
பெண்களின் மஹரைக் குறிப்பிடாமல் (திருமணம் செய்து) அவர்களுடன் நீங்கள் வீடு கூடாமல் தலாக்கு கூறிவிட்டாலும் உங்களின் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடைய செய்யவும். பணக்காரன் தன் தகுதிக்கேற்பவும் ஏழை தன் சக்திக்கேற்பவும் கண்ணியத்தோடு (அவர்களுக்கு கொடுத்து) பயனடையச் செய்ய வேண்டியது நல்லோர்கள் மீது கடமையாகும்.
ஆனால், அவர்களுடைய மஹரை நீங்கள் குறிப்பிட்டிருந்து அவர்களை தீண்டுவதற்கு முன்னதாகவே தலாக்கு கூறிவிட்டால் நீங்கள் (மஹராக) குறிப்பிட்டிருந்ததில் பாதி அப்பெண்களுக்கு உண்டு. எனினும் யாருடைய கையில் திருமணத்தொடர்பு இருக்கின்றதோ அவன் (கணவன்) அல்லது அவள் (மனைவி) விட்டுக் கொடுத்தாலன்றி (அதாவது கணவன் முழு மஹரையும் கொடுத்திடலாம் அல்லது மனைவி பாதி மஹரையும் வாங்காமல் விட்டும் கொடுத்து விடலாம்) ஆயினும் நீங்கள் (ஆண்கள்) விட்டுக் கொடுப்பது இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். ஆதலால் உங்களுக்கு உபகாரம் செய்து கொள்வதை மறந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவனாக இருக்கிறான்.
- அல் குர்ஆன் (2:236:237)
மணமகன் வீட்டுக்கு மணமகனும் மணமகளும் மறுவீடு வந்திருந்தனர். முதலிரவுக்கான அறை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மணமகள் உஷ்னாரா ஐம்பதாயிரம் நிறங்கள் அடங்கிய பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். தலைக்கேசம் குஞ்சம் இணைத்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நெற்றியில் நெற்றிச்சூடி காதுகளில் தொங்கட்டான்கள். கழுத்தில் சரம்சரமாய் நெக்லஸ் கைகளில் எட்டுஎட்டு வளையல்கள். கைவிரல் நகங்களில் பிளாட்டினம் மோதிரங்கள்.
மணமகனின் தாயார் மற்றும் தங்கைகள் சுற்றிச் சுற்றி வந்து ஆச்சரியத்தனர். “உன்னை போலொரு அழகு பெண்ணை நாங்கள் இதுவரை வாழ்நாளில் பார்த்ததில்லை. உன் அழகில் இக்பால் மயங்கிப் போனதில் பெரிய ஆச்சரியமில்லை!”
மணப்பெண்ணின் உலாதொலைபேசி சிணுங்கியது. எடுத்து காதில் இணைத்தாள். எதிர்முனை பேசபேச திடுக்கிடும் முகபாவங்களும் ஒலிக்குறிப்புகளும் வெளிப்படுத்தினாள்.
பேசி முடித்தவள் ஆங்காரமாய் எழுந்தாள். “அநியாயமா ஏமாற இருந்தேன். விஷயத்தை முதலிரவுக்கு முன்னமே வெளிப்படுத்திய அல்லாஹ்வுக்கே நன்றி!”
“என்னம்மா சொல்கிறாய்?”
“ஏதும் தெரியாத மாதிரி நடிக்கிறீர்களே... உங்க மகன் பெரும் குடிகாரன் ஸ்திரிலோலன் தானே?”
“ஜமுக்காளத்தில் வடிகட்டிய இந்த பொய்யை யார் கூறியது?”
“என் தோழி!”
“அவள் யார்? அவள் பெயரென்ன? அவள் எங்கிருக்கிறாள்?”
“அவளது அடையாளத்தைக் கூறி அவளுக்கு உங்கள் மூலம் உயிராபத்து ஏற்படுத்த நான் விரும்பவில்லை!”
கூச்சல் குழப்பம் கேட்டு மணமகன் அறையிலிருந்து வெளிப்பட்டான்.
“என்ன பிரச்சனை?”
“நீ குடிகாரனாம். பொம்பளை பொறுக்கியாம்... உன்னைக் கட்டினவள் சொல்றாள்!”
