தொடர்கள்
விகடகவியார்
பாவம் புலம் பெயர் பெண் தொழிலாளர்கள்-ஜாசன்

20260623211106357.jpeg

புலம் பெயர் பெண் தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ள முக்கிய தொழில் நகரங்களில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார்கள்.

இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும்.

தங்கள் சொந்த கிராமப்புற பொருளாதாரத்தை வறுமையில் இருந்து மீட்க அவர்கள் வேலை தேடி புலம் பெயர்வது அவர்களுக்கு கட்டாயமாகிறது.

புலம்பெயர்ந்த பெண்கள் ஈட்டும் வருமானம் குடும்பத்தின் ஆரோக்கியம் தரமான கல்வி போன்ற செலவுக்கு முக்கியமாக பயன்படுகிறது என்று ஒரு ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம் புலம்பெயர் பெண் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது.

இவர்கள் பெரும்பாலும் 25 வயதிற்கு குறைவானவர்கள். அதற்கு உதாரணமாக சமீபத்தில் திருவள்ளூர் கன்னிகைப் பேர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு பல உயிர்களைப் பறித்தது.

இதில் இறந்தவர்கள் அனைவரும் பெண்கள். ஒடிசா அசாம் மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள். அவர்களின் அதிகபட்ச வயது 23, குறைந்தது நான்கு பேர் 15 முதல் 16 வயது இளம் பெண்கள் இதில் பலியானார்கள், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரும் பெண்கள் தான் குறைந்த வயது தான்.

வேலை தேடி புலம் பெயர்வது என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்கள் மட்டுமே இருந்தது.

இப்போது சத்தம் இல்லாமல் புலம்பெயர்ந்த பெண்கள் தமிழகத்தில் வேலைக்கு வருவது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மத்திய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை படி ஆண்களை விட வேலை தேடி புலம் பெயரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாய் கொண்டே இருக்கிறது என்கிறது

இந்த ஆய்வறிக்கை உண்மைதான் என்பதற்கு உதாரணம். திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கிய பெண்கள் இதேபோல் சமீபத்தில் பாலியல் பலாத்காரமாகி படுகொலை செய்யப்பட்ட சிறுமியும் புலம்பெயர்ந்த குடும்பத்தை சேர்ந்தவர் தான்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பணியில் இருக்கும்போது எரிவாயு உருளை வெடித்து 15 வயது சிறுமி இறந்து போனார். அவரும் புலம்பெயர்ந்த சிறுமி தான்.

திருப்பூர் கோவை ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள விசைத்தறி, ஆடை வடிவமைப்பு ஆலைகளில் ஒடிசா, அசாம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலம் சேர்ந்த இளம் பெண்கள் பலர் ஒப்பந்த அடிப்படையில் தங்கி பணிபுரிகின்றனர்.

ஜவுளி துறையை பொறுத்தவரை மொத்த மாநில தொழிலாளர்களில் பெண்களின் பங்கு 35 சதவீதம். அதே பொருளாதார அறிக்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஈர்க்கும் முன்னணி மாவட்டங்களில் ஒன்றாக திருவள்ளூர் மாவட்டம் இருக்கிறது.

கட்டுமான தொழில், செங்கல் சூளைகள், மெட்ரோ ரயில்திட்டங்கள் இவற்றிலும் ஆண்களுக்கு சமமாக அல்லது அதிகமாக புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இதைத் தவிர நடுத்தர மற்றும் உயர் குடும்பங்களில் தமிழகத்தில் வீடுகளில் தங்கி பணிபுரியும் புலம்பெயர்ந்த பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அப்படி தங்கும் பெண்களில் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் ஆய்வறிக்கை சொல்கிறது. அதனால்தான் அரசாங்கம் புலம்பெயர்ந்த பணியாளர்களின் அவர்கள் பற்றிய விவரம் ஆதார் அட்டை போன்றவற்றை சேகரிக்கிறது. அவர்கள் பற்றிய விவரத்தை காவல்துறையிடம் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

பெண்களுக்கான சமூக அமைப்புகளின் ஆய்வுப்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முக்கியமாக தங்குமிடம், சுகாதார வசதி, கழிப்பறை ,பாதுகாப்பு, ஊதிய வேறுபாடு என்று ஒரு நீண்ட பட்டியலை அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள் வட மாநில தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உடனடி சிக்கல் மொழி பிரச்சனை தான்.

அவர்கள் பொருளாதார தேவை காரணமாக இவை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசி வாழ்க்கையை கடக்கிறார்கள்.