தொடர்கள்
இசை
நாதஸ்வர தர்பார் - 7... - இசை விமர்சகர் வி. சந்திரசேகரன்

20210807191415851.jpg

சின்ன மௌலானாவிற்கு விருந்து!

“ஒற்றுமை, ஒழுக்கம், கௌரவம்.. ஆகிய மூன்றையும் அவர்களிடமிருந்து இந்தத் தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டும்” என்று தெளிவாக ஆரம்பித்தார் சீனியர் நாதஸ்வரக் கலைஞர் செம்பனார்கோயில் எஸ்.ஆர்.ஜி.கே. கல்யாணசுந்தரம். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக நாதஸ்வர உலகில் தனி முத்திரை பதித்தவர். மலேசியாவில் ஐந்து ஆண்டுகள் கோலாலம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். பல விருதுகளைப் பெற்றுள்ள அவர், தமிழ்நாடு இசைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். நூற்றாண்டு விழா காணும் தன் உறவினரான எஸ்.ஆர்.ஜி. சம்பந்தம் மற்றும் ராஜண்ணா பற்றி இங்கே சொல்கிறார்.

“காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மௌலானா, மதுரை எம்.பி.என். சேதுராமன், பொன்னுசாமி போன்ற பெரிய வித்வான்கள் இசைவுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டபோது, செம்பனார் கோயில் அண்ணன்கள் நாதஸ்வரவுலகை திரும்பிப் பார்க்க வைத்தார்கள் என்றால் அவர்களது சிறப்பு புரியும். எந்த வித போட்டி பொறாமை இல்லாமல் சக கலைஞர்களை மதித்தார்கள். அதற்குப் பெரிய மனசு வேண்டும். மாயவரத்தில் சியாமளா தேவி கோயில் விழாவுக்கு ஒரு முறை ஷேக் சின்ன மெளலானாவை கொண்டு வந்தார்கள். அவர்கள் குடும்பம் தான் அப்போது அந்த விழாவை நடத்தியது. வழக்கமாக வித்வான்கள் இப்படி விழாக்களுக்கு வரும் போது, அன்று இரவே ஊர் திரும்பி விடுவார்கள். ஆனால் ஷேக் சின்ன மெளலானாவை மாயவரத்திலேயே தங்க வைத்து, மறுநாள் மதியம் அவர்களுக்கு பிரமாதமான விருந்து வைத்து அனுப்பினார்கள். அப்போது நானும் அங்கு இருந்தேன். இப்படி அவர்கள் சக வித்வான்களை கௌரவமாக நடத்துவது என்னை வியக்க வைக்கும்!

20210809125729498.jpeg

இந்தப் பண்பாட்டிற்கு காரணம், அவர்களது தந்தை கோவிந்தசாமிப் பிள்ளையின் உயர்ந்த குணமாகக் கூட இருக்கலாம்! ஒரு தடவை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை தருமபுர ஆதீனத்திற்கு வாசிக்க வந்தபோது ஒரு பொறாமை கோஷ்டி ‘அவரை ஒழுங்காக வாசிக்க விடக்கூடாது. இடைஞ்சல் பண்ணனும்’ என்று திட்டம் போட்டது. இந்த விஷயம் கோவிந்தசாமிப் பிள்ளை காதிற்கு வர, ‘அதெல்லாம் ரொம்பத் தப்பு. இன்னிக்கு ஒருநாள் வாசிக்கப் போறார். நாம தான் எப்பவும் வாசிக்கிறோமே’ என்று அந்தக் கோஷ்டியை அடக்கினது எனக்குத் தெரியும். அந்த நல்ல குணம்தான் பிள்ளைகளுக்கும்!

வாசிப்பிலும் அப்பாவின் வாசிப்பை பின்பற்றினார்கள். ‘கோவிந்தசாமிப் பிள்ளை சித்த நேரம் வாசித்தாலும் மற்றவர்களை தூக்கியடிச்சுடுவாரு’ என்பார்கள், அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ஜில்லாவில்! மாயவரம் கடை முகத்தின் போது கோவிந்தசாமிப் பிள்ளை, தன் தம்பி தட்சிணாமூர்த்தி பிள்ளையுடன் சேர்ந்து வாசிப்பதை மகாவித்வான் திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை நின்று ஆர்வமாக கேட்பாராம். அவரது ஆட்கள், “அண்ணே கிளம்புங்க. நாம வேற ஒரு இடத்தில் வாசிக்கணும்” என்று ஞாபகப்படுத்திய போது, “இந்த சிங்கங்கள் வாசித்து விட்டுப் போகட்டும். அப்புறம் கிளம்பலாம்” என்பாராம் திருவீழிமிழலை. ஆக அப்படியொரு பரம்பரையில் வந்தவர்கள் தானே எஸ்.ஆர்.ஜி. சகோதரர்கள்! கீர்த்தனைகளை முறைப்படி கற்றவர்கள் என்பது அவர்களது வாசிப்பில் அழகாகத் தெரியும். பண்டுரீதி கொலு, சாமஜ வர கமணா, தெலிசி ராம, ப்ரோவபாரம்மா... உள்பட சில கீர்த்தனைகளை அவர்கள் வாசித்து நிறைய கேட்டிருக்கிறேன். நல்ல பாடந்திரம். நல்ல பண்பாடு. அது ஒரு தவ வாழ்க்கை..” என்று முடித்துக் கொண்டார் கல்யாணசுந்தரம்.