
விஜயதசமி என்றாலே நினைவுக்கு வருவது, குழந்தைகளைப் புதிதாக பள்ளியில் சேர்ப்பதற்கும், பலவிதமான கலைகளைக் கற்பதற்காக குருவிடம் சேர்வதற்கும் உகந்த நாள் என்பதாகும். அந்தக் காலத்தில் குருகுலத்தில சேர்ந்தது முதல், இன்று கல்வி கற்கும் முறை வரை எண்ணிலடங்கா மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே”
என்று ஔவையார் சொன்னது போல, கல்வி கற்பது என்பது ஒருவரின் தலையாய தேவையும், கடமையும் ஆகும். தன் வாழ்க்கையை புரிந்துகொண்டு, அதனை எளிதாகக் கடப்பதற்கும், தன்னைச் சார்ந்த சமுதாயத்தில் ஆக்கப்பூர்வமான, நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரவும் மிகச் சிறந்த கருவி, ஒருவர் கற்கும் கல்வி ஆகும்.
கல்வி என்பதற்கு பாலின வேறுபாடுகள் கிடையாது.
“கல்வியில்லாப் பெண்கள்
களர் நிலம் – அங்கே
புல் விளைந்திடலாம்
நல்ல புதல்வர்கள் விளைவதில்லை”
என்றார் பாரதிதாசன். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், கல்வியறிவு என்பது மிக முக்கியம். கல்விக்கண் இல்லதவர்களுக்கு முகத்தில் இருக்கும் இரு கண்களும் புண்களே என்கிறார் திருவள்ளுவர்.
கல்வியின் முக்கியத்துவத்தை கல்வி அதிகாரத்திலுள்ள பத்து குறட்பாக்களும் எடுத்துச் சொல்லும்.
இப்படிப்பட்ட கல்வியை கற்றுத்தரும் ஆசான் இறைவனுக்கு ஒப்பாவார். அதனால்தான், “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்று சொல்கிறோம். புராண காலம் முதல் இன்றுவரை எத்தனை எத்தனையோ வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கொண்டுள்ளது கல்வித்துறை. அத்தனையையும் உள்வாங்கி, கல்வியைச் சிறப்பாக கற்றுத்தர ஆசிரியர்களும், கற்றுக்கொள்ள மாணவர்களும் தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள்.
குருகுல காலம் முதல், இன்றைய இணையவழிக்கல்வி வரை உள்ளவற்றை அமைதியாக அசைபோட்டுப் பார்க்கலாம்.
ஆசிரியரிடம் மாணவன் எப்படி கற்றுக்கொள்ள வேண்டும்…? கல்வி பயில வேண்டும்…? என்பதைப் புறநானூற்றுப்பாடல் அழகாக குறிப்பிடுகிறது.
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே.”
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இயற்றியுள்ள இந்தப் பாடலில், ஒரு மாணவன் என்பவன், தன்னுடைய ஆசிரியருக்கு தேவைப்படும் நேரத்தில் முன்னின்று உதவி புரிந்தும், அவருக்குத் தேவையான நேரத்தில் பொருளுதவி செய்தும், பின்னாளில் அவரை மறவாது, வெறுக்காது, பணிவன்புடனும் கற்றல் வேண்டும் என்று கூறியுள்ளார்.
வேதகாலத்தில், கல்வி கற்பிப்பது குருகுலத்தில் நடைபெற்றது.
ஏழையோ, பணக்காரனோ, அரசன் மகனோ அல்லது முனிவர் மகனோ எல்லோரும் சமம்தான். அவர்கள் அனைவரும், குறிப்பிட்ட குருவின் ஆசிரமத்தில் தங்கி, அவரிடம் இருந்து பரிபூரண ஞானத்தை பெற்று அவரவர் இருப்பிடம் சேர்வர். கல்வி எப்போதுமே சமுதாயத் தேவைகளை பூர்த்தி செய்வதாகவே அமைய வேண்டும். அப்போதைய மானாராட்சிக் காலத்துக்கு தேவையான விற்பயிற்சி, வாட்பயிற்சி, மற்போர் என்று சகலவிதமான போர்க்கலைகளையும், பிற கலைகளையும் கூட குருகுல அமைப்பில்தான் கற்றுத் தேர்ந்தனர். குரு அவர்களுக்கு கல்வியையும், கலைகளையும் கற்றுத்தருவோடு, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் பல்வேறு அனுபவப்பாடத்தின் மூலம் புரிந்துகொள்ள உதவுவார். குரு தெய்வத்துக்குச் சமமானவர். குருவுக்குப் பணிவிடை செய்வதை தெய்வ சேவையாக சீடர்கள் நினைத்து மிகுந்த அன்புடனும் பக்தியுடனும் செய்வார்கள். எவ்வளவு செல்வச்செழிப்பு இருந்தாலும், பணிவு என்பது அடிப்படை குணமாக இருக்க வேண்டும் என்பதை குருகுலவாசம் வலியுறுத்தியது.
