
ஏன் ஜானகி இப்படி அழுதுண்டே வரே, என்னாயிடுத்து என விசாரித்தாள் ருக்கு. எதிர் வீட்டில் குடி இருக்கிறவள் ஜானகி அவளின் கணவன் ராமன்.
ஆஹா பெயர் பொருத்தம்லாம் ஓகேதான், ஆனால் அவர்களுக்குள்ளே ஏழாம் பொருத்தம்.இருந்தாலும் படிப்பிலே ஒன்னு, இடுப்பிலே ஒன்னுனு
இரண்டு குழந்தைகள்.
அழறதை நிறுத்திப்புட்டு சொல்லுடீ,வேலை கிடக்கு உள்ளே என்றாள் ருக்கு.
நேற்றிலிருந்து குழந்தைக்கு உடம்பிற்கு முடியலை, டாக்டர்கிட்டே போகணும் காசு
வேண்டும்னுதான் கேட்டேன் மாமி, இல்லைனு சொல்லி ஒரே சண்டை என்று நிறுத்தினாள்.
நீ என்ன பேசினாய் என்று ருக்கு கேட்கவும்,
சம்பாதிக்க வக்கில்லையோன்ணோ பின்னே ஏன் கல்யாணம் பண்ணிக்கணும், ஏன் இரண்டு குழந்தைகளைப் பெத்துக்கணும், என்று வாயிலிருந்து வார்த்தை வந்திடுத்து, கோச்சுண்டு ராத்திரி போனவர்தான், இதுவரை திரும்பி வரலை, பயமாக இருக்கு மாமி என்றாள் ஜானகி
அழுதபடி.
அச்சச்சோ, என்றபடி அய்யாசாமி வந்ததும்,
அதெல்லாம் ஒன்னும் ஆகியிருக்காது கவலைப்படாதே, திரும்ப வந்திடுவான், ராமனைப்பற்றி
எனக்குத் தெரியும் நான் கல்யாணம் பண்ணிண்டு இங்க வரும்போது பள்ளிப்படிப்பை
முடித்திருத்தான், வரட்டும், நான் அவனிடம் பேசுகிறேன் என ஆறுதல் கூறினாள் ருக்கு.
நேற்று ராத்திரி அவனை காவிரியாற்று மதகில் உட்கார்ந்திருந்த்தைப் பார்த்தேன், ஏதாவது
ஏடாகூடமாகப் செஞ்சுண்டப்போறான் என்ற அய்யாசாமியை,
யோவ்! அறிவு இருக்கா உமக்கு?! ஒன்றுக்கும் லாயக்கில்லை இந்த பிராமணன், போங்கோ
உள்ளே! இரண்டு பொம்மணாட்டிகள் பேசிண்டிருக்கோம் உமக்கென்ன வேலை இங்கே
என்றதும் கோபம் வந்தவராய் சட்டென உள்ளே சென்றார் அய்யாசாமி.
சே! இப்படி அவளை வச்சுண்டு நம்மளை அசிங்கப்படுத்திட்டாளே!? நாம என்ன செய்யலை
இந்தாத்திற்கு. எப்படியெல்லாம் கிடந்து கஷ்டப்பட்டோம், ஒரு வேளை சாப்பாடு இல்லாமல்
இருந்த காலம்.
கல்யாணம் பண்ணும்போது, பத்து குடும்பங்களோட ஒண்டிக்குடித்தணம்,
தண்ணீ கஷ்டம், இடம் நெருக்கடி,கொசுக்கடி, பணம் கொடுத்து ஏமார்ந்தது,வட்டிக்கு வாங்கி
கஷ்டப்பட்டது எல்லாம் கண்முன் வந்துபோனது ஈசி சேரில் அமர்ந்திருந்த அய்யாசாமிக்கு,
ஓரளவிற்கு வசதி வந்த பின்னே சொந்த வீடு, நகைநட்டு,கார் என குறைவில்லாமல் தானே
வைத்திருக்கிறோம் என்னைப் போய் ஒன்றுக்கும் லாயக்கில்லை என்று சொல்லிவிட்டாளே
என நெஞ்சுப்பகுதி அழுத்த, கண்களில் ஓரம் கண்ணீர் வர வயிற்றுப் பசியோடு மனம்
வெதும்பினார் அய்யாசாமி.
