தொடர்கள்
கல்வி
"நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவிகள்... " - ஸ்வேதா அப்புதாஸ்.

நடந்த முடிந்த நீட் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவன்... மாணவி என்று பலர் தேர்ச்சி பெற்றிருப்பது ஒரு பெரிய விஷயமாக தெரிகிறது. தேர்ச்சி பெற்றவர்கள் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது அவர்கள் சென்ற பயிற்ச்சி வகுப்புகளில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

2020916095256194.jpg
அதே சமயம் இந்த வருட நீட் தேர்வில் எந்த வசதியும் இல்லாத ஆதிவாசி மாணவியும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவியும் தேர்ச்சி பெற்றது தான் மகிழ்ச்சியான விஷயம்.

கோவை மாவட்டம் காரமடை, வெள்ளியங்காடு அரசு மேல் நிலை பள்ளி மாணவிகளான ரம்யா மற்றும் பிஸ்டிஸ் பிரிஸ்க்கா என்ற இருவரும் தேர்ச்சி பெற்றதை ஒரு அதிசியமாகவே அனைவரும் பார்க்கிறார்கள்.
ரம்யா, இருளர் ஆதிவாசி பிரிவை சேர்ந்தவர். பிஸ்டிஸ் பிரிஸ்க்கா எஸ்.சி. வகுப்பை சேர்ந்தவர். இருவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு மாணவிகளும், தாங்களாகவே தங்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்தி தேர்ச்சி பெற்றுள்ளனர்... இதில் ரம்யா 145 மதிப்பெண்ணும் பிஸ்டிஸ் பிரிஸ்க்கா 167 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு தகுதியான மதிப்பெண் 113 மற்றும் 146 என அரசு நிர்ணயித்துள்ளது.
நாம் விகடகவிக்காக தேர்ச்சி பெற்ற இரு மாணவிகளையும் தொடர்பு கொண்டு பேசினோம்.....

202091609563754.jpg

பழங்குடி வகுப்பை சேர்ந்த பிஸ்டிஸ் பிரிஸ்க்கா நம்மிடம் பேசும் போது, “எனக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அதனால் தான் நீட் தேர்வுக்கு தயார் செய்தேன். நானும் ரம்யாவும் ஒன்றாக சேர்ந்து தான் படித்தோம்... கொஞ்சம் கஷ்டம் தான். பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பையாலஜி... இதில் பிசிக்ஸ் தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. மற்றபடி அரசு ஆன் லைன் வகுப்புகளிலும் கலந்து கொண்டு படித்தோம். முக்கியமாக பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு புத்தகங்களை தான் படித்தோம். எங்க பள்ளி ஆசிரியர்கள் எங்களை ஊக்கப்படுத்தி நன்றாக சொல்லி கொடுத்தார்கள்... நான் ஒரு இதய சிகிச்சை மருத்துவராகி, ஏழை மக்களுக்கு உதவ வேண்டும். நம் ஆளுநர் அந்த 7 .5 சதவிகிதம் இடஒதுக்கீட்டிற்கு கையெழுத்து போட்டால், எங்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்கும். எங்க அப்பா ஒரு டைலர், ஏழை குடும்பம், எங்களிடம் பணம் இல்லை. அரசு உதவி செய்தால் தான் படிக்க முடியும், எங்களின் கனவு நினைவாகும்... அக்ரிக்கும் அப்பளை செய்துள்ளேன்...” என்கிறார். இவர் த்ரோவ் பால் பிளேயரும்கூட... செஸ், கேரம் நன்றாக விளையாடுவாராம். இவரின் தம்பி சாக சில்வங் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். தங்கை கரிஷ்மா எட்டாம் வகுப்பு படிக்கிறார். தான் ஒரு சிறந்த மருத்துவராகி, தன் குடும்பத்தையும் ஏழை மக்களையும் இதய நோய்களில் இருந்து காக்க வேண்டும் என்பது இவரின் கனவு.

