தொடர்கள்
பொது
தில்லாலங்கடி சிறைபறவை “ சுகேஷ் சந்திரசேகர்”! - நமது சிறப்பு நிருபர்.

20210807202835520.jpg

டெல்லி, ரோஹினி சிறைச்சாலை….. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கைதியாக இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள், ஆங்கில திகில் திரைப்படத்தை மிஞ்சூம் வகையில் உள்ளது.

சிறை பறவையான சுகேஷ் சந்திரசேகர், ஒரு வருடத்தில் தனது வாட்ஸ் அப் மற்றும் செல்போனை பயனபடுத்தி, ரூபாய் 200 கோடிக்கு மேல் பணபரிவர்த்தனை நடந்துள்ளது என பொருளாதார குற்றப்பிரிவு சொல்லும் குற்றசாட்டு.

சிறையிலிருந்தே 200 கோடி சம்பாத்தித்த குற்றவாளி தான் இந்திய அளவில் ஹைலைட்டாக பேசப்படும் டாக்…

யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்…. என்ற கேள்வியுடன் ஆராய தொடங்கினோம்…

எளிமையான தோற்றத்தில், டெல்லி - ரோஹினி சிறைச்சாலையில், 32 வயதான சுகேஷ் சந்திரசேகர் அமைதியான தோற்றத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

சுகேஷ் சந்திரசேகர், தனது 17 வயதில் ஏமாற்று வேலையை தொடங்கி, தனது சாதுர்யத்தால் பெங்களுரு மற்றும் சென்னையில் பல கோடி சொத்துக்களை வாங்கியவர் என்று பொருளாதார குற்றப்பிரிவினர் வலைவீசி அலசி கொண்டு இருக்கின்றனர்.

சுகேஷ் சந்திரசேகர் தனது 17 வயதில் குற்ற உலகின் முடிசூடா மன்னனாக திகழ ஆரம்பித்தவர் மீது 25-க்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர். போலீசார் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

சிறையில் இருந்து தனது நெட்வொர்க்கை, நாடு முழுவதும் விரிவாக்கி கொண்ட சுகேஷ் சந்திரசேகர், இவரது மனைவி பாலிவுட் திரைப்பட நடிகையான லீனா மரியா பாலை, டெல்லி பொருளாதார போலீசார் கைது செய்து தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டனர்.

20210807202901180.gif

சுகேஷ் சந்திரசேகரின் இன்னொரு பெயர் பாலாஜி. சுகேஷ் சந்திரசேகர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் தன் 17 வயது வரை பள்ளிக்குச் சென்றார். பின்பு படிப்பு பிடிக்கவில்லை என பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.

சுகேஷ் சந்திரசேகர், தன் இளமைப் பிராயத்திலேயே பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்து எதிராளியை தன் பேச்சில் மயக்கும் மந்திரவித்தையை கற்று தெளிந்தவர்.

சுகேஷ் சந்திரசேகரனின் தந்தையார் பகுதி நேரமாக மெக்கானிக் மற்றும் ரப்பர் விற்பனை செய்யும் ஒப்பந்தக்காரராக பணியாற்றி வந்தார்.

சுகேஷ் சந்திரசேகர், தன்னுடைய பதினேழாவது வயதில்... தான், கர்நாடகா முன்னாள் முதல் மந்திரியின் மகன் என்று ஒரு வயதான முதியவரிடம் இருந்து ரூபாய் ஒரு கோடி மோசடி செய்து, தன் குற்றச்செயலுக்கு அச்சாரம் போட்டு துவக்கினார்.

தான் காரியம் நிகழ்த்தவேண்டும் என்றால்... அவர் எந்த அவதாரத்தையும் எடுப்பது அவரது வாடிக்கையாக இருந்துள்ளது. சிபிஐ ஆபீசர் முதல் மத்திய அரசின் மிக முக்கியமான இன்டலிஜென்ஸ் ஏஜென்சி மற்றும் மத்திய அரசின் மிக முக்கிய அமைச்சரவை இலாகாக்களில் முக்கிய பொறுப்பு வகிப்பதாக தன் செல்போனில் பேசி, ஏமாற்றுவதில் வல்லவரானார். இதனால் பெங்களுரு, சென்னை என்று மட்டும் இருந்த தனது நெட்வொர்க்கினை, இந்தியா முழமைக்கும் ஏமாற்றும் தொழிலை தொடங்கி திறம்பட நடத்தி வந்துள்ளார்.

தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, சமுதாயத்தில் மிகப்பெரிய குற்ற செயல்களில் ஈடுபட கம்ப்யூட்டர் மற்றும் தொலைபேசி, செல்போன் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை நன்றாக கற்று தெரிந்து கொண்டார்.

சுகேஷ் சந்திரசேகர் சதுர்யமாக, பல கோடி ரூபாய் மோசடி வழக்குகளில் ஈடுபடும் நபர்களை பற்றிய விவரங்களை தனக்கு தெரிந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மற்றும் தொலைபேசி வழியாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் விவரங்களை தெரிந்து கொள்வார்.

குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மேற்கண்ட அலுவலகத்தின் போன் நம்பர் அல்லது அந்த அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரியின் போன் நம்பர் மாதிரியே தன்னிடம் இருக்கும் தொழில்நுட்பத்துடன் குற்றம் சாட்டப்பட்ட நபரை தொடர்புகொண்டு, இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய அல்லது கைது செய்ய நான் ஏற்பாடு செய்கிறேன் என்று பவ்யமாக பேசி எனக்கு பரிசு தர வேண்டும் என்று அன்பாக கேட்பார். குற்றம் புரிந்தவர், எப்படியாவது தான் கைது செய்வதில் இருந்து அல்லது வழக்கில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் சுகேஷ் சந்திரசேகர் பேசிய செல்போன் நம்பரை கிராஸ் செக் செய்தால், அது சம்பந்தப்பட்ட அதிகாரி நம்பரோ அல்லது அலுவலகத்தின் நம்பராக ட்ரூ காலரில் காட்டும். இந்த நவீன தொழில் நுட்ப வசதியை இவர் தன்னுடைய ஏமாற்று வேலைக்கு சாதகமாக்கி கொண்டார்.

பெரிய அளவில் குற்றம் செய்யும் குற்றவாளிகளை தன்னிடமுள்ள செல்போனில், அமெரிக்காவில் 2004 ஆண்டில் ஏமாற்றுப் பேர்வழிகள் பயன்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சாப்ட்வேர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குற்றம்சாட்டப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு அவர்களுக்கு உதவும் பாவனையில் பேசி, தன் காரியங்களை சாதித்து பல கோடி ருபாய்களை பணமாகவோ அல்லது பரிசு பொருளாகவோ சம்பாதிக்க ஆரம்பித்தார் என்று காவல்துறையினர், புலனாய்வு விசாரணையில் கண்டுபிடித்தனர்.

2019 ஆம் ஆண்டு, டெல்லியைச் சேர்ந்த பிரபல போர்டிஸ் புரமோட்டர் சுவிந்தர் சிங் மனைவி, டெல்லியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் ஒரு புகார் மனுவை தாக்கல் செய்தார். என் கணவர் பொருளாதார குற்றத்திற்காக சிறையில் இருந்து வருகிறார். 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லியிலுள்ள சட்டத்துறை அமைச்சகத்தில் இருந்து சீனியர் அதிகாரி பேசுவது போல் எனக்கு ஒரு போன் கால் வந்தது, என் கணவரை விடுதலை செய்ய நிறைய பணம் கேட்டார்கள், நான் பணம் கொடுத்தேன், என்னைப் போன்று இன்னொரு நபரும், தனது கணவரின் ஜாமீனை பெறுவதற்கு பணம் கொடுத்துள்ளார். அவரிடமும் இதே போன்று போன்கால்கள் முலம், பணம் பறிக்கப்பட்டது. இதனை காவல் துறைக்கு தகவல் சொல்லி எங்களுக்கு வந்த தொலைபேசி எண்ணை கொடுத்தபோது, மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் லேன்ட் லைன் போன் எண்ணை வேறு இடத்திலிருந்து, நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, எங்களிடம் பணம் பறித்த நபரை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர்.

