
“Zindagi Na Milegi Do Barah” இது கொஞ்ச கால்ம் முன்பு வெளிவந்த இந்தி படத்தின் பெயர் மட்டுமல்ல, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று அழகாய்ச் சொன்ன ஒரு படமும்.
இருப்பது ஒரு வாழ்க்கை, வாய்ப்பு இரண்டாம் முறை வராது, முதன் முறையே பயன்படுத்திக்கொள் அதை அழகாய், என்பதே அந்த படம் சொன்ன பாடம்!

இதை மிகச்சரியாக புரிந்து கொண்டுள்ளனர், ஒடிஷா மாநில புவனேஸ்வரில் ‘ஜிந்தகி பவுண்டஷனில்’ உள்ள மாணவர்கள். நீட் தேர்வில் இவர்கள் பெரும் சாதனையை நிகழ்த்திக்காட்டி இருக்கிறார்கள். ‘ஜிந்தகி பவுண்டஷனின்’ உதவியோடு படித்து, நீட் (NEET) தேர்வில் 19 மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சமூகத்தின் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய மாணவர்கள். இவர்களின் தாய் - தந்தையர் தினக்கூலி செய்பவர், வண்டி இழுப்பவர், ரோட்டோர கடை வைத்திருப்பவர்கள். ஆனால், மனசு நிறைய கனவுகள் வைத்திருப்போர். தாங்கள் தான் படிக்காமல் இப்படி ஆகிவிட்டோம், தங்கள் பிள்ளைகளாவது படித்து ஒரு மருத்துவராகி, தங்கள் கிராம மக்களுக்கு உதவ வேண்டும், என்று கனவு காண்பவர்கள்.
இப்படி கனவு கண்ட ஒரு ஏழை விவசாயக் கூலியின் மகள் தான் கிரோதினி சாஹு. இவர் இந்த நீட் தேர்வில் 657 / 720 பெற்றிருக்கிறார். இவர் ஜிந்தகி பவுண்டேஷன் பற்றி சொல்கையில், “மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள் நான், என் அப்பா விவசாய தினக்கூலி வேலை செய்பவர். எப்படியோ பலவித சிரமங்களுக்கிடையில் நான் +2 படித்து முடித்தேன். எனக்கு மருத்துவப்படிப்பின் மேல் கனவு இருந்தது, நானே முயற்சி செய்தேன், என்னால் நீட் தேர்வினில் வெற்றி பெற இயலவில்லை. என் கிராமத்தில் இருப்பவர்கள் ஜிந்தகி பவுண்டேஷன் பற்றி சொன்னார்கள். நான் அவர்கள் வைக்கும் தேர்வில் வெற்றிபெற்று தேர்வானேன். எனக்கு எல்லா வசதிகளையும் தந்து நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பும் நடத்தினார்கள்.”
இன்னொரு மாணவன் கூறுகையில்... “என் அப்பா ஒரு விவசாயி, அவரால் கோச்சிங் வகுப்புக்கு அனுப்ப வசதியில்லாததால்... நான் இங்கே வந்து சேர்ந்தேன், லாக்டௌன் நேரத்தில் சேர்ந்தேன். எனக்கு இடம், உணவு, படிப்பு என அனைத்தையும் பார்த்துக்கொண்டார்கள். நான் அவர்களுக்கு மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்.”

ஜிந்தகி பவுண்டேஷன் என்ற இந்த அமைப்பு 2017 ம் ஆண்டு அஜய் பகதூர் சிங் என்பவரால் துவங்கப்பெற்றது. அவருடைய மருத்துவ படிப்பு எனும் கனவு, பொருளாதாரம் என்னும் தீயால் பொசுக்கப்பட்டது. அப்போது அவர் எந்த ஒரு தவறான முடிவும் எடுக்காமல், தன்னைப்போல நன்கு படித்து, நல்ல மதிப்பெண் இருந்தும் பொருளாதார நிலையால் மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் போனவர்களுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்திட தயாரானார். ஏழை மாணவர்களுக்கு அனைத்து வசதிகளையும் தந்து அவர்களை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்வதையே நோக்கமாக கொண்ட ஜிந்தகி பவுண்டேஷனை நிறுவினார். தனது குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவால், டீ விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட அவர், மனம் தளராமல், இது போல் சிரமப்படுகிறவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தேர்வு வைத்து, அவர்களின் கல்வித் தகுதியை மட்டும் கணக்கில் கொண்டு, அவர்களுக்கு தேவையான உணவு, உடை, தங்கும் வசதி, மற்றும் ஆசிரியர்கள் மூலம் பாடம் சொல்லித்தரும் வசதி செய்து தருவதை தனது அமைப்பின் முக்கிய பணியாக ஏற்று நடத்தி வருகிறார்.
சென்ற வருடம் இவருடைய அமைப்பில் பயின்று தேர்ச்சி பெற்ற 14 மாணவர்களில் 12 பேருக்கு அரசு மருத்துவ பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்க.. அதை ஒரு விழாவாகவே கொண்டாடினார் ஒடிஷா முதல்வர் நிதின் பட்நாயக்.
இந்த முறை 19 மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
ஊடகத்துறையினரிடம் இவ்வமைப்பில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவி சுபலக்ஷ்மி சாஹு கூறுகையில் “டீ விற்றவர் நமது நாட்டின் பிரதம மந்திரி ஆகும்போது, நாங்கள் மருத்துவராக ஆக முடியாதா?” என்றார். இவர் ஒரு சிறு விவசாயியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை பார்க்கும்போது ஊருக்கு ஒரு அஜய் இருந்தால், அனிதாக்கள் மரணம் நிகழாமல் போயிருக்கும் என தோன்றுகிறது.
நம்ம ஊர் மாணவர்கள் நீட்டில் கடைத்தேற அஜய் போன்ற தேவதூதன் எப்போது வருவாரோ?!

Leave a comment
Upload