தொடர்கள்
கவிதை
ஜெய்ஹிந்த் செம்பக ராமன் எனும் தமிழன்... - இரா.சு.இராசன்

செம்பகராமன் துணைவி மணிபூரின் மாதரசி.

20210809130418919.jpeg

மணி புரத்து மாதரசி
மடிதனிலே தலை வைத்து
மாவிரன் உடல் நீத்தான்.

துணிந்த விறல் நெஞ்
சில் விடுதலை வேட்கை
கொண்ட தென்னவன்.

பணிந்தெவர்க்கும் தலை
வணங்காத வேங்கை தன
திரு விருப்பம் தனைக்கூறி

துணைவியிடம் விடை
பெற்றான். துயரத்தில்
அவள் துவண்டாள்.

இரு விருப்பங்களில்
ஒன்று, தான் மடிந்த பின்
னாலும் தன் வாழ்நாள்

பெரு நோக்கம் நம்
தாயகத்தின் விடுதலையே.
தனிமை யெனும் தளர்வு

ஒரு பொருட்டாய்க்
கொள்ளமல் போராட்டம்
நீ தொடர வேண்டும்.

எரியுண்ட எனதுடல்
சாம்பல் எனதன்னை சாம்பல் கரைத்திட்ட கரமனையாற்றில்

ஒரு பகுதி, நாஞ்சில்
நாட்டு வயல் வெளியிலே
மீதி யெனப்பகிர்ந்திடவும்
வேண்டும் என்றான்.

பாரதத் தாயும் துயரால்
அழுதாள். என் மகனே
பைந்தமிழா பாரில் உன்

வீரம், பேராற்றலாலும் விடுதலை பெற்று நானு
யர்ந்து தலை நிமிர்ந்து

ஊரதுவும் உலகனைத்
தும் போற்றுமொரு
பெருந்தேயமாய் முகிழ்த்து

பேரறிஞன் நீ ஆளப்
பெரும் பதவி தந்துனக்கு
நன்றி செய்து நல்லாட்சி

நாட்டுக்கு, உலகளந்த
உன்னாலே தரமுடியும் என
எண்ணி இருந்தேனே,

பாட்டிலுறு விண்ண
வர்கள், தமையாள உனது
ஆற்றல் தனை வேண்டி

போட்டியிலே எனை
வீழ்த்தி வென்றதனால்
உனை இழந்தேன்.

எட்டில் உன் புகழைப்
பாடப் பலர் பின்னாளில்
வருவர். என்னிழப்பும்,
மூன்றாண்டே உன்
உயிரில் பின்னிக்கலந்த
மாதரசி மணிபுரத்தாள்

தான்பட்ட இன்னலும்
துயரும் பாரதத்தின் மண்
அறிந்து போற்றிடுமோ?

வான் கலந்த விடு
தலை வீரர் பலரை மறந்து
விட்டது போல் பாரதமும்

தான் போன போக்
கில் வரும் தலைமுறைக்குக்
கூறாமல் மறந்திடுமோ.

மணிப்பூரின் மங்கை
நல்லாள் தமிழ் மண்ணின்
மாவீரனை மணந்து நலம்

பேணி அவரைக்
காத்தன்பு கலந்த நாட்கள்
மூன்றாண்டே என்றாலும்

நாணமற்றோர் விருந்
ததனில் விடமிட்ட ஈனம்
இழிந்துரைத்து நீதி கேட்டு

மாணிக்கச் சிலம்பு
எறிந்து தேரா மன்னவனைச்
சாட பாண்டியன் நெடுஞ்
செழியன் அங்கில்லை.
கோப்பெருந்தேவியில்லை
கொற்றம் அறம் பிறழ்ந்தால்

பிழை என்று கொள்ளும்
பண்பில்லை அந்நாட்டில்.
நண்பர்கள் பலருதவ

தழலூட்டி தமிழ் வீரம்
வாழ்ந்திருந்த பொன்னு
டலம் அவர் சொன்னபடி

தொழுதழுது உடற்
சாம்பல் தனை யொரு
குடத்தினிலே சேர்த்தார்.

(வருமிதழில் பாரதத்தில்
இலட்சுமி பாய் வந்ததுவும்
வறுமையிலே நொந்ததுவும்
தாயகம் நம் அருந்தமிழன்
சிறப்பைக் கண்டு கொள்ளா
இழி நிலையும் விண்டுரைப்
பேன்)