டெல்லியில் உள்ள ரோகிணி ஜெயிலிலிருந்து, செல்போனில் எங்களிடம் பேசப்பட்ட விவரங்கள் காவல்துறையினருக்கு கிடைத்தது. டெல்லி ரோகிணி சிறைச்சாலையில் கைதியாக உள்ள சுகேஷ் சந்திரசேகர் செல்லில் இருந்த இரண்டு மொபைல் போன்களை அதிரடியாக டெல்லி காவல்துறையினர் கைப்பற்றி, தடய அறிவியல் துறைக்கு ஆராய்ச்சிக்கு அனுப்பி வைத்தனர். இந்த செல்போனிலிருந்து கிட்டத்தட்ட ரூபாய் 200 கோடி ரூபாய் வரை, வெளி நபர்களிடம் தொலைபேசி முலம் பணபரிமாற்றம் செய்து ஏமாற்றப்பட்ட விவரம் கிடைத்து, டெல்லி காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள்.

சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி இருவரும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட மிகப்பெரிய மனிதர்களிடம் இருந்து பெரியளவு தொகையை இவர்கள் கை மாறி இருப்பதை பொருளாதார காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

எப்படி சிறைக்குள் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரின் அறைக்கு செல்போன்கள் சென்றது என்பதை காவல்துறையினர் புலனாய்வு செய்தபோது... சிறைதுறை சூப்பர்டென்ட் மற்றும் சிறைதுறை உதவி சூப்பர்டென்ட் இருவர் தலைமையில், 12-க்கும் மேற்பட்ட ஜெயில் அதிகாரிகள் கூட்டாக, சுகேஷ் சந்திரசேகர் ஜெயிலில் இருந்து செல்போன் மூலம் பேசி ஏமாற்றும் தொழிலை செய்வதற்கு உதவி புரிந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு, மேற்கண்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கூண்டோடு வேறு சிறைகளுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டனர்.

சிறையிலிருந்து தனது நெட்வொர்க் மூலம் பல நூறு கோடிகளை போன் மூலமே பேசி குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு உதவுவது மாதிரி எப்படி சுகேஷ் சந்திரசேகர் செயல்பட்டு ஹாவலா பணபரிவர்த்தனை செய்து வருகிறார் என்று சிறப்பு காவல்துறையினர் துருவித்துருவி விசாரித்தபோது... எந்த பதிலும் கூறாமல் சுகேஷ் சந்திரசேகர் அமைதியாக இருந்துவிட்டார்.

சிறையிலிருக்கும் சுகேஷ் சந்திரசேகரின் ஆரம்பகால குற்ற செயல்கள் எப்படி ஆரம்பமானது என்றும் ஏமாற்று பேர்வழியாக விஸ்வருபம் எப்படி எடுத்தார் என்று டெல்லி சிறப்பு காவல்துறையினர் புலனாய்வு செய்த போது, 2007-ம் ஆண்டு சுகேஷ் சந்திரசேகர் முதல்முறையாக குற்றச் செயலில் ஈடுபட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால், வெளியே வந்த சுகேஷ் சந்திரசேகர் சென்னைக்கு புறப்பட்டு வந்தவர் தனது குற்ற நெட்வொர்க்கை விரிவு படுத்திக் கொண்டார்.

கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் தொழில்நுட்பங்களை தன் விரல்நுனி அளவில் தெரிந்துகொண்ட சுகேஷ், 2009 -10 ஆண்டுகளில் ஃபேஸ்புக் வழியாக தன்னை பாலாஜி என்ற பெயரில் தமிழ் திரைப்படத்துறையில் மிக முக்கியப் புள்ளி என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். சுகேஷ் சந்திரசேகர், தான் துபாய் நாட்டில் பிறந்து பெரும் செல்வத்துடன் இருப்பதாக அவ்வப்போது தன்னிடம் தொடர்பில் இருப்பவர்களிடம் சொல்லிக் கொள்வார் என்ற தகவல் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

