தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் -  34 -சோழ மன்னருக்கும் நாக இளவரசியுடன் நடைபெற்ற காதல் சம்பவம் வட தமிழ்நாட்டை மாற்றியது ! ஆர்.ரங்கராஜ்

20220329085948474.jpg
கடந்த மாதங்களில் சென்னை பெருநகர் பகுதியில் (காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளடக்கிய பகுதி) லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிமனிதன் வாழ்ந்திருக்கிறான் என்பதற்கான ஆதாரங்களை பார்த்தோம். பல்லாவரம்/ திரிசூலம் பகுதியில் 5 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கருவிகள் பற்றி அலசினோம். அதன் பிறகு, இடைக்கற்காலம், மற்றும் கடைக்கற்காலம் பற்றிய ஊர்களும், பிறகு கல்திட்டைகள் (Dolmonoid cists) ஈமத்தாழிகள் (burial urns) மற்றும் கற்கிடைகளும் (cairn circles) ஆகியவைப் பற்றி ஆராய்ந்து 2,500 முதல் 3,000 ஆண்டுகளுக்கு முன்னாள் மக்கள் இந்த பகுதியில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை தெரிந்துகொண்டோம்.

இப்பொழுது நாம் முதலாம் நூற்றாண்டிற்கு (CE) வருகின்றோம். வேடவர்களுக்கு பின்னால் குறும்பர்கள் ஆதிக்கம் செலுத்தி சென்னை பெருநகர் பகுதியை மற்றும் இதர பகுதிகளில் கொட்டைகள் மற்றும் கோட்டங்களை அமைத்து ஆட்சி செய்தார்கள் என்றும், அவர்களின் வாழ்க்கைமுறையை பற்றி தெரிந்துகொண்டோம்.


பெரும்பாலும் தஞ்சையிலிருந்த சோழர்கள் காஞ்சிபுரம், சென்னை கொண்ட சென்னை பெருநகர் பகுதிகளுக்கு ஏன் வரவேண்டும்?

இதற்க்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான காதல் கதையுள்ளது -- அதுவும் சோழ மன்னருக்கும் நாக இளவரசியுடன் நடைபெற்ற காதல் சம்பவம் வட தமிழ்நாட்டு பகுதியை முழுவதுமாய் மாற்றி அமைத்தது. நாக மங்கையுடன் காதலா ? இப்படியெல்லாம் கூட நடைபெறுமா, நடைபெற்றதா என்ற ஆச்சரியமான கேள்விகள் நம் திசையில் வருகின்றன என்பது தெரிகின்றது. எனவே நாம் அந்த காலகட்டத்தில் நாகர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.

திரு வி . கனகசபை எழுதிய நூலை (1,800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்) தமிழில் திரு கா. அப்பாதுரை அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.

பல்வேறு கவிஞர்கள், நூல்கள் நாகர்களை பற்றிய தகவல்களை கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டி, பல்வேறு கவிஞர்கள், நூல்கள் நாகர்களை பற்றிய தகவல்களை கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டி நமக்காக வழங்கப்பட்ட செய்திகளின் தொகுப்பு இதோ:

"அரை நாகரிகமுடைய கிளையினங்களை மக்கட் பெருக்கமும் நாகரிக வளர்ச்சியுமுடைய நாகர் என்ற வகுப்பினர் வென்றார்கள். இவர்கள் ஒருகாலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய பரப்பின் பெரும் பகுதியையும் ஆண்டார்கள். அவர்கள் இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளார்கள். பெரிதும் தெக்கணத் திலேயே இருந்திருக்கக் கூடிய ஒரு நாகர் தலைநகரம் இராமாயணத்தில் கீழ்வருமாறு வருணிக்கப்பட்டுள்ளது...."

"கி.மு 13-ஆம் நூற்றாண்டினண்மையில் கங்கைக்கும் யமுனைக்குமிடையேயுள்ள பகுதியில் நாக அரசுகள் இருந்ததாக மகாபாரதத்திலிருந்து கேள்விப்படுகிறோம். திங்கள் மரபைச் சேர்ந்த ஆரியர்கள் தற்போது தில்லி இருக்குமிடத்தில் புதியதொரு துணைத் தலைநகரை அமைக்கவிரும்பியபோது, அவ்விடத்தில் தங்கி வாழ்ந்த நாகர்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது".

