அத்தியாயம் 2:

அம்பையின் காதல்
காசி நாட்டு மன்னனின் மூத்த புதல்வி அம்பை. ரதி போன்ற அழகு, அதிபுத்திசாலி, திறமைசாலியான மாவீரப் பெண்.
சால்வ தேசத்து மன்னன் சால்வன்; இளைஞன், அழகன். காசி மன்னனின் அழைப்பை ஏற்று ஒரு விழாவுக்காகக் காசி நாட்டுக்கு வந்த சால்வன் வீதியில் உலா சென்றான். அங்கு , தறிகெட்டு ஓடிய ஒரு குதிரையை ஓர் இளம் பெண் அனாயாசமாகக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு உதவச் சென்ற சால்வனிடம், அந்தப் பெண் புன்னகையுடன் மறுத்து, "இது என் விளையாட்டு" என்கிறாள்.
அவளது வீரத்தில் அசந்து போன சால்வன் அவளுடன் பழகி, அவளைக் காதலிக்கிறான். அந்தப் பெண்ணும் சால்வனை விரும்புகிறாள். பின்னர், தான் காசிராஜனின் முதல் மகள் அம்பை என்று அவனிடம் கூறுகிறாள்.
அவர்களின் காதல் சில காலம் தொடர்கிறது. சால்வன் தன் தேசத்துக்குத் திரும்பியதும், தூதுவர்கள் எடுத்துச் செல்லும் ஓலைகள் மூலம் அவர்கள் காதல் நீடிக்கிறது.
அம்பைக்கு, அம்பிகை, அம்பாலிகை என்று இரண்டு தங்கைகள் உண்டு. மூவருக்கும் திருமணம் முடிக்கும் நோக்கத்தில் காசிராஜன் சுயம்வரம் அறிவித்தார். சுற்றுவட்டாரத்தில் இருந்த எல்லா அரசகுமாரர்களும் அழைக்கப்பட்டனர்.
அம்பை சால்வனுக்கு ஓலை எழுதி அனுப்பினாள்:
"ஒழுங்காகச் சுயம்வரத்துக்கு வந்துவிடு. சுயம்வரம் ஆரம்பித்ததும் எனக்கு முன்னால் வா. மாலையும் கையுமாக நான் நிற்பேன். ஓடி வந்து உன் கழுத்தில் மாலையைப் போட்டுவிடுவேன். அப்புறம் என் வாழ்க்கை உன் பொறுப்பு" என்று ஆசையாக ஓலையில் எழுதினாள்.
சால்வனும் பதில் ஓலை அனுப்பினான்: "சுயம்வர நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதைவிடப் பெரிய வேலை எனக்கு இந்த பூலோகத்தில் இல்லை."
* * * * *
இப்பொழுது கொஞ்சம் பழைய கதை. தேவவிரதன் என்கிற அரசகுமாரன்
பீஷமன் ஆன கதை!
ஹஸ்தினாபுரத்து மன்னனான, குரு வம்சத்தைச் சேர்ந்த சந்தனு, மனித உருவில் வந்த கங்காதேவியைக் காதலிக்கிறான். அவள் சம்மதத்துடன் கல்யாணமும் நடக்கிறது. ஏழு ஆண் பிள்ளைகள் பிறந்து, அவை உடனே உயிர் துறக்க நேரிடுகிறது. எட்டாவது பிள்ளைதான் பீஷ்மர் என்கிற தேவவிரதன்.
அவன் பிறந்த வேளையில் கங்கை சந்தனுவைப் பிரிய நேரிடுகிறது.
அழகிய இளைஞனாக, தாய் இல்லாமல் வளர்கிறான் தேவவிரதன். மாவீரனாக, குணவானாக, பிற்காலத்து ஹஸ்தினாபுரத்து ராஜாவாகப் பார்க்கப்பட்டான் தேவவிரதன்.
பல வருடங்கள் கழித்து, வயதான அரசன் சந்தனு மீண்டும் காதல் வலையில் விழுகிறார்.
இப்போது மீனவ இளவரசியான சத்தியவதியைக் கண்டு மோகிக்கிறார். அவளை மணந்து கொள்ள வேண்டும் என்று சத்தியவதியின் தந்தையை அணுக, அவரோ, "இந்தக் கல்யாணம் நடக்க வேண்டும் என்றால், உன் மகனான தேவவிரதன் ஹஸ்தினாபுர அரசு உரிமையைச் சத்தியவதிக்குப் பிறக்கப்போகும் பிள்ளைக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்" என்கிறார்.
இதற்கு ஒப்புக்கொள்ளாத சந்தனு, மிகவும் மனம் சோர்ந்து உடைந்து போகிறார்.
இதைப் புரிந்துகொண்ட தேவவிரதன், சத்தியவதியின் தந்தையைத் தானாகவே சென்று பார்த்து இரண்டு சத்தியங்கள் செய்கிறார்.
