தொடர்கள்
Daily Articles
ஜ(ம ) னங்களின்    கலைஞன்  - வேங்கடகிருஷ்ணன் 

20210317094735943.jpg

ஜ(ம ) னங்களின் கலைஞன்

இன்று மறைந்த, நம் மனங்களில் நிறைந்த சின்னக் கலைவாணர் விவேக், அவரே சொன்னது போல... “இன்னைக்கி செத்தா நாளைக்கி பால்” என்ற யதார்த்த உண்மையை புரியவைத்துவிட்டு புறப்பட்டு விட்டார். 59 வயதாகும் இவரைப்பற்றிய 59 செய்திகள்.

* இந்திராகாந்தி பிறந்த நாளில் பிறந்த விவேகானந்தன்.

* சங்கரன்கோயிலில் பிறந்தவர் இந்த ஜனங்களின் கலைஞன்..

* மதுரை அமெரிக்கன் கல்லூரி படிப்பு, அத்துடன் கல்லூரி நாடக நடிப்பு.

* ஹ்யுமர் கிளப்பில் கோவிந்தராஜனால் பாலச்சந்தருக்கு அறிமுகம்,

* அவருக்கு திரைக்கதை, வசனத்தில் உதவியாளராக இணைந்தார்.

* குட்டுப்பட்டது பாலச்சந்தரின் மோதிரக்கையால், மனதில் உறுதி வேண்டும் படத்தில் சுஹாசினியின் ஒரு தம்பியாக....(1987 )

* வாயில் இட்லியை வைத்து அடைத்துக்கொண்டு உண்மையை சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீரை வெளிப்படுத்தும் அந்த காட்சி ஒன்றே போதும் இவர் பாஸாகி விட்டார் என்பதை சொல்ல.

* புது புது அர்த்தங்கள் இவருடைய நடிப்புலக வாழ்க்கைக்கு புது அர்த்தம் கொடுத்தது.

* பின்னர் ஒரு வீடு இரு வாசல், பிறகு பாலச்சந்தர் யூனிட்டிலிருந்து கிளி பறந்தது.

* புத்தம் புது பயணம் கே.எஸ். ரவிகுமாருடன் (1991).

* அதிலிருந்து சிங்கிள் காமெடியன் வேதங்கள் கைக்கு வந்தன

* தல அஜித்துடன் காதல் மன்னன், உன்னைத்தேடி வாலி என்று கலக்கினார்.

* பின்னர் ப்ரஷாந்துடன் மூன்று படம்.

* 2000 -2001 பயங்கர பிசி, ஒரு வேகத்தில் 50 படங்கள் முடித்து விட்டார்.

* டைரக்டர். ராம. நாராயணனோடு இணைந்து நிறைய படங்கள் செய்தார். பாளையத்து அம்மன் படத்தில் பராசக்தி சிவாஜி வசனங்கள், இவர் மாற்றி எழுதி பேசியதை, அதன் மூல வசனகர்த்தா, கலைஞரே ரசித்தார்.

* 2002 2003 இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து சிறந்த நகைச்சுவை கலைஞருக்கான பிலிம் பேர் விருது பெற்றார்.

* அவர் மாதவனுடன் இணைந்து செய்த “ரன்” பட நகைச்சுவை மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. முதல்வன், மூன்றாம் பிறை ஆகிய படங்களையே அவர் பகடி செய்திருந்தார்.

* தரணியின் தில், தூள். ப்ரியதர்ஷனின் லேசா லேசா பெரும் புகழைச் சேர்த்தன.

* சாமி படத்தில் இவர் ஏற்ற புரட்சிகரமான புரோகிதர் பாத்திரம் இன்றும் அந்த வசனங்களுக்காக நினைவு கொள்ளப்படுகிறது

* “உக்காரும் ஒய் போட்டுக்காட்டறேன்” என்று அவர் செல் முருகனை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு, ரவுண்டு வரும் காட்சி மறக்கமுடியாதது.

