தொடர்கள்
கதை
நவரச கதைகள் - எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர் உப்புமா

20220420191449111.jpg

பத்திரிகையாளர் சந்திப்பு.

மேடையில் மூன்று இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இருக்கைகளுக்கு முன் நாற்பதுக்கும் மேற்பட்ட மைக்குகள் கொத்தாய் காய்த்து தொங்கின.

ஒரு இருக்கையில் சுகாதார அமைச்சர் கலிவரதன் வந்தமர்ந்தார். இடதுபக்கம் சுகாதாரத்துறை செயலாளர் ஸ்ரீராமுலு இணைந்து கொண்டார். வலது பக்கம் ஆளுங்கட்சியின் சென்னை மாவட்டசெயலாளர்.

சந்திப்பு ஆரம்பித்தது.

கலிவரதன் பேச ஆரம்பித்தார். “போனமாதம் ‘ஷவர்மா’ என்கிற அசைவ உணவை தமிழ்நாடு முழுக்க தடை பண்ணினோம் எதற்கு தெரியுமா?”

“இதென்ன வில்லுபாட்டா? இடைஇடைல ஆமாம் போட. நீங்களே சொல்லுங்க அமைச்சரே!” பத்திரிகையாளர்களின் மைண்ட்வாய்ஸ்.

“ஷவர்மா என்பது பெய்ரூட்டிலிருந்து இறக்குமதி ஆன மாமிசஉணவு. ஷவர்மா கோழிக்கறி, மாட்டுக்கறி, ஆட்டுகறி, வான்கோழி மாமிசம் வைத்து தயாரிக்கலாம். ஷவர்மாவில் மாமிசம் பூண்டு வெங்காயம் தக்காளி எலுமிச்சை உட்பொருட்கள். ஷவர்மாவை சாஸ் தொட்டோ மயோனிஸ் தொட்டோ சாப்பிடலாம். லெபனான், சவுதி அரேபியா, இஸ்ரேல், நியூயார்க் போன்ற சர்வதேச நகரங்களில் மிக சுவையான ஷவர்மா கிடைக்கும். ஷவர்மா தமிழ்நாடு கலாசாரத்துக்கு சிறிதும் பொருந்தாத உணவு வகை. ஷவர்மாவில் கெட்டுபோன மாமிசங்கள் பயன்படுத்தி தமிழ்நாட்டு இளைஞர்களின் உடல்நலத்தை பாழாக்குகின்றனர். ஆறுபேர் மரணம் இருபது பேர் மருத்துவமனையில் அனுமதி என்கிற செய்திகளை அடுத்து நம் அரசு ஷவர்மாவை தடை பண்ணியது!”

“பழையகதை இப்ப எதுக்கு அமைச்சரே?” ஒரு பத்திரிகையாளர் எழுந்து கூவினார்.

“அவசரப்படாதிங்க. மராத்தான் ஓட்டத்ல முதல்லயே வேகமா ஓடுறவன் தோத்து போய்டுவான். விவேகமான நிதானமும் சீரான ஓட்டமும் தேவை…”

“அமைச்சர் மராத்தான் கிங் என்பதனை அடிக்கடி நமக்கு ஞாபகப்படுத்துவார்!”

ஒரு பத்திரிகையாளர் பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு பத்திரிகையாளரிடம் கிசுகிசுத்தார்.

“ஷவர்மாவை தடை பண்ணிருக்ற நீங்க அடுத்து பிராய்லர் கோழிமுட்டை உடல்நலத்துக்கு கேடுன்னு முட்டை சாப்பிடுறதை தடை பண்ணிருவீங்களோ?”

சர்க்கஸ்கூடார துணியில் சட்டை தைத்து போட்டுள்ள சுகாதாரதுறை செயலாளர் அமைச்சருக்கு பாயின்ட் எடுத்துக் கொடுத்தார்.

“திராவிட மக்கள் எதாவது ஒரு உணவால் புட்பாய்ஸன் ஆனால் அரசு சிறிதும் தயங்காது அந்த உணவை தடை செய்யும் அது முட்டையாக இருந்தாலும் கூட!”

“ஷவர்மாவை ஆரோக்கியமா செய்து பரிமாறுகிறார்களா என உணவுபாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமே தவிர இப்படி தடை பண்ணக் கூடாது. போகிற போக்கை பார்த்தால் மக்கள் எந்த மாமிசமும் சாப்பிட தடை விதிப்பீர்கள் போல…”

“தினப் பூக்கள் ரிப்போர்ட்டர்தானே நீங்கள்? நீங்கள் இப்படிதான் கோக்மாக்கா கேப்பீங்க!”

“மக்கள் அச்சப்படுவதை நாங்கள் கேள்விகளாக கேட்கிறோம்..”

