
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சீமா அகர்வால் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, கடந்த 1990-ம் ஆண்டு இமாசலப் பிரதேச மாநில கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக காவல் பணியில் சேர்ந்துள்ளார். இவர் தமிழக ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதனை திருமணம் செய்ததும், கடந்த 1993-ம் ஆண்டு தமிழக காவல்துறை பணியில் இணைந்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்துள்ளார்.
கடந்த மாதம் தமிழக காவல்துறையில் இருந்து சீமா அகர்வால் பணி ஓய்வுபெற்றார்.தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு அனுமதியுடன் 6, 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதப் பாடங்களை நடத்தி வருகிறார். இவரது தகைசால் மற்றும் மெச்சத்தகுந்த பணிகளுக்காக, மத்திய அரசின் ஜனாதிபதி பதக்கம் மற்றும் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இதுகுறித்து சீமா அகர்வால் கூறுகையில், “காவல்துறை பணி ஓய்வுக்குப் பிறகு, சிறு சேவையாக ஏழை பள்ளி மாணவர்கள் எளிதில் புரிந்து படிக்கும் வகையில் கணிதம், ஆங்கிலப் பாடங்களை நடத்தி வருகிறேன். பள்ளி மாணவர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவியாக, ஒரு தாயாக இருந்து கல்வி பணிகளை செயல்படுத்தி வருகிறேன்!” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

Leave a comment
Upload