
“அந்த ஹோட்டல்ல டிஃபன் சூப்பரா இருக்கும், இந்த மெஸ்ல மதியம் மீல்ஸ் செமையா இருக்கும், அந்த ஹோட்டல்ல நைட் டின்னர்னா எனக்கு டபுள் ஓகே, நைட் டைம் டிஃபன் மட்டுமில்லை...சூடா சாப்பாடும் கிடைக்கும், மதியம் வெரைட்டி ரைஸ்னா அந்தக் கடை தான்! டேஸ்ட் பிரமாதம்..”
சில உணவு ஸ்தாபனங்கள் பற்றி நம்ம ஆட்கள் இப்படி சொல்வதை அனைவருமே கேட்டிருப்போம். வடை, பஜ்ஜி போன்ற பலகாரங்களுக்காக ஒரு கடை இருந்தால் எப்படி இருக்கும்? ருசி மட்டுமல்ல. அக்கடையில் தருவிக்கப்படும் பலகார வகைகளைக் கேட்டாலே மலைப்பாக இருக்கும்.
காலையில் இனிப்பு போண்டா, மெது வடை என்று பலகாரக் கடைகளுக்கே உரிய இலக்கணத்துடன் தான் இவர்கள் கடையும் அன்றாடம் ஆரம்பமாகும். முற்பகல் பதினோரு மணியளவில் சூடாக இவர்கள் தரும் கீரை வடைக்கு அப்பிராந்தியத்தில் மிகப் பெரியதொரு ரசிகர் கூட்டம் உண்டு. காலை முதல் மதியம் இரண்டரை மணி வரை குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட பலகாரம் என்று முறை வைத்து செயல்படும் கடை, மாலை மூன்று மணியிலிருந்து திருச்சியின் அகன்ற காவிரி போல் பொங்கி ததும்பத் துவங்கும்.
- மெது வடை
- மசால் வடை
- கீரை வடை
- மெது போண்டா
- உருளைக்கிழங்கு போண்டா
- வெங்காய போண்டா
- வாழைக்காய் பஜ்ஜி
- மிளகாய் பஜ்ஜி
- உருளைக் கிழங்கு பஜ்ஜி
- ப்ரெட் பஜ்ஜி
- அப்பள பஜ்ஜி
- கத்திரி பஜ்ஜி
- வெங்காய பஜ்ஜி
- சமோசா
- மெது பக்கோடா
இத்தனை ரகங்களும் இரவு எட்டு மணி வரை கிடைக்கும். தொட்டுக் கொள்ள சாம்பார் மற்றும் பொட்டுக்கடலை ,தேங்காய் பிளஸ் பச்சை மிளகாய் சேர்த்து சுள்ளென அரைத்த சட்னி.
2002 – 2004 சுமார் இரண்டு வருடம் தஞ்சாவூரில் மெடிக்கல் ரெப்பாக இருந்தபோது சகலபாடிகளால் அறிமுகமான கடை இது. கடைக்கு அருகே ஓரியண்டல் ஹையர் செகண்டரி ஸ்கூல். தினமும் பள்ளி வகுப்புகள் முடிந்தவுடன் வீடு திரும்பும் மாணவர்கள் ஆசிரியர்கள் என கணிசமான பள்ளிக்கூட வாடிக்கையாளர்கள் இந்த கடைக்கு சாப்பிட வருவார்கள்.
தெற்கலங்கத்தின் இறுதியில் சாலையின் வலது புறம் திரும்பினால் மேல வீதி, அதில் வலது பக்கம் உள்ள பெரிய கட்டிடத்தில் மருந்துகள் விற்பனை செய்யும் டிஸ்ட்ரிபியூட்டர் அலுவலகம் ஒன்று இருந்தது. மெடிக்கல் ரெப்களிடையே அவர்கள் பிரபலம். மாதக் கடைசிகளில் முகம் சுளிக்காமல் ஆர்டர் தரும் புண்ணியவான்கள். அதே மேல வீதியில் சிறிது தொலைவு சென்றால் நான் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் டிஸ்ட்ரிபியூட்டர் இருந்தார். சனிக்கிழமை வாரந்திர ஸ்டேட்மெண்ட் வாங்க மாலை ஆறு மணியளவில் செல்லும் போது, மாதக் கடைசியில் ப்ரைமரி ஆர்டர் எடுக்க மாலை மூன்று மணியிலிருந்து மணிக்கணக்கில் காத்திருக்கும் போது, தெற்கலங்கத்தில் முற்பகல் பதினொன்றரை மணியளவில் ரெப்களைப் பார்க்கும் பீடியாட்ரிஷியன் டாக்டர் ஜானகிராமன் அவர்களைப் பார்க்கும் போது... என வாரத்தில் குறைந்தபட்சம் மூன்று முறையாவது அந்தக் கடைக்கு சென்று பலகாரப் பிரசாதம் உண்பது கடமையாகிப் போனது.
ப்ரைமரி ஆர்டருக்காக காத்திருக்கும் போது மணித்தியாலத்திற்கு ஒரு முறை பரிதவிப்புடன் கடைக்கு வந்து பலகாரம் டீ என ரிலாக்ஸ் செய்யும் போது ஒரு ருசி. வெற்றிகரமாக ஆர்டரும், செக்கும் வாங்கிய பின்பு உச்சக்கட்ட உற்சாகத்துடன் கடைக்கு வந்து பலகாரம், டீ என ரிலாக்ஸ் செய்யும் போது அது வேறொரு ருசி. தெற்கலங்கத்தில் காலை வேளைகளில் ரெப்களைப் பார்க்கும் டாக்டர்களை சந்தித்த பின் கடைக்கு வந்து பலகராம்... அது இயல்பான அமைதியான ருசி.
கடையில் உள்ள மாஸ்டர் எப்போதும் போல ஒரே மாதிரியான நா ருசியில் பதார்த்தங்களைத் தருவித்தாலும் மனோநிலையானது, சூழலுக்கு ஏற்ப மூன்று விதமான ருசிகளை நாவுக்கு கடத்துகிறது போலும்!
தஞ்சைவாசிகள், தஞ்சைக்கு செல்லும் நண்பர்கள் மேல வீதியில் ஓரியண்டல் பள்ளிக்கூடமருகே உள்ள இந்த பலகாரக்கடைக்கு சென்று ஒரு முறை சாப்பிடுங்கள். நீங்கள் ஏற்கனவே பல முறை இந்த கடைக்கு சென்றிருந்தாலும் சரி... அல்லது முதல் முறை செல்பவராக இருந்தாலும் சரி...என் கட்டுரையைப் படித்த பின்பு நீங்கள் செல்வது எனக்கு ஜென்ம சாபல்யத்தைத் தரும் ப்ளீஸ்!

Leave a comment
Upload