* பாரதியாரும், கலைவாணரும் செய்ததை தன் காமடியால் செய்த உன்னதக் கலைஞன்.

* பாய்ஸ் படத்தை தூக்கி நிறுத்தியவர் என்று “தி ஹிந்து” விமர்சித்தது.

* மீண்டும் தமிழக அரசு விருது “பேரழகன்” ‘மேரேஜ் அசம்பளர்’ என்கிற புது வார்த்தையை கல்யாண தரகருக்காக உருவாக்கி வெற்றி பெற்றதற்காக.

* செல்லமே மற்றும் எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி இரண்டும் அவரின் பங்களிப்பில் பெரு வெற்றி பெற்றன.

* “மிரிண்டா” குளிர் பணத்தின் விளம்பர தூதுவராக நியமனம்.

* தன் பங்களிப்பால் அவர் வெற்றி பெறச் செய்த படங்கள் நிறைய உண்டு, அந்த வகையில் அவர் சின்னக் கலைவாணரே!

* தங்கர் பச்சானின் “அழகி” படத்தில் இவர் இவராகவே நடித்தார் இயக்குனரின் விருப்பப்படி, விநியோகஸ்தர்கள் விரும்பியதால்.

* 2004 ல் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த சொல்லி அடிப்பேன் படம் ரிலீஸ் ஆகவில்லை.

* அதன் பின்னர் ஒரு படப்பிடிப்பில் நடந்த விபத்தால், ஆறு மாதம் ஓய்வில் இருந்தார்.

* 2005-ல் அந்நியன் சாரியை மறக்க முடியுமா? மிகப்பெரிய வெற்றியை பெற்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழக அரசு விருது.

* “கும்பிபாகம்” என்று மாற்றி எழுதப்பட்ட அட்டையை வைத்து கொண்டு அவர் செய்த கூத்து.....

* அதற்கு அடுத்த பெரிய ஹிட் ஷங்கரின் “சிவாஜி” எப்படி சந்திரமுகிக்கு வடிவேலு வேண்டுமென்று ராஜி கேட்டாரோ, இந்த படத்திற்கு விவேக் வேண்டுமென்று ரஜினி கேட்டார்.

* “நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி”, “சிவாஜி இவர்தான், எம்.ஜி.ஆரும் இவருதான், இந்த நம்பியார் வேலையெல்லாம் வேண்டாம்” என ரசிகர்களின் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே சொல்வது பெரிய ஹிட்.

* இந்த படத்தில் ரஜினி சொல்லவேண்டிய அத்தனை பன்ச் டயலாக்குகளையும் விவேக்கே சொல்வார். அது இன்னும் பெரிய வரவேற்பை பெற்றது.

* பின்னர் பெரிய ஹிட்டான காமெடி, சுந்தர் சி யின் ஐந்தாம்படை, சச்சு வோடு இவர் அடித்த லூட்டி.

* தனுஷோடு படிக்காதவன் - அசால்ட் ஆறுமுகம் என வடிவேலுவின் அலர்ட் ஆறுமுகத்துக்கான கவுண்டர் கேரக்டரில் தூள் கிளப்பினார்.

* தனுஷ் கொஞ்சம் அடக்கி வாசித்தார் என்றே சொல்ல வேண்டும். தண்ணீருக்குள் பெண் வேடத்தில் மூழ்கி ரவுடிகளால் துரத்தப்படும் பகுதி நிச்சயம் பெரிய ஹிட் ஆடியன்ஸ் மத்தியில்.

* சிங்கம் “ஏட்டு எரிமலையை” மறக்க முடியுமா. விஜயகாந்தின் “எரிமலை எப்படி பொறுக்கும்” பாடலை வைத்து செய்த நகைச்சுவை என்றும் நம் நினைவில்.