"காவியத் தலைவனாகிய அருச்சுனன் தன் நாடுகடந்த வாழ்வில் முதலில் உலிபி என்ற நாக இளவரசியையும் அதன் பின் மணிபுரத்தை ஆண்ட நாகஅரசன் சித்திர வாகனன் புதல்வியாகிய, சித்திராங்கதையையும் மணம் புரிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அருச்சுனன் பேரனாகிய பரிட்சத்து நாகஅரசள் தட்சகனால் கொல்லப்பட்டான். இது காரணமாகப் பரிட்சித்தின் புதல்வன் சனமேசயன் நீண்டகாலம் நாகருடன் வெங்குருதிப்போர் நடாத்தி அவர்களில் ஆயிரக்கணக்கானவர்களை அழித்தான்."

"மீண்டும் நாகர்களை நாம் வரலாற்றில் கி.மு 6-ஆம் நூற்றாண்டில் காண்கிறோம். அப்போது ஒரு நாக மரபினர் மகத்த்தை ஆண்டனர், இம்மரமரபைச் சார்ந்த ஆளும் மன்னனாகிய அஜாத சத்துருவின் ஆட்சியிலேயே கௌதம புத்தர் தம் புதிய கோட்பாட்டை வகுத்துரைத்தார். அது நாகர்களின் பேராதரவைப் பெற்றது."

இலங்கை வரலாற்று நூல்கள் நாகர்களைப் பற்றிய நிறைய செய்திகள் வழங்குகின்றன. கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தீவின் மேற்குக் கரையில் நாக அரசுகள் பலம்வாய்ந்ததாக இருந்தன என்றும், தீவு நாகத்தீவு என்று அழைக்கப்பட்டதென்றும் தெரிகின்றது. நாகர் தலைநகர் கல்யாணியை ஆண்ட அரசி மருகி கணவத்தமானோ மலையை ஆண்ட ஒரு நாக அரசனுக்கு மணம் செய்து கொடுக்கப்பட்டாள். இது கல்யாணிக்கு நேர் எதிராக இந்தியக் கடற்கரையில் தற்கால இராமேச்சுரத்தின் அருகிலுள்ள கந்தமாதனம் என்ற குன்றே.

1800 ஆண்டுகளுக்குமுன் வரையப்பட்ட பண்டை அமராதிச் சிற்பங்களிலும் அதுபோன்ற பிற இடங்களிலும் தலைக்குமேல் பின்புறமாக விரிந்த படங்களுடன் நாகங்கள் தீட்டப்பட்ட மனித உருவங்கள் உள்ளன, இவை நாகர் உருவங்கள் தான். அமராவதியின் அழிபாடுகளிலிருந்து அகற்றப்பட்டுள்ள சில கண்காட்சிச் சாலையில் சிற்பங்களில் நாக அரசருக்குத் தனிச் சிறப்புச் சின்னமாகப் பின்புறம் ஐந்தலை அல்லது எழுதலை நாகம் உள்ளது. நாக இளவரசிக்கு இதுபோல முத்தலை நாகங்களும் பொதுநிலை நாகர்களுக்கு ஒருதலை நாகங்களும் உள்ளன.

"இச்சிற்பங்களை அரிது முயன்று செதுக்கிய செதுக்குக் கலைஞர் நாகர்கள் நாக இயல்புடையவர் என்றும், அவர்கள் உடல் பாதி மனித உருவாகவும், பாதி பாம்புருவாகவும் அமைந்திருந்தன என்றும் கருதியதாகத் தோற்றுகிறது. இந் நம்பிக்கையைப் பண்டைத் தமிழ்க் கவிஞர்கள் அரைகுறையாகவே கொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், அவர்கள் தம்முடன் சமகாலத்தவரான நாகர்களை மனிதராகவே கருதிக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அதே சமயம் பண்டை நாகர்கள் பாதலத்தில் பாம்புகளாக வாழ்ந்ததாகக் குறிக்கின்றனர்." (நன்றி திரு அப்பாதுரை).

காதல் கதை என்ன ஆயிற்று? தெரிந்துகொள்ளவேண்டாமா?