தொடர்கள்
கதை
மனைவி ஒரு தேவதை -வி பிரபாவதி

20260624174508950.jpeg

வாசல் கதவைத் திறந்தவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அவனை எதிர்பார்க்கவில்லை.
“என்னங்க காலைல தானே வருவேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள் வந்தனா.
“வேலை முடிஞ்சிடுச்சு. கெளம்பிட்டேன். ஏன்? என்னாச்சு?” அருண் கேட்டான்.
“இல்ல சும்மாதான் கேட்டேன். சாப்பிடறீங்களா?”
“சாப்பிட்டாச்சு. படுக்க வேண்டியதுதான். கொஞ்சம் தண்ணி மட்டும் குடு”
இரவு முழுவதும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். காலையில் ஐந்து மணிக்கே எழுந்த வந்தனா தன் வேலைகளை ஆரம்பித்தாள்.
வழக்கம் போல் பெண்கள் செய்யும் பெருக்கிக் கோலம் போட்டு, குளித்து டிபன் செய்து, சமைத்து, குழந்தைகளைக் கிளப்பி ஆட்டோவில் ஏற்றி, கணவனுக்கு வேண்டியதை செய்து அவனை டாட்டா காண்பித்து அனுப்பி, பிறகு மிச்சம் மீதி இருப்பதை சாப்பிட்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கும்.
டைனிங் டேபிளிலில் உட்கார்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான். “என்னங்க,
என்னாச்சுங்க? புள்ளைங்கக் கெளம்பட்டும்னு இருந்தேன். கொஞ்சம் டீ தரவா?”
“இல்லமா, நீ வேலைய பாரு. இன்னிக்கு ஆபீஸ் போகலை. வேலை போய்விட்டது
என்பதை எப்படிச் சொல்வான்? மீண்டும் கிச்சனுக்குள் வேலைகளை முடித்து மிஷினில் துணிகளைப் போட்டு உலர்த்தி, பதினோரு மணி இருக்கும் வந்தனா என்கிற பம்பரம் சுத்தி முடித்து சற்று அமர்ந்தது.
தையல் மிஷினில் ஏதோ தைத்தாள். கடைக்குப் போய் வந்தாள். மாவு மிஷினுக்கு போய் வந்தாள்.
கிரைண்டரில் மாவு அரைத்தாள். இன்னும் என்னென்னவோ வேலைகள். ஒன்று
விடாமல் பார்த்துக் கொண்டிருந்த அருண் திருமணமான இந்த ஆறு வருடத்தில்
இன்றைக்குத் தான் வந்தனாவின் சிரமங்களை புரிந்து கொண்டான்.
அப்பப்பப்பா, ஒன்று பின்னாடி ஒன்று வரிசைக் கட்டிக் கொண்டு செய்யும் வேலைகள்.
எதையும் முன்னாடி பின்னாடி செய்துவிட முடியாது. அந்தந்த நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும். மீண்டும் துணிமணிகளை எடுத்து மடித்து வைத்து, சீருடைகளை அயர்ன்
செய்து, சின்னதாய் ஒரு டிபன் செய்து குழந்தைகளை வரவேற்க காத்திருந்தாள்.
அப்போதுதான் மௌனம் கலைத்தான் அருண். தான் செய்த ஒரு சின்ன தவறினால் தனக்கும் மேலதிகாரிக்கும் வாக்குவாதம் முற்றியதையும் அதனால் தனக்கு வேலை போனதையும் சொல்லி வருத்தப்பட்டான்.
“என்னங்க நீங்க, எப்போதும் எல்லாத்துக்கும் கோபப்பட்டீங்கண்ணா, என்னைய மாதிரி எல்லாரும் சும்மா இருப்பாங்களா?” நடுவில் மெதுவாக ஆணியை இறக்கினாள் வந்தனா.
குழந்தைகள் வந்ததும் அப்பா வீட்டில் இருப்பதைக் கண்டு குதூகலித்தனர்.
என்னென்னமோ கேட்டு சிரித்து விளையாடினார்கள். இரவு வந்தது. டிபன் செய்து
கிச்சன் வேலைகளை முடித்து குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு தானும் வந்து
படுத்தாள் வந்தனா.
“காலைல எழுந்தியினா படுக்கற வரைக்கும் உனக்கு வேலை இருக்கே மா. இன்னிக்குத் தான் பார்த்தேன். ஏதோ பொம்பளைங்க வீட்டுல சுகமாக இருக்காங்க. நாங்கதான்
அல்லாடித் தவிக்கிறோம்னு நெனைச்சேன்.
“ஓய்வோ, ளீவோ இல்லாம நீங்க பெண்கள் எல்லாரும் வீட்டைக் கவனிச்சுக்கிறீங்க. நீ ஒரு நாள் இல்லைன்னா இதுல ஒன்னானும் செஞ்சு புள்ளைங்களை பாத்துப்பேனான்னு தெரியாது”.
அருண் சொல்ல சொல்லக் கேட்டுக் கொண்டே அசந்து தூங்கிவிட்டாள் வந்தனா.
காலையில் வழக்கம்போல் கிளம்பித் தயாரானான். மேலதிகாரியிடம் பேசி மன்னிப்புக் கேட்க! ஆமாம் தாழ்ந்து போவதில் தவறில்லை என்று உணர்ந்தான்.
குடும்பம் என்னும் கூண்டை மிக அழகாக நேர்த்தியாக பொறுமையாக
கையாளுகிறார்கள் பெண்கள். ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. அவர்களுக்காக
இன்னும் கடுமையாக உழைத்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது தன்னைப்
போன்றவர்களின் கடமை என்று உணர்ந்தான்.
வேர்வையோடு இருந்தாலும் தனக்கு பக்கபலமாய் இருக்கும் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு வேலைக்குக் கிளம்பினான்.
அதன்பிறகு வார விடுமுறைகள் எவ்வளவு சந்தோஷமாக, ஆரவாரமாக இருக்கின்றன என்பதை வந்தனாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.