஷேகம் செய்துக்கலாம்” என்றாள் வனிதா.
‘வேண்டுதலையெல்லாம் தள்ளி போடக்கூடாதுடி’ என்ற அம்மாவிடம்...
“அதோட முக்கியமாக ஒரு வேலை இருக்குமா.. நீயும் அதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும்” என்றாள்.
“அப்படி என்னடி அது முக்கியமான சங்கதி வனிதா?”
“நம்ம சரோஜா அத்தையோட மகள் சாந்தி இப்போ டாக்டருக்கு படிச்சாகனும்” என்றாள்.
“அதனாலே?”
“நான் அவளை டாக்டருக்கு படிக்க வைக்கப் போகிறேன்” என்றாள்.
“நல்ல எண்ணம்தான் வனிதா. ஆனால் அப்பா உன் படிப்புக்காக வாங்கிய கடனே இன்னும் பாக்கி இருக்கு.. நம்ம நிலம் வேற அடமானத்திலே இருக்கு இப்போ போய் எதுக்கு? இதெல்லாம செய்யனும்னா வசதி வாய்ப்பு இருக்கனும் வனிதா!” என்றாள் அம்மா கரிசனமாக.
“வசதி வேண்டாம்மா. வாய்ப்பு இருந்தால் போதுமானது” என்றாள் வனிதா.
சரோஜாவும், சாந்தியும் அங்கே வர இதைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.
“வனிதா கண்ணு, ரொம்ப நன்றியம்மா. ஆனா இதை நான் எப்படி திருப்பியளிப்பேன். இப்போதைக்கு என்னாலே முடியாதே?!” என சரோஜா வருந்த...
“சாந்தியின் மருத்துவ படிப்பு முடிந்ததும் இதே போல யாருக்காவது உதவி செய்யச் சொல்லுங்கள். எனக்கு அவள் எதையும் திருப்பிக் கொடுக்க வேண்டாம்” என்றாள் வனிதா.
“சந்தோஷமா இருக்குமா உன்னை இந்த வயிற்றில் நான் பெத்ததற்கு” என்றாள் அம்மா.
“எங்களுக்கு அந்த மதுரக்காளியே நீ தானம்மா” என்றாள் சரோஜா.
“நீங்கள் இருவரும் எவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? பின்னே நம்ம ஆத்தா ஏன் கோவிச்சிக்கப் போறாள்?!” எனக் கேட்டாள் வனிதா.
“மதுர காளியாத்தா நிச்சயம் நம்ம கோபிக்க மாட்டாள். மாறாக நல்ல சந்தோஷமடைவாள்!” என்றாள் வனிதாவின் அம்மா ஆனந்தம் ப்ளஸ் ஆணித்தரமாக.

Leave a comment
Upload