பிஸ்டிஸ் பிரிஸ்க்காவின் தந்தை பிரபாகர் கூறும் போது...

“நான் ஒரு டைலர் இந்த கிராமத்தில் அவ்வளவு வருமானம் இல்லை.... நானும் என் மனைவி குயிலியும் டைலர் வேலையை செய்து, குடும்பத்தை வழிநடத்துகிறோம். நீட் கோச்சிங் சேர்க்க முடியல.. மகளே தன் சொந்த முயற்சியில் படித்தாள். ஸ்கூல் ஆசிரியர்கள் ரொம்பவே இன்ட்ரெஸ்ட் எடுத்து கோச் பண்ணினார்கள். எட்டாம் கிளாஸ் படிக்கும் போதே என்.எம்.எம்.எஸ். போன்ற அறிவு சார்ந்த டெஸ்டுகளை இந்த பள்ளியில் நடத்துவார்கள். அதுவும் இன்று நீட் பாஸ் பண்ண உதவியது என்கிறார். அரசு உதவி கரம் நீட்டினால் எங்கள் குழந்தைகள் ஒரு சிறந்த மருத்துவராக வர வாய்ப்பு உள்ளது... பார்க்கலாம்” என்று ஏக்கத்தோடு முடித்தார்.

நாம் ரம்யாவிடம் பேசினோம்...

“நாங்க இருவரும் வீட்டில் இருந்தே 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பையாலஜி புத்தகத்தை படித்தோம்.. எனக்கு பையாலஜி கஷ்டமாக இருந்தது. கெமிஸ்ட்ரி ஈசியாக இருந்தது. கஷ்டப்பட்டு தான் படித்தோம். வசந்தி டீச்சர் எங்களுக்கு நிறைய சொல்லி கொடுத்தார்கள். தமிழ் மீடியத்தில் தான் படித்தேன். எங்க ஸ்கூல் தனியார் பள்ளியை விட சூப்பர்... எப்படியும் எம்.எம்.பி.எஸ் படித்து டாக்டராகி கார்டியலஜிஸ்டாக பணியாற்றி, பல உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற எங்க கனவு, நம்ம கவர்னர் கையில் தான் இருக்கிறது. அவர் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7 .5 சதவிகித இட ஒதுக்கீடு சலுகையை எங்களுக்கு கொடுத்தால், எங்க கனவு பலிக்கும்” என்கிறார். ஒட்டப்பந்தையதில் கில்லாடி ரம்யா. இரண்டு தங்கைகள். சுமதி பதினோராம் வகுப்பு படிக்கிறாள். தேவிகா எட்டாம் வகுப்பு படிக்கிறாள். ரம்யாவின் அப்பா சுந்தரம் ஒரு கூலி தொழிலாளி. அம்மா உஷா ராணியும் கூலி வேலைக்கு செல்கிறார்கள்.

மகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதை கேட்டு பூரித்து போனாலும், டாக்டர் படிப்பை எப்படி படிக்கவைப்பது என்ற யோசனையில் இருக்கிறார்கள் இந்த இருளர் பெற்றோர். இவர்கள் வாழும் வெள்ளியங்காடு மேற்கு வாட்டர் போர்ட் பகுதியும், மின்சாரம் இல்லாமல் இருண்டு கிடக்கிறது. ரம்யா தினமும் எண்ணெய் விளக்கில் தான் படித்துவந்தாராம்.

2020916101217482.jpg

இரவில் வெகு நேரம், இருட்டில் இந்த மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் தான் நீட் தேர்வுக்கும் தன்னை தயார் படுத்தி கொண்டுள்ளார் என்பது வருத்தமான ஆச்சிரியம். ஏன் இவர்களின் பகுதிக்கு மின்சாரம் இல்லை என்பது இந்த 21 ஆம் நூற்றாண்டின் மிக பெரிய கேள்வி குறி.
நாம் வெளியங்காடு அரசு மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பெள்ளியை தொடர்பு கொண்டு பேசினோம்...

