மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்தை கைவிடுங்கள்
ஞாயிறு அன்று சூழல் அறிவோம் குழுவினர் ஒரு கூடுகை ஏற்பாடு செய்திருந்தனர். "தென்சென்னை கடற்கரையைச் சார்ந்த ஈரநிலங்களை அறிவோம்" என்ற தலைப்பில் சென்னையில் இருக்கும் சதுப்புநிலங்களை குறித்து ஒரு ஆழமான புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் அந்த கூடுகை அமைந்திருந்தது. முதலில் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் முக்கியத்துவத்தை குறித்து எடுத்துக் கூறினார்கள். அது வெறும் நிலமென்று கருதி அங்குள்ள பல்லுயிர்ச் சூழலை சிதைத்ததே தற்போது மழைக் காலங்களில் தென் சென்னை வெள்ளத்தால் அவதி படக் காரணம் என்று ஆவணங்களுடன் எடுத்துரைத்தார்கள். கிட்டதட்ட மூவாயிரம் ஏக்கர் இருந்த அந்த சதுப்பு நிலமானது மனித வளர்ச்சியினாலும் தொடர்ந்து கொட்டப்படும் குப்பைகளாலும் தற்போது வெறும் இரண்டு ஏக்கர் அளவுக்கு மட்டுமே எஞ்சி இருக்கிறது என்றால் மனிதனின் பேராசையை பார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்த சதுப்புநிலம் கிழக்கு கடற்கரை சாலையில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் அமைந்துள்ள நெம்மேலியில் இருக்கிறது. இதுவும் பள்ளிக்கரனையும் இரட்டையர்கள் போல, இரண்டு இடங்களில் வரும் நீரும் முட்டுக்காட்டில் தான் சென்று கலக்கின்றது. நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்தை கட்டப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இங்கு நன்னீர் தேக்கம் கட்ட வேண்டாம் என்று சூழலியலாளர்களும் மீனவர்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கு நன்னீர் தேக்கம் எதற்காக கட்ட வேண்டாம், அப்படி ஒரு நன்னீர் தேக்கம் வந்தால் அந்த பகுதிக்கு வந்து போகும் 45000க்கும் மேற்பட்ட பறவைகளின் நிலையென்ன, எதிர்வரும் மழைக் காலங்களில் தென் சென்னையின் நிலையென்ன என்று குழுவினர் எடுத்துரைத்த போது நமக்கு உண்மையாகவே அதிர்ச்சியாக தான் இருந்தது.
நெம்மேலி பகுதி, உலகின் முக்கிய வலசை பறவை பாதைகளில் ஒன்றான மத்திய ஆசிய பறவைப் பாதையின் (Central Asian Flyway) ஒரு பகுதியாக உள்ளது. மத்திய ஆசியா, ஐரோப்பா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல வலசை பறவைகள் குளிர்காலங்களில் இப்பகுதியை தற்காலிக தங்குமிடமாக பயன்படுத்தி வருகின்றன. இதனால் அந்த இடம் முக்கியமான உயிர் வழித்தடமாக(bio-corridor) இருக்கிறது.
நெம்மேலிக்கு பல பறவைகள் வர முக்கிய காரணம் அங்கு நன்னீருடன் கடல் நீர் கலப்பதால் அந்த இடத்தில் உருவாகி இருக்கும் உவர்நீர்ச் சூழலாகும். பொதுவாக நீர்வாழ் பறவைகள் ஒரு வகையான பாசி, இறால் மற்றும் சிறிய நீர்வாழ் உயிரினங்களை உண்டு வாழும். இந்த உணவுகள் உவர்நீர் பகுதியில் அதிகம் இருப்பதாலேயே இது போன்ற இடங்களுக்கு இவை அதிகம் வருகின்றன.
நீர்த்தேக்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள உவர் சதுப்புநிலங்கள் முதுகெலும்பில்லா (benthic invertebrates) உயிரினங்களின் வாழிடங்களாக உள்ளன. இவை உவர் நீர் பரப்பில் உள்ள மண்ணில் துளையிட்டு அங்கு ஆக்சிஜன் சுழற்சிக்கு உதவுகின்றன. உவர் மண்ணை செழுமை செய்து கடலோரங்களை கடலரிப்பு மற்றும் புயல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. நண்டு, மீன் மற்றும் இறால்களின் இனப்பெருக்கப் பகுதிகளாகவும் உள்ளன. இந்த மீன்களையும் இறால்களையும் உண்ண இங்கு அதிகளவில் வலசைப் பறவைகள் வருகின்றன. இந்த பகுதியை குடிநீர்த் தேக்கமாக மாற்றுவது, இந்த அனைத்து செயல்பாடுகளையும் ஒரே பருவத்திலேயே அழித்துவிடும் என்று சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். அரசு எதனால் இங்கு மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்தை கட்ட தீர்மானித்தது என்பதை யோசித்தால் நமக்கு இதன் முக்கியத்துவம் நன்றாக விளங்கும்.
