தொடர்கள்
கதை
“புது அனுபவம்...” - வெ.சுப்பிரமணியன்

2020923172424536.jpeg

“இங்கே பாருடா, நான் உனக்கு அரசியல் ஆலோசகர் மட்டுமில்லே, உன்னோட குளோஸ் ஃப்ரண்டா இருக்கிறதால சொல்லறேன். உன்னை மாதிரி அரசியலை முழுநேரத் தொழிலா செஞ்சுகிட்டிருக்கிற தலைவர்கள் எல்லாருக்குமே, எப்போதாவது வாழ்க்கையில, எதாவது ஒரு வீக்னெஸ் வரத்தான் செய்யும். உனக்கும் அப்படித்தான். இந்த ஆசையில ஒண்ணும் தப்பிருக்கிறதா எனக்குத் தோணலை” என்று என் ஆசைக்கு தூபம் போட்டான், என் நெருங்கிய நண்பன் குமரேசன்.

“அதுக்கில்ல குமரேசா, விஷயம் வெளியில தெரிஞ்சிட்டா, பொதுமக்கள் மட்டுமில்லே, பிறகு, கட்சியிலே கூட யாருமே என்னை, மதிக்கமாட்டாங்க. அவ்வளவு ஏன், என் பொண்டாட்டிக்கோ, அல்லது குடும்பத்தாருக்கோ தெரிஞ்சா…. அப்பப்பா, நினைக்கவே அவமானமா இருக்கு”, அவன் சொல்கையில் பயத்தில் எனக்கே உதறலெடுத்தது.

“ஏண்டா, கல்யாணத்துக்கு முன்னாடியே, ஓரு ‘புது அனுபவம்’ வேணும்னு சொல்லி, துணிந்து அன்னிக்கு அந்த காரியத்தைப் பண்ணினே. அதனால மூடநம்பிக்கை போய், “இந்த கட்சிக்கே” தலைவனாயிட்டே. இப்போ, இந்த சின்ன விஷயத்துக்கு பயந்தா எப்படிடா?” என்று பழைய கதையைக் கிளறினான், குமரேசன்.

‘அது பர்ஸனல் லைஃப்டா, ஆனா இது பப்ளிக் லைஃப். மாட்டிகிட்டேனா மானமே போயிடும்’ என்றேன்.

சரிடா, “நீ முடிவு பண்ணி, நாளைக்கு காலையிலே சொல்லு. அதுக்கப்புறமா, ஆகவேண்டியதை நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, குமரேசன் போய்விட்டான்.

அன்று இரவோ, எனக்கு தூக்கம் வராமல் நெடுநேரமாக, புரண்டுகொண்டிருந்தேன். என் திருமணத்திற்கு முன் “இவன் பேச்சைக்கேட்டு “அந்த புது அனுபவம்” பெற செய்த காரியத்தை நினைத்துப் பார்த்தேன்.

“அடுத்த வாரம் கல்யாணம் பண்ணிக்கப்போறவன் செய்யற வேலையாடா இது? கொஞ்சமாவது, அறிவு வேண்டாம். இப்போ போய் இப்படி ஒரு விபரீத ஐடியாவைக் குடுக்கிறியேடா. உன்னோட ஆபீஸ் ஃபிரண்டு சொன்னான்னு ‘அந்த’ வீட்டுக்குப்போய் ஒரு நாள் ராத்திரி தங்கி “அந்த புது அனுபவம்” எப்படின்னு பார்த்திடணும்னு சொல்லறியே. கல்யாணத்துக்கப்புறம், உன் மனைவிக்கோ, அல்லது அவங்க வீட்டுக்கோ தெரிஞ்சுதுன்னா? அதை விடு, என்னோட வீட்டைப்பத்தி யோசிச்சுப் பார்த்தியா” கடுகடுத்தேன் குமரேசனிடம்.

“இங்கே பாருடா, ஒவ்வொரு ஆம்பிள்ளைக்கும் கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ஒரு அனுபவம் இருந்தாத்தான், கல்யாணமாகி கூட்டிக்கிட்டு வரவளை சமாளிச்சு, வாழ்க்கையை, பயமில்லாம நிம்மதியா தள்ள முடியும்” மல்லுக்கு நின்றான் குமரேசன்.