“உஷ்னாரா! நானொரு நியாயமான லாயர். உன்னை ஒருநாள் உறவினர் வீட்டில் பார்த்து அழகில் மயங்கி உன்னையே மணந்து கொள்ள விரும்பினேன், திருமணம் பேச என் பெற்றோர் உனது பெற்றோரிடம் போயினர். குலவு முறை தலாக், அதாவது தலாக் கூறும் உரிமை உனக்கு அளிக்க வேண்டும் என வேண்டிப் பெற்றாய். அத்துடன் மஹர் தொகையாக இருபது லட்சரூபாய் வேண்டுமென கேட்டாய். நமது திருமணம் வெற்றிகரமாக அமையும். அதில் தலாக் சொல்லும் வாய்ப்போ மஹர்தொகை செலுத்தும் வாய்ப்போ வரவே வராது என உறுதியாக நம்பினேன். திருமணபதிவு புத்தகத்திலும் மஹர் தொகை இருபது லட்ச ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் நீ கேட்டதெல்லாம் நான் கொடுக்க முடியும். ஆனால் எங்க குடும்ப கௌரவத்தை மட்டும் கேட்காதே. நான் குடியின் பக்கம் ஒரு நாளும் போனதில்லை. உன்னைத்தவிர வேறெந்த பெண்ணையும் நான் ஏறிட்டு பார்த்ததில்லை!”
“பொய் சொல்கிறீர்கள். குடிகாரர்களின் முகம் பருத்து கனத்திருக்கும். இளம் தொப்பை இருக்கும். இரண்டும் உங்களுக்கு இருக்கிறது. உங்களை எப்போது பார்த்தாலும் உங்களது கண்கள் பருவப்பெண்கள் பக்கமே மொய்க்கிறது!”
“நான் என்ன செய்தால் நீ என்னை நம்புவாய்? அல்லாஹ்வின் மீது சத்தியம் பண்ணட்டுமா?”
“குடிகாரர்கள் ஒருநாளைக்கு நூறுதரம் பொய் சத்தியம் பண்ணுவார்கள்?”
“யாரை பாத்துடி குடிகாரன் குடிகாரன்னு மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்ற! (உஷ்ணாராவின் பெற்றோரிடம் திரும்பி) அர்த்த பொருத்தமில்லாமல் பேசும் உங்க மகளை நீங்க கண்டிக்கக்கூடாதா?”
“நியாயத்தை பேசுபவளை எதுக்கு கண்டிக்கனும்? கொலைகாரனை கூட மன்னிக்கலாம்! குடிகாரனை மன்னிக்க மாட்டோம் வக்கீல்களின் மூலதனமே அலங்காரமான பொய்கள் தானே?”
மணமகன் வீடு தொடர்ந்து அல்லோலகல்லோலப்பட்டது.
“முடிவா என்னதான் சொல்ற உஷ்னாரா?” வினவினான் இக்பால்.
“உங்களுடன் வாழ நான் விரும்பவில்லை. குலவு முறையில் தலாக் கூறி நம் திருமணபந்தத்தை முறிக்கப்போகிறேன். முதலிரவுக்கு முன் தலாக் கூறினால் மணமகளுக்கு 50சதவீதம் மஹர் தொகை அல்லது மணமகன் விரும்பினால் முழு மஹர் தொகைகையை மணமகளுக்கு தந்துவிடவேண்டும் என்கிறது திருக்குர்ஆன். மணமகன் வீட்டார் கூட்டத்தை சாட்சியாக வைத்து நான் முத்தலாக் கூறுகிறேன். தலாக்... தலாக்... தலாக்!”
கதறி அழுதான் இக்பால்.
“ஒரு விஷமியின் வதந்தியை நம்பி நமது திருமணபந்தத்தை முறித்து விட்டாயே...”
“திருமணபந்தம் முறிந்ததற்கு அழுகிறீர்களா மஹர் தொகை கொடுக்க வேண்டியிருக்கிறதே என அழுகிறீர்களா?”
கண்ணீரை துடைத்துகொண்டு எழுந்தான் இக்பால். இரண்டாவது படுக்கையறைக்கு போய் பணக்கட்டுகளை அள்ளிவந்து உஷ்னாராவின் மீது கொட்டினான். “எடுத்துக்க... பத்து லட்சம் ரூபாய் பணமிருக்கு எடுத்துக்க!”
உஷ்னாராவின் பெற்றோர். “எங்ககிட்ட இல்லாத பணமா? இந்த பத்துலட்சரூபாய் எங்களுக்கு கால்தூசு போல. திருமறை வசனத்தை மதிக்கவே இந்த மஹர் தொகையை தொடுகிறோம்!”
