தொடர்கள்
ஆன்மீகம்
ஆஷாட நவராத்திரியும் வராஹி அம்மனும்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Ashada Navratri and Goddess Varahi..!!

இந்து மதத்தில் பெண் தெய்வங்களைப் போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் நடைபெறுகின்றன. பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாகக் கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது வழக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் நான்கு வித நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன.
வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி .(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆஷாட நவராத்திரி:
விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். இந்த மாதங்களில் ஆறுகளில் புதிய தண்ணீர் பெருக்கெடுக்கும். இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷம் அடைய மனமுருகப் பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது. பொதுவாக ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காகச் செய்யப்படுவது.
ஆஷாட நவராத்திரி காலத்தில் வாராஹி அம்மனை வணங்கினால் வளங்கள் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனி மாத அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்.

Ashada Navratri and Goddess Varahi..!!

வடமாநிலங்களில் சில இடங்களில் ஆஷாட நவராத்திரி பிரபலம். தமிழகத்தில், தஞ்சாவூர் பெரிய கோயிலில் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இதில் அம்மனுக்குத் தினமும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி:
ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி ஜூலை 15 முதல் ஜூலை 23 வரைதஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள ஸ்ரீ மகா வாராஹி அம்மன் சந்நிதியில்
ஒவ்வொரு நாளும் விசேஷ அலங்காரங்களுடன் அம்மனுக்குச் சிறப்பு ஹோமங்களும், மகா தீபாராதனைகளும் மிக விமரிசையாக நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வாராஹி அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

Ashada Navratri and Goddess Varahi..!!

முதல் நாள்: இனிப்பு அலங்காரம் (லட்டு, மைசூர்பாகு போன்ற இனிப்புகள்).
இரண்டாம் நாள்: மஞ்சள் பொடி அலங்காரம்.
மூன்றாம் நாள்: குங்கும அலங்காரம்.
நான்காம் நாள்: சந்தன அலங்காரம் மற்றும் முத்தங்கி அலங்காரம்.
ஐந்தாம் நாள்: தேங்காய்ப்பூ அலங்காரம்.
ஆறாம் நாள்: மாதுளை முத்து அலங்காரம்.
ஏழாம் நாள்: நவதானிய அலங்காரம் (நெல், கோதுமை உட்பட 9 தானியங்கள்).
எட்டாம் நாள்: வெண்ணெய் அலங்காரம் (வெண்ணெய் காப்பு).
ஒன்பதாம் நாள்: கனிவகை அலங்காரம் (பல்வேறு வகையான பழங்கள்).
பத்தாம் நாள்: காய்கறி அலங்காரம் (கதம்பம்) மற்றும் புஷ்பாபிஷேகம் / மலர் அலங்காரம்.

Ashada Navratri and Goddess Varahi..!!

தஞ்சை பெரிய கோயிலில் வாராஹி அம்மன்:
தஞ்சை பெரிய கோயிலில் வாராஹி அம்மன் தனி சந்நிதி கொண்டு வீற்றிருக்கிறார். இங்கு வாராஹி அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜசோழன் இந்த வாராஹி அம்மன் அருள் பெற்றுத்தான் எந்த செயலையும் தொடங்குவார். போருக்குச் செல்லும் முன்பு வாராஹி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். நமது உண்மையான அனைத்து கோரிக்கைகளுக்குத் தஞ்சை வாராஹி அம்மன் அருள்புரிவார்.

Ashada Navratri and Goddess Varahi..!!

வாராஹி அம்மனின் உருவ அமைப்பு:
சப்த கன்னியர்களுள் மிகவும் மாறுபட்ட தோற்றத்தையும், அதிக சக்தியையும் கொண்டவர் வாராஹி. வராஹ வடிவம் தாங்கி பூமியை மீட்ட திருமாலின் அம்சமாகத் தோன்றியவரே வாராஹி அம்மன் மிருக பலமும், தெய்வ குணமும் ஒன்றாகச் சேர்ந்து அமையப் பெற்றவர். அம்பிகையின் அம்சமாகப் பிறந்ததால், இவர் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவர். எதையும் அடக்க வல்லவர். பின்னிரு கைகளில் கலப்பை, உலக்கை ஏந்தியிருப்பாள். முன்னிருக் கைகளும் அபய வரத ஹஸ்தம் கொண்டு அருள்பாலிப்பவர். கறுப்பு நிறமானவர். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பவர்.

Ashada Navratri and Goddess Varahi..!!

வாராஹி அம்மன் வழிபாடு:
வாராஹி அம்மனை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும். வாராஹி அம்மனைத் தொடர்ந்து வழிபட்டு வருவோர் பில்லி, சூனிய பிரச்சனைகள் மற்றும் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடுவார்கள்.
விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவர். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் நற்பலனை அருள்வார். நீண்ட நாட்களாக முடியாத வழக்குகளிலிருந்து விடுபட வாராஹி அம்மன் அருள் கட்டாயம் தேவை. “வாராஹி உபாசனை செய்பவருடன் வாதாடாதே” என வழக்கு மொழியே உள்ளது.
ஞாயிறன்று வாராஹி அம்மனை வழிபட்டால் தீராத நோய்கள் தீரும்.
திங்கட் கிழமைகளில் வழிபட்டால் மனநல பாதிப்புகள் நீங்கும். செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் வீடு, நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
புதன்கிழமை வழிபட்டால் கடன் தொல்லைகள் அகலும்.
வியாழக்கிழமை வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும். கல்வி செல்வம் பெருகும்.
வெள்ளிக் கிழமை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.
பஞ்சமி திதி அன்று வாராஹி அம்மனை மனதார நினைத்து வழிபடுவது நல்ல பலனைத்தரும். பஞ்சமி தினத்தன்று தேங்காயை இரண்டாக உடைத்து, நெய்விளக்கேற்ற, கேட்ட வரங்களைத் தருவாள்
வராகியை வணங்குபவர்களுக்குத் துன்பமே வாராது என்பது மக்களின் நம்பிக்கை.

Ashada Navratri and Goddess Varahi..!!

வாராஹி அம்மனுக்கு நைவேத்தியம்:
வாராஹி அம்மனுக்கு நைவேத்தியமாகப் பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றோடு பூண்டும், வெங்காயமும் சேர்ந்த நைவேத்தியம் இடம்பெற வேண்டும் எனப் பூஜை முறையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாராஹி அம்மனுக்குப் பூண்டு கலந்து தோல் நீக்கப்படாத உளுந்து வடை, நவதானிய அடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் நீக்காத தயிர்ச்சாதம், நவதானிய அடை, தோசை இவை அனைத்தும் மிகவும் பிடிக்கும்.

Ashada Navratri and Goddess Varahi..!!

வாராஹி காயத்ரி மந்திரம்:
“ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்”
என்ற வராஹி அம்மன் காயத்திரியைச் சொல்லி வணங்குவோம். வளங்களையும் வெற்றிகளையும் பெற்று ஆனந்தமான நல்வாழ்வு அடைவோம்!!

ஓம் சக்தி.. பராசக்தி…

Ashada Navratri and Goddess Varahi..!!