
இரட்டுற மொழிதல் என்ற பொருள்படும் சிலேடை கவிதை வகைமையில், புலவர் காளமேகத்திற்கு ஈடு இணை எவருமில்லையென்று சொல்லலாம். மிகவும் பிரபலமான இந்தப் பாடலை பார்க்கலாம்.
இரண்டு வகைகளில் பொருள்தரும் இப்பாடலின் நயம் ரசிக்கத் தக்கது.
இனி பாடல்;
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை – மங்காத
சீரகத்தை தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியா ரே!
ஒரு வகையில், இது பலசரக்குக் கடை நடத்தும் வியாபாரி மொத்த விற்பனைக்காரருடன் உரையாடுதல் போல அமைந்திருக்கும்.
அதையே சுவாமிமலை முருகனிடம் வைக்கும் விண்ணப்பமாகவும் பொருள் கொள்ளலாம்.
பலசரக்குக் கடைக்காரரின் கூற்றாக முதலில் பார்ப்போம்;
‘’என் மளிகைக்கடைக்கு சரக்கு விற்கும் செட்டியாரே!
என் கடையில் இருப்பில் உள்ள வெங்காயம் சுக்கு போல வற்றி விட்டதே! இந்தச் சரக்கை கொண்டு என்ன செய்வது?
தவிரவும், இருக்கும் வெந்தயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி வியாபாரம் நடத்துவேன்? சுத்தமான நல்ல சீரகத்தை தந்தீர்களேயானால், பெருங்காயம் கடையில் இல்லாவிட்டாலும், என் வியாபாரத்தை ஒப்பேற்றி விடுவேனே!’’
இந்த வரிகளையே சுவாமிமலையில் வீற்றிருக்கும் முருகனுக்கு வைக்கும் விண்ணப்பமாகவும் கீழ்க்கண்டவாறு பொருள் கொள்ளலாம்;
‘’ ஏரகம் என்று வழங்கும் திருத்தலமான சுவாமிமலையில் அருள் புரியும் செட்டியே! (முருகனுக்கு செட்டி, செட்டி மகனார் என்றும் பெயர்கள் உண்டு)
வெம்மை உள்ளவரை உயிர்த்திருக்கும் இந்த உடம்பு (வெம்+ காயம்), சுக்கு போலும் வற்றி நலிவுற்ற பின் பேராசைகளுடன் ஊழலும் இந்த தேகத்தால் (வெந்தேயம்= வெண்மையான+ தேயம்/ தேகம்)ஆவது தான் என்ன?
இப்படியான இந்த தேகத்தைச் சுமந்து கொண்டு செய்வதுதான் ஏதும் உண்டா?
முருகா! சீர்மிகும் அகமாக்க என்னுள் நீ நிறைந்தாயென்றால், இந்த உடம்பை மேலும் திடமாக்கி ஆரோக்கியம் தா என்று வேண்டி வரமாட்டேன்! ஏரகப்பதியில் வாழ் செட்டியே!’’
மற்றுமொரு இனிய பாடலுடன் அடுத்தவாரம் சந்திப்போம்.

Leave a comment
Upload