
செல்வரங்கம் சரியாக ஒன்பது மணிக்கே அன்று அலுவலம் வந்துவிட்டார். அவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வந்தார். அலுவலகம் வழக்கமாக பத்து முப்பதுக்குத்தான் துவங்கும். சீக்கிரமாக செல்வரங்கம் அலுவலகம் வந்தாலும் அலுவல் எதையும் கவனிப்பதில்லை. அலுவலகத்துக்கு வெளியே அவருக்கு நிறைய வேலைகள் இருந்தது. அன்று பதிவாகவேண்டிய பத்திரங்கள், அவைகளின் மதிப்பு, அவருக்கு வரவேண்டிய லஞ்சப் பணம் எல்லாம் முன்கூட்டியே அவருக்கு நெருக்கமான டாகுமென்ட் ரைட்டர்களிடம் அவர் பேசி முடித்து விடுவார். பதிவாகும் எல்லா பத்திரங்களுக்கும் அவருக்கு லஞ்சப் பணம் வந்தாகவேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி, பத்திரம் பதிய மறுத்து விடுவார். அன்று ஒரு கோடி மதிப்புள்ள ஒரு பத்திரம் பதிவுக்காக காத்திருந்தது. அதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கிடைக்கும் என்று அவர் கணக்கு போட்டு வைத்திருந்தார்.
பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதை தடை செய்ய அரசாங்கம் பல வழிகளிலும் கட்டுதிட்டங்களை ஏற்படுத்தி இருந்தது. அவையெல்லாம் சரியாக ஒத்து வராததால் கடைசியாக அலுவலகத்துக்குள் ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்திவிட்டது. அலுவலக நடவடிக்கைகளை பதிவு செய்வதுடன், அலுவலர்கள் பேசுவதும் பதிவாகும்படி செய்திருந்தனர். ஆனால் நமது செல்வரங்கம் அதற்கும் ஒருமாற்று வழி கண்டுபிடித்துவிட்டார். அவர் என்ன செய்கிறார் என்று நீங்களே பாருங்கள்.
அலுவலகம் துவங்கிவிட்டது. ஒரு மணி நேரத்தில் மூன்று பத்திரங்களை பதிவு செய்து முடித்திருந்தார் செல்வரங்கம். நான்காவதாக அவர் எதிர்பார்த்த அந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய பத்திரம் பதிவுக்கு வந்தது.
பத்திரத்தை தாக்கல் செய்த நபர் அந்த சொத்தை விற்பவர். அவர் பெயர் நல்லதம்பி. அந்த சொத்தை வாங்குபவர் சிவராஜ். இருவரும் செல்வரங்கத்தின் முன்பாக மிகவும் அடக்கத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
செவரங்கம் மிகவும் கவனமாக அப்பொழுதுதான் முதன்முதலில் படிப்பது போல பத்திரத்தை படித்துக்கொண்டிருந்தார். படித்து முடித்ததும் சிவராஜிடம், “நீங்கள்தானே சிவராஜ்?.. இந்த பத்திரத்தை பதிவு செய்வதில் பிரச்சனை இருக்கிறது. நீங்கள் சொத்தின் மதிப்பை மிகவும் குறைவாக பத்திரத்தில் போட்டு இருக்கீங்க. அதனால் இதை பதிவு செய்ய முடியாது..” என்று கூறினார்.
“அப்படி இல்ல சார்.. இவர் மிஸ்டர் நல்லதம்பி.. இவரிடம் இருந்துதான் நான் இந்த வீட்டை வாங்குகிறேன். எல்லா விவரமும் நீங்கள் இவரிடமே கேட்கலாம்.”
“என்ன மிஸ்டர் நல்லதம்பி.. இரண்டு கோடி மதிப்புள்ள வீட்டை ஒரு கோடி என்று போட்டு பத்திரம் எழுதி இருக்கீங்க.. எப்படி இதை பதிவு செய்வது.. இதன் சரியான மதிப்பை போடாவிட்டால் அரசாங்கத்துக்கு சேரவேண்டிய சுமார் எட்டு லட்சம் ரூபாய் ஸ்டாம்பு டியுட்டி நஷ்டமாகும்.”
“சார்.. நம்ம டாகுமென்ட் ரைட்டர் கதிர்தான் அப்படி போட சொன்னார்.. கைடு லைன் மதிப்பும் அதுதான். நீங்க மனசு வச்சா பதிவு செய்யலாம்.”
“சரி.. கொஞ்சம் இருங்க.. நான் பாத் ரூம் போயிட்டு வரேன்..”
“சார்.. நானும் வரேன். எனக்கும் பாத் ரூம் போகவேண்டும்!”
“சரி.. வாங்க மிஸ்டர் நல்லதம்பி..”
இருவரும் அலுவலகத்தின் பின்புறம் இருந்த பாத்ரூமுக்கு சென்றனர்.
இருவரும் உள்ளே சென்றதும் செல்வரங்கம் பாத்ரூம் கதவை உள்பக்கம் தாளிட்டார்.
“சார்... டாகுமென்ட் ரைட்டர் கதிர்தான் நீங்க பாத் ரூம் போனால் கூடவே என்னையும் போகும்படி சொன்னார்..”
“சரி.. வேறு ஒன்றும் சொல்லவில்லையா..?”
“நீங்கள் கேட்கும் பணத்தை கொடுக்கச் சொன்னார்.”
“நீங்கள் அரசாங்கத்துக்கு வீணாக எட்டு லட்சம் ஸ்டாம்பு டியுட்டி கட்ட வேண்டாம். எனக்கு தனியாக ஒரு லட்சம் கொடுத்துவிடுங்கள்.. நான் பத்திரத்தை பதிவு செய்து கொடுக்கிறேன்.”