தனக்குள்ள ஹஸ்தினாபுரத்து அரசாட்சி உரிமையைச் சத்தியவதியின் பிள்ளைக்கு முற்றிலும் விட்டுக் கொடுப்பதாகவும், தனது பரம்பரையில் யாரும் அதற்குப் போட்டியாக இனி வரக் கூடாது என்பதால் தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்றும் சபதம் செய்தார்.
இந்தச் சபதத்தைக் கேட்ட தேவர்கள் பூமாரி பொழிந்து, அவருக்கு 'பீஷ்மர்' என்ற பெயரை அளித்தார்கள். (பீஷ்மர் என்றால் 'மிகக் கடினமான சபதம் செய்தவர்' என்று பொருள்).
பீஷ்மரின் சபதத்தால் மனம் குளிர்ந்த தந்தை சந்தனு, அவருக்கு 'இச்சா மிருத்யு' (தான் விரும்பும் நேரத்தில் மட்டுமே மரணத்தைத் தழுவும் வரும்) என்ற வரத்தையும் அளித்தார்.
சந்தனுவுக்கும் சத்தியவதிக்கும் திருமணம் முடிந்து சித்ராங்கதன், விசித்திரவீரியன் என இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.
சந்தனு இறந்த பின், சத்தியவதியின் முதல் மகன் சித்ராங்கதன் அரியணை ஏறினான். பின்னர் ஒரு போரில் அவன் உயிர் துறக்க நேரிடுகிறது.
இளையவனான விசித்திரவீரியன் அரசன் ஆகிறான். அவன் மிக இளையவன் என்பதால், அவனுடைய பெரிய அண்ணனான பீஷ்மர்தான் ஆட்சிப் பொறுப்பைக் கவனிக்கிறார். பீஷ்மரே விசித்திரவீரியனை விட நாற்பது வயதுக்கு மேல் பெரியவர்.
தன் வாழ்நாளில் தன் குருவம்சத்தைக் காப்பது, ஹஸ்தினாபுரத்தின் வெற்றிக்காகப் பாடுபடுவது ஆகியவற்றைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை என்று முடிவு செய்துவிட்டார் பீஷ்மர்.
* * * * * *
காசிராஜன் தன் மகள்களின் சுயம்வர அழைப்பைக் குரு வம்சத்திற்கு ஏனோ அனுப்பவில்லை.
இதை அறிந்த பீஷ்மர், தன் குலத்திற்கும் ராஜ்யத்திற்கும் நேர்ந்த அவமானமாக இதை எடுத்துக் கொண்டார். 'அது எப்படி காசிராஜன் குருவம்ச மன்னனான விசித்திரவீரியனைப் புறக்கணிக்கலாம்?' என்று கடும் கோபம் கொண்டார்.
விசித்திரவீரியனின் நலன் கருதி, அவனுக்குச் சிறு வயதாக இருந்தாலும் திருமணம் செய்வது நல்லது என்று அவன் அன்னை சத்தியவதியிடம் பேசி ஏற்கனவே முடிவு செய்திருந்தார் பீஷ்மர்.
'காசி மன்னன் கூப்பிடாவிட்டால் என்ன? நாம் சென்று அந்தப் பெண்களைப் போரில் வென்று எடுத்துக்கொண்டு இங்கு வந்துவிட்டால், விசித்திரவீரியனுக்குத் திருமணம் செய்து வைத்துவிடலாம்' என்று முடிவு செய்தார். இத்தகைய (நியாயமற்ற... என்று இன்று நாம் சொல்லும்) செயல்முறைகள் அக்காலத்தில் ராஜ குடும்பங்களில் ஒப்புக்கொள்ளப்பட்டவைதான்.
சுயம்வர நாள் வந்தது. அன்றலர்ந்த தாமரை போல அம்பையின் முகம் மலர்ந்திருந்தது. மிகச் சிறந்த முறையில் தன்னை அலங்கரித்துக்கொண்டு, பேரழகியாகக் கைகளில் மாலையை ஏந்திச் சால்வனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அம்பை.
மண்டபம் முழுவதும் அரசர்களும் அரசகுமாரர்களும் தங்கள் பொலிவை மேம்படுத்திக்கொண்டு அரசகுமாரிகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
சால்வன், அம்பை நின்ற இடத்திற்கு எதிராகவே, அருகாமையிலேயே தோதாக அமர்ந்திருந்தான்.
காசிராஜன் வந்தவர்களை வரவேற்றுத் தன் மகள்கள் பற்றிய விவரங்களைக் கூறிச் சுயம்வரம் ஆரம்பிக்கலாம் என்று கூறியவுடன், பேரிகைகள் முழங்கின.