“இந்தக் கண்றாவி எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு வேண்டாம். நீ செய்யச் சொல்லற காரியத்தில கொஞ்சங்கூட எனக்கு விருப்பமில்லே”, என்று நானோ புலம்பினேன்.

“இங்கே பாருடா, காலையிலேயே புரோக்கர் ஃபோன் பண்ணியிருந்தார். நாளைக்கு அமாவாசையாம். ராத்திரி இருட்டுல ஆள்-நடமாட்டமே தெரியாதாம். அதுனால, இன்னிக்கே பணத்தை எடுத்துகிட்டு, அந்த ‘அம்மா’ அவங்க வீட்டுக்கு வரச்சொல்லிட்டாங்க. நாம ரெண்டு பேரும் இப்பவே போறோம்”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

+இதை ஜாலியா எடுத்துக்காம, நீ ரொம்ப பயந்தியானா நாளைக்கு உன்னோட அப்பாவாட்டமா எப்படிடா ஒரு பெரிய கட்சித்தலைவராவே? அது மட்டுமில்லே, கல்யாணமான பிறகு, உன் சம்சாரத்தை சமாளிக்க தைரியம் வேண்டாமா?” என்று சொல்லிவிட்டு தன் டூவீலரைக் கிளப்பினான் குமரேசன். பழகிய தோஷத்திற்கு, முனகிய படியே, வேண்டா வெறுப்புடன் கூடப்போனேன் நான்.

“ஸர்வீஸ் சென்டர்” என்று போர்டு வைத்திருந்த அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான் குமரேசன். சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, தலை கொள்ளாமல் மல்லிகைப்பூவை வைத்துக்கொண்டு, “வாங்க, இரண்டு பேர்ல குமரேசன் யாரு?” என்று கேட்டுக்கொண்டே, உள்ளே திரும்பி, “பாப்பா, வந்திருக்கிறவர்களுக்கு காப்பி கொண்டா” என்றாள்.

“தம்பி குமரேசா, உன்னோட சேர்ந்து, வேலைபார்க்கிற பையன் மூலமா, புரோக்கர் உன்கிட்டே விவரம் எல்லாத்தையும் சொல்லிட்டேன்னு, காலையில போன் பண்ணி சொன்னாரு”. இங்கே பாருங்க தம்பி, அடுத்த தெரு தள்ளி, தனியா இருக்கிற, சிவப்பு கலர் பெயின்டு அடிச்சவீடு.”

“வண்டியில வந்தா, இந்த வீட்டு காம்பவுண்டுக்குள்ளேயே நிறுத்திக்குங்க. நாளைக்கு சாய்ங்காலம் ஆறு மணிக்கு உள்ளே போனா அடுத்த நாள் காலையிலே ஆறுமணி வரை இருக்கத்தான் ரேட்டு, ஐயாயிரம் ரூபாய். முன்னமே வந்துட்டீங்கன்னா, இங்கே கேட்டை தொறந்துதான் வைச்சிறுப்போம். அந்த வீட்டுல ஹாலில் மட்டும் ஒரு நைட்லாம்பை, நாங்களே போட்டு வைத்திருக்கோம். நீங்க வந்து போறது அக்கம்-பக்கத்திலேயோ, போலீஸுக்கோ தெரியாமலிருப்பது உங்களுக்குத்தான் நல்லது. தேவையில்லாம, சவுண்டுவிட்டு, பிரச்சனையில மாட்டிக்காதீங்க” சொல்லி முடித்தாள் அந்த அம்மா.

நீங்க “ஒருத்தர் மட்டும்தானே” என்று என்னிடம் அவள் கேட்டதும்,

“ஆமாம்” என்று குமரேசன் பதில் சொல்லிவிட்டு, ‘ஐயாயிரம் ரூபாய்’ பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, மகிழ்ச்சி பொங்க, பைக்கில் விசில் அடித்தபடியே ஓட்டிக்கொண்டு வந்தான்.