“ஹெல்த் இஸ்யூ வராது என்றால் காக்கா பிரியாணியை கூட அலவ் பண்ணுவோம்!”

“அமைச்சரே! பாத்து பேசுங்க… தமிழ்நாட்டு உணவாக காக்காபிரியாணியை தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்தது என தினப்பூக்கள் நாளை செய்தி வெளியிடும்!”

அமைச்சர் சிரித்தார்.

“இன்னைக்கி பிரஸ்மீட் வச்சதுக்கான காரணத்தை சொல்லாம ஏதேதோ பேசிகிட்ருக்கம். விஷயத்துக்கு வந்திடுறேன்!”

“ஆமாங்க அமைச்சரே!”

“தமிழ்நாட்டு மக்கள் சிற்றுண்டியாக இட்லி, தோசை, பூரி, பொங்கல், வடை, ஆப்பம், புட்டு, இடியாப்பம், கார பணியாரம், இனிப்பு பணியாரம், அடை, அரிசிரொட்டி சாப்பிடுவாங்க. ஆனா தமிழ்நாட்டு மக்களுக்கு உப்புமான்னா பயங்கரமான அலர்ஜி. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உப்புமா ஜோக்குகள் தமிழில் வந்துவிட்டன!”

செயலாளர் வாயைத்திறந்தார்.

“உப்புமாவை தெலுங்கில் ‘உப்பிண்டி’ என்பர். கன்னடத்தில் ‘உப்பிட்டு’ மராத்தியில் ‘உப்பீட்’ கொங்கணியில் ‘ருவான்வ்’ ஹிந்தியில் ‘காராபாத்’ மலையாளத்தில் ‘உப்புமாவு’ என்பர்!”

“உப்புமாவில் ஆயிரம் வெரைட்டிகள் உள்ளன. சோளம், தினை, சிவப்பரசி, அரிசி, கோதுமை, ரவை, சேமியா, ஜவ்வரசி, பிரட் அவலில் கூட உப்புமா செய்வர்!”

“மாறுவேஷம் போட்ட உப்புமாவை கிச்சடி என்பர். உப்புமாவை ஜீனி தொட்டோ தேங்காய் சட்னி தொட்டோ எல்லா காய்கறிகளும் போட்ட சாம்பார் தொட்டோ சாப்பிடலாம்!”

“உப்புமாவை பத்தி ஏன் கிளாஸ் எடுக்கிறீங்க? அக்கா உணவகத்ல அஞ்சு ரூபாய்க்கு உப்புமா போடப் போறீங்களா?” தினப்பூக்கள் ரிப்போர்ட்டர்.

“பாயின்ட்டுக்கு வரேன் வரேன் பிரதர். உக்காருங்க. ‘ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவைக் கிண்டி வை’ ன்னு பழமொழி சொல்வாங்க. அந்த பழமொழியை மெய்ப்பிக்கிற மாதிரி நேத்து ஒரு நிகழ்ச்சி நடந்துச்சு!”

“என்ன நிகழ்ச்சி?”

“நேத்து ஆயிரம் ஆண்கள் கூடி என்கிட்ட ஒரு மனு கொடுத்தாங்க. அந்த மனுல ஒரு கோடி ஆண்கள் கையெழுத்து இருந்துச்சு!”

“என்ன மனு? டாஸ்மாக் சரக்கை ரேஷன்ல விக்கச் சொல்ரான்களா?”

சிரித்தார் அமைச்சர்.

டாஸ்மாக் பற்றி எந்த காமென்ட் வந்தாலும் அசட்டுதனமாக சிரித்து மழுப்ப வேண்டும் என்பது மேலிட உத்தரவு.

“அந்த மனுவை உரக்க வாசிக்கிறேன் கேளுங்க!”

“சரி வாசிங்க!”

“பெருமதிப்பிற்குரிய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ் வணக்கம்.

ஷவர்மாவுக்கு தடை விதித்தமைக்கு மகிழ்ச்சிகளும் நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

ஷவர்மாவை விட கொடிய உணவு ஒன்று தமிழ்நாட்டில் வீட்டுக்கு வீடு நடமாடுகிறது. அதுதான் உப்புமா.

மனைவிமார்கள் ஹிட்லரின் சித்திரவதை கூடங்களின் சித்திரவதைகளை எங்கள் மீது செய்தால் கூட தாங்கிக் கொள்வோம். உப்புமா செய்து எங்கள் சுவை நரம்புகளை மழுங்கடித்து விட்டார்கள்.

கெஞ்சிவிட்டோம் கெதறி விட்டோம் காலில் விழுந்து அழுது அரற்றி விட்டோம். எதற்குமே எங்கள் மனைவிமார்கள் அசரமாட்டேன் என்கிறார்கள்.