முகம் நிறைந்த சிரிப்புடன் சால்வனை நோக்கி உயர்த்திய மாலையுடன் நகர்ந்தாள் அம்பை.
திடீரென்று "நிறுத்துங்கள்!" என்ற குரல் இடி போல் கேட்டது. மண்டபத்தின் வாசல் புறத்தை அடைத்துக்கொண்டு இமயமலை போல் நின்றார் பீஷ்மர்.
"காசி ராஜனே! நீ குரு வம்சத்தைச் சுயம்வரத்திற்கு அழைக்கவில்லை. ஆனால், அதன் பிரதிநிதியாக நான் இங்கே வந்திருக்கிறேன். உன்னுடைய அழகிய மூன்று மகள்களையும் சுயம்வர விதிகளுக்கு உட்பட்டபடியே என்னுடன் அழைத்துக் கொண்டு போய், என் தம்பியும் ஹஸ்தினாபுரத்தின் மாமன்னருமான விசித்திரவீரியனுக்குத் திருமணம் முடிக்கப் போகிறேன். இங்கு இருக்கும் யார் வேண்டுமென்றாலும் தைரியமிருந்தால் என்னுடன் போரிட்டு என்னைத் தடுக்கலாம்; இதோ நான் தயார்!" என்று உருவிய உடைவாளுடன் பீஷ்மர் முன்னே வந்தபோது, அங்கிருந்த அனைத்து மன்னர்களும் பின்வாங்கினர்.
பீஷ்மருடன் மோதுவது என்பது தற்கொலைக்குச் சமம் என்று அனைவருக்கும் தெரியும்.
திகைத்துப் போய் நின்ற மூன்று அரசகுமாரிகளையும் அழைத்துச் சென்ற பீஷ்மர், தன் ரதத்தில் ஏற்றி ஹஸ்தினாபுரம் நோக்கிச் சென்றார்.
திகைப்பிலிருந்து மீண்ட சால்வனும் வேறு சில அரசர்களும் தங்கள் வில் மற்றும் உருவிய வாட்களுடன் பீஷ்மருடன் சண்டை செய்யச் சென்றார்கள். மிகக் கடுமையான போர் பீஷ்மருக்கும் மற்ற அரசர்களுக்கும் இடையே நடந்து, எல்லோரும் விரைவில் தோற்றனர். கடைசி வரை பீஷ்மருடன் மிகவும் வீரத்துடன் போராடித் தோற்றான் சால்வன்.
பீஷ்மர் தன் ரதத்தை ஓட்டிக்கொண்டு ஹஸ்தினாபுரம் சென்றார்.
ஹஸ்தினாபுரம் வந்து சேர்ந்தவுடன், பீஷ்மர் அன்னை சத்யவதியிடம் அனுமதி பெற்று, மூன்று இளவரசிகளுக்கும் தன் தம்பி விசித்திரவீரியனுக்கும் திருமணம் செய்து வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் எல்லாம் முடிந்து, மணமகன் விசித்திரவீரியன் முன்னிலையில், அந்தப் பெண்களை மணமேடைக்கு அழைத்து வரத் தயாரான போது, அம்பை தயக்கம் தவிர்த்துத் தைரியமாக முன்னே வந்து பீஷ்மரிடம் பேசினாள்:
"பீஷ்மரே! நீங்கள் எல்லா தர்மமும் அறிந்தவர். நான் ஏற்கனவே சால்வ நாட்டு மன்னனை என் மனதால் கணவனாக ஏற்றுக்கொண்டுவிட்டேன். அவரும் என்னை விரும்புவதால், சுயம்வரத்தில் அவரோடு செல்லவே நான் திட்டமிட்டிருந்தேன். நீங்கள் என்னைக் கவர்ந்து வந்ததால் இது நடக்காமல் போனது. இதை உணர்ந்து, இப்போது தர்மத்தின்படி நீங்கள் என்ன முடிவு செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்."
அவளோடு வந்த மற்ற இரு சகோதரிகளும், மணமகனான விசித்திரவீரியனும், அவன் அன்னை சத்யவதியும் இருந்த அந்த அவையில்தான் அம்பை இந்த உண்மையை உடைத்தாள்.
அம்பையின் இந்தத் துணிச்சலான பேச்சைக் கேட்டவுடன் விசித்திரவீரியன் அதிர்ச்சியடைந்தான். வேறொருவனை மனதால் நினைத்த பெண்ணைத் தான் மணப்பது தர்மம் அல்ல என்று அவன் உடனடியாக அவளை நிராகரித்தான்.
பீஷ்மரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்து, அவளது வாதத்தில் இருந்த நியாயத்தை ஒப்புக்கொண்டு, அவளைத் தேரில் ஏற்றி மரியாதையோடு சால்வனிடமே அனுப்பி வைத்தார்.
(தொடரும் )

Leave a comment
Upload