“வளையும் வேய் நிமிரும்: வளையா நெடுமரம்
கிளையுடன் கெடுமே கிளர் காற்றதனில்”
என்பதை நன்கு உணர்ந்திருந்தனர்.
குருதட்சணையாக எதைக் கேட்டாலும் தரும் மனஉறுதி கொண்டவர்களாக சீடர்கள் இருந்தனர். சுதாமன் என்ற குசேலரும், கிருஷ்ணரும், சாந்தீபனி முனிவரின் குருகுல வாசத்தின் நண்பர்கள்தான். கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரமாக இருந்தாலும், சுதாமன் என்னும் தன் நண்பன் கொடுத்த ஒரு பிடி அவலில் உள்ளம் மகிழ்ந்த கதை நமக்கெல்லாம் தெரிந்ததே.
அவ்விதமே துருபதனும் துரோணரும் கூட. இவர்கள் இருவரும் குரு பரசுராமரின் சிஷ்யர்கள். இருவரும் நண்பர்களாக இருந்து, பின் பகைமையை வளர்த்ததும், பின்னாளில் துரோணர் குருவாகி, குருதட்சணையாக துருபதனை பிடித்துவரச் சொன்னதும் உண்டு. சாந்தீபனி முனிவருக்காக, இறந்துபோன அவரது ஒரே மகனை மீட்டு குருதட்சணையாக கிருஷ்ணன் கொடுத்ததும், துரோணருக்கு குருதட்சணையாக துருபதனை அர்ஜுனன் பிடித்ததும், குரு கேட்டதற்காக தன் கட்டைவிரலையே ஏகலைவன் வெட்டிக்கொடுத்ததும், சீடர்கள் குருவின்பால் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தும்.
குருகுலவாசத்தில் பயின்றவைதான், காலத்துக்கும் அவர்களின் வாழ்க்கைக்கு உதவியது. அது போலவே, அரசனின் அவையிலும் ராஜகுரு இருந்து வழிநடத்துவார். குரு – சிஷ்ய பரம்பரைக்குப் மிகபெரிய பாரம்பர்யம் உண்டு.
பின்னாளில், இந்த குருகுல வாச முறையெல்லாம் மாறி, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்வி கற்கும் முறை வந்தது. குறிப்பிட்ட இடத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் சந்தித்து, பாடங்களை கற்பித்தபின், அவரவர் வீடுகளுக்குச் செல்வதும், மீண்டும் அடுத்த நாள் வருவதுமாக பயிற்றுவிக்கும் முறை மாறியது.
இதில் மழலையர் கல்வி, தொடக்கக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக்கல்வி, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், முனைவர் பட்டம் என்று பல நிலைகளில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாநில பாடத்திட்டம், மத்திய பாடத்திட்டம், உலகளாவிய பாடத்திட்டம் என்று பலவிதமான பாடத்திட்டங்களில் மாணவர்கள் பயில்கின்றனர்.
பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் என்று பலவிதமான பிரிவுகளில், எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்றபடி, தங்களுக்குப் பிடித்த பிரிவில், படிக்க வாய்ப்புகள் உள்ளன.
இப்போதும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான அன்பு என்பது எப்போதும் போல உள்ளது. ஆனால், குருகுலத்தில் இருந்த குருவுக்கு எண்ணற்ற அதிகாரங்களும் உரிமைகளும் தன்னுடைய மாணாக்கர்களிடம் இருந்தது. ஆனால், இன்றைய ஆசிரியர்கள் கேள்விகளுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கான கட்டுப்பாடுகள் சில நேரங்களில் அவர்களை கட்டிப்போட்டு விடுகின்றன.
ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த ஆசிரியரிடம் தன் பிள்ளையை அழைத்துப் போய், “சார், இவன் நல்லபடியா வரணும். அது உங்க பொறுப்பு…. நீங்க என்ன வேணாலும் செய்யுங்க…. இவனை நல்லபடியா உருவாக்கிட்டாப் போதும்… நீங்க அடிச்சாலும், திட்டினாலும் நான் ஏன்னு கேக்கமாட்டேன்….” என்ற வார்த்தைகள் மிக சாதாரணமாகக் காதில் விழும். அந்த அளவு ஆசிரியர்களுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், இப்போது, அதட்டிப் பேசினாலே குற்றமாகிவிடும் நிலையும் கூடவே, சில இடங்களில், ஆசிரியர்களை மாணவர்களே தரக்குறைவாகப் பேசுவதும் வருத்தத்தை அளிக்கிறது.