எத்தனை உழைப்பு, தியாகம்,அவளுக்காக விட்டுக்கொடுத்து, அவளையும், அவா
குடும்பத்தார்களையும் மரியாதையாக பார்த்துண்டிருக்கோம், இப்படி எடுத்தெறிந்து
பேசிட்டாளே?! அதுவும் நம்மத் தெருவில் வாக்கப்பட்டு வந்தவள் முன்னே, நாளை பின்னே
எப்படி தெருவில் போறது வருவது என மனசு கிடந்து அடித்துக் கொண்டது அய்யாசாமிக்கு.
சே! இனி அவகிட்டே பேசவேப்படாது என்ற முடிவோடு காத்தியிருந்தார்
" ஜானகி! ஆண்கள் பெரும்பாலும்,அவர்களுக்காகவும்,
அவர்களை நம்பி வந்தவர்களுக்காகவும் உழைப்பவர்கள்தான்.
எதையும் பொறுத்துக்கொள்வார்கள், ஆனால் எந்த சூழ்நிலையிலும் தன் சுய மரியாதையை
மட்டும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். வெளியே பலர் எதிராகச்
செய்யும்போதும்,சொல்லும்போதும் கோபமடையும் இவர்கள்,நெருக்கமாக உள்ளவர்கள்
அதனைச்சீண்டும் போது சங்கடத்தில் எப்படி எதிர்க்கொள்வது என அறியாமல்
விழிப்பார்கள்.
குடும்பத்திற்காக செய்யும் தியாகங்களையும், கடின உழைப்பையும் நாம்தான் அவ்வப்போது
அவர்களை மனதாரப் பாராட்டவேண்டும் என்ற ருக்கு, உள்ளே சென்று எங்காத்துக்காரரைப்
பாரு,
ஈசிசேரில் கண்கள் கலங்கிட உட்கார்ந்திருப்பார், தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்த
குடும்பம்,கேரியர், பணம்,பேங்க் பேலன்சு,சொத்து என பின்னோக்கி யோசித்துக்
கொண்டியிருப்பார் எல்லோருக்கும் பொதுவானது இது என்றாள் ருக்கு.
உள்ளே எட்டிப்பார்த்த ஜானகி, ஆமாம் மாமி, ஈசிசேரில் அமைதியாய் உட்கார்ந்திருக்கார்
என்றாள்.
அமைதி இல்லையடி அது, அடக்கிண்டு உட்கார்திருக்கு என்றால் ருக்கு .
அவர்கள் நம்மிடம் எதை இழந்தாலும் பொறுத்துப்போய்
விடுவார்கள் மரியாதையை மட்டும் இழக்க தயாராக மாட்டார்கள்.
ஒரு செல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். ஆகையால் வார்த்தையில் நீ கவனம் கொள் என்று கூறியவள்
ராமன் வீட்டிற்கு பசியோடு வந்திருப்பான் ஆத்திற்குப்போ, எங்காத்து மாமாவுக்கும் பசி வந்திருக்கும் என்று சிரித்தபடி அனுப்பிவைத்தாள் ருக்கு.
வாங்கோ! சாப்பிட என அய்யாசாமியை அழைத்த ருக்குவிடம்,
எனக்கு பசிக்கல, நான் வரலை என்றார் அய்யாசாமி.
பசிக்கலைனா இங்கே இருந்த ஆப்பிள் எங்கே ஒய் ? என்றவள்
யோவ் அய்யரே! வா என்றாள் ருக்கு அன்பாய்..
என்ன இருந்தாலும் அவள் முன்னே அறிவு இருக்கான்னு உங்களை கேட்டது தப்புதான்னா,நீங்களோ உண்மையைப் பேசறவர் என்று நிறுத்தினாள் ருக்கு.
இந்த கேலிக்கெல்லாம் ஒன்றும் குறைச்சலில்லை ராமனுக்கு மரியாதை கொடுக்கணும்னு அவளுக்கு புரிய வைக்க உங்களைத் திட்டினால் என்னவாகும் என்று உதாரணம்
காண்பித்தேன்.
நானும் கிளம்பி வெளியே போயிருந்தால்... என்ற அய்யாசாமியிடம்
போகமாட்டேள் ! எனக்குத் தெரியும். உங்க கிட்டேதான் கணவன் என்கிற ஈகோ என்றுமே இருந்ததே இல்லையே என்றாள் ருக்கு.

Leave a comment
Upload