தொடர்கள்
சினிமா
'சொப்பன சுந்தரி'க்கு விருது- மரியா சிவானந்தம்

20260623185711890.jpg

சமீபத்தில் 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழில் கேப்டன் மில்லர். ராயன், மெய்யழகன், அமரன் போன்ற படங்கள் விருதுகளை அள்ளி வந்துள்ளன. தனுஷ். மம்முட்டி சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை வென்றுள்ளனர்.சிறந்த நடிகைக்கான பரிசை ஆர்டிகிள் 370 இந்தி படத்துக்காக. நடிகை யாமி கௌதமி பெற்றுள்ளார்.

இந்த விருதுப் பட்டியலைப் பார்க்கும் போது. பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்ததைக் கண்டு பெரும் ஆனந்தம் ஏற்பட்டது.

மலையாளப் படமான '.அஜயந்தே ரண்டாம் மோஷனம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அங்கு வான கோனிலு." என்ற அழகான பாடலுக்காக இந்த தேசிய விருதை வென்றிருக்கிறார் விஜயலட்சுமி. திபு நைனன் தாமஸ் இசை அமைத்துள்ள இப்பாடல். "நீ நடந்து சென்றிடும் நீண்ட நீண்ட பாதையில் கை நிழல் பிடித்து நின்னுடன் வருவதால்’ என்னும் இடைவரிகளை கொண்டது. இவ்வரிகளை நாம் சமூக வலைத்தளங்களில் தன்னம்பிக்கை, உற்சாகம் தரும் வரிகளாக நாம் கேட்டிருக்கிறோம்

வைக்கம் விஜயலட்சுமி போன்ற வளரும் பாடகிக்குக் கிடைத்த இந்த தேசிய அங்கீகாரம் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிக்கு கிடைத்த புகழ் வெளிச்சம் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தன் தடைகளை முறியடித்து, தன்னம்பிக்கையுடன் அவர் வெற்றி பெறுவதும்.குறுகிய காலத்திலேயே தேசிய விருது பெறுவதும் பெருமைக்குரிய செய்தி.

கேரளாவைச் சேர்ந்த வைக்கம் விஜயலட்சமி. பிறவியிலேயே பார்வை குறைபாடு கொண்டவர். அவரது தந்தை ஓர் இசைக்கலைஞர். பார்வை இல்லாத போதும்.ஒரு முறை கேட்ட பாடலை அச்சு பிசகாமல் அவர் பாடும் திறமையைக் கண்டு விஜயலட்சுமிக்கு தானே குருவாகி பாடல்களைக் கற்பித்தார்.

‘காயத்திரி வீணை’ என்னும் ஒற்றை நரம்பு வீணையை உருவாக்கி அதை தன் மகளுக்கு பயிற்சி தந்தார். பாடலும்.வீணைப் பயிற்சியும் தொடர அவரது இசைப்பயணம் துவங்கியது .

சென்னைக்குத் தன் குடும்பத்துடன் குடி பெயர்த்தவர், திரைப்படங்களில் பாடும் வாய்ப்பைப் பெற்றார்.

கனா படத்தின் 'வாயாடி பெத்த புள்ளை' பாடல்களால் தமிழ் ரசிகர்களுக்கு வைக்கம் விஜயலட்சுமி அறிமுகம் ஆனவர் ."சொப்பன சுந்தரி நான்தானே" என்ற ‘வீர சிவாஜி’ படப்பாடலை இமாம் இசையில் துள்ளும் உற்சாகத்துடன் பாடினார். கணீர் என்று ஒலிக்கும் கம்பீரக் குரலைக் கொண்டவர். ஸ்வர்ணலதா போலவே அழுத்தமான குரலும், உணர்வு பொங்கும் பாவங்களும் கொண்டவர்..

அவர் பாடிய ‘ஜெய் பீம்’ பட பாடலான மண்ணிலே ஈரமுண்டு பாடல் வரிகள் அவர் வாழ்க்கைக்குப் பொருத்தமான வரிகள்

மண்ணிலே ஈரமுண்டு

முள்காட்டில் பூவும் உண்டு

உள்ளுறுதி காண்பது தான்

பூமியிலே உன் உயரம்

எண்ணம் செயல் ஆகிவிட்டால்

எல்லாமே தேடி வரும்

உண்மை வழி நீ நடந்தே

போவது தான் வாழ்வின் அறம்.

உயிரோட்டமுள்ள குரலும். உள்ளுறுதியும் கொண்ட அவர் மனமும் அவரை மேலும் உயரங்களுக்கு அழைத்துச் செல்லும்.

அவர் விரும்புவது போலவே இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் மட்டுமல்ல. எல்லா இசைமைப்பாளர்களின் இசை அமைப்பிலும், பல மொழிகளிலும் பாடி நம்மை மகிழ்விக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

விருது பெற்ற பாடல் இதுவே.

https://www.youtube.com/shorts/zkYex6ojhYU