
பாரதி மறைந்த பின்னர் இந்த தமிழ் மண்ணில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிறைக்கப் பிறந்தவன், பாமரனுக்கும் பாடல் எழுதிய கவிஞன், காதலை, கருணையை, கடவுளை, உறவை, பிரிவை, மோகத்தை, தத்துவத்தை - தன் சாகாவரம் மிக்க வரிகளால் பாடல்களில் வாழ வைத்த அறிஞன் கவியரசர் கண்ணதாசன். ஆன்மாவைத் தொடும் கீதங்களால் தென்றலென நம் வாழ்வைச் சூழ்ந்தவர். அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய அதே கரத்தால், இயேசு காவியம் படைத்த மாமனிதன். திரைப்படப் பாடலாசிரியர் என்ற களத்தைத் தாண்டி, தலைமுறைகள் தாண்டி வாழும் பாடல்களும், கவிதைகளும், புதினங்களும், சிறுகதைத் தொகுப்புகளும், இலக்கிய உரைநூல்களும், கவிதைத் தொகுப்புகளும், நாடகங்களும் படைத்தவர். சேரமான் காதலிக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் இந்தக் காவியத் தாயின் இளைய மகன்.
இம்மாபெரும் கவிஞனைக் கொண்டாடும் முயற்சியை மேற்கொண்டு ‘காலங்களில் அவன் வசந்தம்’ என்னும் நிகழ்ச்சியை கடந்த நான்காண்டுகளாக சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் – பாரதிய வித்யா பவன் ஆதரவில் நடத்தி வருகிறார் இசைக்கவி ரமணன் அவர்கள். அவரை ‘விகடகவி இதழுக்காக’த் தொடர்பு கொண்டோம். கவியரசர் கண்ணதாசன் மறைந்த இம்மாதத்தில், அவரது நினைவைப் போற்றும் விதமாக இசைக்கவியுடன் உரையாடினோம். தமிழ் மேல் தீராக் காதலும், இலக்கிய தாகமும் கொண்ட ஒரு பல்கலை வித்தகரை, உள்ளும் புறமும் தமிழை நிறைத்து வாழும் தமிழ்க் கவிஞரை விகடகவி வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம்.
இசைக்கவி ரமணனின் இளமைப்பருவம், கல்வி, எழுத்துப்பணிகள், அவரது இலக்கிய நிகழ்ச்சிகள் குறிப்பாக ‘காலங்களில் அவன் வசந்தம்’ பற்றி என்று எங்கள் உரையாடல் நடந்தது.
ரமணன் திருநெல்வேலியில் 1954 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தந்தை டி.வி. அனந்தராமசேஷன், லயோலா கல்லூரியில் விரிவுரையாளராகவும், தி ஹிண்டு நாளிதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர்; ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் வல்லவர். தாயார் சாவித்திரி அம்மையார், 91 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்குகிறார். ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த பின், ஏ.எம். ஜெயின் காலேஜில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். 1977 ஆம் ஆண்டு இந்து நாளிதழின் விற்பனைப் பிரதிநிதியாக பணியைத் தொடங்கியவர், சென்னை, பெங்களூரு, மதுரை ஆகிய இடங்களில் பணி செய்தவர். விசாகப்பட்டினத்தில் வட்டார மேலாளர் பதவி வகித்தார். 27 ஆண்டுகள் தொடர் பணிக்குப்பின் அங்கிருந்து விலகி, முழுமையாய்த் தன்னை இலக்கிய, ஆன்மிகப் பணிகளுக்கு அர்ப்பணித்துக் கொண்டார்; அதில் நிறைவும் பெறுகிறார்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமை வாய்ந்தவர். கனடா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, அபுதாபி, மஸ்கட், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தமிழ், ஆங்கிலத்தில் இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவுகள் தந்தவர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், மும்பை, தில்லி போன்ற ஊர்களிலும் சொற்பொழிவுகள் தந்துள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். பொதிகையில் இரண்டாண்டுகள், “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சி, மக்கள் தொலைக்காட்சியில், “பண்ணிசை வித்தகர்கள்”, “தமிழ் அமிழ்து’ நிகழ்ச்சிகள், சங்கரா தொலைக்காட்சியில் “தர்மத்தின் பாதையில்” ‘On the Path of Dharma’ என்ற தலைப்பில் தமிழ் / ஆங்கிலத்தில் தொடர் சொற்பொழிவு தந்துள்ளார். சுமார் 1200 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார். நான்கு தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்தும் இருக்கிறார். அமரர் திரு. வீணை பாலசந்தர் அவர்களின் பெயரில் திகழும் எஸ்.பி.க்ரியேஷன்ஸ் அழைப்பில், “அந்த நாள்”, “பாரதி யார்?” போன்ற நாடகங்களுக்கு வசனம் எழுதி அவற்றில் நடித்துள்ளார். தற்போது, “பாஞ்சாலி சபதம்”, “சிலம்பு” மேடை நாடகங்களை வடித்து, அவற்றை அரங்கேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சிறந்த எழுத்தாளர், இசையோடு கவி பாடும் குரல் வளம் பெற்றவர். கோடுகள் இல்லா உலகம், ‘அகத்தியர் அந்தாதி’ உள்ளிட்ட கவிதை நூல்கள், இயக்குநர் “சிகரம்” - திரு, கே. பாலசந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாறு, எந்த வானமும் உயரம் இல்லை போன்ற உரைநடை நூல்கள், Chins Down? Chin up, Business Mantras, A Sublime Sacrament உள்ளிட்ட ஆங்கில நூல்கள் உட்பட 31 நூல்களை எழுதியவர். கம்பன் கழக விருது, பாரதி இலக்கியச் செல்வர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விருது, தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உள்ளிட்ட 28 விருதுகளுக்குச் சொந்தக்காரர். 34 முறை இமயப் பயணம் மேற்கொண்ட ஆன்மிகவாதி. இன்று நாம் பேசும் ‘காலங்களில் அவன் வசந்தம்’ கண்ணதாசனின் நினைவினைப் போற்றும் மாபெரும் நிகழ்ச்சி.