மிகச் சிறந்த மேதைகளையும், அறிவியலாளர்களையும் உருவாக்கும் ஆசிரியர்களுக்கு, அவர்களிடம் படித்த மாணவர்களின் வளர்ச்சி மட்டுமே மகிழ்ச்சியை அளிக்கிறது. சட்டமேதை டாக்டர். பீமராவ் அம்பேத்கர், முன்னாள் குடியரசுத்தலைவரும் மிகப்பெரிய அறிவியலாளருமான டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோரின் வாழ்க்கையில் அவர்களுடைய ஆசிரியர்களின் பங்கு நாமறிந்ததே. டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் ஒரு சிறந்த ஆசிரியராகவே முன்னிறுத்தப்படுகிறார். அதனால்தான் அவருடைய பிறந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. சென்ற மாதம் 5 ஆம் தேதி மிக சிறப்பாக அவரை நினைவு கூர்ந்தோம்.
இப்போது, ஆன்லைன் வகுப்புகள் எனப்படும் இணைய வழிக்கல்வி பல இடங்களில் நடைமுறையில் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த வகை வகுப்புகள் இருந்தது என்றாலும், கொரோனா எல்லா இடங்களையும் ஆட்சி செய்ய ஆரம்பித்தபின், இந்தக் கல்வி முறை பரவலாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கல்வியில் தொய்வில்லாமல் இருக்க இது மிகவும் உதவுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாதக்கணக்கில் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத நேரத்தில் இது ஒரு பெரும் வரமாகவே உள்ளது. அது மட்டுமல்ல…. பல அறிஞர் பெருமக்களின் உரைகள், கருத்தரங்கங்கள், கவியரங்கங்கள் முதல் மருத்துவ ஆலோசனை வரை அனைத்தும் இணையத்தின் மூலம் நடந்து கொண்டிருக்கிறது.
நாய்க்குட்டி எப்படி இருக்கும்? எப்படி வாலாட்டும்? எப்படி விளையாடும்? எப்படி குரைக்கும்…? என்பது எல்லாவற்றையும் காணொலியில் காணும் குழந்தைகள், மனம் மிகவும் மகிழ்ச்சியடையும் என்பதில் ஐயமில்லை. அது போல, அடிப்படைக் கணக்கு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை, எல்லாவற்றுக்குமான வகுப்புகளும் , அவற்றுக்கான அனைத்துக் தகவல்களும் மற்றும் மின் புத்தககங்களும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.
இணையம் மூலம், ஒரே நேரத்தில் வகுப்பறை போல பல மாணவர்களுக்கும் பாடங்களை நடத்த முடியும், அதே நேரம் ஒரு ஆசிரியர் ஒரே ஒரு மாணவருக்கு மட்டும் சொல்லித் தருவதும் உண்டு. நடனம், பாடல், வாத்தியக் கருவிகளை இசைக்கக் கற்றுக்கொள்ளுதல் என்று எல்லா வகையான வகுப்புகளும் இணையவழியிலேயே நடக்கின்றன.
எத்தனையோ வசதிகள் இருந்தாலும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, நேரில் அளவளாவும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை என்பதுதான் ஒரு குறை. இருந்தாலும், அதனையும் சோஷியல் நெட்வொர்க்கிங்க் என்று சொல்லப்படும் சமூக ஊடகங்களாலும், ஒருவரை ஒருவர் கண்டு பேசிக்கொள்ளும் வீடியோ காலிங் மூலமாவும் நிகழ்த்திக் கொள்ளமுடிகிறது.
கல்வி என்பது காலத்தின் போக்குக்கேற்ப பல மாற்றங்களை தன்வசப்படுத்தி, மென்மேலும் வளர்கிறது. ஆழ்ந்து படித்து, சொந்த சிந்தனையை வளர்த்து, சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் ஏதாவதொரு வகையில் தம்முடைய பங்களிப்பை அளிப்பதே இளைஞர்களின் இலக்காக அமைய வேண்டும். எல்லாமே இணையத்தில் இருப்பதால், அவற்றையே நகலெடுத்து வெட்டி, ஒட்டி... தம் சிந்தனைகளாக வெளிப்படுத்துவது கூடாது. பசியும், தாகமும் போல கற்கும் ஆர்வமும், ஆழ்ந்த அறிவும், அலசி ஆராயும் திறனும் அமைய வேண்டும். இன்றைய கல்வி பல்வேறு வாய்ப்புகளையும், அவரவர் திறனை வெளிப்படுத்த உதவும் பல அமைப்புகளையும் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது. அதனை நல்லபடியாக பயன்படுத்தி, சமுதாய மாற்றத்தினை உருவாக்குவது இன்றைய இளைஞர்களின் கனவாக இருக்கவேண்டும்.
உலக நாடுகளோடு ஒப்பிடுகையில், எல்லா வகையிலும் இந்தியா தன்னிறைவு பெற்று, பிற நாடுகள் நம்முடைய வழிமுறைகளைக் கடைபிடித்து ஒழுகும் நிலையை நாம் கூடிய சீக்கிரத்தில் நிச்சயம் அடைவோமாக!!!

Leave a comment
Upload