20210807203034920.jpg

மாடலிங் செய்து வந்த லீனா என்ற பெண்மணி பெங்களூருக்கு டென்டல் அறிவியல் வகுப்பில் வந்து சேர்ந்தார். லீனாவின் மனதில் எப்படியாவது தான் சினிமா நடிகையாக வேண்டும் என்ற கனவு உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. முகநூலில் சுகேஷ் சந்திரசேகர் என்னும் பாலாஜியின் நட்பு கிடைத்தது. பாலாஜியின் பேச்சில் மயங்கிய லீனா, தான் ஒரு சினிமா நடிகையாக வேண்டும் என்ற கனவை பூர்த்தி செய்து கொண்டார். லீனாவை மலையாளம், இந்தி மற்றும் சில தமிழ்படங்களில் கதாநாயகியாக்கி படங்களும் ரிலீஸ் ஆகியது.

சுகேஷ் சந்திரசேகர் என்கிற பாலாஜியின் நடை, உடை பாவனைகளில் மயங்கிய நடிகை லீனா, காதல் மயக்கத்தில் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

நடிகை லீனாவிற்கு தனது கணவர் சுகேஷ் சந்திரசேகர் திரைப்படத்துறையை சேர்ந்தவரில்லை…. பெரிய நெட்வொர்க் முலம் ஏமாற்றும் தொழில் செய்து வருவது தெரிந்து, தன்னையை நொந்து கொண்டு தனது கணவரின் தொழிலில் தானும் ஈடுபட்டு வந்தார் என்ற தகவலை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

20210807204608232.jpeg

2013 ஆம் ஆண்டு, டெல்லியிலிருந்து சிறப்பு புலனாய்வுப் படை சென்னை வந்து, சொகுசு பங்களாவில் தங்கியிருந்த நடிகை லீனாவை கைது செய்தது. லீனா மற்றும் அவரது கணவர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள கனரா வங்கியை 19 கோடி ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டு, நடிகை லீனா கைது செய்யப்பட்டார். சுகேஷ் சந்திரசேகர் போலீஸ் இடமிருந்து தப்பி, சில வாரங்கள் கொல்கத்தாவில் பதுங்கி இருந்தார். பின்பு டெல்லி பொருளாதார குற்றப் பிரிவினர் சுகேஷ் சந்திரசேகர் வைத்திருந்த 20 வங்கி கணக்குகளை முடக்கம் செய்து, 13கோடி ரூபாயை கைப்பற்றினர். சுதேஷ் சந்திரசேகர், லீனா இருவரும் பயன்படுத்திய ஏழு கோடி மதிப்பிலான கார்கள், 80 வெளிநாட்டு விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் விலையுயர்ந்த நகைகளை போலீசார் கைப்பற்றினர்.

2017 ஆம் ஆண்டு, டிடிவி தினகரன் ஆர்.கே .நகர் இடைதேர்தலில் நிற்க இரட்டை இலை சின்னத்தை, இடைதரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்து, வாங்கி தருவதாக எழுந்த குற்றச்சாட்டில்... அவர் தங்கியிருந்த அறையிலிருந்து 1.30 கோடி ரூபாயை பணமாக கைப்பற்றி கைது செய்தனர்.

அப்போது அந்த அறையில்.... அவர் போலியாக தயாரித்து வைத்திருந்த போலி மாநிலங்களவை உறுப்பினர் என்ற ஐடி கார்ட்டையும், எம்.பி. ஐடி கார்டையும், இந்திய தேசிய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி என்ற ஐடி கார்டையும் கைப்பற்றினர். அத்துடன் சுகேஷ் சந்திரசேகர், தன்னுடைய மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு எம்பி என்று ஸ்டிக்கரை தயார் செய்து தன் காரின் முகப்பில் ஒட்டி இருந்தார். அதனையும் டெல்லி போலீசார் கைப்பற்றினர்.

இதுவரை, பல்வேறு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பல விலையுயர்ந்த கார்கள் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து காவல்துறையினர் கைப்பற்றினார்கள். சமுகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் விவிஜபிக்கள் மட்டுமே பயன்படுத்தும் விலையுயர்ந்த வெளிநாட்டு கார்கள் எப்படி சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்தது என்று புரியாமல் புலனாய்வு துறையினர் தலையை பிய்த்து கொள்கின்றனர்.