‘ஏண்டா குமரேசா, இந்த மானங்கெட்ட எக்ஸ்பீரியன்ஸை, இவ்வளவு ரிஸ்க்கெடுத்து அடைவதற்கு, ஐயாயிரம் ரூபாய் தண்டமாத் தெரியலையா? அதுவும் அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் வேற”. சலித்துக்கொண்டேன் நான்.

குமரேசனின், ஐடியாபடியே, நானும் அடுத்தநாள் ‘அந்த’ வீட்டுக்குப் போய் ‘அந்த’ புது அனுபவத்தையும் அடைந்தேன்.
ஒரு வாரம் கழித்து என் திருமணமும் முடிந்தது. திருமணத்திற்கு அடுத்த நாள், ஒரு ஹோட்டலில் நடந்த ரிஸப்ஷனில், என் மனைவியோடு, எங்களை வாழ்த்த வந்திருந்தவர்களுடன் கைகுலுக்கி, போட்டோ எடுத்துக்கொண்டிருந்தேன்.

எனது கல்யாண ரிசப்ஷன்...என் எதிரே, குமரேசன், “அந்த ஸர்வீஸ் சென்டர்” அம்மாவையும் கூடவே எனக்கு அன்று ‘அதுக்கு’ ஏற்பாடு செய்து கொடுத்த “ஏஜென்டையும்” அழைத்துக்கொண்டு, மேடையை நோக்கி வரவும் ஆடிப்போனேன் நான்.

அவர்கள் எல்லோரும், மேடையேறி, அருகே வந்ததும் என் மனைவி, அந்தம்மாவை “வாங்க அத்தை” என்றாள். எனக்கோ தலை கிறுகிறுத்தது. என் மனைவியோ, “நீங்க பேசிகிட்டு இருங்க, நான் அத்தைக்கு கிஃப்டும், தாம்பூலப் பையும் எடுத்துகிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, மணமகளுக்கான அறைக்குள் சென்றாள்.

நானோ அதிர்ந்துபோய் நின்று கொண்டிருந்தேன். அந்த “அம்மா” சிரித்துக்கொண்டே என்னைப்பார்த்து, “மாப்பிள்ளைத் தம்பி, இப்போ ஓக்கேயா?. இந்த அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கை நடத்தவா, ஒரு நாள் ராத்திரி முழுக்க, “தற்கொலை நடந்த அந்த வீட்டில”, ராத்திரி தனியே தங்கி மனோதைரியத்தை அதிகமாக்கிக்கிட்டீங்க?” என்று கேட்டார்.

“தம்பி, எந்த மனைவிக்குமே ‘பேய் குணம்’ கிடையாது. எல்லாமே கட்டின புருஷன் அவ கிட்டே நடந்துக்கிறதுலதான் இருக்கு” என்று சொன்னவள், “கவலைப் படாதீங்க, இந்த விஷயத்தை, என் மருமவகிட்டே சொல்லமாட்டேன்” என்று சொன்னதும் தான் எனக்கு உயிர் வந்தது.

பழைய நினைவுகளுடன் உறங்கிப் போன நான் அடுத்த நாள் காலையில், குமரேசனுக்காக காத்திருந்தேன்.

“டேய் குமரேசா, அன்னிக்கு உன்னால எனக்கு கிடைச்ச புதுஅனுபவம் தாண்டா எனக்கு பிசாசு, பூதம் இதிலெல்லாம் நம்பிக்கையில்லாம செய்து, நாத்திக-கட்சிக்கு தலைவராக்கியது. கல்யாணம் ஆகி நாற்பது வருஷத்துக்கப்புறமா, எனக்கு, இப்போ இந்த ஆசை விஸ்வரூபம் எடுத்திருக்கு.

“அதிலேயும், அன்னிக்கு, டிவியில திருவிழா கூட்டத்தில, குளோசப்பில ஒருதடவை அவளை பார்த்ததும், அடடே, நம்ப ஊர்ல இருக்கிற இந்த பேரழகு பெட்டகத்தை, இத்தனை நாள், தனியா நாம ஆராதிக்காம போயிட்டோமேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கிட்டது. அதான் உன்கிட்டே ஏற்பாடு பண்ணச் சொன்னேன்” ஏக்கத்துடன் சொன்னேன் நான்.

