தொடர்கள்
கதை
நவீனக் கால உறவுகள்... - தில்லைக்கரசிசம்பத்

20210809130227680.jpeg

“எனக்கு இப்ப டிகாஷன் இறக்கி, அதுல காப்பி வேணும்.. இந்த இன்ஸ்டன்ட் காப்பி எல்லாம் யாரு குடிப்பா?” என்று காமாட்சி கடுகடுவென சொல்ல... லேப்டாப் பையை தோளில் மாட்டியபடி, புருவங்களை தூக்கி கணவனை பார்த்தாள் நிஷா.

“அம்மா.. நான் சாயங்காலம் வரப்ப காஃபி பவுடர் வாங்கிட்டு வரேன், இந்த ஒரு வேளை அட்ஜஸ்ட் பண்ணிக்க..!” என்றான் சுரேஷ்.

“நான் இங்க வந்து ரெண்டு நாளாச்சு.. அட்ஜஸ்ட் பண்ணிக்க..! அட்ஜஸ்ட் பண்ணிக்க..!னு சும்மா என்னையே சொல்றியே..?! அப்புறம் எதுக்கு என்னை டெல்லிக்கு வரச் சொன்ன? ஊர்லேயாவது நிம்மதியா இருந்திருப்பேன். இவ பாட்டுக்கு தோசையை சுட்டு ஹாட்பாக்ல வச்சிட்டு “சாப்பிடுங்க அத்தை. மத்தியானத்துக்கு, சாதம் மட்டும் வச்சிக்கோங்க. சாம்பார் ஃப்ரிட்ஜ்ல இருக்கு.. சுட வச்சு சாப்பிட்டுக்கோங்க!”னு சொல்லி பேக்கை மாட்டிக்கிட்டு ஆபிசுக்கு போயிடுறா.

“ஆறிபோனதையும், நேத்து வச்ச பழசையும் சாப்பிடனும்னு தலையெழுத்தா எனக்கு..?” என்று காமாட்சி பொறுமினாள்.

“அம்மா..” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவன்... “நிஷா..! நீ போய் கார்ல உட்காரு, 2 நிமிஷத்துல வந்துடுறேன்..” என்று கூற... “ஓகே.. சீக்கிரம் வா.. 10 மணிக்கு டீம் ஹெட் மீட்டிங் இருக்கு..” என்று வெளியேறினாள்.

“ஏண்டா..? இவ்வளவு சொல்றேன்.. ஒரு பதிலும் சொல்லாம போறா! என் மாமியார் என்னை திட்டுனாங்கனா, நான் பிழிய பிழிய அழுவேன்.. இவ அப்படியே கல்லு மாறி நிக்கிறா? எதிர்த்து கூட பேசமாட்டேங்கிறா.. ஆனா, மறுநாளும் அதே ஆறிப்போன ஹாட்பேக் இட்லி, தோசை, ஃப்ரிட்ஜ்ல இருக்கிற வந்தகுழம்பு சாம்பார் தான். சண்டை போட்டாகூட ஒரு பலனும் இல்ல..!”

“ஐயோ அம்மா.. அதெல்லாம் பழைய காலம். உனக்கு அழுது அக்கம்பக்கத்துல பாட்டிப் பத்தி புகார் சொல்ல... சொந்தக்காரங்க மத்தியில பஞ்சாயத்து பண்ண நிறைய நேரம் இருந்துச்சு.. இப்பலாம் ஏது டைம்.. வீட்டுல சமையல், ஆஃபிஸ் வேலைனு கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு ஓட வேண்டியிருக்கு.. உன்கிட்ட நின்னு பதில் சொன்னாதான் உன் மேல அக்கறை காண்பிக்கிறானு அர்த்தம் இல்ல.. அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஆனா அத வெளிக்காட்ட அவளுக்கு நேரம் கிடையாது.”

“என்னடா எதாவது புதுசு புதுசா சொல்ற..?! உன் பாட்டி என்னை எவ்வளவோ திட்டியிருக்காங்க.. நானும் பதிலுக்கு சண்டை போடுவேன். இருந்தாலும் நீ என் வயித்துல இருந்தப்ப அவ்வளவு அக்கறையா என்னை பாத்துக்கிட்டாங்க.. பிரசவம் கூட அங்க தானே நடந்தது.. அம்மா இல்லாத பொண்ணுனு எனக்கு பிரசவம் பாத்து, நீ பொறந்த பிறகு உன்னையும் சேர்த்து 6 மாசத்துக்கு அப்படி பாத்துக்கிட்டாங்க.‌ அப்புறமும் தான் எவ்வளவு சண்டை வந்தது..?! இருந்தாலும் பாட்டி படுத்த படுக்கையா ஆனப்ப நான்தானே பாத்துக்கிட்டேன்.

