
அமெரிக்காவிலிருந்து என்னோட ஃப்ரண்ட், வாசு, நேத்து வாட்சாப்புல அனுப்புன மீம் இதுதான்:
இந்தியாவில் போலீசை எப்படி அழைப்பது ????
ரெஸ்ட் ஆஃப் இண்டியா என்றால் 100 என்ற எண்ணுக்கு டையல் செய்யவும்
அமேரிக்காவ்லியா 911 என்ற எண்ணுக்கு டையல் செய்யவும்
இங்கிலாந்துலியா 112 என்ற எண்ணுக்கு டையல் செய்யவும்
பெங்கால்ல ஜெய் ஸ்ரீ ராம் சொன்னா போதும்
மும்பைல ஹனுமான் சாலீஸா சொல்லுங்க போதும்
இதிலேர்தே புரிந்திருக்கும் சமீபத்தில் மும்பையில் வெடித்திருக்கும் சர்ச்சையின் நீள அகல ஆழம்.
ஹனுமான் சாலிசா விவகாரத்தில் பாஜகவை சிவசேனா கடுமையாகத் தாக்கியுள்ளது. “ஹனுலிமான் சாலிசா என்ற பெயரில் பிறர் வீட்டுக்குச் சென்று சூழலைக் கெடுக்க நினைத்தால் நீங்கள் குற்றவாளி ஆவீர்கள் என அக்கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார். அப்படி மனம் கலங்கியிருந்தால், தன் வீட்டில் அமர்ந்து ஹனுமான் சாலிசாவைப் படியுங்களேன். வீட்டிலும் கோவிலிலும் அனுமன் சாலிசாவைப் படியுங்கள்”.

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் மேலும் கூறுகையில், “மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மக்களை தவறாக வழிநடத்துகிறார், ஹனுமான் சாலிசா படித்ததற்காக யார் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக பாம்பே உயர்நீதிமன்றமும் தனது கருத்தை தெரிவித்துள்ளது. உங்கள் வீட்டில் ஹனுமான் சாலிசாவை படிக்கலாம். கோவிலுக்குச் சென்றும் படிக்கலாம். யாரும் வேண்டாம்ன்ய் சொல்லலியே?.
பாகிஸ்தானிலா ஹனுமான் சாலிசா படிப்பது?
முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், திங்கள்கிழமை செய்தியாளர் சந்திப்பில் மகாராஷ்டிர அரசை கடுமையாக விமரிசித்தார். “மகாராஷ்டிராவில் அராஜகம் போன்ற சூழல் நிலவுகிறது. காவல்துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஹனுமான் சாலிசா பாடாவிட்டால், பாகிஸ்தானிலா பாடுவார்கள்? ஹனுமான் சாலிசாவை இவர்கள் இவ்வளவு ஏன் வெறுக்கிறார்கள்? நாம் அனைவரும் ஹனுமான் சாலிசா சொல்வோம், அரசுக்கு தைரியம் இருந்தால், தேச துரோக குற்றத்தை எங்கள் மீது சுமத்தட்டும். ராணா தம்பதியரை கைது செய்தது தவறு. ஹனுமான் சாலிசா படிப்பது தேசத்துரோகமா? போலீஸ் என்ற பெயரில் குண்டர் சண்டை நடக்கிறது”, என்று கண்டனங்கள் அடுக்கிக்கொண்டே போனார்.

சபாஷ். சரியான போட்டி. நீயா நானா லெவலுக்கு ஒருவருகொருவர் சளைத்தவரல்ல என்று மாறி மாறி தாக்கலும் எதிர் தாக்கலும் கோடை வெய்யிலுக்கு இணையாக மானிலத்தில் சூடு பிடித்தது. வானிலத்தில் வெய்யிலோ, மானிலத்தில் அரசியலோ…. சரியான போட்டி. இதில் தம் பங்குக்கு ராஜ் தாக்கரே, ஷரத் பவாரும் தத்தம் தொண்டைகளை கனைத்துக்கொண்டனர்.
ஹனுமான் சாலிசா பற்றிய சர்ச்சை என்ன?