சுகேஷ் சந்திரசேகர், மிக முக்கிய அரசு அதிகாரிகளின் செல்போனை தன்னிடம் இருக்கும் செல்போன் இணைப்பில் நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரி போலவே மிமிக்ரி செய்து பேசுவதில் அசகாய சூரன் என்பதால், இவரின் குரலை கேட்டு நிஜ அதிகாரிதான் தங்களை வழக்கில் இருந்து காப்பாற்ற பேசுகிறாரோ என்று நம்பி, பாதிக்கப்பட்ட பெரும் புள்ளிகள் பரிசுப் பொருளாக பணமாக சுகேஷ் சந்திரசேகர் சொல்லும் நெட்வொர்க்கில் பணத்தை நேரடியாக தந்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சுகேஷ் சந்திரசேகர் மீது கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டில்லி மாநிலங்களில் டஜன் கணக்கான வழக்குகள் போடப்பட்டு, தற்போது வரை நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

2019 ஆம் ஆண்டு சுகேஷ் சந்திரசேகர், டெல்லி நீதிமன்றத்தில் தன் வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக அங்கிருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரிடமிருந்து செல்போன் வாங்கி தன் நவீன செல்போன் டெக்னாலஜி மூலம் தன் குரலை மாற்றி தானொரு உச்சநீதிமன்ற நீதிபதி, தற்போது நீதிமன்றத்தில் ஜாமின் மனு போட்டு இருக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கு ஆட்சேபம் செய்யமால் பெயில் வழங்க வேண்டும் என அரசாங்க வக்கீலின் செல்போனுக்கு பேசப்பட்டது. அரசாங்க வக்கீல், உடனடியாக தனக்கு வந்த தகவலை, நீதிமன்றத்திலுள்ள நீதிபதிக்கு சொல்ல... பின் காவல்துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி போல் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு பேசிய விவகாரம் வெளியே வந்து, சுகேஷ் சந்திரசேகர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.

அடுத்து, மத்திய சட்ட அமைச்சர் தனி செயலாளர் செல்போனிலிருந்து மும்பையில் இருக்கும் கூடுதல் மாவட்ட நீதிபதிக்கு செல் போன் செய்து, சுகேஷ் சந்திரசேகர் வழக்கை அவருக்கு சாதகமாக முடித்துத் தரும்படி செல்போனில் பேசினார். செல்போனில் பேசியது சுகேஷ் சந்திரசேகர் தான் என கண்டுபிடித்த காவல்துறையினர், இதற்கும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கு போட்டனர். பெங்களூர், கோயம்புத்தூர் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் மீது மற்றொரு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, வழக்கு போடப்பட்டது. ஏற்கனவே தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்கும் வழக்கு வேறு நிலுவையில் உள்ளது.

டெல்லி ரோகினி சிறைக்குள் இருந்தாலும், அதிநவீன செல்போன் டெக்னாலஜி மூலம் சிறையில் இருந்தபடியே, முன்னாள் ராஜ்ய சபா எம்பியிடம் ரூபாய் 25 லட்சம் மோசடி செய்தது மற்றும் ருபாய் 11 கோடி பரிமாற்றம் செய்து ஏமாற்றிய வழக்குகள் என அடுத்தடுத்து அவர்மீது புகார் பதியப்பட்டது.

டெல்லி சிறையில் இருந்த சுகேஷ் சந்திரசேகர், மும்பையைச் சேர்ந்த 500 நபர்களிடம் முதலீடு செய்த பணத்திற்கு மாதம் 20 சதவீதம் பணம் மற்றும் பரிசு பொருட்கள், கோல்ட்காயின் அல்லது டாடா நானோ கார் வழங்கும் பொன்சி என்ற திட்டத்தை துவக்கி, 19 கோடி பணத்தை லாவகமாக சுருட்டி கொண்டு ஏமாற்றியதும் வழக்காக பதியப்பட்டது. இதில் சுகேஷ் சந்திரசேகர், இவரது மனைவி லீனா இருவரயும் மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அப்போது இவரது வீட்டை சோதனையிட்ட போது, 16 விலையுயர்ந்த கார்களும், விலையுயர்ந்த சன்கிளாஸ் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றபட்டது.

