தொடர்கள்
கதை
முகிழும் நாமங்கள் 15 - ஜி ஏ பிரபா

20260625065550765.jpeg
15) திவ்யாங்கீ
லக்ஷணோஜ்வல திவ்யாங்கீ லக்ஷகோட்யண்டநாயிகா I
லக்ஷ்யார்த்தா லக்ஷனாகம்யா லப்தகாமா லதாதனு:
சர்வ லக்ஷணங்களும் பொருந்தியவள் அம்பிகை. அவளின் அழகுக்கு அவள் மட்டுமே
இணை.
எதனால் இத்தனை அழகு?
“தாயே! உன் கண்களில் வழியும் கருணையே உன் அழகுக்குக் காரணம் என்கிறார் ஸ்ரீமூகர்
“அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி
அருமறைகள் பழகிச் சிவந்த போதும் புயத்தாள்” என்கிறார் அபிராமி பட்டர்.
வேதங்கள் பணிந்து போற்றும் பாதம் உடையவள். அவளின் ஒரு கால் விரல் நகத்திலிருந்தே
அனைத்து வேதங்களும், தர்ம நெறிகளும் பிறந்தனவாம்.
“போதும் “ என்று தடுத்து விட்டார் ஈசன்.
அனைத்து வேத சாரங்கள் ஒரு அண்டத்திற்கே வழங்கி விட்டால்?
கோடிக்கணக்கான அண்டங்கள் இருக்கிறது.
லக்க்ஷம் கோடி அண்டங்களுக்கு அவளே நாயகியாக இருக்கிறாள். சாம்ராஜ்ய
நாயகியாய் இருப்பவள், சிம்மாசனேஸ்வரி.சர்வ லக்ஷணங்களும் அமைந்தவளாய் இருப்பது இயல்பானது.
அவளின் அழகு, அவளின் கம்பீரத்தால் வந்தது என்கிறது ஸ்ரீலலிதா. இந்த
அண்டங்களையே, படைத்து, காத்து ரட்சிக்கும் சக்தி படைத்தவள். அதன் கர்விதம்.
எனவேதான் லலிதா சஹஸ்ரநாமம் அவளை அதி கர்விதா என்கிறது.
ஆனால் அம்பிகையைப் பணிவோர்களுக்கு “வையம், துரகம், மதகரி, மாமகுடம்,
சிவிகை, பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்” என்ற அனைத்தும் கிடைக்கும் என்கிறது அபிராமி அந்தாதி.
மனித வாழ்வு குறிக்கோள்களுடன் நிரம்பியதாய் இருக்க வேண்டும். ஒவ்வொரு
மனிதர்களும் எதோ ஒரு லட்சியத்தை நோக்கியே நடக்கிறார்கள். குறிக்கோள் இல்லாத வாழ்வு
துடுப்புகள் இல்லாத படகுகள் போன்றது என்கிறது ஒரு பழமொழி.
வாழ்வை உற்சாகமாய் நடத்திச் செல்வது அதுவே. அந்த லட்சியங்களுக்கு உட்கருத்தாய்
விளங்குபவள் அம்பிகை. கொண்ட லட்சியங்களை அடையச் செய்து, செல்வத்தை
வழங்குபவள் அம்பிகை.
அவளின் பிராபாவத்தை, காரியங்கள் நடத்தும் நோக்கத்தை யார்தான் அறிய முடியும்.
அறிவுக்கு எட்டாதவள். அன்பால் மட்டுமே அறிய முடிந்தவள். உணர்வுகளை
உணர்ந்தவள்.
இவள் இப்படிப்பட்டவள் என்று எவ்விதக் குறிப்புகளாலும் அறிய முடியாதவள்.
ஆசைப்பட எதுவுமே இல்லாதவள். ஏனெனில் ஆசைப்பட்ட அனைத்தையும் அடைந்தவள்.
ஆசையே அவள்தானே. அத்தனை ஆசைகளும் பூர்த்தியானவள் அம்பிகை. அவளை
வணங்கும் பக்தர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்பவள் அவளே.
“என்னை நோக்கி நீ ஒரு விரல் நீட்டினால் போதும். உன் மொத்த கைகளையும் நான்
பிடித்துக் கொள்வேன்” என்கிறாள் ஸ்ரீதேவி உபநிஷத்தில் அம்பிகை.
அம்மா என்பவள்,இந்த மாயா லோகத்தில் நம்மைப் பெற்றவள். இந்தப் பிறவிக்கு மட்டுமே
தாய். அவளே நம்மைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றும்போது இந்த உலகத்திற்கே
ஜகன்மாதாவாக இருப்பவள் பராசக்தி.
அவளுக்குத் தெரியாதா? தன் குழந்தைக்கு எந்த நேரத்தில் பசிக்கும்? எப்போது
உணவளிக்க வேண்டும் என்பது.

அவளுக்குத் தெரியும், எந்த உணவை அளித்தால் உடலுக்கு நல்லது என்பதையும் அவள்
அறிவாள். எனவே தாயே என்று இருகை கூப்பி அவளை வணங்குவது மட்டுமே நம்முடைய
வேலை.
அதைக் கூட அவள் எதிர்பார்ப்பதில்லை. குழந்தையை காப்பாற்றுவது தாயின் கடமை.
அந்த குழந்தை தனக்கு மீண்டும் திருப்பி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு
அவளுடையது.
நாம், நம் மனப்பூர்வமான அன்பையும் அவளின் மீதான நம்பிக்கையையும் அளித்தால்
போதும்.
அவள் மென்மையானவள். அழகியானவள். அழகு என்பது மனதைப் பொறுத்து
அமைவது.
ஸ்ரீதேவி உபநிஷத்தில் நான் கண்ணாடி போல் என்கிறாள் அம்பிகை.
“என்னை யார் எப்படித் தியானிக்கிறார்களோ,அந்த வடிவம் நான். ஆனால் நல்ல
எண்ணங்கள் இல்லை என்றாள் நான் காளி”- என்கிறாள்.
அவளின் கருணைதான் அவளின் சக்தி.
“நீ கேட்டதை நான் தர மாட்டேன். ஆனால் உனக்கு எது நல்லதோ அதைத்தான் நான்
தருவேன்”-என்பதுதான் அவள் கூற்று.
இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த அவளுக்கு உயிர்களின் உள் எழும்பும் எண்ணங்கள்
தெரியாதா?
அவள் கருணை சமுத்திரம். கனிவு, அன்பு, பரந்த மனசு என்ற குணங்களால் அழகாகக்
காட்சி அளிக்கிறாள். திவ்ய மங்கள ரூபமான அவளை வணங்கி சகல சௌபாக்கியத்தை
அடைவோம்.