பல்வேறு சமூகத்தினரிடையே வெறுப்புணர்வை பரப்பியதற்காக மஹராஷ்ட்ராவிலுள்ள அமராவதி தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை எம்.பி. திருமதி. நவ்நீத் ராணா மற்றும் மஹராஷ்ட்ராவிலுள்ள பத்னேரா தொகுதியின் எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகியோரை மும்பை காவல்துறை சனிக்கிழமை கைது செய்தது. சென்ற சனிக்கிழமையன்று ராணா தம்பதியினர், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சொந்த இல்லமான 'மாடோஸ்ரீ'க்கு வெளியே ஹனுமான் சாலிசாவைப் படிப்பதாக இருந்த திட்டத்தை மறுநாள் ஞாயிறு அன்று முதல் லதா தீனானாத் மங்கேஷ்கர் விருது பெற பிரதமர் மோடி மும்பை வர இருக்கையில் நகரில் கலவர நிலவரம் வேண்டாம் என்ற தேவேந்த்ர ஃபட்னவிஸ்ஸின் வேண்டுகோளை ஏற்று, ரத்து செய்தனர். இதற்கிடையில், ராணா தம்பதியரின் மும்பை வீட்டுக்கு வெளியே அராஜக போராட்டம் நடத்திய 13 சிவசேனா தொண்டர்களை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை செதனர். ராணா தம்பதியினர் மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக மற்றும் ராணா தம்பதியர் மீது கடும் கோபத்தில் இருக்கும் உத்தவ் தாக்கரே,”தாதாகிரி செய்தால் அனைவயையும் விரட்டித்தள்ளிவிடுவேன்”...என்று முதல்வர் தமது சூளுரையாக கூற கோடை சூடு அரசியல் சூட்டிற்கு ஈடு கொடுக்க முடியாது திணறியது.
என் வீட்டிற்கு வர வேண்டும் என்றால் வாருங்கள், உங்கள் வீட்டில் ஹனுமான் சாலிசா படிக்கும் பழக்கம் இல்லை என்றால், எங்கள் வீட்டில் படிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக எங்கள் இல்லத்திற்கு வாருங்கள், ஆனால் அதற்கென்று முறையாக வரும் வழி இருக்கிறதல்லவா?.
என் சட்டையில் விட உங்கள் சட்டை எப்படி காவி நிறமாக இருக்கிறது?
மகாராஷ்டிராவில் பொது இடங்களில் ஹனுமான் சாலிசா ஓதுவது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், முதல்வர் உத்தவ் தாக்கரே பாஜக மற்றும் சுயேச்சை எம்பி நவ்நீத் ராணாவை குறிவைத்து மேலும், “ சிவசேனா தலைவர் பாலாசாஹேப் தாக்கரே இந்தமாதிறியான தாதாகிரியை உடைப்பது எப்படி என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். கூடிய விரைவில் ஒரு பொதுக்கூட்டம் கூட்டி இந்த இந்து என்று சொல்லிக்கொள்ளும் போலியான இந்து ஆதரவாளர்களுடன் நான் பேச விரும்புகிறேன். என் சட்டை காவி சிவந்ததா, இல்லை உங்களுடையதா?. அவர்களது முகமூடியை கழற்றுவேன்”, என்றார் தொடர்ந்து.
தாதாகிரியை எப்படி உடைப்பது என்பது எங்களுக்கு தெரியும், முதல்வர் உத்தவ் தாக்கரே
சுயேச்சை எம்பி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் ரவி ராணா ஆகியோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சொந்த இல்லமான மாடோஸ்ரீக்கு வெளியே ஹனுமான் சாலிசாவை பாடுவோம் என்று அவர்கள் பேசியது சிவசேனா தொண்டர்களை கோபப்படுத்தியது. இதனால் அவர்கள் தம்பதியரின் இல்லத்தின் முன் போராட்டம் நடத்தினார்கள். இந்த வழக்கில், மும்பை போலீசார் ராணா ஜோடி மீது எஃப்ஐஆர் பதிவு செய்து, பின்னர் அதில் தேசத்துரோக குற்றச்சாட்டையும் சேர்த்தனர். ஞாயிற்றுக்கிழமை, மும்பை நீதிமன்றம் ராணா தம்பதியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
ராணா ஜோடிக்கு செஷன்ஸ் கோர்ட்டில் நிவாரணம் கிடைக்கவில்லை, இப்போதைக்கு சிறையில் இருந்துதான் ஆகவேண்டும்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட எம்.பி – எம்.எல்.ஏ தம்பதிகளான நவ்நீத் கவுர் மற்றும் ரவி ராணா ஆகியோருக்கு ஆதரவாக அவர்களை போலீஸ் ஸ்டேஷனில் சந்திக்க பாஜாக தலவர் கிரீட் சோமையா சனிக்கிழமை மும்பை காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தார். பொதுமக்களைத் தூண்டியதாக கூறி, “என்னைக் கொல்ல வேண்டுமென்று 100-க்கும் மேற்பட்ட சிவசேனா குண்டர்கள்" தம் மீது தாக்குதல் நடத்தியதாகவும், “ஆளும் சிவசேனா தன்னை காவல்துறை முன்னிலையில் கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த காட்சி அப்படியே திங்களன்று டெல்லியை அடைந்தது.
மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக மத்திய அரசை சந்திக்க உள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
திங்களன்று, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் தனது கிரீட் சோமையா மீதான தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க கோரிய பின்னர், சிவசேனாவுக்கு எதிராக தனது கண்டனத்தை தொடர்ந்தார்.
ஹனுமான் சாலிசா சர்ச்சையை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட புகைச்சலையும் அவர் இணைத்தார், இது மஹாராஷ்ட்ரா நவ்நிர்மாண் சேனா தலவர் ராஜ் தாக்கரேயின் தூண்டுதலின் பேரில் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண மாநில அரசு திங்களன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆனால் பாஜக அதை புறக்கணித்தது.
இதற்கிடையில், மகாராஷ்டிர மாநில அரசின் அமைச்சர் ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து (மாநிலத்தில் ஒலிபெருக்கி சர்ச்சை) ஒரு தூதுக்குழு மத்திய அரசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது”.
ராஜ் தாக்கரே மசூதிகளில் ஆஸான் (முஸ்லீம் பிரார்த்தனை) க்காக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதை எதிர்த்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், இதையே பாஜகவும் இந்த விவகாரம் குறித்து மாநில அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது விவகாரத்தில் இன்னும் சூடு பிடித்துள்ளது.
மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொடர்பான சர்ச்சையில் இதுவே சமீபத்திய நிகழ்வு.
ஆனால், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டிற்கு வெளியே இந்த நூதன போராட்டத்தை நடத்த தம்பதியினர் ஏன் திட்டமிட்டனர்?
இது எப்படி தொடங்கியது
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயின் (ராஜ் தாக்கரேவின் இயற்பெயர் ஸ்வரராஜ் ஸ்ரீகாந்த் தாக்கரே. அவரது பெற்றோர் ஸ்ரீகாந்த் தாக்கரே (பால் தாக்கரேவின் இளைய சகோதரர்) மற்றும் குந்தா தாக்கரே (பால் தாக்கரேவின் மனைவி மீனா தாக்கரேவின் தங்கை) மசூதிகளில் ஆஸான் (முஸ்லீம் பிரார்த்தனை) க்காக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதை எதிர்ப்பது என்ற போராட்டத்தை ராணாக்கள் தம் முயற்சியாக இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
மே 3-ம் தேதிக்குள் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று ராஜ் தாக்கரே மாநில அரசுக்கு 'சவால்' விட்டிருந்தார். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், மசூதிகளுக்கு வெளியே ஹனுமான் சாலிசா இசைக்கப்படும் என்று அவர் மிரட்டியிருக்கிறார். ராஜ் தாக்கரேவின் இந்த கோரிக்கையை பாஜக ஆதரித்தது.
ஷரத் பவார், “சாதி அடிப்படையிலான அரசியலை மாநிலத்தில் தான் கொண்டு வந்ததாகக் கூறுவது உட்பட, ராஜ் தாக்கரேவின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை, ராஜ் தாக்கரேவை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர் ஆறு மாதங்கள் அல்லது வருடத்திற்கு ஒருமுறைதான் பேசுவார்" என்று நக்கலாக கூறினார்.
ரவி மற்றும் நவநீத் ராணா யார்?
ரவி ராணா மகாராஷ்டிர சட்டசபையில் பத்னேரா தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.. இவரது மனைவி நவ்நீத், மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியில் இருந்து சுயேச்சை எம்.பி.யாக உள்ளார்.
அவர்கள் இருவரும் யோகா குரு பாபா ராம்தேவுடன் நெருக்கமாக உள்ளனர், அவர் தான் இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது. மஹாராஷ்டிராவில் பட்னாவிஸ் அரசுக்கு எம்எல்ஏவாக இருந்த ரவி ராணா ஆதரவு அளித்திருந்தார்.