2015-ம் ஆண்டில் சிறையிலிருந்த சுகேஷ் சந்திரசேகருக்கு உடல் நலபாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது மும்பை அரசாங்கம் சொத்துக்களை ஏலம் விட ஏற்பாடு செய்தது. நவீன டெக்னாலாஜி மூலம், செல்பேசியில் ஏலம் விடும் அரசு அதிகாரி போல் பேசி, ஏலத்தை நிறுத்தினார் என்று மும்பை மாநகர போலீஸ் கண்டுபிடித்து வழக்கு பதிந்து மீண்டும் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தது.

2017 ஆண்டு... டெல்லி, திகார் சிறையிலிருந்து கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜராக அழைத்து வரப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், பெங்களூரு வீதிகளில் தன் தோழியுடன் சுதந்திரமாக சுற்றித் திரிந்ததற்கும், 3 விலையுயர்ந்த கார்களை வாங்கியதற்கும் ஒத்துழைத்த போலீஸார் 7 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறையில் இருந்த போதே, இவ்வளவு ஹாயாக வெளியே சுற்றி திரிந்த விவகாரம் நாடு முழவதும் விஸ்வருபம் எடுத்து, சுகேஷ் சந்திரசேகரின் பவுர்புல் லாபியை வெளிச்சம் போட்டு காட்டியது.

ஜனவரி 16, 2020... தெலுங்குதேச முன்னாள் எம்பி ராயபட்டி சாம்பசிவராவ் நடத்தி வந்த டிரான்ஸ்டரி இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தை காட்டி, வங்கியில் ருபாய் 7, 926 கோடி ரூபாய் பணம் மோசடி கடன் பெற்றார் என கைது செய்யப்பட்டு, ஜாமின் பெற முடியாமல் சிறையில் தவித்து வருகிறார். இதனை லாவகமாக சுகேஷ் சந்திரசேகர், ஹைதராபாத்திலுள்ள மிக முக்கிய சிபிஐ அதிகாரியின் செல்போன் நம்பரை தன் போனில் டெக்னாலஜி முலம் ஆள்மாறாட்டம் செய்து, முன்னால் எம்பி-யிடம், ரூபாய் 100 கோடி தந்தால்... தான் ஜாமீன் வாங்கி தருவதாக நயமாக பேசியுள்ளார். தன்னை யாரோ ஒரு நபர் 100 கோடி ரூபாய் பணம் கேட்டு போன் செய்வதாக எம்பி புகார் தந்தார். சிபிஐ விசாரணையில் தங்களது அலுவலகத்தின் லேன்ட் லைன் போனை சுகேஷ் சந்திரசேகர் பயன்படுத்தி முன்னாள் எம்பி-யிடம் ரூபாய் 100 கோடி கேட்டு போன் செய்த விவகாரம் வெளியில் வந்தது. சுகேஷ் சந்திரசேகர் மீது, இது குறித்தும்... சிபிஐ முதல் தகவல் அறிக்கை வழக்கைப் பதிவு செய்தது.

2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஏமாற்று வேலைகளைச் செய்து இருந்தாலும், அவருடைய குறி சமுதாயத்தில் மோசடிகளில் ஈடுபட்டு பணம் சம்பாதித்த நபர்களை குறிவைத்து, அவர்களை ஏமாற்றுவதில் உலக அளவில் நம்பர் ஒன் ஏமாற்றுப் பேர்வழி என்ற அடை மொழியினை தற்போது சுகேஷ் சந்திரசேகர் தட்டிச் சென்றுள்ளார்.