“எப்படியாவது அவளை தனியா பார்த்துடனும்னு உனக்கு ஆசையிருக்குன்னு, நானும், அந்த ஏரியாவுல இருக்கிற, நம்ப ஆள் ஒருத்தரிடம் சொன்னேன். அவரே ஆச்சரியப்பட்டுப் போய், சரி, ஏற்பாடு பண்ணிடறேன்னார். பகல்ல, போலீஸ் கெடுபிடிகள் ஜாஸ்தியா இருப்பதாலே, ராத்திரி எட்டு மணிபோல. கார்ல வராம, நடந்து, பில்டிங்கின் பின்வாசல் வழியா வரச்சொன்னார்”. சொல்லி முடித்தான் குமரேசன்.

“பணத்தைப் பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம், எவ்வளவு ஆனாலும் பரவாயில்லே. ஆனா என் ஆசைதீர, தனியா நாங்க இரண்டு பேரும் மட்டும் இருக்கணும்னு சொன்னியா?” கடுகடுத்தேன் நான்.

“நண்பா, விஷயம் முடிஞ்ச பிறகு, உனக்கு என்ன தோணுதோ அந்த அமௌன்ட்டை, ஸ்பாட்லே கொடுத்தா போதும்னு அந்த ஆள் சொன்னாரு. ஆனா அரைமணி நேரம்தானாம்” என்று சொன்னான் குமரேசன்.

மணி ஏழரையானதும், ‘குமரேசன் குறிப்பிட்ட அந்த ஆளே’ எனக்கு போன் போட்டார், “இங்கே அவள் ரெடியா இருக்கா. நீங்க ஜாக்கிறதையா முக்காடு போட்டுகிட்டு, பின் கதவுகிட்டே வந்து மூணு தட்டு தட்டுங்க. நான் கதவைத் தொறந்து விடறேன். அதுக்கப்புறம் நீங்களாச்சு, அவளாச்சு; அரைமணி நேரம்தான். ஓகேயா?” என்றார்.

அவரின் பேச்சை கேட்ட நானும், எனது வெகுநாள் கனவு நிறைவேறப் போவதை எண்ணி மனதுக்குள் மகிழ்ந்தபடி, அவளுக்காக, வாங்கி வைத்திருந்த, காஸ்டிலியான பட்டு புடவை, மல்லிகைப்பூச்சரம், மற்றும் ரூபாய் நோட்டுகள் என எல்லாவற்றையும் ஒரு சூட்கேஸில் திணித்துக் கொண்டேன். டென்ஷனால் உடல் நடுங்காமலிருக்க மாத்திரையையும் முழுங்கினேன். வீட்டில், மனைவியிடம், “நான் அவசரமா ஒரு கட்சி கூட்டத்துக்குப் போறேன். ஒரு மணி நேரம் ஆகும்னு” சொல்லிவிட்டு, கையில் பெட்டியுடன் “அவளை” பார்க்க கிளம்பினேன்.

சொன்னபடியே பின்கதவை அவர் திறந்ததும், விருவிருவென அவளிருக்கும் அறையின் வாசலில் போய் நின்றேன். எதிரே, அலங்காரத்துடன் உலகப்பேரழகியாக, மயக்கும் புன்னகையுடன் “அவள்” நின்றிருந்தாள். பெட்டியை அங்கிருந்த படிக்கட்டில் வைத்தேன்.

கண்ணீர் பெருக்கெடுக்க, தடாலென நெடுஞ்சாண்கிடையாக, அந்த ஊரின் அம்மன் கோயிலில் குடிகொண்டிருந்த “பராசக்தியின்” சன்னிதானத்தின் முன்பு, கீழே விழுந்து “நாத்திகவாத கட்சியின் தலைவரான நான்” தரிசித்தேன். அரைமணி நேரம், அத்திருக் கோவிலில் குடி கொண்டிருக்கும் பராசக்தித் தாயும், அவளின் நாத்திகத் தனையனான நானும் “தனியே” என்னமோ பேசினோம்.

எனக்கு, என் நாத்திகத் தோல் உரிந்து, ஆத்திக விருட்ஷம் வேறூன்றும், “புது அனுபவம்” கிடைத்தது.