உப்புமாவை ‘ரவை பிரியாணி’ என பெயரிட்டு எங்களை ஏமாற்றுகிறார்கள்.

உப்புமாக்களிலேயே படுகேவலமான உப்புமா ஒன்றிருக்கிறது. முந்தினநாள் மிஞ்சின டேபிள்வெயிட் இட்லிகளை உதிர்த்து செய்யும் இட்லி உப்புமாதான் அந்த படுகேவலமான உப்புமா. ஒரு வருஷம் பட்டினி கிடந்தவன் கூட அந்த இட்லி உப்புமாவை தொடமாட்டான். நாய்க்கு போட்டாலும் நாய் சாப்பிடாது. பேய்க்கு போட்டாலும் பேய் சீந்தாது.

உடனடியாக தமிழ்நாட்டில் உப்புமாவை சகலவிதத்திலும் தடை பண்ணுங்கள். இந்த மனுவில் ஒரு கோடிபேர் கையெழுத்து போட்டிருக்கிறோம். உப்புமாவை தடை பண்ணாவிட்டால் நாங்கள் அடுத்த தேர்தலில் உங்கள் எதிர்அணிக்கு ஓட்டு போட்டு விடுவோம் என பிளாக்மெயில் செய்யமாட்டோம்.

ஒரு ஆணின் கஷ்டம் ஒரு ஆணுக்குதான் தெரியும் என்பார்கள். அமைச்சர் என்பதனை தாண்டி நீங்களும் ஒரு ஆண்தானே,

உப்புமாவை தடை விதிப்பதோடு நின்று விடாதீர்கள். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அதிரடி விசிட் செய்து உப்புமாவை பறிமுதல் செய்யுங்கள். உப்புமா செய்யும் பெண்களுக்கு தண்டனையும் அபராதமும் விதியுங்கள்.

நன்றி.

இப்படிக்கு உண்மையுள்ள

தமிழ்நாட்டு ஆண்கள்.

“இந்த மனுவை பார்த்து இரத்தக்கண்ணீர் வடித்து விட்டோம். இதோ இப்போதே அறிவிக்கிறேன் இனி தமிழ்நாட்டில் உப்புமாவுக்கு நிரந்தர தடை..”

பத்திரிகையாளர் சந்திப்பு நீண்டு முடிந்தது.

இரவு.

தனது வீட்டுக்குள் பிரவேசித்தவர் அமைச்சர் கலிவரதன். முகம் கைகால் கழுவி இரவாடைக்கு மாறினார்.

“பத்மா! நைட் என்ன டிபன்?”

“சாப்பிடும் போது தெரியும்!” என்றாள் அமைச்சரின் மனைவி.

டைனிங் டேபிளில் அமர்ந்தார் கலிவரதன். மூடியிருந்த பாத்திரத்தை மெதுமெதுவாக திறந்தாள் பத்மா. ரவை உப்புமா!

“என்ன பத்மா இது?”

“ஒருகோடி மொட்டை பசங்க மனு கொடுத்தான்கன்னு உப்புமாவை தடை பண்ணிட்டீங்க. உப்புமா உடல் எலும்புகளுக்கும் நரம்புமண்டலத்துக்கும் இதய பலத்துக்கும் நல்லது. உப்புமா மாரடைப்பை தடுக்கும். 100கிராம் உப்புமாவில் 222கலோரிகள். 100கிராம் உப்புமாவில் கொழுப்பு 33கிராம். கார்போஹைடிரேட்40,2கிராம் புரோட்டீன் 7.25கிராம் சர்க்கரை 1.6கிராம் இருக்கு. யாரை கேட்டு உப்புமாவை தடை பண்ணீங்க. இனி மூணுநேரமும் நம்ம வீட்ல உப்புமாதான். உப்புமா மீதான தடையை என்னைக்கி நீக்குறீங்களோ அன்னைக்கி தான் நம்ம வீட்ல உங்களுக்கு அரிசி சோறும் கறிகுழம்பும் அரிசி சோறும் மீன்குழம்பும் அரிசிசோறும் சிக்கன் குழம்பும்!” பத்மாவின் குரலில் மானசீகமாக தமிழ்நாட்டின் நான்கு கோடி பெண்களின் குரல்களும் கோரஸ் செய்தன. “ஒரு கோடி ஆண்கள் ஓட்டு முக்கியமா? நான்கு கோடி பெண்களின் ஓட்டு முக்கியமா அமைச்சரே!” நக்கல் செய்தாள்.

-அடுத்த நாள் காலையில் உப்புமா மீதான தடை நீக்கப்பட்டது. தடையை நீக்கும் போது அமைச்சரும் செயலாளரும் உப்புமாவை தின்றபடியே மீடியாவுக்கு போஸ் கொடுத்தனர்.