2017ஆம் ஆண்டு முதல் திஹார் மற்றும் ரோகிணி சிறைச்சாலையின் சிறைப்பறவையாகவே மாறிவிட்ட சுகேஷ், தன் வழக்கை வாதாட இந்தியாவில் அதிகம் சம்பளம் பெறும் ஜம்பாவன் வழக்கறிஞர்களை மட்டுமே அமர்த்தி, சட்டத்தின் சந்து பொந்துக்களில் புகுந்து வருவதில் சுகேஷ் சந்திரசேகர் கில்லாடி.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், நீதிமன்ற ஜாமீன் உத்தரவு பெற்று இரண்டு முறை வெளியே வந்த சுகேஷ் சந்திரசேகர், தன் தாயார் உடல் நலத்தை காரணம் காட்டி சென்னை வந்த பின்... தனது ஜாமீனை மீண்டும் சில நாட்கள் நீதிமன்றம் மூலம் நீட்டித்து கொண்டார். அதன்பின் உச்ச நீதிமன்றம் வழங்கிய இரண்டு வார கால ஜாமினில் வந்து, ரத்த புற்றுநோயால் பாதித்த தனது தந்தையாரை பார்த்தவருக்கு கொரோனா நோய்தொற்று ஏற்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். உடல் நலம் தேறிய பின் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் டெல்லி ரோகிணி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது வரை சிபிஐ புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பு வளையத்தில் சுகேஷ் சந்திரசேகர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகேஷ் சந்திரசேகரின் மனைவியும் நடிகையுமான லீனா, மத்திய சட்ட துறை அமைச்சக அதிகாரி போன்று தனது கணவருடன் சேர்ந்து செல்போனில் குரல் மாற்றி பேசிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர் டெல்லி போலீசார்.

20210807204500358.jpg

சுகேஷ் சந்திரசேகர் அவரது மனைவி நடிகை லீனா பயன்படுத்தி வந்த சென்னையை அடுத்த கானத்தூரிலுள்ள 10 கோடி மதிப்புள்ள பங்களாவின் உண்மையான நில உரிமையாளர் யார் என்று தற்போது பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் மத்திய அரசின் புலனாய்வு அமைப்பினர் தோண்டித் துருவி அலசி ஆராய்ந்து வருகின்றனர். இங்கிருந்து பல வெளிநாட்டு கார்கள், லீனா பயன்படுத்திய நூற்றுக்கணக்கான விலையுயர்ந்த ஷீக்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த சொகுசு பங்களாவின் 2-வது தளத்தில் இருக்கும் வெளிநாட்டு மதுவகை பார், நிறைய பொருட்செலவில் கட்டப்பட்டுள்ளது. கடற்கரையை பார்த்த கிழக்கு வாசல் சொகுசு பங்களாவை கண்டு டெல்லி அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

சுகேஷ் சந்திரசேகர், இதுவரை கர்நாடகா முன்னாள் முதல்வரின் மகன் என்றும் தமிழகத்தினுடைய முன்னாள் முதல்வர் கலைஞரின் பேரன் என்றும் சிபிஐ அதிகாரி என்றும் மத்திய சட்டத் துறை அமைச்சகத்தை சேர்ந்த உயர் பொறுப்பில் இருப்பவர் என்றும் வங்கி அதிகாரி என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தன் சொல்படி நடக்கும் என்று அரசியல்வாதிகளையே நம்ப வைத்த “மகா கில்லாடி ஏமாற்றுப் பேர்வழி”. தற்போது டெல்லி ரோகிணி சிறையில் இருந்தாலும்... சட்டத்தின் முன் நிற்கும் போது, “நான் அவன் இல்லை” என்று சொல்லி லாவகமாக தப்பித்து, தன் சிறை வாழ்க்கையை பணம் சம்பாதிக்கும் தொழிற்சாலையாக மாற்றி கொண்டவர் சிறைபறவை சுகேஷ் சந்திரசேகர் என்று புலனாய்வு துறையினர் ஆச்சர்யத்துடன் சொல்கிறார்கள்.

எவ்வளவு நாள் சிறையில் இருந்தாலும்... தன் நெட்வொர்க் முலம் தனது தொழிலை அபிவிருத்தி செய்து கொண்டு சுக போகமாக இருப்பார் சிறைப்பறவை சுகேஷ் சந்திரசேகர் என்பது தான் நிஜம்!