41,000 ஹெக்டேருக்கு அதிகமான நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்டுள்ளது நெம்மேலி. இது சென்னையின் ஆறாவது குடிநீர் ஆதாரமாக திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையின் எதிர்கால குடிநீர் தேவைக்கு இந்த இடத்தில் நீர்த்தேக்கத்தை அமைத்தால், அதன் மூலம் ஒரு நாளைக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்குமென்றும் இதனால் பதிமூன்று லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டத்தால் கடல்நீர் உட்புகுவதை தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் சூழலியல் வல்லுனர்களின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு, மக்களின் குடிநீர் தேவையை மட்டுமே கருத்தில் கொண்டு அரசு இந்த திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.
இருபத்தைந்து கிலோமீட்டர் நீளத்திற்கு விரியும் இந்த நெம்மேலி பகுதியில் ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் பெரும் கூட்டமாக வருவதாக 2025 -2026 கணக்கெடுப்பில் பதிவு செய்திருக்கிறார்கள். ஏறத்தாழ 45000 பறவைகள் இந்த வருடம் வருகை தந்திருக்கின்றன. இதில் வலசை வரும் வாத்து இனங்கள் மட்டுமே கிட்டத்தட்ட 16000 என்கிறது கணக்கெடுப்பு. 2025 - 2026ல் மஞ்சள் மூக்கு நாரைகள்(Painted Stork), கருந்தலை அரிவாள் மூக்கன்கள்(Black-headed Ibis) மற்றும் புள்ளி அலகுக் கூழைக்கடாக்கள்(Spot-billed Pelican) மூன்றும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நெம்மேலிக்கு வருகை தந்திருப்பது ஒரு நல்ல அறிகுறியாகவே தோன்றுகிறது.
அழிந்து விட்ட பறவைகளின் பட்டியலில் இருக்கும் பெரிய உள்ளானை(Great Knot) இங்கு கண்டதாக ஒரு பறவை ஆர்வலர் கூறியிருக்கிறார். பறவை ஆர்வலர்கள் கண்ட அழியும் நிலையில் இருக்கும் பறவைகளான வளைமூக்கு பெருங்கண்ணி (Great Thick Knee), இந்திய பெருங்கண்ணி (Indian Thick Knee), சின்ன வானம்பாடி (Oriental Skylark), சாம்பல் தலை வானம்பாடி(Ashy Crowned Sparrow Lark), தோல் குருவி (Oriental Pratincole), பட்டாணி உப்புக்கொத்தி(Little ringed plover), நெடுங்கால் உள்ளான் (Black winged stilt), தகைவிலான் (Barn Swallow), செம்பட்டை தகைவிலான்(Eastern Red rumped swallow), சிவப்பு மூக்கு ஆட்காட்டி (Red wattled Lapwing), மஞ்சள் மூக்கு ஆட்காட்டி (Yellow wattled Lapwing), சிவப்பு கழுத்து வைரி(Red-necked Falcon), சிவப்புவால் வானம்பாடி(Rufous-tailed Lark) இது போக கருடன், கள்ளப்பருந்து , உட்பட பல பறவைகள் இங்கு வருகை தருவதாய் IUCN அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வளவு அற்புதமான பல்லுயிர்ச் சூழலை கொண்ட நெம்மேலி சென்னையில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நீர் சதுப்புநிலப் பகுதி என்பது இங்கே குறிப்பிட வேண்டி இருக்கிறது.

நெம்மேலி மூன்று விதமான நிலப்பரப்பை கொண்டிருக்கிறது. வடக்கே முட்டுக்காடு முகத்துவாரம் வழியாகவும் தெற்கே கொக்கிலமேடு முகத்துவாரம் வழியாகவும் கடல் நீர் வந்து செல்லும் இடமாக இந்த நெம்மேலி பகுதி அமைந்துள்ளது. இங்கு கடல் நீர் வந்து போவதால் ஏற்படும் சதுப்பு நிலம், நீரில்லாத புல்வெளி பகுதிகள் மற்றும் உப்பு பாத்திகள் என்று மூன்று பகுதிகளிலும் அதற்கேற்ற வாழ்வியலை மேற்கொள்ளும் பறவைகளும் உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. நெம்மேலியின் உயிர்ச்சூழலை காட்டும் விதத்தில் ஒரு குறும்படத்தையும் காட்சி படுத்தினார்கள் சூழல் அறிவோம் குழுவினர், மிகவும் சிறப்பாக இருந்தது.
மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்திற்கு விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA) இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். புதிய மற்றும் பழைய கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் முழுவதும் இந்த பகுதியை நம்பியே உள்ளது. இந்த உவர்நீர் பரப்பை நம்பி கிட்டத்தட்ட பதினாறுக்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்குள்ள மீனவர்களின் தலைவரான நாராயணன் அவர்கள் நேற்று நடந்த கூடுகைக்கு வருகை தந்து நெம்மேலி பகுதி எவ்வளவு செழுமையானது, பேரிடர் காலத்தில் அங்கு வெள்ளம் எப்படி போகும் அப்படியான காலத்தில் அங்கு நன்னீர் தேக்கம் இருந்தால் கூட அது பயனற்று தான் போகும் என்ற உண்மையை எடுத்துரைத்தார்.
ஆண்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற பின், பெண்கள் தங்கள் பாரம்பரிய வழக்கமாக கைகளினாலேயே இறால்கள், நண்டுகள் மற்றும் சிறு மீன்களையும் பிடித்து வருகின்றனர். ஏற்கனவே கடலில் குப்பைகளும் அணுக்கழிவுகளும் அதிகம் கலப்பதால் மீன் பிடி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்தால் மீனவ பெண்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டால் அவர்கள் வேறு வழியின்றி துன்பத்தில் உழல நேரும். இங்குள்ள மீனவ பெண்கள் மற்றும் வயதான பெரியவர்கள் இந்த சதுப்பு நிலத்தில் பல்கி பெருகும் இறால்கள், நண்டுகள் இவைகளை பிடித்து விற்றுத் தான் அவர்களுடைய குழந்தைகளை படிக்க வைத்து திருமணம் செய்து அனுப்புகிறார்கள். மீனவர்களின் மொத்த வாழ்வாதாரத்தை குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் அரசு இந்த மாமல்லன் நீர் தேக்க திட்டத்தை முன்னெடுக்கிறது என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இங்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை சமர்பித்திருப்பது IIT என்பதால் அவர்கள் சரியாகத் தான் செய்வார்கள் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கலாம். அரசு அறிக்கையின்படி நெம்மேலி பகுதியில் வலசை பறவைகள் வந்து போகின்றனவே தவிர அங்கேயே எந்த பறவையும் இனப்பெருக்கம் செய்யவில்லை என்று இருக்கிறது. ஆனால் நமது நண்பரும் பறவை ஆர்வலருமான நரேன் அவர்கள், அங்கேயே கூடு வைத்து குஞ்சு பொறித்திருக்கும் தோல் குருவியின்(oriental pratincole) தவிப்பை காணொளியாக வெளியிட்டிருக்கிறார். இது போல எண்ணற்ற பறவைகள் அங்குள்ள புல்வெளியில் கூடு அமைத்து தங்கள் இனத்தை பெருக்கி வருகின்றன. மாமல்லன் திட்டத்திற்காக அங்கு வரும் ஜேசிபிக்களுக்கு அந்த குஞ்சுகள் மீது எந்த அக்கறையும் இல்லை. மேலும் இந்த வருடம் அரிதாய் காணப்பட்ட வாத்து இனம் அடுத்த வருடம் தன்னுடைய கூட்டத்துடன் இங்கு வரலாம். அப்படியான தருணத்தில் இங்கு நன்னீர் நீக்கம் இருந்தால் அவை எல்லாம் ஏமாற்றத்துடன் வேறிடம் தேடி அலைய நேரும்.

நெம்மேலியில் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் கடல் நீர் வந்து போகும் முகத்துவாரங்களை அடைத்து வைத்திருக்கிறார்கள், இதனால் உவர்நீர் பரப்பில் இனப்பெருக்கம் செய்யும் இறால் இனங்கள் அழிந்து போகும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். மேலும் உப்பு நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் போது வரும் கழிவு நீர் மீண்டும் கடலில் தான் விடப்படும். அந்த நீரானது எந்த உயிர்களும் வாழ் தகுதியற்றதாக மாறிவிடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இயற்கைக்கு எதிரான இந்த மனித செய்லபாட்டை நிறுத்திக் கொண்டு அதை அப்படியே விட்டுவிட்டாலே அதுவே தன்னை புதுப்பித்துக் கொள்ளும். தயவு செய்து மாமல்லன் நீர் தேக்க திட்டத்தை கைவிடுங்கள் என்ற கோரிக்கையை விகடகவியின் சார்பாக மீண்டும் வைக்கிறேன்.
குறிப்பு : தகவல்களுக்கு உதவிய சூழல் அறிவோம் குழு மற்றும் நண்பர் நரேன் இருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்துமதி கணேஷ்

Leave a comment
Upload