
காரில் உள்ளே அலுவலகக் கோப்புகளை எடுக்கச் சென்ற துர்காவுக்கு அந்த
அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. ஒரே ஒரு தோடு. காரின் பின் சீட்டில். அலுவலகக் கோப்புகளை எடுக்கும் போது அதைப் பார்த்து திடுக்கிட்டாள் துர்கா. கூடவே கொஞ்சம் மல்லிகைப் பூக்கள்.
கணேஷ் போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு உள்ளே வந்தான்.
’காருக்குள்ள ஃபைல் இருக்கு’ போய் எடுத்துட்டு வா’ என்று துர்காவை ஆணையிட்டான் கணேஷ், அவளுடைய கணவன்.
அவன் ஓர் அரசு அலுவலகத்தில் மேலாளர்.ஆணாதிக்க உணர்வு கொஞ்சம்
அதிகமாகவே அவனிடம் உண்டு.அலுவலகத்தில் அவனை அப்படித்தான்
சொல்லுவார்கள் எல்லோரும். அந்த ஆணாதிக்க குணம் இங்கு வீட்டிலும் தொடர்ந்து வருகிறது.
புது மனைவி துர்காவின் மனதில் சந்தேகப் புயல் மையம் கொண்டது.அதே நேரம்
அந்தத் தோடு ஒரு பழைய மாடல்.என்ன இது அநியாயமாய் இருக்கிறதே? என்ன
மாதிரியான மனிதன் இவன்? மனதிற்குள் குரங்கு ஒன்று புகுந்துக் கொண்டது.அதன்
விருப்பப்படி அவளை ஆட்டி வைக்கத் தொடங்கியது.கணேஷ் ஒரு கோபக்கார கணவன்.
’எப்படி கேட்பது?’ என்று அவளுக்குத் தெரியவில்லை. அந்த ஒற்றைத் தோட்டை எடுத்து முந்தானையில் முடித்து வைத்துக் கொண்டாள்.
கோப்புகளை உள்ளே கொண்டு வந்து கணவனின் மேசைக்கு முன்னால்
வேண்டா வெறுப்புடன் வைத்து விட்டு சமையலறைக்குள் சென்று விட்டாள். புடவை முந்தானையில் இருந்த அந்தத் தோட்டை தனியாக ஒரு டப்பியில் வைத்துக் கொண்டாள்.
வெளியே வந்த துர்கா,’உங்களோடு காரில் வேறு யார் வந்தார்கள்?’ என்று
தைரியமாக கேட்டு வைத்தாள்.
கணேஷ்,’ காரில் யாருமே வரவில்லையே’ என்றான்.
அந்த பூவை பற்றியும் தோட்டைப் பற்றியும் கேட்க அவளுக்கு பயம். போகப்
போக கேட்டுக் கொள்ளலாம் என்று மௌனம் சாதித்தாள். ஆனால் அவனுடன் முகம் கொடுத்து பேசுவதை நிறுத்திக் கொண்டாள். காரணம் தெரியாமல் கணேஷ் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.
மறுநாள் காலை தன் அம்மாவிடம் துர்கா இதைப் பற்றிச் சொன்னாள். அவள்
இவளுக்கு ஆறுதல் சொல்லவில்லை. மாறாக,’கணவனை நன்றாக கவனித்துக்
கொள்’என்றாள். தொடர்ந்து ஒரு வாரம் இப்படியே போயிற்று.
ஒரு நாள் இரவு அலுவலகத்திலிருந்து திரும்பிய கணேஷ்,’நீ ஒரு வாரமாக
ரொம்ப டல்லாக இருக்கிறாய்.உன் வீட்டிற்குப் போய் வேண்டுமானால் கொஞ்ச நாள் இருந்துவிட்டு வருகிறாயா?’என்றான்.
தூக்கிவாரிப்போட்டது துர்காவுக்கு.ஒரு வேளை அந்த உறவு வீடு வரை வந்து
விடுமோ?’என்ற கவலை அவளுக்கு. அவசர,அவசரமாக,’ வேண்டாம்’என்று
தலையாடினாள்.
அதற்கு அவன்,’சரி,நீ வீட்டில் நாள் முழுவதும் தனியாக இருக்கிறாய்.என் அம்மாவை இன்று இரவு அலுவலகத்திருந்து வரும் போது அழைத்து வருகிறேன்’என்றவன் இவளின் பதிலுக்காக காத்திருக்க வில்லை.
சொன்னபடி அம்மாவுடன் வந்தான் கணேஷ் அன்று இரவு.இரவு சாப்பாடு
பரிமாறும்போது அவனுடைய அம்மாவின் காதுகள் காலியாக இருந்தன.இதை கவனித்து விட்ட துர்கா மெல்ல அவளருகில் சென்றாள்.
துர்கா,’அம்மா,ஏன் தோடு இல்லாமல் காது காலியாக இருக்கிறது?”என்று கேட்டாள்.
’ஜோடியில் ஒன்று எங்கேயோ விழுந்துவிட்டது ‘என்று அப்பாவித் தனமாய்
சொன்னாள் அவள்.
சிறிது நேரம் கழித்து மாமியார் அறைக்குள் தன்னிடமிருந்த ஒற்றைத்
தோடுடன் சென்ற துர்கா ஜோடிக்ளை சேர்த்து வைத்தாள்.மாமியார் மனதெல்லாம்
மத்தாப்பு.
அம்மாவின் அறையிலிருந்து சிரித்துக் கொண்டே வெளியே வந்த துர்காவை
வியப்புடன் பார்த்த கணேஷ்,’மாமியார்-மருமகள் ஜோடி சேர்ந்தீட்டிங்களா?’ இன்றுதான் ஒரு வாரத்துகுப் பிறகு நீ சிரித்துப் பார்க்கிறேன்’என்றான்.
‘ஆமாங்க! ஜோடி சேர்ந்த பிறகுதான் எனக்கு நிம்மதியே வந்தது’என்றாள்.
இப்பொழுதுதான் துர்காவின் மனதில் உதித்தது. அந்த ஒரு தோடு
மாமியாருடையதுதான். போன வாரம் இங்கிருந்து தன்னுடைய மைத்துனன் வீட்டிற்கு செல்லும் பொழுது காரில் விட்டுவிட்டு இருக்கிறார்.
’பெண்புத்தி பின் புத்தி’ படம் தொலைக்காட்சியில் போய்க் கொண்டிருந்தது.அதைப் பார்த்து விட்டு துர்கா தன்னையறியாமல்,’ஆமாம்.ஆமாம்’என்று உரக்கக் கத்தினாள்.
கணேஷ்,’இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு?’என்று சொல்லி அவளை
சமாதானப்படுத்த நெருங்கினான்.

Leave a comment
Upload