‘காலங்களில் அவன் வசந்தம்’ என்னும் தொடர் நிகழ்ச்சிக்கான விதை எப்படித் தோன்றியது என்ற வினாவுக்கு ரமணன்... ‘ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ திரு. முரளி அவர்களைச் சுட்டிக் காட்டுகிறார். ‘கண்ணதாசனைக் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சியை இணைந்து செய்வோம்’ என்று சொன்ன தொழிலதிபர் முரளி ‘காலங்களில் அவன் வசந்தம்’ என்னும் தலைப்பையும் அவரே தந்தாராம். கண்ணதாசன் பாடல்களில் உள்ள நயத்தை, இலக்கிய வளத்தைப் பகிரவும், சிறப்பு விருந்தினர்களுக்கு, ‘தேர்ந்த ரசிகர்’ என்னும் விருது வழங்கவும் திட்டமிடப்பட்டது. பாரதிய வித்யா பவனும் இந்தச் சீரிய முயற்சியில் கைக்கோக்க... மாதம் ஒரு முறை நடத்தத் தீர்மானித்து, 2017 ஜனவரியில் முதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அந்நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் திரு. ரமேஷ் விநாயகம், ரமணனுடன் பங்கு பெற்றார். கவிதாலயா கிருஷ்ணன் அவர்களுக்கு ‘தேர்ந்த ரசிகர்’ என்னும் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். சுகி சிவம், வழக்கறிஞர் சுமதி, பர்வீன் சுல்தானா, பாரதி பாஸ்கர், பட்டிமன்றம் ராஜா, ராதா ரவி, மோகன் ராம், இந்திரா சௌந்தர்ராஜன், தமிழருவி மணியன், இயக்குனர் S. P. முத்துராமன், மற்றும் கவியரசரின் பிள்ளைகளான காந்தி கண்ணதாசன், அண்ணாதுரை கண்ணதாசன், கண்மணி சுப்பு, கோபி கண்ணதாசன், பாடகர்கள் அனந்து, சைந்தவி, புவனா என்று தமிழின் மேல் காதல் கொண்ட, கண்ணதாசனை நேசிக்கும் பல பிரபலங்கள் மர்றும் தமிழறிஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். மாதம் ஒரு முறை என்று தொடங்கியது மாதம் இருமுறை ஆனது. அரங்கு நிறைந்த ரசிகர்கள் ரசித்த நிகழ்ச்சி லாக் டௌன் காலத்தில் கூட தடையின்றி இணையத்தின் வழி தொடர்ந்து, அண்மையில் 51வது நிகழ்ச்சி நடந்துள்ளது. அயல்நாட்டுத் தமிழ் அறிஞர்களும் இந்த இணைய வழி நிகழ்சசிகளில் பங்கேற்கிறார்கள்.
‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்னும் உண்மையை இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது உணர்கிறோம். ரமணன் சிறப்பு விருந்தினருடன் நிகழ்ச்சியைத் தொடங்கும்போது,
“வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு விண்ணப்பஞ் செய்திடு வேன்;
எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி இராதென்றன் நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி வேல், சக்தி வேல்,சக்தி வேல்!!”
என்று பாரதியின் வரிகளை முழங்கித் தொடங்குகிறார். தொடர்ந்து கண்ணதாசனை வாழ்த்தி ஒரு அழகிய கவிதை சொல்கிறார். அதன் பின் சிறப்பு விருந்தினருக்கு ஒரு வாழ்த்துடன் உரையாடல் வடிவில் நிகழ்ச்சி செல்கிறது. கண்ணதாசனின் பாடல் தம் வாழ்க்கையில் பொருந்திப் போகும் அனுபவங்களை அவர்கள் விவரிக்க, அந்தப் பாடல்களை ரமணன் தன் கம்பீரக் குரலில் படுகிறார். இசைக்கருவிகளோ, வாத்தியங்களோ இல்லை. இசைக்கருவிகளின் ஆதிக்கம் இன்றி, பாடலில் பொதிந்துள்ள நயம், இதம், மொழி வளம், இலக்கிய நயம் இவை விளக்கப்படும்போது அவை நம்மை சட்டென ஈர்க்கிறது.
