ரஜினி நோ சொல்லிவிட்டார்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பான ரஜினியின் ‘அண்ணாத்தே’ படம் தீபாவளிக்கு வருவது உறுதி. ஆனால் ரஜினி நடித்த ‘அண்ணாத்தே’ திரைப்படம் மட்டும்தான் தீபாவளிக்கு ரிலீசாக வேண்டும், வேறு எந்த படமும் ரிலீசாகக் கூடாது என்று சன் பிக்சர் நினைக்கிறது. இதற்குக் காரணம்... ரஜினி அரசியலுக்கு வரேன் என்று சொல்லி வராமல் ஏமாற்றி விட்டதால், அவரது ரசிகர்கள் இப்போது அவர் மேல் கோபமாக இருப்பதால்... அவர்கள் இந்த கட்டவுட், பாலபிஷேகம் என்றெல்லாம் படத்தை பிரபலப்படுத்தும் வேலையை செய்ய மாட்டார்கள் என்ற சந்தேகம் தயாரிப்பாளருக்கு. இதனால் வேறுபடும் ஏதாவது ரிலீசாகாமல் இருந்தால், நமது படம் கொஞ்சம் பணம் பண்ணும் என்று யோசிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். மற்ற தயாரிப்பாளர்களும் தீபாவளி ரிலீஸ் வேண்டாம் என்று சொல்லச் சொல்லி ரஜினியை நிர்பந்த படுத்தினார்கள். ஆனால், அவர் அதெல்லாம் நான் பேச முடியாது என்று மறுத்துவிட்டார். சன் பிக்சர்ஸ் சில தயாரிப்பாளரிடம் பேச... தீபாவளி என்றால், நாலைந்து படங்கள் ரிலீசாவது வழக்கம்தானே.. இப்போது என்ன.. இது புதுசாக என்று திருப்பிக் கேட்கிறார்கள். மொத்தத்தில் குழப்பத்தில் சன் பிக்சர்ஸ்.
டாக்டர் மொட்டை
காமெடி நடிகராக நிறைய படங்களில் நடித்துவரும் மொட்டை ராஜேந்திரன், சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் முதல் முதலாக டாக்டர் வேடத்தில் நடிக்கிறார்.
இயக்குனரின் இளையமகள் கதாநாயகி
இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி சினிமா நடிகை ஆகப் போகிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்பிரைஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘விருமன்’ படத்தில் அவர் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சூர்யா சகோதரர் கார்த்தி. ‘கொம்பன்’ பட இயக்குனர் முத்தையா தான் ‘பிரம்மன்’ படத்தையும் இயக்குகிறார். படத்தின் டைட்டிலை பார்த்தாலே இது கிராமத்துக் கதை என்று தெரிஞ்சிடுச்சு. அதனால் தான் நாயகி பாவாடை தாவணியில் போஸ் தருகிறார்.
தலைவி பரபரப்பு
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற டைட்டிலுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் ஏற்கனவே முடிவு செய்தபடி, திரையரங்குகளில் 10ஆம் தேதி ரிலீசாகிறது. கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்திலும், அரவிந்த்சாமி எம்ஜிஆர் வேடத்திலும், நாசர் கருணாநிதி வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்த கங்கனா ரனாவத், தமிழக அரசியல் தலைவர்களை போல் ஜெயலலிதா, கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. கருணாநிதியை இந்தப் படத்தில் எப்படி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் என ஆளுங்கட்சி உன்னிப்பாக ரிலீஸ் அன்று கவனிக்க இருக்கிறது. அதேசமயம் இயக்குனர் ஏஎல் விஜய், உஷாராக ‘தலைவி’ அரசியல் படம் அல்ல... ஜெயலலிதா வாழ்க்கையின் இன்னொரு கோணம் என்று சமாளித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் சர்ச்சை
மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படம் சூட்டிங் தற்சமயம் மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்துவிட்டது. ஏற்கனவே குதிரையை கொன்றுவிட்டதாக ஒரு பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. இது போதாதென்று.... நர்மதை நதிக்கரையில் படப்பிடிப்பு நடந்தபோது, அங்கு நிறைய சிவலிங்கங்கள், நந்தி சிலைகள் இருந்திருக்கிறது. அங்கு படப்பிடிப்பு நடக்கும்போது... நடிகை திரிஷா, சிவலிங்கம், நந்தி சிலைகள் மீது காலணிகளை உரசியபடி நடந்து வந்த படம், இப்போது புதிதாக ஒரு சர்ச்சையை அங்கு கிளப்பியிருக்கிறது.
Leave a comment
Upload