சாகுறப்ப என மடியில் தான் “காமாட்சி”னு என் கையை பிடிச்சிட்டே செத்து போனாங்க.. உங்க அப்பா கூட அந்தச் சமயத்துல அங்க இல்லையே.. ஆனா நிஷா பக்கத்துல உக்காந்து கூட பேச மாட்டேங்கிறா.. திட்டுனா கூட கம்முன்னு ரூமுக்குள்ள போய் கதவை சாத்திக்கிறா..!

“நீ இன்னும் கூட மோசமா பேசினா கூட, அத அவ மனசுல வச்சுக்கமாட்டா.. நானே அவக்கிட்ட “எதுவும் கோச்சிக்காதே”னு சொன்னா கூட... “ச்சே ச்சே.. பாவம் வயசானவங்க.. எங்க அம்மா மாதிரி.. சூடா சாப்பாடு சாப்பிட்டு பழக்கமானவங்க.. ஆனா, எனக்கு தான் நேரமே இல்லையே.. சண்டே ஒரு நாள்ல வாரத்துக்கு வேண்டியதை சமைச்சு ஃப்ரிட்ஜ்ல வச்சிடுறேன்.. அத்தையே வருஷத்துக்கு ஒரு தடவை நம்ம வீட்டுக்கு வராங்க.. என்னால் லீவ் போட்டு கவனிக்க முடியல!”னு சங்கடப்பட்டு தான் சொல்றா.. நேத்து கூட பாரு.. “அத்தைக்கு 6 சவரன்ல நல்ல கெட்டியா 2 வளையல் வாங்கி தரனும்”னு கூட பேசிக்கிட்டு இருந்தா! நான் தான் இங்க வாங்க வேணாம்.. டிசம்பர் மாசம் லீவுக்கு சென்னைக்கு போறப்ப அங்க ஜிஆர்டி-லேயே வாங்கி கொடுத்துடலாம். அங்க வாங்குனா தான் அம்மாக்கு பிடிக்கும்னு சொல்லிட்டேன்.”

“அப்படியாடா சொன்னா என் மருமக.. பரவாயில்லையே.. நான் தான் அவசரப்பட்டு திட்டிட்டேன் போல. நீ சொல்றதும் சரி தான்... வேலைக்கு வேற போறா.. வீட்டுல எல்லாத்தையும் பொறுமையா பாத்து பண்ண அவளுக்கும் ஏது நேரம்.. பாவம்.. சரி விடு.. நீ கிளம்பு சீக்கிரம்.. நிஷா வேற 10 மணிக்கு மீட்டிங்னு சொன்னாளே..!”

“சரிம்மா.. பை.. கதவை சாத்திக்கோ..!” என்றபடி சுரேஷ் கிளம்பினான்.

சாயங்காலம் 7 மணிக்கு காரை பார்க் செய்துவிட்டு நிஷாவும், சுரேஷும் வீட்டில் நுழைய... சமையலறையிலிருந்து கையில் சூடான வெங்காய பக்கோடாவும், ஏலக்காய் டீயும் எடுத்து கொண்டு வெளியே வந்த காமாட்சி, நிஷாவை கண்டதும் தட்டை டீப்பாயில் வைத்து விட்டு, அவளின் கைகளை பிடித்து... “அம்மாடி.. நீ ஒன்னும் கவலைப்படாத.. நான் இங்க இருக்கிற வரை உன்னால என்ன முடியுமோ அத செஞ்சு போடு.. அதுவே போதும் எனக்கு.. எனக்கு வளையல் வாங்கி தரதா சுரேஷ்கிட்ட சொன்னியாமே..! அதெல்லாம் ஒன்னும் வேணாம் . இதோ பாரு இந்த புது வளையல்.. உன் மாமனார் தவறி போய் 3 வருஷம் ஆச்சுனு தான் உனக்கு தெரியுமே.. என் தாலிக்கொடி 3 வருஷமா பெட்டிக்குள்ளேயே இருந்தது, 8 சவரன்... எனக்கு இருக்கிறது ஒரே பிள்ளை... இவனுக்கும் உனக்கும் கொடுக்காம வேற எதுக்கு எனக்கு. அதான் அதை அழிச்சிட்டு, உனக்காக புதுசா வளையல் செஞ்சு எடுத்துக்கிட்டு வந்தேன்... ஒவ்வொன்னு 2 சவரன்னு மொத்தம் 4 வளையல். உங்க முத கல்யாண நாளு அடுத்த வாரம் வருதுல.. அன்னைக்கு சஸ்பென்ஸா கொடுக்கலாம்..”னு...

