
தமிழ் மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையை அடுத்து வரும் பிரதமை திதியிலிருந்து, பத்து நாட்கள் நவராத்திரி கொலுவினை இந்து சமயத்தில் சக்தி வழிபாடாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்மாநில இந்து மக்களின் இல்லங்களில் கோலகல தெய்வ வழிபாடாக நடைபெறுகிறது.
நவராத்திரி கொலுவில் அலங்கரித்து வைக்கப்படும் பொம்மைகள் களிமண்ணால் செய்யப்பட்டு, அடர்ந்த நிறங்களால் பூச்சு வேலை செய்யப்பட்டு இருக்கும். மரப்பாச்சி பொம்மைகளும் கொலுவை அலங்கரிக்கும்.
கொலுவில் கடவுள் சிலைகளுடன், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சித்தரிக்கும் நிகழ்வுகள் கூட பொம்மைகளாக வடிவமைக்கப்பட்டு இடம் பெற்றிருக்கும் .
இந்து சமய புராணங்களை சித்தரிக்கும் பொம்மைகள், கோயில் தேரோட்டம், சமையல் அறையில் பயன்படுத்தும் சொப்பு சாமான்கள், விலங்குகள், திருமண நிகழ்ச்சிகளை குறிக்கும் பொம்மைகள் கொலுவில் அலங்கரித்து வைக்கப்படும்.
சிங்கப்பூரை சேர்ந்த சௌபாக்கிய பங்கிராலா மற்றும் ராஜசேகர் தம்பதிகள் இந்த வருட கொலுவிற்கு திருமலை திருப்பதிக்கு தரிசனம் சென்று எப்படி எம்பெருமானை தரிசிக்க வேண்டும் என்ற அழகான நடைமுறையை கொலு பொம்மைகளாக, அப்படியே திருமலை திருப்பதியில் இருக்கும் வடிவங்களை தங்களது இல்லத்தில் உருவாக்கி அசத்தி இருக்கிறார்கள்.
திருப்பதி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து திருமலை செல்வதற்கான அடிவாரம் அமைந்திருக்கும் அலிபிரியிலிருந்து 3550 படிக்கட்டுகள் வழியாக நடைபயணம் செல்லும் போது, இடையில் வரும் காலி கோபுரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய நமது கைவிரல் ரேகையினை பதிவு செய்து கட்டணமில்லா டிக்கெட்டை பெற்று கொண்டு முட்டிமலை வழியாக மீண்டும் நடைபாதையாக படியேறி திருமலை சென்று அடையும் வரை தத்ருபமாக பொம்மைகளால் காட்சி படுத்தியுள்ளனர்.
திருமலை சென்றவர்கள் முதலில் வராகசாமி சன்னதியில் சாமி தரிசனம் செய்து விட்டு, அதன்பின் ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என்ற தத்துவத்தினை கொலுபொம்மைகளால் தத்ருபமாக அமைத்துள்ளனர். சாமி தரிசனம் முடித்து விட்டு, மீண்டும் கீழ் திருப்பதி வந்து அலமேலுமங்கா தாயார் மற்றும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்று வித்தியசமான கொலுவினை அமைத்துள்ளனர்.
எங்கள் வீட்டில் ஒவ்வொரு வருடமும் கொலுவில் ஏதாவது வித்தியசாமான ஒரு நிகழ்வினை வைப்போம். இந்த வருட கொலுவில் திருமலை ஏழுமலையான் தரிசனம் கொலுவாக வைக்க முடிவு செய்தோம். திருமலை ஏழுமலையானை கொலு அமைக்க நானும் எனது கணவர் ராஜசேகரும் சேர்ந்து திருமலை புகைப்படங்களின் அச்சு அசலான தோற்றத்தினை பொம்மைகளாக வடிவமைத்தோம். நவராத்திரிக்கு முன்பு 3 வாரங்களாக தொடர்ந்து, திருமலை ஏழுமலையான் கோயில், கீழ்திருப்பதியில் இருக்கும் அலமேலுமங்கா தாயார் மற்றும் கோவிந்தராஜ் பெருமாள் சன்னதி ஆகிய அனைத்தையும் வடிவமைத்து, கொலுவினை அமைத்தோம். தற்போது திருமலை ஏழுமலையான் தரிசனம் கொலு உலகெங்கிலும் சமூக வலைதளங்களில் வைரலாகி, பக்தர்கள் கண்டுகளிப்பதை நாங்கள் பாக்கியமாக கருதுகிறோம் என்கிறார் கொலுவினை அமைத்த சிங்கப்பூர் சௌபாக்கிய பங்கிராலா மற்றும் ராஜசேகர் தம்பதி.
நீங்களும் கீழே உள்ள இணைப்பை தொட்டு நவராத்திரி கொலுவில் திருமலை ஏழுமலையான் தரிசனத்தினை பக்தி பரவசத்துடன் கண்டுகளியுங்கள்!!

Leave a comment
Upload