ரமணன் ‘எந்த உணர்ச்சி எந்த உள்ளத்தில் மேலிட்டாலும் அங்கு கண்ணதாசன் பாடல் இருக்கும்’ என்கிறார். அது சத்தியமான உண்மை என்பதை நிகழ்ச்சியைப் பார்க்கும்போது புரிகிறது. எத்தனை விதமான பாடல்கள், எத்தனை விதமான உணர்வுகள்! இப்போதும் சில பாடல்களைக் கேட்கும் போது. அழுகையைத் தவிர்க்க முடிவதில்லை. பாரதி பாஸ்கர் ‘ஒருநாள் இரவு பகல் போல் நிலவு’ என்ற காவியத் தலைவி பாடலைக் குறிப்பிடும் போதே, தன் தாயை நினைத்து உடைந்து போகிறார். அவரே ‘இரண்டு மனம் வேண்டும்’ என்னும் வசந்த மாளிகை பாட்டுக்குக் கம்பராமாயணத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்:
சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் சிந்தை தானும்
உற்று, இரண்டு ஒன்று ஆய் நின்றால், ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்றொரு மனமும் உண்டோ ? மறக்கல் ஆம் வழி மற்று யாதோ?
(சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் -84)
‘தூது செல்ல ஒரு தோழி இல்லை என்று துயர் கொண்டாயோ தலைவி’ என்னும் இலக்கியச் சுவை நிறைந்த ‘பச்சை விளக்கு’ படப் பாடலைப் பாடும் ரமணன், தொல்காப்பியம் கூறும் 12 விதமான தூதுகளை எடுத்துக் கூறி விளக்குகிறார். ஒரு பானை சோற்றுக்கு இரு சோறு பதம் காட்டினேன்!
உண்மையில் இந்த நிகழ்ச்சியின் சிறப்பினை முழுவதும் எழுத்தில் கொணர்வது இயலாத காரியம். கண்ணதாசனை எப்படி ஒரு சிமிழுக்குள் அடைக்க முடியும்? அவர் எழுதிய கண்ணன் பாடல் ஒவ்வொன்றும் காவியம் அல்லவா? ‘கங்கைக்கரைத் தோட்டம்’, ‘கண்ணுக்கு குலமேது’, ‘கண்ணன் வந்தான்’, ‘கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல’ போன்ற பாடல்களை தமிழ் உலகம் தன் இதயத்தில் அல்லவா எழுதி வைத்துப் பாடிக்கொண்டு இருக்கிறது. ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி’, ‘சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை’, ‘என்ன என்ன வார்த்தைகளோ சின்னவிழிப் பார்வையிலே’, ‘மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்’ போன்ற சின்னச் சின்ன வரிகளில் கவியரசர் பேரழகைக் குவித்துத் தந்த விதத்தினை ரமணன் அருமையாய் விளக்குகிறார்...
உறவில், பிரிவில், காதலில், வாழ்க்கையில், மரணத்தில் என்றும் உடன் வரும் அப்பாடல்களின் உயிரோட்டத்ததை, கால வெள்ளத்தில் கரைந்து விடாத வரிகளின் அழகை, இலக்கியச் சுவையை, அழகாகத் தருகிறார் சிறப்பு விருந்தினருடன் சேர்ந்து. நாமும் அவ்வழகில் உறைகிறோம், கரைகிறோம், உலகத்தை மறக்கிறோம்.
இவரின் நெடிய இனிய பயணத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடை பெறுகையில், ‘நான் எந்தச் சிறப்பும் இல்லாதவன், ஆனால் பாக்கியசாலி’ என்று ஒரு வரி கூறினார்.
நான், ‘எல்லாச் சிறப்பும் கொண்ட, பன்முகத் திறன் கொண்ட உங்களை அறிந்து கொண்ட நாங்கள்தான் பாக்கியசாலிகள்’ என்றேன்.
ஏன், கண்ணதாசனும் தான்.
அரசு எழுப்பிய மணிமண்டபத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் மணிமண்டபம் கட்டி கொலுவிருக்கும் மகாகவி அல்லவா அவர்? அவருடைய நினைவு நாளான அக்டோபர் 17 ஆம் தேதி, ரமணன் எழுதிய “காலங்களில் அவன் வசந்தம்”, “கண்ணதாசன் இலக்கியத்தின் கண்ணாடி” ஆகிய இரு நூல்களை வானதி பதிப்பகத்தின் மூலம், நீதியரசர் திரு. ராமசுப்பிரமணியன், மரபின் மைந்தன் திரு. முத்தையா ஆகியோருடைய வாழ்த்துரைகளோடு, சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு. எம். முரளி வெளியிட்டுச் சிறப்பித்தார்கள்.
வாழிய கண்ணதாசன் புகழ்...

Leave a comment
Upload