“அம்மா..! அது சர்ப்ரைஸ் மா..!” என்று சிரித்தாள் சுரேஷ்.. ஆமா அதான் கண்ணு..! சொல்லாம இருந்தேன். உன் மாமனார் இருந்தா இன்னும் எவ்வளவு செஞ்சிருப்பார். நமக்கு கொடுத்து வைக்கல..” என்றபடி நிஷா கைகளில் வளையல்களை மாட்டி, முந்தானையால் கண்ணை துடைத்து கொண்ட காமாட்சி... “சரி.. சரி.. போய் கை, கால் அலம்பிட்டு வாங்க.. டீயும், பக்கோடாவும் ஆறிடும்..” என்றுசொன்னாள்.

ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல், கூர்மையாக மாமியாரை கவனித்தபடி இருந்த நிஷா பெட்ரூமுக்கு செல்ல பின்னாடியே விரைந்தான் சுரேஷ்..

“கதவை சாத்து..!” என்று கட்டிலில் சாய்ந்தபடி கூறிய நிஷா... “what the heck? நான் எப்ப அவங்களுக்கு வளையல் வாங்கி தரதா சொன்னேன்??”

“இல்ல நிஷா.. டென்ஷன் ஆகாதே..! காலைல சும்மா அம்மாவ சமாதானம் பண்ண தான் பொய் சொன்னேன்.. டோன்ட் வொர்ரி..! அவங்க வேணாம்னு சொல்லிட்டாங்க..!” என்று படப்படத்தான்.

“அதானே பார்த்தேன்.. ஏதோ ஊர்லந்து வந்தாங்களா..! இரண்டு வாரம் தங்கினாங்களா..! அதோட போயிடனும்.. இந்த மாமியார், மருமக உறவு எல்லாம் யாருக்கு வேணும்? Who the heck that lady to me..?? Such an irritating old lady.. பார்த்தாலே எரிச்சலா இருக்கு. அவங்க திரும்ப ஊருக்கு போக ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணிட்டியா?”

“நான் நேத்தைக்கே பண்ணிட்டேன்.. நீ டென்ஷன் ஆகாதே..!” என்றவன் நிஷா கைகளில் புது வளையல்கள் மின்னுவதை பார்த்து ... அப்படி யே அவள் முகத்தையும் ஒரு கணம் ஏறிட்டு பார்த்தான்.

“என்ன அம்மா சென்ட்டிமென்ட்டா..!!?!” என்று முறைத்தவளிடம்...

“நத்திங்..!” என்று ஹாலுக்கு வந்தவன்...

“என்‌ மருமக நிஷா என்‌மேல எவ்வளவு பாசமா இருக்கா தெரியுமா..?? எனக்கு பொண்ணு இல்லாத குறையை தீர்த்து வச்சிட்டா! எனக்கு வேற என்ன வேணும்..!!?” என்று உணர்ச்சி பூர்வமாக யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த தாயை பின்னாலிருந்து பார்த்தவன்...

“அம்மா.. சண்டை போட்டாலும் உறவு, உறவுதான். அது என்னைக்குமே மாறாதுனு பழைய தலைமுறை வாழ்ந்த வாழ்க்கை இப்ப கிடையாது.. உறவு என்பது பெருமைன்னோ இல்ல, அதை பொறுமையா கட்டி காப்பாத்தறதோ இந்த தலைமுறையில பாதி பேருக்கு தெரியலம்மா.. நேரா சண்டை போடாம... ஆனா, எந்த ஒட்டுதலும், உறவும் இல்லாம வாழற வாழ்க்கை தான் இந்த தலைமுறை. நான் நிஷாவை எதிர்த்துக்க முடியும். ஆனா எந்த உறவுமுறையோட மதிப்பும் தெரியாத அவ, நிச்சயமா என்னை டைவர்ஸ் பண்ணிடுவா. என்னால் தனியா வாழ முடியும். ஆனா, நம்ம ஒரே பிள்ளையோட வாழ்க்கை நாசமாப்போச்சேனு நீ மனசுடைஞ்சு போயிடுவ. அந்தக் கவலையில் உனக்கு எதாச்சும் ஆனா நான் என்ன பண்ணுவேன்???! எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எனக்காகனு இந்த உலகத்துல நீ மட்டும் தானே இருக்க!” என்று முணுமுணுத்தவனின் கண்களில் நீர் நிறைந்து வழிந்தது.