பணக்கட்டுகளை அள்ளிக்கொண்டனர்.
உஷ்னாராவும் அவளது பெற்றோரும் கிளம்பினர். அழும் கூட்டத்தை வெறித்தவாறே ஆட்டோவில் ஏறினர்.
ஆட்டோ சீறிப்பாய்ந்தது.
ஒரு வருடம் கரைந்தது.
உயர்நீதி மன்றத்திற்கு எதிரே இக்பாலின் அலுவலகம் இருந்தது. வழக்கு சம்பந்தமாக கிளையன்ட்ஸ் இக்பாலை பார்க்க காத்திருந்தனர்.
உலா தொலைபேசி சிணுங்கியது.
எதிர்முனை பேசபேச ‘சரி சரி’ ‘இதோ வருகிறேன்’ என்றான்.
இக்பாலின் கார் பெசன்ட் நகர் காவல்நிலையத்துக்கு சீறி பாய்ந்தது. காவல் நிலைய ஆய்வாளர் இக்பாலை வரவேற்றார். லாக்கப் ரூமுக்கு வெளியே உஷ்னாராவும் அவளது பெற்றோரும் நின்றிருந்தனர். ஆய்வாளரின் இருக்கைக்கு எதிரே ஒரு ஃபுல் சூட் இளைஞன் அமர்ந்திருந்தான்.
“என்ன பிரச்சனை இன்ஸ்பெக்டர்?”
“அதோ நிக்கிறதே ஒரு பொண்ணு... பேரு உஷ்னாரா... இதோ உட்கார்ந்திருக்கிறாரே இவர் பெயர் தமீமுன் அன்சாரி... சென்னையின் கோடீஸ்வர்களில் இவரும் ஒருவர்... உஷ்னாராவை எங்கோ பார்த்து அவரது அழகில் மயங்கி அவரை திருமணம் செய்து கொள்ள விழைந்திருக்கிறார். உஷ்னாராவின் பெற்றோரிடம் அன்சாரியின் பெற்றோர் பேசியிருக்கின்றனர். அவர்கள் உஷ்னாராவுக்கு தலாக் சொல்லும் உரிமையை விட்டுத்தர வேண்டும், அத்துடன் மஹர் தொகையாக இரண்டு கோடி பணம் வேண்டுமெனவும் கேட்டிருக்கிறார்கள். அன்சாரியும் ஒத்திருக்கிறார். கல்யாணம் நடந்திருக்கிறது. முதலிரவு நடப்பதற்கு முன் உஷ்னாரா அன்சாரி ஒரு தீவிரவாத குழுவின் அனுதாபி என குற்றஞ்சாட்டி, தலாக் அறிவித்து கோடி பணம் மஹர் கேட்டிருக்கிறார். அன்சாரி உடனே எங்களை தொடர்பு கொண்டார். நாங்கள் போய் உஷ்னாராவை விசாரித்த போது பல உண்மைகள் வெளிவந்தன. உஷ்னாராவுக்கு இது மூன்றாவது திருமணம். முதல் திருமணம் மதுரை டாக்டரை, அவரை அவதூறு கூறி தலாக் கூறி ஐந்து லட்ச பணம் பெற்றிருக்கிறார். இரண்டாவது திருமணம் திருச்சி வக்கீலை. அவரை தலாக் கூறி பத்துலட்சம் மஹர் பெற்றிருக்கிறார். இந்த திருமணத்தில் ஒரு கோடி(அ) இரண்டு கோடி மஹர் தொகை பெற முயன்று தோற்றிருக்கிறார். இந்த மாதிரி வழக்கை நான் ஆயுளில் பார்த்ததில்லை. வழக்கில் சம்பந்தபட்ட அனைவருமே முஸ்லிம்கள். எஃப்.ஐ.ஆர். போடுறதுக்கு முன்னாடி உங்க ஞாபகம் வந்தது. இரண்டு தரப்புக்கும் சமாதானம் பண்ண முடியுதான்னு பாருங்க!”
உஷ்னாராவிடம் போனான் இக்பால் “இன்ஸ்பெக்டர் சொல்றதெல்லாம் உண்மைதானா உஷ்னாரா?”
“ஆமா...”
“நீ ஒரு பணத்தாசை பிடித்த பேயா? உனக்கு வெட்கமாயில்லை?”