“அப்படியானால் பத்திரத்தில் போட்டிருக்கும் மதிப்பு போதுமா? பதிவு செய்த பின்பு ஏதும் பிரச்சனை வராதா?”
“அதெல்லாம் ஒன்றும் வராது.. அந்தப் பணம் ஒரு லட்சம் கூட நீங்கள் தர வேண்டியது இல்லை. சொத்தை வாங்கிக்கொள்ளும் அந்த சிவராஜ்தான் கொடுக்கவேண்டும். அவர்தான் பத்திரப் பதிவு செலவு முழுவதும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. அதுதான் வழக்கம்.”
“ஏன் சார்.. ஒரு பத்திரத்துக்கு இவ்வளவு பணம் வாங்குகிறீர்களே..நீங்கள் ஒரு மாதத்தில் ஒரு கோடிக்கு மேல் வருமானம் பார்த்துவிடுவீர்கள் இல்லையா?”
“அப்படில்லாம் இல்லை. இந்தப் பணத்தில் பாதி பணம் எனது மேல் அதிகாரிக்கு போக வேண்டும். மீதி பாதி பணத்தில் எனக்கு ஐந்தில் ஒரு பங்கு. மீதி பணம் இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சமமாக பிரித்துக் கொடுக்கவேண்டும். அத்தோடு இல்லாமல் தினமும் ஒரு தொகை தனியாக எடுத்து வைக்க வேண்டும். ஆடிட்டர் வரும்போது அவர்களுக்கும் இதில் பங்கு உண்டு..”
“சரி.. பணத்தை எப்படி வாங்கிக் கொள்வீர்கள்? அலுவலகத்துள் கண்காணிப்பு கேமரா எல்லாம் இருக்கிறதே..!”
“அதற்குதான் இந்த பாத் ரூம் நாடகம். இங்குதான் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. நீங்கள் பணத்தை இங்கே கொடுக்கலாம். நான் வாங்கிக்கொள்கிறேன்.”
நல்ல தம்பி உடனே தன்னிடம் இருந்த பணம் ரூபாய் ஒரு லட்சத்தை எடுத்து செல்வராகவனிடம் கொடுத்தார். செல்வராகவன் அதை வாங்கிக்கொண்டு அப்படியே பாத் ரூமில் இருந்த ஒரு ரகசிய பெட்டியில் வைத்து பூட்டிவிட்டார்.
“சரி.. நாம் போகலாமா?” என்று நல்ல தம்பியிடம் கேட்டார்.
நல்லதம்பி, “மிஸ்டர் செல்வரங்கம்.. நான் உண்மையில் பத்திரம் பதிவு செய்ய வரவில்லை. நான் உங்கள் மேலதிகாரி சரவணனின் பி.ஏ. நீங்கள் இப்பொழுது சொன்னது போல நீங்கள் வாங்கும் லஞ்சத்தில் பாதி பணம் உங்கள் மேலதிகாரி சரவணன் சாருக்கு வந்து சேருவதில்லை. இதில் நீங்கள் ஏதோ தில்லுமுல்லு செய்வதாக தெரிந்தது. அதனால் தான் சரவணன் சார் என்னை இங்கு அனுப்பி அதை கண்டுபிடிக்கச் சொன்னார். உங்கள் அலுவலகத்தில் மாதம் ஒன்றுக்கு எவ்வளவு வசூல் என்று எங்களுக்கு கணக்கு தெரியும். எங்களுக்கு தெரியாமல் நீங்கள் வசூல் செய்வதை கண்காணிக்க எங்களது ஆள் இங்கே இருக்கிறார்கள். இனிமேல் நீங்கள் வசூலிக்கும் பணத்தில் பாதியை சாரியாக சரவணன் சாருக்கு அனுப்பிவிடவேண்டும். இல்லாவிட்டால் என்ன ஆகும் என்று உங்களுக்கே தெரியும். இன்று நான் கொடுத்த பணத்தை என்னிடம் திருப்பி கொடுங்கள். அந்த பத்திரம் வெறும் வெத்துப் பத்திரம் மட்டுமே!”
இருவரும் பாத் ரூமில் இருந்து வெளியே வந்தனர்.
அவர்கள் வெளியே வரவும்... அங்கே புதிதாக மூன்று பேர் வரவும் சரியாக இருந்தது. புதிதாக வந்தவர்களில் ஒருவர், “மிஸ்டர் செல்வரங்கம், நாங்க விஜிலன்சில் இருந்து வருகிறோம். உங்கள் அலுவலகத்தை சோதனை செய்யவேண்டும்.” என்று அவர் சொல்ல... செல்வரங்கம் என்ன செய்வது என்று முழித்துக்கொண்டிருந்தபோது, விஜிலன்ஸ் அதிகாரி, “என்ன மிஸ்டர் நல்லதம்பி, செல்வரங்கம் பாத் ரூமில் பேசியது எல்லாம் பதிவு செய்துவிட்டீர்களா?” என்று கேட்டார்.
அப்பொழுதுதான் நல்லதம்பியும் அந்த விஜிலன்ஸ் கூட்டத்தை சேர்ந்தவர் என்று செல்வரங்கத்துக்கு தெரிந்தது. தான் வகையாக சிக்கிக் கொண்டது மட்டும் இல்லாமல், யார் யாருக்கெல்லாம் லஞ்சம் பங்கு கொடுக்க வேண்டும் என்று அவர்களையும் சேர்த்து சிக்கவைத்துவிட்டது தெரிந்தது.

Leave a comment
Upload