தொடர்கள்
பொது
கோயிலுக்குள் வந்த முதலை?! – ஆர் .ராஜேஷ் கன்னா.

2020923171244274.jpg

வடக்கு கேரளாவில் காசர்கோட் மாவட்டத்தில் இருக்கும் அனந்தபுரம் மகாவிஷ்ணு குளக்கோயில் ஆயிரம் வருட பாழமையானது. கேரளாவில் செவ்வக வடிவ குளத்தின் நடுவே கட்டப்பட்ட ஓரே கோயில் என்ற பெருமையை அனந்தபுரம் மகாவிஷ்ணு குளக்கோயில் பெறுகிறது.

அனந்தபுரம் மகாவிஷ்ணு குளக்கோயில் கருவறையில் அமைந்துள்ள மூலவர் எம்பெருமான் நாராயணனை திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள அனந்தபத்மநாபன் என்றே பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அதற்கு காரணம், இந்தக் கோயிலின் குளத்தின் அருகே உள்ள ஒரு சுரங்கம் வழியாக சென்றால் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் திருகோயிலுக்கு செல்ல முடியும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

2020923171353757.jpg

அனந்தபுரம் மகாவிஷ்ணு குளக்கோயில் கி.பி 9 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. அனந்தபுரம் மகாவிஷ்ணு கோவிலில் உள்ள செவ்வக வடிவ குளத்தில் உள்ள முதலையை கோயிலின் பாதுகாவலர் மற்றும் இறைவனின் தூதர் என்று பக்தர்கள் பல்லாண்டு காலமாக வழிபடுகின்றனர்.

அனந்தபுரம் மகாவிஷ்ணு குளக்கோயிலில் வாழும் முதலை முற்றிலும் சைவ உணவினையே உண்ணும். குளத்தில் இருக்கும் மீன்களை கூட இதுவரை குளத்தில் உள்ள முதலை சாப்பிட்டது கிடையாது. குளத்தில் வாழும் சைவ முதலைக்கு “பாபியா” என்று பெயரிட்டு கோயிலின் பூசாரிகள் அன்புடன் அழைக்கின்றனர்.

அனந்தபுரம் மகாவிஷ்ணு குளக்கோயிலில் மதிய நேரத்தில் மூலவருக்கு நைவேதியம் முடிந்த பின், பக்தர்கள் பாபியா முதலைக்கு வழங்கும் அரிசி மற்றும் வெல்லத்தால் ஆன உணவினை கோயிலின் பூசாரிகள் அல்லது கோயில் நிர்வாகிகள் குளம் அருகே சென்று பாபியா என்று கூப்பிட்டதும்... குளத்து நீரில் மெதுவாக நீந்தியப்படி அருகில் வந்து, அரிசி உருண்டைகளை வாங்கி உண்டு விட்டு மீண்டும் தண்ணீரில் அது சாதுவாக நீந்திச் சென்றுவிடும்.

பக்தர்கள் உணவு வழங்கினாலும், பாபியா சைவ முதலை அருகில் வந்து உண்ணாது. கிட்டதட்ட பாபியா முதலை 70 வருடங்களுக்கு மேலாக அனந்தபுரம் மகாவிஷ்ணு குளக்கோயில் குளத்தில் வாழ்ந்து வருகிறது. இதுவரை குளத்தில் இறங்கி குளிக்கும் பக்தர்கள் ஒருவரைக் கூட அது தீண்டியது கிடையாது என்று பக்தர்கள் பரவசப்படுகின்றனர்.

அனந்தபுரம் மகாவிஷ்ணு குளக்கோயில் முதலை மடிந்தாலும், மீண்டும் தானாகவே இன்னொரு முதலை குளத்தில் தோன்றி விடுகிறதாம்! “என் வாழ்நாளில் இதுவரை ஒரு முதலை குளத்தில் இறந்ததும் உடனே அடுத்த முதலை தோன்றி விடுகிறது... இது மாதிரி, நான் அடுத்தடுத்து மூன்று முதலைகள் தானாக குளத்தில் தோன்றியதை என் வாழ்நாளில் பார்த்து வருகிறேன்” என்ற ஆச்சர்யமான செய்தியை கோயில் அருகே இருக்கும் வசிக்கும் வயதான முதியவர் தெரிவிக்கிறார்.

2020923171425272.jpg

சென்ற வாரத்தில் ..செவ்வாய்கிழமை மாலை அனந்தபுரம் மகாவிஷ்ணு குளக்கோயில் பூசாரி பக்தர்களின் தரிசனத்திற்காக நடையை திறந்து வைத்து இருந்தார். கோயிலின் உள்ளே பக்தர்கள் யாரும் வராத நேரத்தில் குளத்தில் இருந்து பாபியா முதலை முதன்முறையாக கோயிலின் உட்பிரகாரம் வரை தவழ்ந்து வந்து விட்டது.

கோயில் குளத்தில் இருந்து முதல் முறையாக கோயிலின் கருவறை அருகே வந்த பாபியா முதலையை பார்த்த பூசாரிக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது. சாதுவாக வந்து சில நிமிடங்கள் கோயிலின் உள்ளே எந்தவித தொந்தரவும் செய்யாமல் அப்படியே அமைதியாக பாபியா முதலை இருந்தது. கோயிலின் தலைமை பூசாரி சந்திரபிரகாஷ் நம்பீசன் பாபியா முதலை அருகே சென்றவர்… ‘இங்கிருந்து உனது தங்கும் இடமான குளத்திற்கு சென்று விடு’ என்று கட்டளையிட்டு குளத்தினை நோக்கி அதற்கான பாதையினை கை காட்டினார். அதுவரை கோயிலின் உள்ளே இருந்த முதலை, எந்தவித சலனமும் இல்லாமல் வந்த வழியே திரும்பி நடந்து மீண்டும் தனது இருப்பிடமான குளத்திற்கு சென்றுவிட்டது. தகவல் அறிந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்து அந்த பூசாரியை விசாரித்த வண்ணம் இருந்தனர்.

பல நூற்றாண்டுகளாக கோயில் குளத்தில் தானாகவே உருவாகி, கோயிலை காத்து வரும் பாபியா முதலை முதல் முறையாக கோயிலின் உட்பிரகாரம் வரை வந்தது, எம்பெருமான் நாராயணன் தன் தூதவனை கோயிலுக்கு அனுப்பி ஏதோ ஒரு தகவலை பக்தர்களுக்கு சொல்லி இருக்கிறார் என்ற அளவில் கேரள பக்தர்களின் பரவலான நம்பிக்கையான பேச்சாக உள்ளது.

‘பாபியா முதலைக்கும் தலைமை பூசாரிக்கும் நல்ல உறவு உள்ளது. தற்போதும் கோயிலுக்கு முதல் முறையாக விஜயம் செய்த பாபியா முதலை, தனது ஆத்மார்த்தமான கோயில் பூசாரியின் சொல்லுக்கு அடி பணிந்து மீண்டும் குளத்திற்கு சென்று விட்டது’ என்று கோயிலின் அதிகாரி சந்திரசேகரன் தெரிவித்தார்.

எம்பெருமான் நாராயணனின் தூதுவனாக குளத்தில் இருந்து கோயிலுக்கு வந்த பாபியா முதலை என்ன செய்தி சொன்னது என்பது தான் கேரள பக்தர்களின் ஆச்சரியமிக்க கேள்வியாக உள்ளது! நமக்கும்தான்!