“என் பெற்றோரின் பணத்தாசைக்கு இரையாகி விட்டேன். நாடகத்தை எழுதி ஆடச் சொல்வது அவர்கள். நான் நடிப்பது வெறும் ஒரு கதாபாத்திரமாக. அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்துவிடுங்கள். இனி திருந்தி வாழ விரும்புகிறேன். பெற்றோரை விட்டு விலகி சொந்தக் காலில் நிற்க விரும்புகிறேன். ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்...”
“கலாப மயிலின் ஒப்பனையில் இருக்கும் ராஜநாகம் நீ. நீ திருந்துவாய என்றால் எப்படி நம்புவது?”
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் திருந்திவிட்டேன்!”
உஷ்னாராவை தீர்க்கமாக பார்த்தான் இக்பால். “அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் பண்ணுகிறாய். நம்புகிறேன்”
தமீமுன் அன்சாரியை அழைத்து பேசி சமாதான உடன்படிக்கைக்கு ஒப்புக் கொள்ள வைத்தான் இக்பால்.
“பாய்! உங்க வாய் வார்த்தைக்காக எனது புகாரை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். ஒரு ஒயிட்காலர் கிரிமினலுக்கு இவ்ளவு பரிந்து பேசுகிறீர்களே... அது அந்த டெவில் தரப்போகும் பணத்துக்காகவா?”
“இல்லை!”
“பின்னே?”
“நீங்கள் கூறிய டெவில் இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றிய திருச்சி வக்கீல் நான்தான். ஆறுமாதங்களுக்கு முன்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிராக்டிஸ் பண்ண புலம் பெயர்ந்தேன்!”
“யா அல்லாஹ்!” வியந்தான் தமீமுன் அன்சாரி.
ஆறுமாதங்களுக்கு பிறகு...
ஒரு கோ-ஆப்டெக்ஸ் காட்டன் புடவை கட்டிக்கொண்டு டைப்பிஸ்ட் பணிக்கு போய்விட்டு பணி செய்யும் பெண்கள் விடுதிக்கு நடந்து செல்லும் உஷ்னாராவை பார்த்து விட்டான் இக்பால்.
காரை நடைமேடை ஒட்டி ஒட்டினான். “உஷ்னாரா! அஸ்ஸலாமு அலைக்கும்!”
“அலைக்கும் ஸலாம்!”
‘காரின் பின்னிருக்கையில் அமர். உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்!”
அமர்ந்தாள்
“பணி எப்படி போகிறது?”
“சிறப்பாக!”
“மாதசம்பளம்?”
“இரண்டாயிரத்து அய்நூறு!”
“போதுமா?”
“போதும்!’
“உனது பெற்றோர்?”
“அவர்களை தலைமுழுகினது முழுகினதுதான். தற்சமயம் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது!”
“திருந்துவதாக சொல்வது எளிது, நிஜத்தில் திருந்துவது மிக சிரமம். நீ எப்படி?”
“முதல் ஒரு வாரம் சிரமமாக இருந்தது. இறைவனின் பால் எனது மனம் முழுக்கப் போய் விட்டது!”
“மூன்று திருமணங்கள் செய்திருந்தாலும் நீ கன்னிப்பெண்தான். இப்ப திருந்திட்ட வேற. ஒரு மறைக்க முடியாத உண்மையச் சொல்றேன். இன்னும் உன் மீதான என் காதல் சாகவில்லை. திருந்திய உன்னை திருமணபந்தம் மூலம் அரவணைக்க விரும்புகிறேன். நமது திருமணத்தை மார்க்கமும் அனுமதிக்கிறது!”
“யோசிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும்!‘”
-ஒரு வாரம் கழித்து... “உங்களை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறேன். ஆனால் மஹர் தொகையாய்!....”
“மஹர் தொகையாய்?”
“மஹர் தொகையாக நூறு கோடி அன்பு வேண்டும்!”
“அன்புதானே? நூறு கோடி என்ன... ஆயிரம் கோடி.. இலட்சம் கோடி அன்புகள் உன் மீது சொரிய காத்திருக்கிறேன். செல்லமே?”
“நீங்க குடிகாரரா?”
“இருக்கலாம் உனது பேரழகை பருகிய போதையில் நான் தள்ளாடுவதால், நானும் ஒரு வகையில் குடிகாரனே!”
இருவரும் புகையப் புகைய சிரித்தனர்.

Leave a comment
Upload