* பின்னர் டைரக்டர் பாலா மற்றும் கமல்ஹாசன் அறிவுரையின் பேரில் நகைச்சுவையிலிருந்து விலகி என் பெயர் பாலா அனா குணச்சித்திர வடிவம் காட்டினார்.

* ராதா மோகனின் பிருந்தாவனம் விவேக்காகவே நடித்து ஒரு மாற்றுத்திறனாளியின் நட்பை பெரும் பாத்திரத்தில் மனதை கரைய வைத்தார்.

* 2019 ல் இவரும் சார்லியும் நடித்த வெள்ளைப்பூக்கள் படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

* அருள் செல்வியை மனந்து இல்வாழ்க்கையை துவங்கியவருக்கு மூன்று செல்வங்கள்.

* ஒரு மகன், இரு மகள்கள், ஒரே மகன் பிரசன்ன குமாரை முளைக்காய்ச்சலுக்கு அவனது பதிமூன்றாவது வயதில் பறிகொடுத்தார்.

* மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களால் ஈர்க்கப்பட்டு, அவரின் அறிவுரைப்படி மரம் நடத்த துவங்கியவர்.

* கிரீன் கலாம் பவுண்டஷன் என்னும் அமைப்பை உருவாக்கி தமிழமெங்கும் மரங்களை நடுவதை தொடர்ந்து செய்து கொண்டு வந்தவர்.

* ஏறக்குறைய முப்பத்தி ஐந்து லட்சம் மரங்களை இதுவரை அவர் நடச்செய்துள்ளார்.

* அப்துல் கலாம் அவர்களை பிரத்யேகமாக பேட்டி கண்ட பெருமை விவேக்கிற்கு உண்டு..

* 2006-ல் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ கொடுத்து கவுரவித்தது.

* 2015 ல் சத்யா பாமா பல்கலைக் கழகத்தால் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

* இவர் செய்த சமூக சேவைகள் ஏராளம்,

*நலிந்த கலைஞர்களுக்கு உதவ நிறைய நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார்.

* கலைஞர் மிகவும் ரசித்த நகைச்சுவை கலைஞர் இவர்.

* கலைஞரை போலவே மிமிகிரி செய்து அதையும் அவர் முன்னிலையிலேயே செய்து பாராட்டு பெற்றவர்.

* வைரமுத்துவை நிறைய படங்களில் பகடி செய்து அதிலும் நல்ல கருத்துக்களை சொல்லி சிரிக்க வைத்தவர்.

*இவரின் சாதுர்ய எழுத்துக்கள், எல்லோராலும் விரும்பபட்டன. “கலாமுக்கு ஸலாம்” என்று எழுதியதை யாராலும் மறக்கமுடியாது.

* கார்கில் போர் நிகழ்ந்தபோது, ‘போர் நிதி’ திரட்டும் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியவர்.

* சமகால பிரச்சினைகளை தன் நகைச்சுவையில் எடுத்தாண்டு, அதற்கு தீர்வும் சொன்னவர்.

* “ஆளேயில்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற” என்ற இவரின் வசனம் பெரிய ஹிட்.

* பாலச்சந்தர் கண்டெடுத்த வைரம், பலராலும் பட்டை தீட்டப்பெற்று, தானும் நிறைய உழைத்து தமிழர்களின் வாழ்வில் நகைச்சுவை என்னும் நம்பிக்கையை விதைத்து, அதனை சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படுத்திய பெருமை விவேக்கையே சாரும்.

* சின்னக்கலைவாணர், ஜனங்களின் கலைஞன் என்று அழைக்கப்பட்ட விவேக், இன்று நம்மிடையே இல்லை. அவரின் நகைச்சுவையும், அவர் நட்டு வைய்த்த மரங்களும் என்றும் அவரின் இருப்பை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.

* இன்று மறைந்தாலும் என்றும் நம் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற விவேக்கின் ஆன்மா சாந்தியடைய விகடகவி இறைவனை இறைஞ்சுகிறது.