“எங்க பள்ளியிலிருந்து இரு மாணவிகள் இந்த நீட் தேர்வில் தேர்ச்சியானது உண்மையில் பெருமையாக இருக்கிறது. எங்க ஆசிரியர்கள் அதற்கான சிறப்பு பயிற்ச்சியை கொடுத்தார்கள். அரசு கொடுத்த ஆன் லைன் மெட்ரியல்களை யூஸ் செய்து படித்தார்கள். நான்கு பேர் எழுதினார்கள், அதில் இவர்கள் இருவரும் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி... ஆளுநர் அந்த 7 .5 சதவிகிதம் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதிக்கீட்டிற்கு கையெழுத்து போட்டால், இந்த குழந்தைகளின் மருத்துவ கனவு நிறைவேறும். அதற்கான உதவிகளை நானும் எங்க ஆசிரியர்களும் செய்ய காத்துக்கொண்டிருக்கிறோம். எங்க பள்ளியில் 830 மாணவ மாணவிகள் பயில்கிறார்கள்...

2020916143141625.jpg

எங்க பள்ளிக்கு வேலூர் வி.ஐ.டி நேரடியாக மாணவர்களை செலக்ட் செய்து படிக்க வைக்கிறார்கள். ஐந்து பேர் படித்து கொண்டிருக்க, நான்கு பேர் நல்ல என்ஜினீயர் வேலை கிடைத்து பணிபுரிவது பெருமையான ஒன்று... பிளஸ் டூ வில், பிஸ்டிஸ் பிரிஸ்க்கா 487 மார்க் வாங்கினார்... ரம்யா 421 மார்க் வாங்கினார்.... இவர்கள் இருவரும் பள்ளிக்கு மட்டும் அல்ல... சமுதாயத்திற்கே பெருமை சேர்த்திருக்கும் ஏழை மாணிக்கங்கள்” என்று முடித்தார்...


பள்ளியின் ஆசிரியை கவிதா கூறும் போது, “இந்த இரண்டு மாணவிகளும் அதிக அறிவை கொண்ட மாணவிகள். ரம்யா தமிழ் மீடியத்தில் படித்தார். பிஸ்டிஸ் ஆங்கில மீடியத்தில் படித்தார். நாங்க அனைத்து ஆசிரியர்களும், அவர்களுக்கு நீட் தேர்வுக்கு தயார் செய்ய உதவினோம். எங்க தலைமை ஆசிரியர் அதிக அக்கறை எடுத்து கொண்டார். எங்க பள்ளியில் அனைத்து மாணவர்களும் நன்றாக படிப்பார்கள். அதில் இந்த இரண்டு மாணவிகள், அதிபுத்திசாலிகள் என்று சொல்லலாம்... தாங்கள் படிப்பது மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் சொல்லி கொடுப்பார்கள். இருவரும் ஏழை குழந்தைகள், அவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றதை மிக பெருமையாக நாங்கள் நினைக்கிறோம். பள்ளியில் எல்லாவற்றிலும் அவர்கள் தங்களின் ஒத்துழைப்பை கொடுப்பார்கள். அவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்தால் எங்களுக்கு மிக சந்தோஷம்.... அதே வேளையில் அவர்களுக்கான படிப்பு செலவிற்கான உதவியை செய்தால், அந்த ஏழை மாணவிகளின் மருத்துவ கனவு நினைவாகும்” என்று முடித்தார்.

நீட் தேர்வில் தங்களின் சுய முயற்ச்சியால் படித்து தேர்ச்சி பெற்றிருக்கும் ரம்யா மற்றும் பிஸ்டிஸ் பிரிஸ்க்கா ஆகிய ஏழை மாணவிகளின் டாக்டர் கனவு நம்ம ஆளுநர் கையில் தான் இருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7 .5 சதவிகிதம் இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதாவிற்கு கையழுத்தை போட்டு ஒப்புதல் அளித்தால், இந்த மாணவிகள் மருத்துவ கல்லுரியினுள் தங்களின் பாதங்களை பதிக்க உதவும்......