கர்நாடகாவில் உள்ள சில இந்து அமைப்புகள் சனிக்கிழமை முதல் மாநிலம் முழுவதும் 'ஆசான்' க்கு எதிராக வீடு வீடாக பிரச்சாரம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளன. பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில் உள்ள சிவனஹள்ளி வட்டத்தில் இருந்து பிரச்சாரம் தொடங்குமாம்.
மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை காலி செய்ய மே 9-ம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளனர், இல்லையெனில் திங்கள்கிழமை காலை 5 மணி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒலிபெருக்கி மூலம் ஹனுமான் சாலிசா, ஸ்ரீ ராம ஜெய ராம மந்திரம் மற்றும் ஓம்கார் ஜெபங்களை ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்புவோம்.
வித்தியாசமான குறிப்பாக :
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் கோயிலில், 'ஸ்லோகங்கள்' மற்றும் 'மந்திரங்கள்' ஓதும்போது, தானாக முன்வந்து ஒலிபெருக்கிகளை நிறுத்தியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், ஆதித்யநாத் எந்த புதிய தளத்திலும் ஒலிபெருக்கிகளை நிறுவ யாருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.
"மைக்குகளைப் பயன்படுத்த முடியும் என்றாலும், வளாகத்திற்கு வெளியே எதுவும் கேட்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் எந்தப் பிரச்சினையையும் சந்திக்கக்கூடாது," என்று அவர் கூறினார்.
இது உள்ளூர்வாசிகளுக்கும் மற்றும் பக்தர்களுக்கு இது நன்றாகப் படவில்லை, அவர்களோ, ஒலிபெருக்கிகளை நிறுத்துவது புனித நகரத்தின் தன்மையைக் குறைத்துவிடும் என்று கருதுகின்றனர்.
சனிக்கிழமையன்று, மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சொந்த இல்லமான 'மாதோஸ்ரீ'க்கு வெளியே 'ஹனுமான் சாலிசா' பாடும் திட்டத்தை இந்த தம்பதியர் அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, சிவசேனா தொண்டர்கள் நவ்நீத் மற்றும் ரவி ராணாவை முதல்வர் இல்லத்திற்கு வரவிடாமல் தடுக்கும் வகையில் அவர்களது இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து 'ஹனுமான் சாலிசா' கோஷமிடும் திட்டத்தை ராணாக்கள் திரும்பப் பெற்றனர்.
ஆக, செய்யாத குற்றத்திற்காக இந்த தம்பதியினர் சிறையில்?????
மசூதி ஒலிபெருக்கி விவகாரத்தில் ராஜ் தாக்கரே (எம்.என்.எஸ்) தற்போது கையிலெடுத்து கொண்டிருப்பதைக் கண்டு, சிவசேனாவின் உடன் பிறப்புக்கள், “இந்த ஆயுதம் என்றுமே நமது சிவசேனா கட்சியின் ப்ரதான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியல்லவா!!, எப்படி இதை எம்.என்.எஸ் கட்சியினர் ஹைஜாக் பண்ண விடுவது? ஏற்கெனவே நம்மை ஹிந்துத்வாவை அம்போன்னு கை விட்டவர்கள் என்ற அவப் பெயர் வேறு” என்று ஒலியழுப்ப, சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, நமது கட்சியின் இந்துத்துவாவின் முத்திரை என்பது தேசியவாதமே தவிர வகுப்புவாதம் அல்ல என்று வரையறுத்து கட்சியினரை ஆசுவாசபடுத்தியுள்ளார்.
துண்டு துடுக் செய்தி இதோ கீழே:
“மசூதிகளில் ஒலிபெருக்கிகளை மே 3 ஆம் தேதிக்குள் மூட வேண்டும், இல்லாவிட்டால் ஹனுமான் சாலிசாவை ஒலிபெருக்கியில் நாங்கள் ஒலிப்போம். இது ஒரு 'சமூகப் பிரச்சினையே தவிர, மதப் பிரச்சினை அல்ல' என்று கூறிய ராஜ் தாக்கரே, இந்த விஷயத்தில் தனது கட்சி பின்வாங்காது, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்" என்றும் உறுதிபடுத்தினார்.
இன்னோரு வேடிக்கை இந்த லவுட் ஸ்பீகர் சர்ச்சை 1994 லிலேயே பாலசாஹேப் தாக்கரே அப்போதிருந்த ஷரத் பவார் அரசுக்கெதிராக கடிந்துகொண்டு கேட்டது தான் !!!
அனைவரும் மே 3 வரை பொருத்திருப்போமே!!!

Leave a comment
Upload